வெள்ளி, 27 ஜூலை, 2018

நானும் கலைஞரும் .. "A Love - Hate Relationship"

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்து கொண்டு இருக்கையில், ஒரு புத்த மத கோயிலில் நம்பியார் எம்ஜியாரை புரட்டி கொண்டு இருக்கையில்.. எதிரில் இருந்த பெருசு ஒன்று குடித்து விட்டு அலறியது..


"இந்த நம்பியாரை கூட மன்னிச்சிடலாம் ஆனா அந்த கருணாநிதி .. கருணாதியை மன்னிக்க கூடாது வாத்தியாரே..."

எனக்கு நினைவு தெரிந்த வரை அதுதான் நான் கருணாநிதி என்ற பெயரை முதன் முதலாக கேட்டேன்..

அந்த வயதில் அனைவரை போலவே அடியேனும் MGR விசிறி. அதற்கு முன் வந்த அனைத்து படங்களிலும் முதல் பாதியில்  நாயகியை நம்பியார் கற்பழிக்க முயல MGR வந்து காப்பாற்ற, பின்னர் இரண்டாம் பாதியில் MGR நம்பியார் செய்த அதே வேலையை சிரித்து  கொண்டே செய்ய எனக்கோ புரியாத வயது...



இருந்தாலும்... எந்த பிரச்சனை வந்தாலும் MGR வந்து காப்பார் என்ற நம்பிக்கை. இவ்வளவு நல்ல எம்ஜியாரை எப்போதும் கொலை செய்ய முயற்சிக்கும் நம்பியாரை கூட மணியது விடலாம் ஆனால் கருணாநிதியை மன்னிக்க கூடாதா? இந்த கருணாநிதி அவ்வளவு பொல்லாதவரா?


யார் இந்த கருணாநிதி? சிறிது நாட்களின் மறந்தேன்.

சட்ட சபை தேர்தல்.. எம்ஜியாருக்கும் கருணாநிதிக்கும் சரியான போட்டி. அப்போது தான் நினைவிற்கு வந்தது.. ஓ... இவர் தான் எம்ஜியாருக்கு வாழ்க்கையின் வில்லன். இவரை கண்டிப்பாக மன்னிக்க கூடாது !

அப்போது ஒரு வருடம் சீர்காழியில் படிக்க நேர்ந்தது. விடுதியின் அருகில் சீர்காழி MLA வீடு. அவர் வீட்டின்  முன்னறையில் நூலகம் போல் அநேக செய்தி  தாள் இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்  அங்கே சென்று படிக்கலாம்.  அந்த அறையில் பெரியார் -அண்ணா - கருணாநிதி படங்கள் இருக்கும்.

கருணாநிதியின் மேல் இருந்த வெறுப்பினால் அந்த படங்களை பார்ப்பதையே தவிர்த்தேன். என்ன ஒரு பொல்லாத மனிதன் இவர். ஊரில் யார் கற்பழிக்க படும் போதும் அங்கே பறந்து சென்று காக்கும் என் தலைவன் எம்ஜியாரை எப்படி இவரால் எதிர்க்க முடியும்..  அப்படி தான் நாட்கள் கடந்து கொண்டு இருந்தன..

ஒரு நாள்...

MLA  அவர்களின் அறைக்கு ஒரு டேப் ரெக்கார்டர் வந்தது. அதை சுற்றி பல கரை வேட்டிகள் அமர , நானோ.. ஆஹா .. பாட்டு போட போகின்றார்கள் போல இருக்கு.. "அவள் ஒரு நவரச நாடகம்" பாட்டு வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து கொண்டே  எம்ஜியாரோடு ஆள் கடலில் நீந்த..

கர கர குரலில் .. உடன் பிறப்புகளே ..

என்று ஒரு குரல் கர்ஜிக்க.. டேப்   ரெக்கார்ட்டின் முன் இருந்த உடன் பிறப்புகள்..ஆர்ப்பரித்தன

அடுத்த சில நிமிடம், அந்த கர கர குரலில் வந்த செந்தமிழை கண்டு  அதிர்ந்தேன்..

அந்த பேச்சு முடிகையில் அக்குரலுக்கு அடிமையாகினேன்..

தொடரும் ...

2 கருத்துகள்: