திங்கள், 1 ஜூன், 2020

பொன்மகள் வந்தாளா?

எப்ப பாரு அந்த மானிட்டரையே பார்த்துன்னு இருக்கீங்களே, அதை ஆப் பண்ணிட்டு டிவியில் ஏதாவது ஒரு படம் போடுங்க என்று அம்மணி கேட்க..

அலறினேன்.

அம்மணி வாழ்க்கையிலே இதுவரை அதிகபட்சம் பத்து படங்கள் கூட பார்த்து  இருக்க மாட்டார்கள். அவங்களே கேக்குறாங்களே என்று உடனே கூகுளை தட்டி, எந்த படம் என்று விசாரிக்கையில்..

OTTயில் நேற்று தான் வெளி வந்து இருக்கின்றது என்று "பொன்மகள் வந்தாள்" படம் என்ற செய்தியை படித்து சில ரிவியூ பார்க்க, ஜோதிகா பெண்களுக்காக போராடும் வக்கீலாக வருகின்றார் என்று அறிந்து  அமேசானை தட்டுகையில்  நான்கு நட்சத்திரம் இருக்க, படத்தை ஆரம்பித்தோம்.

முதல் காட்சியில் துப்பாக்கி சூடு - சத்தம் என்று ஆரம்பிக்க அம்மணியோ..

"ஏதாவது பாக்குற மாதிரி போடுங்க,, இது என்ன துப்பாக்கி சூடு.. இந்த ஹீரோ நாப்பது பேரை அடிச்சி பொண்ணை காப்பாத்தி காதல் பண்ணி கல்யாணம் ஒரே பாட்டில் கோட்டீஸ்வரனாகி பழி வாங்குறது  எல்லாம் வேணாங்க.."



என்று சொல்ல..

நானோ.. கிழஞ்சது போ.. இந்த மாதிரி ரூல்ஸ் போட்டா தமிழில் நான் எங்க படத்துக்கு போவேன்னு மனதில் நினைத்து கொண்டு ..

"ஆரம்பத்தில் தான் இப்படி இருக்குமாம், பத்து நிமிஷம் கழிச்சு கதை சூடு பிடிக்குமாம்."

என்று சொல்ல படமும் சூடு பிடித்தது தான் என்று சொல்ல வேண்டும். அருமையான பிளாட்..நிமிர்ந்து அமர...

பாக்யராஜ், அப்பா வேடத்தில்.. அட பாவத்த.. இவரு வந்தா இந்த ரோலைக்கூட ஏதாவது சில்லறை வேலை காட்டி சொதப்புவாரே என்று நினைக்கையில், ரக தாத்தா காமெடியோடு...

அடுத்து பிரதாப் போத்தன்...மூடு பனியின் "என் இனிய பொன் நிலாவே" பாடலை பாடிக்கொண்டு .. இன்னும் என்ன என்ன வரபோதோ என்று நினைக்கையில்

 பாண்டியராஜ்.. கிழிஞ்சது போ .. கண்டிப்பா... "இன்னும் இடிக்கல" காமடி வரபோதுன்னு நினைத்து கொண்டே இருக்கையில்..

பார்த்திபன்.. எப்போதும் போல.. பாக்யராஜின் "திரை கதையை"  பாராட்டிக் கொண்டு..

அட என்னடா இது.. பாக்யராஜ் மற்றும் அவரோட அஸ்ஸிடன்ட்டா வேலை செஞ்சவங்கள் எல்லாம் இருக்காங்களேன்னு கண்டிப்பா அடுத்த சீனில் லிவிங்ஸ்டன் வருவாரு என்று நினைக்கையில் ..

தியாகராஜன்.. எம்புட்டு வருடம் போனாலும் இன்னும் வாயை திறந்து பேச வரலையே இவருக்கு..?  டிக் டிக் டிக் அறிமுகத்தில் இருந்து, அலைகள் ஓய்வதில்லை  படத்தில் தொடர்ந்து, பிள்ளை நிலா வரை, மெதுவடை சாப்பிடற மாதிரி வாயை அசைப்பாரே இதுல என்ன பண்ணி இருக்காருன்னு பார்த்தா... அதே மெதுவடை தான்..

அது என் நிலைமை..

அம்மணியோ... கொஞ்சம் டிஸ்ஸு எடுத்துன்னு வாங்கனு சொல்ல.. ஓ.. கண் கலங்கிட்டாங்க போல, பாதி படத்துலே அழுதுட்டாங்களே.. திரும்பவும் கேப்பாங்கானு நினைச்சி ஒரு டிஸ்ஸு பெட்டியையே அவங்கிட்ட கொடுத்துட்டு,  மேல சொன்ன அத்தனை பேரையும் மறந்துட்டு நானும் படத்தில் ஆழ்ந்தேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி அருமையான பிளாட்.. ஆனா ஜோதிகாவை  தவிர மற்ற அனைத்து பாத்திரங்களுக்கும் நடிகர் தேர்வு கொஞ்சம் கூட  சரிப்பட்டு வரவில்லை.

புது இயக்குனர் பிரெட்ரிக் இவர்களை எல்லாம் தானே தேர்வு செய்தாரா.. அல்ல  வேறொரு அழுத்தத்தினால் தேர்வு செய்ய உந்த பட்டாரா என்ற கேள்வி கண்டிப்பாக வருகின்றது.

இயக்குனரை பொறுத்தவரை கதையை ஒரு நூல் பிடித்தமாதிரி தான் எடுத்து சென்று இருக்கின்றார். இருந்தாலும் கோர்ட் சீன்களை வைத்தே நகரும் படங்களுக்கான "திருப்பங்களை" இன்னும் சேர்த்து இருக்கலாம்.

2004ல் நடந்த கொலையை 15  வருடங்கள் கழித்து  விசாரிக்கும் கதை. அந்த 15  வருடங்களில் இன்னும் சாதுரியமாக பல திடுக்கிடும் திருப்பங்கள் வைத்து  இருக்கலாம் என்று தான் தோன்றியது.

அப்ரூவராக மனம் மாறி இருக்கும் ஒரு போலீஸ் சீனியர் போலீஸ் ஆபிசர் கை வசம் இருக்க , அதனால் அவரின் உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்தும் கூட அவரின் வாக்குமூலத்தை சில சாட்சிகளின் நடுவில் வைத்து கேமராவில் பதிவு பண்ணாமல் ... என்ற சில கேள்விகள் வருகின்றது.

கடத்த பட்ட மகளை தேடி ஜோதிகா அந்த இல்லத்திற்குள் செல்ல அங்கே இருக்கும் காட்சிகள் அம்மணியை மிகவும் பாதிக்க ... இதை எல்லாம் பார்வேர்ட் பண்ணிடுங்க.. பயமா இருக்கு, என்று சொல்லவும் செய்தார்கள்.

பிரதாப் போத்தன் லஞ்சம் / ஊழல் பெரும் காட்சியின் அடிப்படையே புரியவில்லை. படத்திற்கு வேறொரு முடிவும் வைத்து இருப்பார்களோ அல்ல "பொன்மகள் மீண்டு(ம்) வந்தாள்"  என்று இரணடாம் பாகம் வரப்போகின்றதா என்று ஒரு சந்தேகமும் தான் வந்தது.

கிளைமஸ் காட்சியின் போது அம்மணியிடம் எனக்கும் ஒரு டிஸ்ஸு குடு என்று கேட்டு வாங்கும் போது...

என்னங்க .. நீங்களும் அழறீங்களா, என்ற கேள்விக்கு ... என்னத்த சொல்றது.. நமக்கும்  ரெண்டு பொண்ணுங்க இருக்காளுங்களே.. பையனை பெத்தவங்க.. அவங்கவங்க அவங்க பெத்த பையனுங்கள தான் கவனமாபாக்கணும், பொண்ண பெத்த நம்ம அம்புட்டு பேரு பெத்த பையன்களையும் கவனமா பாக்க வேண்டி இருக்கே..

என்று சொல்லி படத்தை முடித்தோம்.

நானும் கடந்த பல வருடங்களாக நிறைய  படங்களை பார்ப்பதில்லை, என்னுடைய தமிழ் பட அறிவு 90ன் ஆரம்பத்திலேயே இன்றும் இருக்கின்றது. அந்த காலத்தில் எல்லாம் இம்மாதிரியான த்ரில்லர் படங்களுக்கு இசை - பாடல்கள்  ரொம்ப முக்கியம். படத்தையே வேற லெவெலுக்கு எடுத்து செல்லும்.  உதாரணத்திற்கு ரஜினி நடித்த காயத்ரி என்ற படம். அந்த படத்தில் வரும் "வாழ்வே மாயமா" என்ற பாடலை கேட்டாலே நெஞ்சு பதறும்.. அடுத்து "பூ விழிவாசலிலே" என்ற படம்.. வில்லன் ரகுவரன் மற்றும் அடியாள் பாப் அந்தோணி வரும் காட்சிகளில் வரும்  பின்னணி இசை..

இப்போதெல்லாம் இசைக்கும் பாடலுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை  போல் இருக்கிறது.

சுருக்கமாக சொல்ல போனால்..  அனைவரும் பார்க்க வேண்டிய படம்.  ஆண் பிள்ளைகளுக்கு இப்படி வாழ்தல் தீங்கு என்றும் பெண்களுக்கு "எச்சரிக்கை"  என்றும்  பாடம்.   இன்னும் முக்கியம்!  பிள்ளைகளின் தவறுகளை மறைக்கும் -  மறுக்கும் பெற்றோர்கள் இன்னும் நம் சாப கேடு என்று உணர்த்தும் இன்னொரு பாடம்

திரைக்கதையை பார்க்கையில் இயக்குனர் பிரெட்ரிக்கின் கைகள் கட்டப்பட்டது போல் தெரிகின்றது. ஜோதிகாவை தவிர மற்ற அனைவரின் நடிப்பும் செயற்கை, ஜோதிகா எதார்த்த நடிப்பு.

பிரெட்ரிக்கின் அடுத்த படைப்பை எதிர்பார்த்து கொண்டு.. 

4 கருத்துகள்:

  1. நிச்சையம் படத்தை ஒருதடவை பார்க்கலாம்.
    கதை நல்லா இருக்கு.
    கடைசியில பார்த்திபன் கண்டு பிடிச்சத
    டிடெயிலா காட்டல.
    எதோ லைட்டா படத்துல மிஸ் ஆனதா ஒரு ஃபீல் எனக்கு சார்.

    பதிலளிநீக்கு
  2. திரைப்படமாக பார்த்தால் விறுவிறுப்பு குறைவு தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விறுவிறுப்பு குறைந்ததிற்கான முக்கிய கரணம்.. பாக்யராஜ், பாண்டியராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன்.

      நீக்கு
  3. அந்தக் கடைசி டுவிஸ்ட் கூட தேவையில்லாதது..

    பதிலளிநீக்கு