வியாழன், 23 ஏப்ரல், 2020

சினிமா நட்சத்திரங்களின் மின்னலடிக்கும் வெண்மை!

கிட்டத்தட்ட ஒன்றரை  மாதம் வீட்டுக்குளே அடைந்து கிடந்த நான் இரவு எட்டரை மணி போல் சும்மா வெளிய போகலாம் என்று கிளம்ப மூத்தவள்...

"எங்கே கிளம்பிடீங்க?"

"சும்மா, வெளியே நடக்கத்தான்!!!"

"அதுக்கு எதுக்கு கார் சாவி எடுத்தீங்க!!!?"

"பாத்துட்டியா.. !!!? ரொம்ப போர் அடிக்குது மகள். கார் டிரைவிங் கூட மறந்துடும் போல இருக்கு, அதுதான் ஒரு சின்ன ட்ரைவ் போகலாம்னு..."

"டாடா.. கொஞ்சமாவது அம்மாவை பத்தி யோசிச்சீங்களா, வேலைக்கு போய்  பத்து மணி நேரத்துக்கு மேல ஆச்சி.. இன்னும் லேட் ஆகும்னு சொல்றாங்க.."



"நான் வெளிய போறதுக்குக்கும் உங்க அம்மா வேலைக்கும் என்ன சம்பந்தம்?"

"டாடா.. கனெக்ட் தி டாட்ஸ்..!! இந்த மாதிரி வெளியே போய் சுத்துனா கொரோனா பரவுனா எல்லாரும் ஹாஸ்பிடல்  தானே போகணும்.. அந்த மாதிரி சுத்தின்னு இருக்கவங்கனால தான் அம்மா மாதிரி ஹாஸ்பிடலில் வேலை செய்யுற ஆளுங்க பத்து மணி பனிரெண்டு மணின்னு வேலை செஞ்சின்னு இருக்காங்க.. கோ டு யுவர் ரூம்!!!"

அதட்டினாள்!

மனதில், வளரும் போதுஅம்மாக்கு பயந்தததோட.. அப்புறம் அம்மணிக்கு பயந்தததோட.. இவளுங்கள கண்டா நடுங்குறனே , என்னாடா வாழ்க்கை இதுனு யோசிச்சினே..

"சாரி மக.. இப்ப புரியுது.. தயவு செய்து நான் வெளிய கிளம்புன விஷயத்தை சின்னவள்ட்ட சொல்லிடாத! என்னை பிச்சி புடுவா பிச்சி "

"அவ தான் நீங்க கார் சாவிய எடுத்ததை பார்த்துட்டு என்னை விசாரிக்க சொன்னா"

ஹ்ம்ம்.. இவளுங்க என்ன? கூட்டணி வைச்சி தாங்குறாங்களேன்னு நொந்து கொண்டே படுக்கைக்கு வர..ஐந்தே நிமிடத்தில்..

"வி அண்டர்ஸ்டாண்ட் யு ஆர் வெரி போர்ட், அதனால... !!!?"

"தேங்க்யு.. பத்தே நிமிஷம் ஒரே ஒரு ரவுண்டு.. காரை விட்டு கூட கீழே இறங்கமாட்டேன்.."

"டாடா.. !!!!" இருவரும் சேர்ந்து சத்தம் போட

"அதனால.. என்ன சொல்ல வந்தீங்க.."

"உங்களுக்கு ரொம்ப போர் அதனால  எங்களுக்கு ஒரு கதை சொல்லுங்க."

"கிழிஞ்சது போ! "

"ப்ளீஸ். எங்களுக்கும் ரொம்ப போர் .. ஒரு சின்ன கதை..ப்ளீஸ்"

"ஓகே.. ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தாங்களாம்!!!"

"டாடா.. இந்த க்ராண்ட்மா டோனட் சுட்டாங்க.. அதை ஒரு க்ரோ தூக்கினு போய் மரத்துல உக்காந்துச்சு.. அப்ப ஒரு பாக்ஸ் வந்துச்சி.. .அப்புறம்.. பாட்டு டான்ஸ்.. .. ரொம்ப போர் கதை.. வேற ஏதாவது சொல்லுங்க.. "

" ஓ அந்த கதை உங்களுக்கு சொல்லிட்டானா?"

"ஆயிரம் முறை.. வேற ப்ளீஸ்"

"ஒரு ஊரில் ஒரு சின்ன பையன் இரண்டாவது படிச்சின்னு இருந்தானாம்.. "

"நைஸ்....சொல்லுங்க"

"அந்த பையனுக்கு அப்பா இல்லையாம் "

இளையவள் குறுக்கிட்டு..

" திரும்பவும் உங்க அப்பா இல்ல,  அப்பா இல்ல புலம்பலா"!!!?

பெரியவள் குறுக்கிட்டு ...

"தட்ஸ் வெரி ரூட்... சாரி சொல்லு "

"சாரி, டாடா.. சொல்லுங்க"

"அந்த பையனோட அம்மா வேலைக்கும் போகணும் பையனையும் பாக்கணும் ரெண்டும் முடியாதுன்னு அவனை ஒரு போர்டிங்கில் சேர்த்துட்டாங்களாம்.."

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு இது சொந்த கதை சோகக்கதை தான் என்று பார்வையிலே பகிர்ந்து கொண்டு..

"ஹ்ம்ம்.. சொல்லுங்க"!

அவனுக்கு தேவையான சோப்பு சீப்பு கண்ணாடி செருப்பு துணி பிளேட்  டம்பளர் கப் லொட்டு லொசுக்குனு எல்லாத்தையும் எடுத்துன்னு அந்த பையன் போர்டிங்க்கு போனாங்களாம் ..."

"அவ்வளவு சின்ன பையன் எப்படி டாடா துணி துவைப்பான்..?"

"அங்கே போர்டிங்கில் சொல்லி கொடுப்பாங்களாம் . கூட கூட கேள்வி கேக்க கூடாது.. இது கதை"

"ஓ .. ஓகே.. நான் உண்மையுன்னு நினைச்சேன்..."

இருவரும் பார்வையை மீண்டும் பரிமாற ..

"நாலு மாசம் கழிச்சி அந்த பையனுக்கு உடம்பு முழுக்க புண் வந்துடுச்சாம்.."

"பாவம்..அவங்க அப்பா அம்மாவை மிஸ் பண்ணி இருப்ப்பானே.."

என்ற இளையவள் கண் லேசாக கலங்க.. மூத்தவளோ..

"அவனுக்கு தான் அப்பா இல்லையே.. அம்மாவை தான் மிஸ் பண்ணி இருப்பான் , நீங்க சொல்லுங்க"

இவனுக்கு புது ஊர் தண்ணியோ சாப்பாடோ  தான் ஒத்துக்கலைன்னு சொல்லி அந்த போர்டிங் வார்டன் ஹாஸ்பிடல் அனுப்பி செக் பண்ணி மருந்து மாத்திரை ஆயின்மென்ட் எல்லாம் போட்டாங்களாம்..!"

"நல்ல வேளை நம்ப  அம்மா அங்கே இல்லை. இல்லாட்டி.. இஞ்சி பூண்டு  சீரகம் மஞ்சள் தூள்ளுன்னு எல்லாத்தையும்  கொடுத்து இருப்பாங்க, நீங்க சொல்லுங்க"

"இவ்வளவு பண்ணியும் அவனுக்கு அந்த புண் எல்லாம் போகலையாம்"

"சின்ன பையன் டாடா .. ஒரு வேளை அவனுக்கு ஒழுங்கா சோப்பு போட்டு குளிக்க தெரியாது போல இருக்கு.."

"ஒழுங்கா சோப்பு போட்டு தான் குளிச்சானாம்..இருந்தாலும் புண்  போகலையாம்.. "

"பாவம் .. சொல்லுங்க"

வார்டன் அவங்க அம்மாவுக்கு போன் போட்டு அவசரமா வர சொல்ல,அம்மாவும் அங்கே வந்தார்களாம். அப்ப...

