வியாழன், 7 ஏப்ரல், 2016

வாசமில்லா மலரிது .....

டாடி வேலைக்கு போகலையா?

என்ற அலறல் சத்தம் மூத்த ராசாத்தியின் அறையில் இருந்து வந்தது.

நீ முதலில் கிளம்பு, ஒரு அஞ்சு நிமிஷம் கழித்து நான் கிளம்புறேன்

என்ற பதிலை தந்து விட்டு மனிதனாக பிறந்த எவனும் விரும்பும் அந்த அஞ்சு நிமிடம் கூடுதல் நேர தூக்கத்திற்கு போர்வையில் அடைக்கலமாகும் முன்..

நான் எங்கே போக போறேன் ... இந்த வாரம் முழுக்க பள்ளிக்கூடம் விடுமுறை, மறந்துடீங்களா?

பொதுவாக பள்ளி நாட்களில் 5:30 போல் எழுப்புவாள், இருவரும் தயாராகி செல்வோம். இந்த வாரம் பள்ளி கூடம் இல்லையே.. அதனால் அவள் எழவில்லை, நானும் அலாரம் வைக்கவில்லை..

ஆமா இல்ல., சுத்தமா மறந்துட்டேன், மணி என்ன ஆச்சி?

8:15.

அட பாவி. 9 மணிக்கு அலுவலகத்தில் ஒரு  முக்கியமான மீட்டிங் இருக்கே,
சீக்கிரம் எழுப்பி இருக்க வேணாமா?

உங்க மீட்டிங் எனக்கு எப்படி தெரியும்?

சரி, மீட்டிங்கை விடு, வழக்கம் போல் எழுப்பி விடவேண்டியது தானே?



இப்ப நான் பதில் சொல்ற வரைக்கும் காத்துன்னு இருக்க போறீங்கள, இல்ல
அடிச்சி  புடிச்சி மீட்டிங் நேரத்திற்கு போக போறீங்களா?

ராசாத்தி, நான் குளிக்க போறேன்.. நேரம் ஆச்சி .. ஒரு காப்பி..

இன்னைக்கு லீவ். 10.30 வரை படுக்கையில் இருந்து எழ மாட்டேன் ......
ப்ளீஸ்..

ரெடி ஆகுங்கோ.. போற வழியில் "ஸ்டார் பக்ஸ் " கடையில் ஒரு காப்பி வாங்கி குடிச்சினே போங்க..

அந்த கடையில் ஒரு காப்பிக்கு வீடை எழுதி தர சொல்வானே ...மகள்..

சரி, விடுங்க.. நான் வாங்கி தரேன்..

அங்க வந்து வாங்கி தரத்துக்கு பதிலா இங்கேயே போட்டுடேன்.. செலவும் மிச்சம்.

இப்ப .. காப்பி எங்க குடிகிறதுன்னு பேசியே நேரத்தை செலவு செய்ய போறீங்களா ? இல்லாட்டி மீடிங்கிருக்கு நேரத்திற்கு போக போறீங்களா?

சரி, அங்கே போய் நான் வரிசையில் இருந்து வாங்குறதுக்கு ரொம்ப நேரமாகிடும், நான் ஆபிசிலேயே போய் குடிச்சிறேன்.

ஐயோ.. அங்கே நேரமாகாது ... நீங்க கிளம்பி வாங்க நான் சொல்றேன்.

குளித்து முடித்து வண்டியில் ஏறுமுன்,

ராசாத்தி.. காப்பிக்கு காசு..

உண்மையாகவே நீங்க கணக்கு பிள்ளை தான் டாடி..காசு எல்லாம் தேவையில்லை.

புரியல..

அங்கே போய் நீங்க ஏன் பேரை சொல்லுங்க.. காப்பி ரெடியா இருக்கும்.

எப்படி..

நீங்க போய் என் பேரை சொல்லுங்க..?

சரி.. என்று நொந்து கொண்டே ...

வண்டியை விட்டேன்.. வீட்டில் இருந்து இரண்டே நிமிடத்தில் அமைந்துள்ள கடை. பொதுவாக காலை நேரத்தில் கூட்டம் அதிகம். இந்த கடையில் ஒரு வசதி உண்டு. உள்ளே போய் அமர்ந்து குடிப்பவர்கள் மிக சிலரே.. "டிரைவ் இன்" என்று அழைக்கபடும் பாதையில் நுழைந்து அங்கே நமக்கு என்ன தேவை என்பதை சொன்னால் சன்னல் மூலமாக காரிலேயே தருவார்கள் .இது பொதுவாக "பாஸ்ட் புட்" கடையில் இருக்கும். ஆனால் தற்போது காப்பி கடையிலும் வந்து உள்ளது.  கடையின் அருகே செல்லும் போதே கவனித்தேன் . "டிரைவ் இன்" வழியில் இருபதிற்கும் மேலான வாகனங்கள் இருந்தது.

உள்ளே போய் என் பெயரை சொல்லுங்கள், தயாராக இருக்கும் என்றாளே, ஒரு வேளை , நம்மை வைத்து காமடி ஏதாவது நடகின்றதோ என்று எண்ணி கொண்டே உள்ளே நுழைந்தேன். அங்கேயும் சரியான கூட்டம். அந்த வரிசையில் நின்றால் நேரமாகிவிடும் என்று நினைத்து, அலை பேசி எடுத்து..

மகள்..

அங்கே "மொபைல் ஆர்டர்" என்ற ஒரு பலகை இருக்கும் ..அந்த இடத்தில யாரும் இருக்க மாட்டார்கள், அவர்களிடம் போய் என் பெயரை சொல்லுங்க"

எப்படி நான் கேட்க வந்ததை இவ்வளவு சரியா சொல்றே ?

என் பதிலை கேக்குற அளவிற்கு நேரம் இருக்கா இல்லாட்டி மீட்டிங் அவசரமா போகனுமா?

சரி விடு.

என்று சொல்லி விட்டு, அந்த பலகையை நோக்கி சென்றேன். அவள் சொன்ன மாதிரியே அங்கே வரிசை இல்லை. என்னை பார்த்தவுடன் அங்கிருந்த பணிப்பெண் ஒருத்தி அருகில் வர..

நானோ ராசாத்தியின் பெயரை சொல்ல வாயை திறக்க முற்பட..

அவள் என்னை முந்தி கொண்டு.. "வித் லவ் ப்ரம் யுவர் டாட்டர்" என்று ஒரு காப்பியை கொடுத்தாள்.

நன்றி சொல்லி வாங்கி கொண்டு.. என்னடா இது? "பேரை சொல்லவா, அது நியாயமாகுமா" என்று நாம் நினைக்கும் முன்பே அவளே கொடுத்து விட்டாளே ... என்று நினைத்து கொண்டே வண்டியில் ஏறி..

மகள்.. .எப்படி... என்னை பார்த்தவுடன் அவளே உன் பேரை சொல்லி கொடுத்துட்டா..

சும்மா பெயரை மட்டும் சொல்லி கொடுத்தாளா?

இல்லடியம்மா.. வித் லவ் ப்ரம் யுவர் டாட்டர்ன்னு சொல்லித்தான்
கொடுத்தா.அவளை உனக்கு தெரியுமா?

ஐயோ ..டாடி.. எந்த காலத்தில் இருக்கீங்க...என் போனில் இந்த கடையோட 'அப்"  ஒன்னு டவுன்லோட் பண்ணி இருக்கு. அதில் ஆர்டர் பண்ணி நம்ம மெசேஜ் கொடுக்கலாம்,

காசு...?

 அதுவும் கிரெடிட் கார்டில் இருந்து எடுத்துக்குவாங்க..

அப்படியா? ரொம்ப சந்தோ.. ஒரு நிமிஷம்!யார் கிரெடிட் கார்ட் நம்பர் கொடுத்த .. ?
உங்களுடையது தான்

என்று சொல்லி அலைபேசியை துண்டித்தாள்.  அதுவரை ருசித்த காப்பி கொஞ்சம் கசக்க ஆரம்பித்தது.

உலகம் தான் எவ்வளவு முன்னேறிவிட்டது என்று நினைக்கையில் மனமோ .. பல்லாயிரகனகான மைல்களையும் பல வருடங்களையும் தாண்டி சென்றது.
இளங்கலை தேர்வு நேரம். காலை 4:30மணிக்கு எல்லாம் சைக்கிள் எடுத்து கொண்டு இருட்டோடு இருட்டாக சிறப்பு வகுப்பு (Special Tuition) சென்ற நாட்கள்.

