புதன், 28 பிப்ரவரி, 2018

முன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..


சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில்  தோழி புவனா கருணாகரன்  ..

"வாஷிங்டன் அருகே வசிக்கும் தமிழர்கள் கவனத்திற்கு" என்று ஒரு அழைப்பிதழ்  அனுப்பி இருந்தார்.

அதில் கார்த்திகேயன் சிவசேனாதிபதியுடன் ஒரு சந்திப்பு என்று அச்சிட பட்டு இருந்தது.

மெரினாவில் ஜல்லி கட்டு போராட்டத்தின் போது கேள்வி பட்ட பெயர், மற்றும் இணைய தளத்தில் இவரின் பேச்சை கேட்ட அனுபவம்., நேரம் இருந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று நாள் குறித்து கொண்டேன்.

நடுவில்.. மனதில் சில கேள்விகள்?

இந்த சந்திப்பினால் என்ன சாதிக்க போகின்றோம்?

யாருக்கு பயன்?

என்பது உட்பட...

இருந்தாலும்..  பல ஆயிர டாலரகளை வீணடித்து மார்க்கெட்  போன நடிகை மற்றும் டைரக்டர்களை அழைத்து வைத்து கொண்டு..

உங்கள் இருவரில்.. முதலில் யார் "ஐ லவ் யு" சொன்னார்கள் என்று கேட்கும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கு பதில் இது கண்டிப்பாக புதிய முயற்சி என்ற  எண்ணம் மனதில் வந்தது.

நாளும் வந்தது..

வாஷிங்டன் பகுதியில் நமக்கு அறிந்த சில முக நூல் நண்பர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு போவதில் மூலம் அவர்களையும் சந்திக்கலாம், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்றெண்ணி மாலை நான்கு மணி நிகழ்ச்சிக்கு அந்த அரங்கை சேர்ந்தேன்.

அரங்கில்  நுழைகையில், மணி நான்கை  தாண்டி இருந்தது. யார் கவனத்தையும்  கெடுக்க கூடாதென்று மிகவும் அமைதியாக அரங்கில் நுழைந்த எனக்கு ஒரு அதிர்ச்சியில்லா விடயம் தான் தென் பட்டது.

நிகழ்ச்சிக்கான மேடையையும் மற்றும் ஒளி -  ஒலி வகையாறாக்களையும் ஏற்பாட்டாளர்கள் மும்முரமாக சரி செய்து கொண்டு இருந்தனர்.

முகநூல் புகை பட சாயலில் இருந்த நண்பர் ஒருவருடன் நேரே சென்று அறிமுக படுத்தி கொள்ள..

அவரும் ..

இன்ப அதிர்ச்சியில்  மூழ்க  ( அப்படி தான் சொன்னாருங்க ) ..மற்றும் சிலரை அறிமுக படுத்தினார்.   மணி கிட்ட தட்ட ஐந்து ஆக..

நிகழ்ச்சி நான்கு என்று போட்டு இருந்தீர்கள்..ஐந்து ஆகி விட்டதே...?

பனி - மழை - போக்குவரத்து நெரிசல்...

மனதிலோ..

அடே.. அடே.. தமிழகன் எங்கே நிகழ்ச்சி நடத்தினாலும் இந்த மாதிரி எதிர்பாராத பிரச்சனைகள் வந்து அவனை ஒரு நிகழ்ச்சியையும் சரியான நேரத்தில் நடத்த விடமாட்டேங்குதே ..

என்று நினைக்கையில்..,

அவரோ..

இதோ வந்து கொண்டே இருக்கின்றார்..

என்று உறுதி அழைக்க..
'
ஒலி பெருக்கியில்.. தேநீர் மற்றும் பக்கோடா விற்பனைக்கு உள்ளது என்ற அறிவுப்பு வர..

பக்கோடா.... நாட்டின் வேலை வாய்ப்பிருக்கும் சரி.. வயிற்றின் பசிக்கும் சரி  .. என்று நினைத்து கொண்டே...