"மேடம், தினமும் வி மேக் சூர் ஹி டேக்ஸ் பாத் அண்ட் துணியெல்லாம் கூட துவைக்க கொடுத்தோம். எல்லாம் க்ளீன் தான்.. மருந்து எல்லாம் கூட போட்டு பார்த்தோம் .. சரியாக மாட்டேங்குது.. "

பையனை அருகில் அழைத்த அவனோட அம்மா.. .அவனை கட்டி அணைச்சி ஒரு உச்சி முகர்ந்தாங்களாம். அடுத்த சில நொடிகளில்..

"ஐ க்நொவ் தி ப்ராபளம்!!!"

வார்டன், "என்ன ப்ராபளம் மேடம், புது ஊர் தண்ணி தானே.. ..?

"தண்ணி இல்ல.. குளிக்குறதும் துவைக்குறதும் தான்.. !"

"தினமும் குளிக்கறான்.. துணி கூட துவைச்சு தான் போடுறான்"

"என்னை அவன் ரூமுக்கு கூட்டினு போறீங்களா?"

"வை நாட், வாங்க போகலாம்"

"விசு , எங்கே உன் குளிக்கிற துவைக்கிற சோப்பை காட்டு.."

இதோ என்று எதிரில் ஒரு பிங்க் கலர் சோப்பும் ஒரு ப்ளூ கலர் சோப்பையும் பிங்க் கலர் சோப்பையும் அந்த பையன் அம்மாக்கு காட்டினானாம்.

அதை பார்த்த வார்டன் மேடம்..

"லக்ஸ் மற்றும் ரின் ரெண்டுமே நல்ல சோப்பு தான் .. அதுல பிரச்சனை இல்ல "

அம்மா " ஐ க்நொவ், லக்ஸ் ரின் ரெண்டுமே நல்ல சோப்பு தான்..ஆனா"

"நீ குளிக்க எத போடுற  எதை  வைச்சி துவைக்கிற.. !!?"

"குளிக்க எனக்கு பிடிச்ச ப்ளூ கலர் சோப், துவைக்க பிங்கன்னு சொன்னானாம்"

"ரெண்டுமே நல்ல சோப்புன்னு வார்டன் சொன்னாரே டாடா.. !!"

"ரெண்டும் நல்ல சோப் தான், ஆனா பிங்க் கலர் லக்ஸ் தான் குளிக்கிற சோப்பு அண்ட் ப்ளூ கலர் ரின் துவைக்குற சோப்.."

"ஓ மை காட்.. டாடா. .நாலு மாசமாவா  துவைக்குற சோப்பில் குளிச்சீங்க.. சோ சாரி..!!!"

"நான் இல்ல அது, சும்மா கதை தான்"

என்று பெருமூச்சு விட..

மூத்தவளோ..

"நீங்க தான் டாடா.. !! கதை சொல்லும் போது நடுவுல ஒரு முறை உணர்ச்சிவச பட்டு "விசு"ன்னு பேரை சொல்லிடீங்க!!!"

என்று சொல்லும் போது இருவரின் பார்வையிலும் சிரிப்பு போய் சோகம் தொற்றி  கொண்டது.


பின் குறிப்பு :

"குட் நைட்" என்று சொல்லி விட்டு போன இருவரும் ஐந்து நிமிடத்தில் திரும்பவும் என் அறைக்கு வந்து..

"சரி.. ஒரு பத்து நிமிஷம் ட்ரைவ் போங்க. .பரவாயில்லை.. காரை விட்டு வெளியே வராதீங்க .."

என்று பரிதாபமாக அனுமதி அளிக்க.

வேண்டாம்மா.. அம்மா வேலைக்கு போய் கிட்ட தட்ட பனிரெண்டு மணி நேரமாச்சு.. நான் வீட்டிலேயே இருக்கேன்... குட் நைட்!

4 கருத்துகள்: