புதன், 14 ஆகஸ்ட், 2019

மஞ்சுளா பாப்பின்ஸ் !


9வது வகுப்பு, மற்றும் ஒரு நாள், 80களின் ஆரம்ப நாட்கள்!

Total: 48
Present:47

என்று நான் எழுதும் போதே (நம்ம முகராசி அந்த காலத்தில் நம்மை க்ளாஸ் மானிட்டரா போட்டுடுவாங்க) அருகில் இருந்த ராபர்ட்  கென்னடி,

இன்னாது..ராபர்ட் கென்னடியா ? இன்னா கதை வுடுற விசுன்னு உங்களில் சிலர் சொல்றது கேக்குது. அதனால, மேலே போகும் முன் ஓர் சிறிய விளக்கம்.

60  மற்றும் 70களில் கிறித்துவ  குடும்பங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு  அமெரிக்க அதிபரின் பெயர் வைப்பது வழக்கம். இன்னும் சொல்ல போனால், என் வகுப்பில் கென்னடி, லிங்கன், வாஷிங்டன், நிக்ஸன்
என்ற நான்கு அமெரிக்க அதிபர்களும் இருந்தார்கள்.

சரி கதைக்கு வருவோம்.

Total  :48
Present  :47

என்று நான் எழுதியதை பார்த்த ராபர்ட் கென்னெடி மிகவும் சோகமாக,
"இன்னைக்கும் மஞ்சுளா வரலையா?"

 என்று என்னிடம் கேட்க, நானோ ஆமா என்று சொல்ல, கென்னடியோ ...

"ஹ்ம்ம்"

 என்று ஒரு பெரு மூச்சு விட்டான்.

"என்ன ஆச்சி கென்னடி"?

"என்னத்த ஆகனும்?, இன்னும் எத்தனை நாளுக்கு தான்"

"என்னாடா ஆச்சி, இப்படி அழுவுற "

"நாலு நாளா அவள் வரல விசு, உருகிடும் போல "

"அவ வராதத்துக்கு நீ எதுக்குடா உருகுற"

"நான் இல்ல...இது"

என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து ஒரு "Poppins" உருளை எடுத்தான்.

"கென்னடி...முழு பாப்பின்ஸ், 95  காசு, எப்படிடா"



"எங்க பெரிம்மா பெங்களூரில் இருந்து வாங்கியாந்தாங்க.."

"சரி.. அதை பிரி"

"இல்ல விசு, இதை நாலு நாள் பிரிக்காம இருக்குறதே மஞ்சுளாவுக்காக தான் "

"அட பாவி, முழு பாப்பின்ஸும் மஞ்சுளாக்கா?"

"சே சே... அப்படியெல்லாம் இல்ல.. அவளுக்கு எதிரில் பிரிக்கணும்.. அதுதான்.."

"சரி, மஞ்சுளா வந்ததும் பிரி, ஆனா  பிரிக்கும் போது என்னை மறந்துடாத.."

என்று சொல்லும்  போதே, இன்னொரு அதிபரான  லிங்கன் வந்து சேர்ந்தான்.

"இவன் ஏன் இம்புட்டு சோகமா இருக்கான்..மஞ்சுளா வரலையா? "

"அது எப்படி உனக்கு தெரியும்"

"மஞ்சுளா வராட்டி, இவன் என்ன? மொத்த பசங்களும் சோகமா இருப்பாங்க."

"ரியலி? "

"இன்னா .. .ரியலி பொய்யிலினு? நீ கூடத்தான் சோகமா இருக்க..."

"டேய் நான் சோகமா தான் இருக்கேன்.. ஆனா அதுக்கு வேற காரணம்"

"சொல்லு"

"கென்னடி முழு பாக்கெட் பாப்பின்ஸை  நாலு நாளா பிரிக்காம பாக்கெட்டில் வைச்சி இருக்கான்"

" எதுக்கு?"

"மஞ்சுளாக்கு எதிரில்  தான் பிரிப்பானாம்"

"விசு, பாப்பின்ஸுனு சொன்னவுடன் தான் ஞாபகம்  வருது, கிட்ட வா"

அருகில் சென்று காதை அடமானம் வைத்தேன்.

"எதிரில் இருக்க சண்முகம் ஸ்டோரில் பாப்பின்ஸ் விக்கிறாங்க "
கிசுகிசுத்தான்.

"அது என்ன கள்ள சாராயமா.. ,அதை ஏன்டா இம்புட்டு சீக்ரெட்டா சொல்லற"

"அவசர கொடுக்கு விசு நீ .. நிதானமா கேளு.."

"சொல்லு"

"அந்த கடையில் முன்னாடியே ஒரு டேபிள் போட்டு மிட்டாய் பாட்டில் எல்லாம் வச்சி இருக்காங்க இல்ல"

"ஆமா, அந்த டேபிள் யாரையும் உள்ள போகாத மாதிரி தடுக்கும் வேற . சொல்லு"

"அந்த டேபிளுக்கு கீழே ரெண்டு வாரமா ஒரு பாப்பின்ஸ் பெக்கெட் விழுந்து  இருக்கு "

"ஏன்"

"எனக்கு என்ன தெரியும், ரெண்டு  வாரத்துக்கு முன்னாடி பேனாக்கு இங்க் ஊத்த போனேன். ஊத்தி முடிக்கும் போது மூடி கீழ விழுந்துடிச்சி"

"பேனா முடியா, இங்க் முடியா?"

"ரொம்ப முக்கியம்!"

"சொல்லு"

"மூடிய எடுக்கலாம்னு கீழே குனிஞ்சா டேபிளுக்கு கீழ ஒரு முழு பாக்கட் பாப்பின்ஸ்"

"கடைகார்ட்ட சொன்னியா"

"இல்லை"

"தினந்தோறும் காலையில் அந்த கடை பக்கம் போய் எதையாவது கீழே போட்டுட்டு  அது இருக்குதான்னு பார்ப்பேன். இன்னைக்கு காலையில் கூட அங்கே தான் இருந்தது."

"முழு பாப்பின்ஸ்?"

"ஆமா விசு, நேத்து கூட ஹாக்கி ஸ்டிக் எடுத்துன்னு போய் அதை வைச்சி  இழுத்துடலாம்னு ட்ரை பண்ணேன். அந்த கடைகார் கண்ணை என் மேலே வைச்சின்னு இருந்தார்"

"இதை வேறை யாருட்டையாவது சொன்னீயா"

"இல்லை, நீ தான் முத முதலில்.."

"சரி, வா கடை வரைக்கும் போய் அது இருக்கா பாக்கலாம் "

கடைக்கு சென்று லிங்கன் இங்க் போட்டு கொண்டு இருக்கையில், நானோ  ஷூ நாடாவை சரி செய்வதை போல் குனிந்து பார்க்கையில், கைக்கு சற்று எட்டாத தூரத்தில் ஒரு முழு பாப்பின்ஸ் , வானவில்லின் அனைத்து வண்ணத்தையும் அணைத்து கொண்டு என்னை பார் என் அழகை பார் என்று மிளிரியது.

வழியில்...

"ஆமா , லிங்கன், ஸ்கேல் வைச்சி இழுக்க முடியுமா? "

"ட்ரை பண்ணேன், எட்டல"

"இப்ப என்ன பண்ணலாம்"

"பி டி வாத்தியார் வீட்டுல முருங்கை காய் பறிக்க ஒரு பெரிய குச்சி வைச்சின்னு இருப்பாங்க, அத மட்டும் நீ எடுத்துனு வந்துடு, அதை வைச்சி எடுத்துடலாம்."

"அதை எடுத்துனு எப்படி கடை பக்கம் போவ, கடைகார் பாத்தா உடனே சந்தேகம் வந்துடும்."

இருவரும் பேசி கொண்டு இருக்கும் போதே.. "பளீச்"  என்று பல்பு எரிந்தது.

"லிங்கன், உடனே வா,  கென்னெடிய பாக்கணும்."

"எதுக்கு "

"வா, ஒரு  விஷயம் இருக்கு"

கென்னடியிடம் போய் சேர...

"கென்னடி ,  பாப்பின்ஸ் பாக்கெட் எங்க?"

"இருக்கு "

"பிரிக்காமதானே இருக்கு..

"மஞ்சுளா தான் வரலையே.. ஆமா, ஏன்?"

"ஒரு அஞ்சி நிமிஷம் கடன் தாயேன், ப்ளீஸ் "

"ஏன் , யாருகிட்டையாவது காட்டி பீத்திக்க போறீயா,"

"ப்ளீஸ், அஞ்சே நிமிஷம்"

"தரேன், ஆனா பிரிச்சிடாத, அதை மஞ்சுளாக்கு எதிரில் தான் பெருமையா பிரிப்பேன்.."

கண்டிஷனோடு பெற்று கொண்டு, லிங்கனின் காதை கடித்தேன்.

"முடியுங்குற..?"

"லிங்கன், தெய்வத்தால் ஆகாது.. எனினும் முயற்சி தன் மெய் வறுத்த பாப்பின்ஸ் தரும்"

"சரி, வா ட்ரை பண்ணலாம்"

இருவரும் கடைக்கு சென்று மேசையின் அருகே நிற்க.. லிங்கன்..

"அண்ணே, அஞ்சு பைசாக்கு இங்க் "

"காலையில் தானே ஊத்துன, அதுக்குள்ள  எழுதி கிழிச்சிட்டியா?"

"என் பேனா இல்ல, விசு பேனா "

அவர் இங்கை  பில்டரில் ஊற்றிக்கொண்டு இருக்கையில்.. நானோ முழு பாக்கட் பாப்பின்ஸை கையில் வைத்தவாறு கடை காரரின் கண்ணில் படும் படி நிர்க்கையில்..

லிங்கன்,  "விசு, உங்க பெரியம்மா பெங்களூரில் இருந்து வாங்கினு வந்தங்களா? அங்கே இது எவ்வளவோ."

"75  காசுன்னு சொன்னாங்கனு நினைக்கேன் "

"அண்ணே நம்ம கடையில் இது எவ்வளவு ?"

"95  காசு "

பேசி கொண்டே இங்க்கை  ஊத்திய லிங்கன் பில்டரை தவறவிட, இங்க் பட்டு விடக்கூடாது என்று மேசைக்கு உள்பக்கம் இருந்த கடைக்காரரும் வெளியே நின்று கொண்டு இருந்த நானும் தடுமாற, கையில் இருந்த பாப்பின்ஸை பாக்கெட்டில் போட்ட நான்...

"அண்ணே.. பாப்பின்ஸ் கை தவறி மேசைக்கு கீழே உருண்டு போயிடிச்சி..."

"கைய விட்டு எடுத்துக்கோ "

என்று அவர் சொல்கையில்..

லிங்கனோ..

"கையில எட்டாது  ...... "

"எட்டாது போல இருக்கு அண்ணே.. "

லிங்கன் "நான் வேணும்னா பி டி வாத்தியார் வீட்டுல இருக்க கம்பை எடுத்துனு வரட்டா.. ?"

"அதெல்லாம் வேணாம்,  நான் டேபிளை மெதுவா சரிக்கிரேன் , எடுத்துக்கோ.."

சரித்தார், எடுத்தேன்..

வழியில்,

"எப்படி விசு...?"

"ஐ டோன்ட் க்நொவ் .. அதை விடு.. , இது உருகுறதுக்கு முன்னாடி கென்னடித திருப்பி கொடுக்கணும்"

கென்னடியிடம் செல்ல..

"இந்தா.. தேங்க்ஸ்.. "

"என்ன விசு..பாப்பின்ஸை கடன்வாங்கி புக்  எதுக்கும் நடுவுல வைச்சியா?"

"ஏன்?"

"மயில் குட்டி போட்ட மாதிரி ரெண்டு இருக்கு"

என்று சொல்ல.. லிங்கனோ..

"சொன்னா நம்ப மாட்ட.."

 என்று சொல்லி அவனை நம்ப வைக்க..

அவனோ..

"அட பாவி..அவனவன் கடைக்காரன் தான் பிரச்சனைன்னு பார்ப்பான்..நீ  கடைக்காரனையே டேபிளை தூக்க வைச்சி எடுத்துன்னு   வந்து இருக்கியே.உன் மூளைக்கு உனக்கு தான் அமெரிக்க அதிபர் பேரை வைச்சி இருக்கணும். நீ அமெரிக்காவில் இருக்க வேண்டிய ஆளு.. விசு! "

என்று சொல்ல... லிங்கனோ..

"சரி அதை பிரி.. ஆளுக்கு பாதி"

"ஆளுக்கு பாதி சரி.. ஆனா.. இப்ப வேணாம்.."

"ஏன்.."?

"நாலு நாளா மஞ்சுளா ஆப்சென்ட், அவ வந்தவுடன் அவளுக்கு எதிரில் பெருமையா பிரிக்கலாம்"!

என்று சொல்ல.. கென்னடியோ..

யு டூ ப்ரூட்டஸ்"

 என்றான்! 

7 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஹா...நல்லா கணக்கு போடுறீங்கப்பா...ஆட்டைய போட்டு எடுத்த பாப்பின்ஸ வைச்சு கென்னடிக்கு போட்டியா!!!! ஹா ஹா ஹா ஹா...இன்னா மூளைப்பா விசு உங்களுக்கு...அதான் கணக்குப் பிள்ளையா இருக்கீங்க போல!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. பாப்பின்ஸ் காணாமல் போகட்டும்.,. ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  3. விசு : வந்துட்டேன்னு சொல்லு , திரும்ப வந்துட்டேன்னு சொல்லு .

    பதிலளிநீக்கு
  4. விசு நீங்க என்ன செய்வீங்கேளோ எது செய்வீங்களோ எனக்கு தெரியாது ஆனால் எனக்கு பாப்பின்ஸ் இப்பவே வேணும் ஐ மிஸ் பாப்பின்ஸ்

    பதிலளிநீக்கு
  5. விசு செளக்கியமா ஆளையே காணுமே ஒரு வேளை அதிபர் தேர்தலில் நீங்க இறங்கீட்டீங்களோ என்னவோ?

    பதிலளிநீக்கு
  6. அருமை சுவாரசியமான எழுத்து ,ரொம்ப நாள் ஆச்சு நீங்க எழுதி , நா டெய்லி வந்து பார்த்துட்டு போறன்

    பதிலளிநீக்கு