அங்கே சென்று அவை இரண்டையும் பெற்று கொண்டு வந்து அமருகையில்..


எதிரில் முக நூல் தோழி ஒருவர் இருக்க அவரிடம் நட்ப்பை  பரிமாறி கொண்டு இருக்கையில்..

யாழ்ப்பாணத்தை சார்ந்த அம்மணி ஒருவர்..

அவிக நேரத்துக்கு வெளிக்கிட்டாலும்  போக்குவரத்தில் நெரிசலாகி அங்கே சாலையில் நிக்கிறாங்களாம்.. நாம எதுக்கு நேரத்தை  வீணடிக்கணும்.. யாராவது உங்களுக்கு தெரிஞ்ச ஜல்லிக்கட்டை பத்தி கதையுங்கன்னு .. விண்ணப்பம் தர..

நம்ம தான் வெறுங்காலிலே ஆண்டவர் பாணியில் ஆடுவோமே.. இவங்க வேற சலங்கையை கட்டி விட்டுட்டாங்களே என்றெண்ணி ..

மைக்கை பிடித்து சிறு வயதில் நான் ரசித்த மஞ்சு விரட்டு ( இது ஜல்லி கட்டு அல்ல)  நிகழ்ச்சியை பற்றி  கதைத்தேன்.

என்னை தொடர்ந்து இன்னும் சிலர்...

அவரவர்கள் ஊரில் .. ஜல்லி கட்டு எப்படி இருந்தது என்பதை பற்றியும்,  ஜல்லி கட்டில்தங்களுக்கு எப்படி ஈர்ப்பு வந்தது என்பதை பற்றியும் மிகவும் அழகாகவும் நகைசுவையாகவும் எடுத்து சொல்லி கொண்டு இருக்கையில்..

சிறப்பு விருந்தினர் வந்து விட்டார் என்ற செய்தி காதில் எட்ட .. ஐந்து நாற்பத்தி ஐந்திற்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

தமிழ் தாய் வாழ்த்து.. ..

அனைவரும் எழுத்து நிற்க .. தமிழ் தாய் வாழ்த்தை பாடி நிகழ்ச்சி ஆரம்பிக்க .. வாஷிங்டன்  தமிழ் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சால்வைகளை போற்ற.. கார்த்திகேயன் சிவசேனாதிபதி   உரையை ஆரம்பித்தார்,.

அவர் பேசுகையில், நான் குறித்து கொண்ட சில விடயங்கள்..

ஜல்லிகட்டின்  பூர்விகம்..
ஜல்லி கட்டின் அவசியம்..
ஜல்லி கட்டின் நிர்வாகம்..
ஜல்லி கட்டின் எதிர்காலம்..
ஜல்லி கட்டை எதிர்ப்பவர் யார்?
ஜல்லி கட்டை இவர்கள் எதிர்ப்பது ஏன்?

என்று எடுத்துரைத்து மட்டும் அல்லாமல்..

நாளைக்கே அமெரிக்காவை விட்டு தமிழகம் சென்று உடனடியாக விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வ கோளாறு தவறு .. நிதானம் மிகவும் அவசியம் என்பதை மிகவும் சீராக விளக்கினார்.

மற்றும் ....

மெரினா புரட்சியில்  நான் அறியாத பல தகவல்களை சொன்னார். அவர் பேசி முடிந்தது.. கேள்வி நேரம் என்று அறிவிக்க பட..

இது ஆரம்பிக்கும் முன்னர்.. அமெரிக்காவில் ஏதோ  ஒரு இந்தியனுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம் என்றெண்ணி இன்னொரு பிளேட் பக்கோடாவை அடித்து பிடித்து வாங்கி கொண்டு வந்து என் இருக்கையில் அமர...

அடேங்கப்பா.. எத்தனை கேள்விகள்.. ஒவ்வொன்றும்.. திருவிளையாடலில் தருமி சிவபெருமானை கேட்ட கேள்விகள்.. பதிலும் அவ்வாறே இருந்தது. இந்த நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்த பாகமே .. இந்த கேள்வி நேரம் தான்..

அதில் சில கேள்விகள்.

ஜல்லி கட்டை காப்பதின்  மூலம் இந்த நாட்டு காளைகளை காப்பது எப்படி சாத்தியம்?

இந்த காளைகள் காப்பதில் மூலம் விவசாயம் எப்படி காப்பாற்ற படுகின்றது?

தமிழகத்தில் .. நிலம் உரிமையில்லா விவசாயிகள் தான் அதிகம், அவர்களால் இந்த காளைகளை எப்படி பராமரிக்க முடியும்?

மெரினா புரட்சியில் தமிழக அடுத்த தலை முறையினரின் ஒழுக்கம் தலை சீர் தூக்கி நின்றது. இதை எப்படி ஆவண படுத்தி  அடுத்த தலை முறைகளுக்கும் எடுத்து செல்வது?

ஜல்லி கட்டிற்கென்று மெரினா சென்ற தமிழர்கள் மற்ற தமிழின பிரச்சனைகளுக்கும் போராடுவார்களா?

ஜல்லி கட்டு எதிர்ப்பாளர்கள் அனைவரும் ஹார்வர்ட் தமிழ் இருக்கையை எதிர்க்கின்றார்களே ஏன் ( நான் தான் கேட்டேன்) ?

சிறு விவசாயிகளிடம் இருந்து பணக்கார வியாபாரிகள் நிலத்தை அபகரிக்கின்றார்களே அதை எப்படி தடுப்பது?

என்பது உட்பட பல கேள்விகள் கேட்கப்பட.. திரு சிவசேனாதிபதி அவர்கள் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் பொறுப்பாகவும் தகுந்த பதில்களை தந்தார்.

மணி எட்டை தொட. ஒலி பெருக்கியில்.. இரவு உணவு தயார் என்று சொல்ல.. நண்பர்கள் சிலர் விசுவிற்கு நான் தான் வாங்கி தருவேன் என்று தமிழனின் விருந்தோம்பலை காட்ட. .

எனக்கோ...

உறவினர் ஒருவர் எட்டரைக்கு எல்லாம் வீட்டுக்கு வந்துடு.. என் வூட்டுக்காரி பிரியாணி ( எப்படி ஒவ்வொரு வூட்டு காரும் இதே டயலாக்கை  சொல்றாங்க)  மாதிரி நீ சாப்பிட்டதே இல்லை என்று சொன்னது நினைவிற்கு வர ..

கையோடு  எடுத்து சென்ற கடந்த வருடம் வெளிவந்த "விசுவாசமின் சகவாசம்" என்ற புத்தகத்தின் மூன்று பிரதிகளை அங்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டு கிளம்பினேன்.

நிகழ்ச்சி மிகவும் பிடித்து இருந்தாலும்.. குறையை கண்டிப்பாக சொல்லித்தானே ஆகவேண்டும்..

இம்மாதிரியான நிகழ்ச்சியை தயவு செய்து சொல்லிய நேரத்தில் ஆரம்பிக்கவேண்டும்.

புத்தகத்தை வாங்கி கொண்ட மூவரில் ஒருவராவது.. ஒரு சில பக்ககங்களை படித்து இந்நேரத்திற்கு  நிறை குறைகளை சொல்லி இருக்க வேண்டும்..


பின்குறிப்பு :

கேள்வியை மட்டும் போட்டு இருக்கியே விசு? அவர் என்ன பதில் சொன்னாரு?

அதை எப்படி நான் சொல்வது? நீங்களும் அவரை உங்கள் ஊருக்கு வரவழைத்து கேளுங்கள். மார்க்கெட் போன நாடக காரர்களையும், சினிமா காரர்களையும்,  பட்டிமன்ற நிபுணர்களையும் அழைத்து பணத்தை விரயம் செய்வதற்கு மேல் , இது எம்புட்டோ மேல்.

4 கருத்துகள்: