சனி, 10 ஜூன், 2017

பொன்னாங்கன்னி ...அது பொன்னான கன்னி..

சனி மதியம் ராசாத்திக்கள்  இருவரும் நட்புக்களோடு ஒரு "ம்யூசிக் கான்சர்ட்" செல்ல அம்மணியோ தம் பணி தொடர்பான ஒரு காரியத்தினிமித்தம் செல்ல.. அடியேனின் அம்மாவோ.. ரெண்டு நாளைக்கு உன் அண்ணன் வீட்டுக்கு போறேன் .. நீ திங்கள் வந்து என்னை கூட்டின்னு வந்துடு என்று கிளம்ப..


ஏங்க.. மதியம் முழுக்க வீட்டிலே தான் இருப்பீங்க.. கொஞ்சம் கூட்டல் பெருக்கல் பாத்துக்குங்க...

பிடித்த பாடல்களை சத்தமாக வைத்து வேலையை ஆரம்பித்தேன். சூப்பர்விஷன் செய்ய ஆள் இல்லாததால் வேலை வெகு சுலபமாக முடிந்தது.

மீண்டும் வந்து அமர்ந்து ஒரு பதிவு எழுதலாம் என்று யோசிக்கையில்..

சமையல் குறிப்பு போட்டு நெடு நாளாகிவிட்டதே.. ஒன்று போடலாம் என்று நினைத்து கொண்டு இருக்கையில்..அலை பேசி அலறியது.

ஏங்க...

சொல்லு..

வீடு..

சொர்க்கம் என்பது எனக்கு சுத்தம் உள்ள வீடு தான்..

தேங்க்ஸ்.. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுங்களேன்.



சொல்லு..

பின்னால தோட்டத்துக்கு போய் அந்த வேர்க்கடலை செடி வந்துடிச்சானு பாருங்க..

பேய் அறைந்ததை போலாகி  விட்டேன் ( தோட்டத்துல பாத்தி கட்டி..ஏன் என்று அறிய விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும் )

அது வர ஆறு மாசம் ஆகும்.

யார் சொன்னா?

தண்டபாணி..

அவருக்கு எப்படி தெரியும்.

ஊருல அவனுக்கு நிறைய நஞ்சை புஞ்சை..

அது எல்லாம் சரி.. நம்ம வீட்டுல வேர்க்கடலை போட்டது அவருக்கு எப்படி தெரியும்.

ரெண்டு ஆம்பிளைங்க பேசுறதுனா என்னென்னமோ பேசுவோம்.. எப்ப பாரு கடலை போட்றத பத்தியேவா  பேசுவோம்..

அதை தான் நானும் கேக்குறேன் .

நான் தான் பேசும் போது சொல்லி இருப்பேன்.

நீங்க ரெண்டும் பேரும் எதை பத்தியாவது  பேசினா அது பிரச்சனையில் தானே முடியும்.

சரி.. என்ன உதவி..

அங்கே தோட்டத்துல பொன்னாங்கண்ணி கீரை வளர்ந்து இருக்கு.. கொஞ்சம் பறிச்சி  ஆஞ்சி செஞ்சிடுங்களேன்.

ஓகே...

அடியேனுக்கு சமையல் என்றால் உயிர். இன்றைக்கே அம்மணி ஒத்து கொண்டால் கணக்குபிள்ளை வேலையை உதறி விட்டு எங்கேயாவது சமையல் காரனாக போய் சேர்ந்துவிடுவேன். அவ்வளவு இஷ்டம்.

ஏங்க.. இதை சமைக்க நீங்க பிரிட்ஜிய்யே திறக்க வேணாம். எல்லாம் தோட்டத்திலே இருக்கு. வடிவா செய்யுங்க.

ஓகே..

தோட்டம் சென்றேன்..

தர்பூசணி செடி வளரவில்லை.. (வேர்க்கடலை தானே.. தர்பூசணி எப்படி ... அதனால் தான் பேய் அறைந்ததை போலானேன்.)

பொன்னாங்கன்னி செழித்து இருந்தது.

செழிப்பு 

ஆய ஆர்மபிக்கையில் ..

எங்க.. சில நேரம் அந்த கீரை பிடுங்கும் போது காம்போடு வந்துடும். அந்தக்காம்பை பக்கத்தில் இருக்க தொட்டியில் நட்டுடுங்க..

ஓகே..

கீழே நான் எறிந்த காம்புகளை தொட்டியில் நட்டுவிட்டு..
காம்பு நடப்பட்டது 

அருகில் இருந்த செடியில் இருந்து ஒரு தக்காளி (எல்லாம் காய் ஒரே ஒரு பழம் தான் இருந்தது) பக்கத்துக்கு செடியில் மிளகாய், மற்றும்.. கொஞ்சம் புதினா, கருவேப்பிலை எடுத்து கொண்டு சமையல் அறை அடைந்தேன்.
புதினா 


கருவேப்பிலை 


மிளகாய் 

தக்காளி 


கீரையை நன்றாக கழுவி விட்டு அதை பாத்திரத்தில் இருந்து எடுக்காமல் ஒரு கத்திரிக்கோலை வைத்து சிறுக சிறுக நறுக்கி ( ஒரு இலை கூட விரயமாக கூடாது, இதோட பொன்னாங்கன்னி அடுத்த மாசம் தான்,  ஒரு இலை   கூட விடாம பரிச்சிட்டேனே) ...
ஒரு இலை வீணாகக்கூடாது 

வெங்காயம், பூண்டு, தக்காளி ( தக்காளியை வெட்டி உள்ளே உள்ள சாறு மற்றும் விதையை எடுத்து விட வேண்டும் , அதோடு செய்தால் கீரை ருசி மறைந்து தக்காளி ருசி வந்து விடும்) ...சிறு சிறிதாக வெட்டி ...
சிறுக சிறுக வெட்டி 

அடுப்பில் கடாயை ஏற்றி..

முதலில் பூண்டை போட்டு, (அந்த வாசனையே தனி தான்) ... பின்னர் கருவேப்பிலை, மற்றும் கடுகு.. (சாக்கிரதை .. போன முறை அவசரத்தில்  கடுகு என்று நினைத்து டீ தூள் போட்டு சாம்பார் தாளித்து விட்டேன் ) கொஞ்சம் ஜீரா போட்டு, வெங்காயம் பொன்னிறமாகும் வரை காத்து இருந்தேன்.
பொன்னிறம் 

அவை பொன்னிறமான பின்..நீளமாக வெட்டி வைத்த மிளகாய் ( நீளமாக வெட்டுவது தான் நலம். ராசாத்திக்கள் சிறியதாக வெட்டி இருந்தால் அதை கடித்து விட்டு நம்மை திட்டுவார்கள்) மற்றும் தக்காளியை போட்டு கலக்கி விட்டு உடனே கீரையை போட்டு தேவைக்கு ஏற்ற உப்பு ( கவனம் .. கீரை பச்சையாக  இருக்கும் போது அதிக அளவில் தெரியும், வெந்தவுடன் பாதியாகிவிடும்)  போட்டு.. நெருப்பை குறைத்து ஒரு மூடியை போட்டு ஆவியில் வேகா வைத்து இறக்கினேன்..
அளவான உப்பு போட்டு மூடி போட்டு இறக்கவும் 

சும்மா சொல்ல கூடாது .. நல்லாவே வந்துள்ளளது.  அம்மணிக்கு  பரிமாறிவிட்டு.. மீண்டும் ஒரு முறை கேட்டேன் .

என்ன?

நான் வேலையை விட்டுட்டு சமையல்காரன் ஆகணும்.. ப்ளீஸ்..

இதுக்கு ஏங்க வேலைய விடணும். தினமும் எங்களுக்கு மட்டும் சமைச்சி போடுங்கனு..

 போட்டாங்களே ஒரு போடு.

பின் குறிப்பு :

தேங்காய் திருவி போடாம ஒரு கீரையானு புலம்புறது கேக்குது. எங்க வூட்டுல தேங்காய் மரம் இல்ல.. 

3 கருத்துகள்:

  1. செம.. .இறுதி. .அதானே...எதுக்கு வேலையை விடணும்???!!!!

    பதிலளிநீக்கு
  2. நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா?

    பதிலளிநீக்கு
  3. ///எப்ப பாரு கடலை போட்றத பத்தியேவா பேசுவோம்..///

    நோம்பு முறிஞ்சிடுமோன்னு நினைத்து உங்க குறிப்பை முழுமையாக படிக்க முடியவில்லை (எச்சி ஊறியது)

    பதிலளிநீக்கு