ஞாயிறு, 15 மே, 2016

தங்கமணி தங்கமணி.. வா வா நீ..

ரெண்டு வாரம் இந்தியா சென்ற அம்மணி மீண்டும் திரும்பும் நாள்.இல்லத்தில் உள்ள வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைத்து பழகியவர்கள்.இந்தியா செல்லும் போதே.. வீட்டை கொஞ்சம் கவனமா பாத்துக்குங்கோன்னு ஒரு அன்பான எச்சரிக்கை விட்டு தான் சென்றார்கள்.

இரண்டு வாரம் அது இது அங்கு இங்கு இருந்தாலும் அவர்கள் வருவதற்கு ஒரு நாள் முன்னால் வாகனம் முதல் குண்டூசி வரை சீராக வைக்க முயற்சி செய்தேன்.

கிட்ட தட்ட நான்கு மணி நேரம் இடையில்லாமல் வேலை செய்து அனைத்தையும் சீர் படுத்தி விட்டு அடுத்த நாள் அம்மணி வரும் விமான நேரத்தை உறுதி செய்து விட்டு ( பல வருடங்களுக்கு முன் தவறான விமானநிலையத்தில் தவறான நேரத்தில் காத்து இருந்து அவர்களை தவற விட்டது என் நினைவில் இருந்து தவறாது)  உறங்க சென்றேன்.

இரவு 11 மணிக்கு நினைவு வந்தது.. ஐயகோ.. சென்ற வியாழன் குப்பை போடும் நாளன்று குப்பையை வெளியே வைக்க மறந்துவிட்டேனே.. இப்போது என்ன செய்வது...


சரி, குப்பையை கட்டி வாகனத்தின் டிக்கியில் போட்டு அருகில் இருந்த சூப்பர் மார்கட் குப்பை தொட்டியில் போட்டு விடலாம் என்று அங்கே சென்றேன். அங்கே.. இது எங்களுக்கு மட்டுமான குப்பை தொட்டி வெளியாட்கள் போட கூடாது என்று ஒரு பலகை இருந்தது. இவ்வளவு குப்பையில் நம்ம குப்பையை எப்படி கண்டு பிடிப்பார்கள் என்று அருகில் செல்கையில் இன்னொரு பலகை ... இந்த இடம் புகைப்பட கருவியினால் கண்காணிக்க படுகின்றது என்று எழுதி இருந்தது.

அட என்னடா இது.. குப்பையும் கையுமா இரவு 11 மணிக்கு என்று நினைக்கையில்.. அங்கே இருந்த காவலாளி....

போன வியாழன் மறந்து விட்டீர்களா..
என்று பரிதாப பட்டு கேட்க .. நானோ..

எப்படி கண்டுபிடித் தீர்கள்

என்று விசாரிக்க..

அவரோ..

 இந்த மாதிரி ஆட்கள் தான் இங்கே வந்து போட பார்ப்பார்கள்

என்று சொல்ல..சரி.. இப்ப என்ன செய்வது...

என்று நான் கேட்க ..

அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பொது குப்பை ஒன்று உள்ளது அங்கே போய் போட்டு விடுங்கள்..

என்ற அறிவுரை கூறினார்.

அந்த பையை அந்த தொட்டியில் எறிந்து  விட்டு வரும் போது .. மணி 12. இல்லத்தை அடைந்து .. மீண்டும் ஒரு முறை எல்லாவற்றையும் சரி பார்த்து விட்டு உறங்க சென்றேன்.

அடுத்த நாள் விமானம் சரியான நேரத்தில் இறங்குகின்றது என்பதை வலை தளத்தில் அறிந்து கொண்டு.. அம்மணியின் வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினேன் (நம்ம வண்டியில் தான் இன்னும் குப்பை நாற்றம் இருகின்றதே).

அம்மணியை அங்கே பார்த்து அன்பாக நலம் விசாரித்து வாகனத்தை இல்லத்தை நோக்கி விட..

ஏங்க.. என்ன திடீர்னு என்வண்டிய எடுத்துன்னு வந்து இருக்கீங்க? உங்க வண்டி ரொம்ப அழுக்கா?

ச்சே.. ச்சே.. அது சுத்தமா இருக்கு.. ரெண்டு வாரம் ஊரில் நீ வண்டி ஒட்டல இல்ல, அதுதான் ஒரு வேளை, நீ வரும் போதே ஓட்ட விரும்பினால் அது தான்.

ஏங்க.. போகும் போதே சொன்னேன் இல்ல... என் வண்டிய கொஞ்சம் அந்த கார் கிளீனிங் இடத்துக்கு எடுத்துன்னு போயிட்டு சுத்தம் பண்ணி வைக்க .. மரந்துடிங்களா?

ச்சே ச்சே.. சுத்தம்,, பண்ணேன்.. ஆனால் நாலு நாலா கொஞ்சம் மழை அது தான்.

மழையா? இந்தியாவில் சரியான வெயிலுங்க..

மனதில்.. அடபாவி.. வந்து இறங்கி ரெண்டே நிமிடத்தில் என்னை நாலு பொய் சொல்ல வைச்சிட்டாங்களே.. இது எங்க போய் முடிய போதோ...

என்று மனதில் சொல்லி கொண்டே...இல்லத்தின் எதிரில் வண்டியை நிறுத்த...

என்னங்க..?

சொல்லு..

என் மல்லிப்பூ செடி காஞ்சி போய் இருக்கு.

இதோ இப்ப தண்ணி ஊத்துரன்.. சாரி..

நாலு நாலா நல்ல மழைன்னு சொன்னீங்க?

அது வந்து.. வந்து...

அது எல்லாம் வராது..பொய் சொல்றத நிறுத்துங்க.

சாரி.

என்னடா இது.. இப்படி வசமா மாட்டிகினுமே.. என்று நினைக்கையில்..

சாப்பிட ஏதாவது இருக்கா?

ஒரு நிமிஷம் இரு வாங்கின்னு வரேன்.

தோசை மாவு அவ்வளவு இருந்ததே .. முடிச்சிடிங்களா?

தோசை மாவு.. அதை ஏன் கேக்கற?

என்ன ஆச்சி..

நீ போய் ரெண்டாவது நாலு தோசை சுடலாம்னு எடுத்து தவாவில் வார்த்தேன். பிசு பிசுன்னு அதுல ஒட்டி.. திருப்பி கூட போட  முடியல.. சரி.. வெந்தா போதும்ன்னு சாப்பிட்டு பார்த்தா ஒரே புளிப்பு .மொத்த மாவையும் குப்பையில் போட்டுட்டேன்.

அப்படியா  .. ஆச்சரியமா இருக்கே..போறதுக்கும் ஒரு நாளுக்கு முன்னால தான அரைச்சு வைச்சேன்.. சம்திங் ராங்.

சரி.. கொஞ்சம் சோறு வடிச்சு ஏதாவது வைச்சி சாப்பிடலாம்.
என்று சொல்லி சோறை வடித்து சாப்பிட அமருகையில்... கொஞ்சம் ஊறுகாயும் தயிரும் கொடுங்க..

என்று சொல்ல. நானோ தயிரை எடுத்து கொடுக்க..

இது தயிரா? தோசை மாவுங்க.. அட எம் பாவி மனுசா.. தயிரை வைச்சி தோசை சுட்டுட்டு அப்புறம் மாவு புளிக்குது.. மாவு புளிக்குதுன்னு..அவ்வளவு தயிரையும் குப்பையில் போட்டு இருக்கீங்களே..

சாரி.. நான் அப்பவே யோசித்தேன்.. என்னடா ... தோசை இவ்வளவு புளிக்குதேன்னு..

என்னங்க...

சொல்லு..

கிளம்புறப்ப ..உங்கள்ட்ட ரெண்டு லெட்டர் போஸ்ட் பண்ண சொல்லி கொடுத்தேனே..

ஆமா.. போஸ்ட் பண்ணேனே..

கிழிச்சிங்க.. ரெண்டும் இங்கேயே தான் இருக்கு.

இது வேற என்னமோ லெட்டெர். நீ கொடுத்த உடனே போஸ்ட் பண்ணேன். நல்லா நினைவில் இருக்கு.

வேற ஏதையோ... போய் போஸ்ட் பண்ணி இருக்கீங்க. இது கொஞ்சம் அவசரம்ங்க.. நாளைக்கே போஸ்ட் பண்ணுங்க..

சரி..

ஏங்க..

ஒரு கவரில் நாலு செக் வைச்சு பேங்க் அக்கௌண்டில் டெபொசிட் பண்ண சொன்னேனே.. அந்த பணம் இன்னும் கிரெடிட் ஆகல.. டெபொசிட் பண்ணீங்களா?

அது வந்து.. வந்து..

அது வராது..அந்த கவர என்னிடமே தாங்க.. நாளைக்கு நானே.. அட பாவி மனுசா.. அந்த கவர தான் போஸ்ட் பண்ணி தொலைச்சிங்களா?

சாரி..

ஏங்க.. போகும் போது.. நம்ம கிட்ட இருக்க நல்ல பழைய துணிய ஒரு பையில் போட்டு அந்த அனாதை இல்லத்தில் குடுக்க சொன்னேனே .. கொடுத்திங்களா..
அடுத்த நாளே கொடுத்துட்டேன்.

என்று இன்னொரு பொய்யை சொல்லி விட்டு..

அட பாவி .. அந்த பையை எங்கே வச்சேன்.. என்று மண்டையை அலசி கொண்டு இருக்கையில்.. அதை போய் அங்கே கொடுக்கனும்னு என் வண்டியில் வைச்சேன்.. ஆனால் மறந்துட்டேன். நாளைக்கு காலையில் முதல் வேலையா போய் கொடுத்துட வேண்டியது தான் என்று சொல்லி...தூங்க முயல்கையில்..

ஏங்க..

எனக்கு ரொம்ப தலை வலிக்குது.. நாளைக்கு பேசிக்கலாம்.. என்று சொல்லி .. செயற்கையாக ஒரு குறட்டை விட்டு கொண்டே இன்னும் என்ன என்ன செய்ய தவறினோம் என்று இருந்த எனக்கு செயற்கை எப்போது இயற்கையாக மாறியது என்று தெரியாமல் காலையில் எழுந்தேன்.

வண்டிய நேராக அந்த இல்லத்திற்கு விட்டு.. வண்டியின் டிக்கியை திறந்த நான் பேய் அறைந்தவன் போலானேன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).

இன்னும் என்ன என்ன நடக்க போதோ....? 

9 கருத்துகள்:

  1. அப்படியே! இதான்பா அமெரிக்க ஆண்களின் வாழ்கை! வீட்டிலே எல்லாரும் எலி தான்!

    பதிலளிநீக்கு
  2. சூப்பர். நிறைவு வரி வரை நகைச்சுவை. பேய் அறைந்த கதையை அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
  3. உங்க வீட்டு அம்மணி சரி இல்லை அவங்க ஊருக்கு போகும் போதுமட்டும்தான் இப்படி வேலை வாங்குறாங்க அதனாலதான் இப்படி எல்லாம் தப்புதப்பா நடக்குது ஆனால் எங்க வீட்டு அம்மணி என்னை தினமும் இப்படி வேலை செய்ய பழகிவிட்டுட்டாங்க அதனால தப்பே நடக்க வழி இல்லை இப்படிக்கு நீயூஜெர்ஸி எலி

    பதிலளிநீக்கு
  4. ஹாஹா.... தப்பைச் செய்தால் அதை மறைக்கவும் தெரிஞ்சுக்கணும்... :)

    பதிலளிநீக்கு
  5. அருமை.. வரிக்கு வரி நகைச்சுவை..

    பதிலளிநீக்கு
  6. யோவ் விசு தம்பி , ஊருக்கு நம்ம போனா தனியா போகணும் , அவுங்க போனா நாமும் சேர்ந்து போயிரனும் , இல்லேன்னா இதான் பிரச்னை ,என்ன சரியா .

    பதிலளிநீக்கு
  7. "வண்டிய நேராக அந்த இல்லத்திற்கு விட்டு.. வண்டியின் டிக்கியை திறந்த நான் பேய் அறைந்தவன் போலானேன்" - குப்பை நிரம்பிய பையைக் கண்டுவிட்டீர்களா? தோசை மாவுக்குப் பதிலா, தயிர் என்பது கொஞ்சம் டூ டூ மச். இருந்தாலும் நகைச்சுவையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  8. ஹஹஹஹ்ஹஹ் வீட்டுல எலி, கிலி வெளில புலியா!!!.... அது சரி உங்க கட்சிக்கு ஏகப்பட்டவங்க இருப்பாங்க போல....நம்பள்கி, மதுரைத் தமிழன், ஆல்ஃபி நு....ஹஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு