திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அ(ர்)ப்பனுக்கு வாழ்வு வந்தால்...

அப்பா...
என்றாள்...

அடித்து பிடித்து ஓடினேன்...
பல படி தாண்டி மேலே வந்தேன் ...
மூச்சு வாங்க..


வழியில் அவள் அம்மா கேட்டாள்..
ஊரிலேயே உனக்கு மட்டும் தான் பிள்ளையா?

நல்ல கேள்வி...

நினைவரியாத நாளில் அடுத்தவன் போல்..
அவன் தோளில் நிற்காத பாக்கியம் ...

முதல் வகுப்பிற்கு அவனவன்
அவரின் அரவணைப்பில் வரும் போது...
அனாதை   போல் நின்ற துர்பாக்கியம்...



பின்புறத்தை அவன் பிடித்து கொண்டே தள்ள..
கீழேவிழாமல் இவன் கற்றுக்கொண்டான் சைக்கிள்..
எனக்கோ... பிடிக்க யாரும் இல்லாததால்..
மங்கி பெடல் அடித்து முட்டியெல்லாம் காயம்.



ஆழ் கிணற்றில் அவன் மிதக்க
அவன் வயிற்றை  பிடித்து கொண்டு..
காலை உதைடா. காலை உதைடா...
என்று அவர் சொல்ல..
 எனக்கு அப்பனானதோ
கருப்பாய் வந்த காற்றடித்த லாரி டுயூப்.

ரெண்டும் கெட்டான்  பருவம்.
எங்கேடா கிடைச்சது சிகரெட் ?
எங்கப்பா பாக்கெட்டில் உருவின்னு வந்தேன் என்றான்...
அடே.. டே... இதற்கு கூட நான் கொடுத்து வைக்கவில்லையே என்றேன்.

பதினெட்டு ....
காதலா - காமமா..
என்று அறிய நான் பட்ட பாடு..
சொல்லி மாளாது...
சுய புத்திக்கு பஞ்சம் சொல்புத்திக்கு அவர் இல்லையே !
 



கல்லூரி...
தோள் மேல் வளர்ந்த இவன் இனி தோழன் என்று
அவர்தம் மைந்தனோடு ஆர்ப்பரிக்க...
ஆலமரத்தடியில் தனியாக நான்.

ரொம்ப வெயில்..
சில்லுனு பீர் அடி
என்று ஆங்கிலோ இந்திய நண்பன் சொல்ல.
அதை எத்தனையோடு நிறுத்தவேண்டும்
என்று அவன் அறிந்திருந்தான் அவன் அப்பாவிடம்..
நானோ அப்பாவி.. மீண்டும் தவறு மூலம்
கற்று கொண்டேன் புது பாடம்.


ஐந்து வருடம் கழித்து..
எனக்கே தெரியாமல் நான் ..
பாடு எதுவும் தெரியாமலே
முதுகலை பட்டதாரி ஆனேன்..

கருப்பு அங்கி சிவப்பு தொப்பி
அணிந்து அனைவரும் குதுகூலம் போட
எடுப்பார் கைப்பிள்ளையாகவும் வக்கு இல்லாமல் ..
எனக்கு எதற்கு இந்த அங்கியும் தொப்பியும்
என்று எழுந்து வந்தேனே..

அடுத்து வேலை..

நேரத்திற்கு போ..
வங்கி கணக்கை ஆரம்பி..
வாகனத்தை வாங்கு..
வீட்டை கட்டி பார்..
உனக்கென்று ஒரு துணை...

இதையெல்லாம் தாமதமாக நானே கற்று கொண்ட பாடம் தானே..
அவன் இல்லையே.. சொல்லி கொடுக்க..

அடுத்து .. மணம்!
அங்கேயும் அவனில்லை.
அவளை எப்படி நடத்தவேண்டும் என்று அறியாதலால்
குழம்பி ...
மீண்டும் சுதாரித்து ...
கற்று, அதற்கு தக நிற்க ....

நான் முழுவாமா இருக்கேன்...
என்று அவள் சொல்ல..
இதை கூட கேட்க நீ இல்லையே
என்று.. நான் முழுவதுமாக கரைந்தேன்..

பிறந்தாள் ராசாத்தி...
இரு கையிலும் அவளை அணைத்து...
என்னை பெத்த ராசாத்தி ..
யாம்  பெறாத இன்பத்தையெல்லாம்
நீ பெறணும்...

என்று நினைக்கையில்...

மீண்டும் ... கேட்டது..
மேல் படியில் இருந்து...

அப்பா...

ஐம்பது ஆனாலும்...
அவளுக்கே எண்ணிரெண்டு ஆன பின்னும்..
ஐந்து படிக்கு கால் வைத்து தாண்டி ஓடினேன்..

அம்மணி சொன்னாள் ..

அற்பனுக்கு வாழ்வு வந்தால்....

அட பாவி..
இது அற்பனுக்கு வந்த வாழ்வு இல்லையம்மா .....
அப்பாவுக்கு வந்த வாழ்வு என்றேன்..

மாலை..

இப்படி  பண்ணி இவளுங்கள ரொம்ப கெடுத்து வைச்சி இருக்கீங்களே..
என்றாள்...

அம்மணி..."இப்படி கெடாமல் வளர  நான் பட்ட பாடு.."

என்றேன்..

புரியல ..என்றாள்...

கண்டிப்பாக ...
"கண்ணில்லாதவனுக்கு தானே தெரியும் பார்வையின் சொர்க்கம்.."

மீண்டும் புரியல..

"அப்பா இல்லாமல் வளர்ந்தவனுக்கு தான் தெரியும் அப்பாவின் அன்பு"!

அனைத்தையும் பார்த்து பெருமூச்சு விட்டாள்  அமர்ந்து இருந்த என் அன்னை.


12 கருத்துகள்:

  1. அப்பப்பா..
    விசு
    விசும்பவைக்கிறீர்கள்..

    பிள்ளைகள்
    வளர வளர
    அப்பாக்கள்
    குழந்தையாகிறார்கள்.

    தோள்மீதும்
    மார்மீதும்
    தூங்கிய
    குழந்தைகள்
    மடிகளில்
    நம்
    தலைபடும்போது
    அழுத்தினால்
    அவளுக்கு வலிக்குமோ என
    மென்மையாய்
    இருக்கும்போது
    அவர்களின்
    விரல்கள்
    படும்
    ஸ்பரிசம்...
    ஆயிரம் அம்மாக்களின்
    கூட்டு மகிழ்ச்சி..

    ராசாத்திகள்
    உம்மை
    அப்பனாய்ப்
    பெற்றதற்காய்
    அவர்களை
    வாழ்த்துவதா...

    தேவதைகள்
    பிறந்ததற்காய்
    உங்களை
    வாழ்த்துவதா?

    இரண்டுக்கும் மேலே
    என்னையும்
    எழுதவைத்த
    உங்களை
    வணங்கத்தான் வேண்டும்...
    அன்பும்....வாழ்த்துகளும்..
    நெகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  2. உங்களிடமிருந்து வித்தியாசமான படைப்பு அருமை அருமை

    பதிலளிநீக்கு
  3. என்ன இது
    புதிதாய்?
    விசு எடுத்த
    புது ரூபம் ?

    அப்பாக்கள்
    இப்படித்தான்
    இருக்கவேண்டுமோ ?
    தெரியாமல்போனதே
    இத்தனை நாள்?

    என் அப்பா
    எனக்குத்தோழனாய்
    இல்லாமல் போனதால்
    இப்படி ஆனேனோ
    நானும் ?

    உறுமிக்கொண்டும்
    செருமிக்கொண்டும்
    இருப்பதுதான்
    இதுவரை நான்
    கற்றதும்
    கடைப்பிடித்ததும் !
    காலம் கடந்து விட்டதோ?

    எனக்குள் இப்போது
    ஒரு
    புதிய முகிழ்ச்சி
    அது மகிழ்ச்சியைத்தருமோ
    அல்லது இகழ்ச்சியைத்தருமோ ?

    என்ன இது
    புதிதாய்?
    விசு எடுத்த
    ரூபங்களில் இது
    விசுவரூபம் !


    பதிலளிநீக்கு
  4. இதை எழுதியது விசுவா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது....வழக்கமாக சிரிக்க வைக்கும் நீங்கள் இன்று மிக சீரியஸாக அதை சமயத்தில் ஒரு அருமையான படைப்பை கொடுத்து இருக்கிறீர்கள் பாராட்டுக்கள் விசு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுது கொண்டே சிரிப்பேன்...

      நான் நானே தான் எழுதினேன். பின்ன என்ன மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்தா வாங்கி வந்தேன் ?

      நீக்கு
  5. உங்களுக்கு அப்பா இல்லாததால் பல குறைகள் ஆனால் அதே குறைகள் எனக்கும் தந்தை இருந்தும் அதனால்தான் என்னவோ என் வீட்டு இரண்டு ராசத்திகளை ( ஒன்று மனைவி & குழந்தை ) உங்களைப் போலவே கவனித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. விசுவின் விஸ்வ ரூபம்

    உண்மையில் எல்லோரும் நா. முத்துக்குமார்
    அவர்களின் கவிதைகளை எடுத்துப் போட்டு
    அஞ்சலி செலுத்துக் கொண்டிருக்கும் நேரம்
    நீங்களும் அப்படிச் செய்கிறீர்களோ என நினைத்தேன்

    ஆயினும் கொஞ்சம் படித்ததும்
    அவர் அப்பாவின் அரவணைப்பில்
    வளர்ந்தவராயிற்றே. அப்போ இவர்
    யாராயிருக்கும் எனக் குழம்பியபடியே
    இறுதி வரி வரைப் படித்தேன்

    கடைசியில்தான் இது தங்கள்
    படைப்பு எனப் புரிந்தது

    அத்தனி நேர்த்தி

    உண்மையில் மிக மிக அற்புதம்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. அப்பாவின் பெருமைகளை அசத்தலாய் கவிதை வரிகளாய் படைத்து விட்டீர்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. அப்பா!!! விசு உங்கள் மனதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது! அதுவும் இப்போது புத்தகத்தின் மூலம்!

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ! சமீபத்திய அப்பா படத்தையும் விட என்று சொல்லலாம்! செம !!!! நீங்கள் பலதிறமை உடையவர் என்பது தெரிகிறது அப்பாவைப் போல்.

    உங்களுக்கு அப்பா இல்லை. அப்பா இருந்தும் இல்லாதது பலருக்கும் வேதனை இருக்கிறது..அதற்கும் இந்தக் கவிதை தகும்!

    பதிலளிநீக்கு