புதன், 18 ஜூலை, 2018

பனிரெண்டு தானே

திங்கள் முதல் வெள்ளி வரை
ஞாயிறுடனே விழிப்பதனால்
சனி காலையில் சற்றே அயர்ந்து
நித்திரையில் இருக்கையில்..

அப்பா அப்பா..
கனவு தான் இது என்று
திரும்பி படுக்க முயல்கையில்
அப்பா..அப்பா..
அலறினாள் என் ராசாத்தி...

பனிரெண்டு தானே..

அம்மாடி...
அவசரம் எதுவானாலும்
காக்கட்டும்..
இன்னும் ஐந்தே நிமிடம் கொடு
என்று சொல்ல...

சரி என்று சொல்லி
கடிகாரத்தையே பார்த்து கொண்டு
அருகிலேயே அமர்ந்து விட்டாள்
அவளையும் அறியாமல்
ஒரு  மெட்டைமுணுமுணுத்து கொண்டு.

பனிரெண்டு தானே..

நொடி முள் முன்னூறு தாண்ட
நொடி இருக்கையில்..
அப்பா..அப்பா..
அவசரமா ஓடி வா...
ஓடினோம் ..
கதவை திறந்து
காட்டினாள்..
குண்டு மல்லியை..
பூத்திடுச்சி ..
அப்பா
பூத்திடுச்சி..

பனிரெண்டு தானே..


தூக்கத்தை இழந்த
 கோவத்தை மறந்துவிட்டு
மல்லியை ரசிப்பதை
 போல் வேடமிட்டேன்.
அவளும் ரசித்தாள்.

பனிரெண்டு தானே..

மல்லி மொட்டை பார்த்தவள்
ரோசாவின் முள்
கை பட
அப்பா ...
அலறினாள்..
வலி தாங்க முடியாமல்..

பனிரெண்டு தானே..

பின்னர் ..

உணவு மேடையில் ..
தாயார் தயார் செய்த
இட்லியும்  கத்திரி
சாம்பாரையும் பார்த்து..
என் சாம்பாரையும் நீ சாப்பிடு
எனக்கு பொடி மட்டும் போதும் .
ஆனா அம்மாவிடம் சொல்லாதே
என்று அதட்டல் போட்டு...
சென்றாள்.

பனிரெண்டு தானே..

அறைக்கு சென்றவள்
மீண்டும்  அலறினாள்..
அப்பா...
அடித்து பிடித்து ஓடினேன்...
சிலந்தி..
சுவற்றில்  இருந்த
சிலந்தியை கண்டு
படுக்கையின் ஓரத்தில்
சுருண்டு கிடந்தாள்..

பனிரெண்டு தானே..

பின்னர்..

விளையாட செல்கையில்..
வழியில் ..
கருப்பு நிற வாகனத்தை கண்டவள்
எனக்கு என்னமோ இந்த
கருப்பு நிற வாகனங்களை
கண்டாலே பயம் என்று
என் கரத்தை
இறுக்கி கொண்டாள்..

பனிரெண்டு தானே.

மைதானத்தை அடைந்தோம்..
முயலை மிரட்டினாள்..
பட்டாம்பூச்சோடு பறந்தாள் ..
மீனையும் மானையும்
இதுவரை காணாதது போல்
பார்த்தாள்..

பனிரெண்டு தானே..

எங்களுக்கும் முன்..
அவள் வயது
 சிறுவர்கள் விளையாட
உன் வகுப்பு மாணவர்கள் தானே
அவர்களை அறிவாயோ
என்றதற்கு
தெரியும் ஆனால் தெரியாது..
I dont like Boys, they are dirty
என்று கூறினாள்

பனிரெண்டு தானே..

நாள் முடிய வீடு வர ...
ஐஸ் க்ரீம் வண்டி இசையோடு
வலம்  வர...
என் காதை
இருக்க மூடினாள்..
எனக்கு வயதாகி விட்டதாம்
சக்கரை வந்துவிடுமாம்
அம்மா சொன்னார்களாம்.

பனிரெண்டு தானே..

மாலை
அன்னை வந்தவுடன்
சினிமா செல்ல அழைத்து
அங்கே
அடியேனுக்கும்  அம்மணிக்கும்
நடுவில் அமர்ந்து
முத்த காட்சி வந்ததும்
என் கண்ணை மூடினாள்..
நான் கெட்டு விட கூடாதாம்

பனிரெண்டு தானே..

இரவாகி..
இல்லம் திரும்ப
அப்பா...
தூக்கமே வரல்ல..
சிலந்தி பயம்,
நான் தூங்கும் வரை
இங்கேயே இரு என்றாள்.

பனிரெண்டு தானே..

அருகில் நான் அமர...
ஒரு கதை சொல்லு
என்று கட்டளையிட

பாட்டி..
அந்த வடை கதை ரொம்ப போர் ..

முன்பு ஒரு காலத்தில..
அந்த நரி கதை ரொம்ப போர்..

அந்த முயல் ஆமை
அந்த கதை ரொம்ப போர்..

போரடித்து தூங்க சென்றாள்..

பனிரெண்டு தானே..

அடிமேல் அடிவைத்து
அசையாமல் அவள்
அறையில் இருந்து
விலகி  வந்தேன்.
வெளியில் உள்ள தோட்டம்
சென்று
குண்டு மல்லியின்
மொட்டை மட்டும்
மனமின்றி
பிடுங்கி எறிந்தேன்.
காலை சற்று கூடுதலாக
உறங்கும் நப்பாசையோடு ..
எப்படியும் கண்டுபிடிக்க
மாட்டாள்
என்ற நம்பிக்கையோடு.

பனிரெண்டு தானே..

அவள் பனிரெண்டு வயது
குழந்தை..
ஒரு குழந்தையை...

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

6 கருத்துகள்:

  1. இப்படி குழந்தைகளுடன் நேரம் செலவ்ழித்து இருந்தால் அப்படி ஒரு துயரம் நடந்திருக்காதோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னமோ போ மதுர.. மனசே சரியில்லை.

      நீக்கு
    2. மதுரை விசுவின் இந்தத் தளம் பார்த்த பிறகுதான் செய்தி புரியாமல் என்ன செய்தி பற்றி விசு சொல்கிறார் என்று போய்ப் பார்த்து துளசிக்கும் சொல்லிட்டு அவர் கருத்துடன் என் கருத்தும் போட்டேன். அப்போ உங்க கருத்தின் அர்த்தம் புரியலை. ஆனால் செய்தி வாசித்த பிறகு தான் உங்கள் கருத்து யெஸ் யெஸ் அதே அதே என்று புரிந்தது. அந்தத் தாய் சொல்லியிருப்பதாகச் செய்தியில் வந்திருப்பது உண்மை என்றால்...அதாவது குழந்தை தாமதமாக வருவதைப் பற்றி அவள் விளையாடிக்கொண்டிருப்பாள் என்று நினைத்ததாகச் சொல்லியிருப்பது உண்மை என்றால்....ஸாரி டு ஸே....

      குழந்தை அதுவும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு....அப்படிச் செய்யப்பட்டு வீட்டிற்கு வரும் குழந்தையிடம் சோர்வு இருந்த்ருக்கும்....மன ரீதியாகவும் கண்டிப்பாகப் பயந்து டல்லாகியிருக்கும். அத்தனை சர்வ சாதாரணமாகக் குழந்தை தினமும் பள்ளிக்குச் சென்று வந்திருக்க முடியுமா? வயதுக்கு வராத குழந்தை என்றே தெரிகிறது...அப்படி என்றால் அந்தக் குழந்தைக்கு உறுப்புகள் பாதிக்கப்பட்டு எத்தனை சோர்வு வந்திருக்கும் இது கூட பெற்றோரால் கண்டு பிடிக்க முடியவில்லையா? கண்டிப்பாக ஏதேனும் மாற்றம் வந்திருக்கும்...கொஞ்சம் சோர்வு என்றாலே நாம் குழந்தைகளை என்ன ஏது என்று கேட்டுக் குடைந்துவிடுவோமே...தாமதம் என்றால் முதல் நாளே என்ன ஏது ஏன்று தேடியிருக்கமாட்டாரா? எப்படி விளையாடிக் கொண்டிருப்பாள் என்று நினைக்க முடியும்? அப்படியே நினைத்தாலும் தேடிச் சென்று உறுதிப்படுத்தியிருக்கவேண்டாமா.அதுவும் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தை....அதுவும் பருவ வயதுப் பெண்..எப்பொது வேண்டுமானாலும் வயதுக்கு வரும் பருவம். இப்பொதெல்லாம் 10 வய்திலேயே வயதுக்கு வந்துவிடுகிறார்கள் பெண்கள்...என் வீட்டருகில் இருக்கும் பெண் குழந்தைகள் உடைய பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்...கூடவே சென்றுதான் விட்டு அழைத்து வருகிறார்கள் கொஞ்சம் பெரிதானவுடன் தான் தனியே செல்ல அனுமதிக்கிறார்கள் அதுவும் பல கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள்..

      .இன்னும் பல கேள்விகள் எழுகின்றன...பச்...குழந்தைதான் பாவம்...

      கீதா

      நீக்கு
    3. பெற்றோர் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசும் ஃப்ரென்ட்லி உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்....

      கீதா

      நீக்கு
  2. சட்டம் கடுமையாக்கப்படனும்...இப்பத்தான் உங்க கவிதை வாசித்து செய்தியே தெரிந்து கொண்டோம் விசு.

    மனது வேதனை தாளலை..

    கீதா: விசு எப்படி இத்தனை மாதம் அக்குழந்தையின் ஹெல்த் வெளியில் தெரியாமல் போகுமா என்ன அதுவும் மயக்க மருந்து கொடுத்து....எப்படித் தாங்கியிருக்கும் அப்படினா கண்டிப்பா வெளியில் காட்டியிருக்கும்...என்னென்னவோ கேள்விகள் எழுகின்றது விசு மனதில்....

    பலியானது குழந்தை...ஹூம் என்ன சொல்ல சமூகம் எதை நோக்கிப் போகுது?

    பதிலளிநீக்கு
  3. என்ன ஜென்மங்களோ ...

    மிருகங்களை விட கீழான மனிதர்கள்...

    பதிலளிநீக்கு