அன்றும் அதே போல்  எழுந்து, முகம் கழுவி விட்டு சைக்கிள் மிதித்து கொண்டு கிளம்பினேன். வீட்டில் இருந்து இரண்டே நிமிடத்தில் காப்பி கடை. அங்கே ...அந்த கடைகாரரிடம் காப்பி என்று சொன்னால், அருகில் உள்ள ஒரு கண்ணாடி டம்ப்ளரை எடுத்தி அதில் சிறிது சுடுநீர் ஊற்றி ஒரு அலசு அலசி ஊத்தி விட்டு,நம்மை பார்க்காமலே ஸ்ட்ராங்கா லைட்டா என்று நம் பதிலுக்காக காக்காமல் ஒரு ஸ்பூன் "ப்ரு" போட்டு, அதில் ஒரு ஸ்பூன் சக்கரையும் போட்டு.. கொடுக்க..

நானோ.. அண்ணே . கொஞ்சம் "ஆடை..?

என்று சொல்ல.. அவரும் ஒரு கரண்டியை பால் சட்டியில் விட்டு லாவகமாக ஒரு சுற்று சுற்றி...அந்த பாலின் மேல் உள்ள "ஏடை" நம் கையில் போட, அந்த டம்ப்ளரை வாய்க்கும் மூக்கிர்க்கும் நடுவில் வைத்து ஒரு வாசனை பிடித்து விட்டு, பின்னர் அந்த டம்ப்ளரை சற்றே இறக்கி முதல் வாயில் "மலாய்யோடு" .. அடே அடே அடே... ..

என்னடா, அந்த வாசனை- ருசி  இதில் வரவில்லையே.. ஒரு வேளை தவறாக ஆர்டர் பண்ணி இருப்பாளோ?

மகள்..

சொல்லுங்க..

இதுல என்ன ஒரு வாசனையே இல்லை ? இது காப்பி தானா?

ஆமா.. அது சரி.. எந்த வாசனையோடு ஒப்பிட்டு பாக்குறிங்க?

இல்ல.. இந்தியாவில் , கல்லூரி நாட்களில் கடையில்..

அப்ப என்ன வயசு, இப்ப என்ன வயசு?

வயசு ஆச்சி தான், வயசுக்கும் வாசம் புடிக்கர்துக்கும் என்ன சம்பந்தம்?

டாடி.. அந்த காலத்தில் நீங்க குடிச்ச காப்பி .. பால் - காப்பி தூள்- சக்கரை போட்டது..

அப்ப இது?

அது மூணுமே இல்லாமல் போட்டது.

புரியல..

இதுல.. போட்டது Fat Free Milk, De Caffinated Coffee, Sugar Free Sweetner...அதுல எப்படி காப்பி வாசனை வரும்?

அதுக்கு தான் மகள், வீட்டிலேயே போட்டு தர சொன்னேன்.

இப்ப வீட்டு காப்பியா இல்ல கடை காப்பியான்னு பேச போறீங்களா, இல்லாட்டி மீட்டிங்கிற்கு லேட்டா போக போறீங்களா?

போய்னேதான் இருக்கேன். கடைசியா ஒரு கேள்வி..

கேளுங்க.

இந்த Fat Free Milk, De Caffinated Coffee, Sugar Free Sweetner...மூணும் தான் எனக்கு சரி பட்டு வரும்னு உனக்கு எப்படி தெரியும்?

அம்மா வீட்டில் இல்லாத நேரத்தில் உங்களுக்கு என்ன என்ன தரனும்னு வாரம் ஒரு முறை லிஸ்ட் போட்டு காட்டுறாங்க இல்ல, அதுல கத்துக்குனது தான். சரி. ஆபிஸ் பார்க்கிங் வந்துட்டிங்க இல்ல.. சீக்கிரம் இறங்கி ஒடுங்க .. மணி 8.58


நான் பார்க்கிங் வந்துட்டேன்னு உனக்கு எப்படி தெரியும்?

நீங்க மீடிங்கிர்க்கு நேரத்துக்கு போறீங்களான்னு பாக்க உங்க போன் லைன "ட்ராக்" பண்ணேன்..

பின் குறிப்பு :

இந்த பால் சட்டி மேலே இருக்குமே அதுக்கு என்னதாங்க உண்மையான பெயர்? ஆடை , ஏடு, மாலாய்?

  

6 கருத்துகள்: