வியாழன், 7 ஜனவரி, 2016

5ல் இருந்து 50 வரை ...

1980'களில் கல்லூரி நாட்கள்  - காலை வேலை!

மதிய உணவிற்கான புளி சோறு மற்றும் வேகவைத்த முட்டையை டிபனில் போட்டு கொண்டு, கையில் இரண்டு புத்தகங்களையும் எடுத்து கொண்டு பேருந்தை பிடித்து கல்லூரி சென்று அடையும் போது கொஞ்சம் தாமதமாகிவிட்டது.


வகுப்பு ஆரம்பித்து விட்டது. கதவின் அருகில் நின்று பேராசிரியர் பார்வை என் பக்கம் வரை திரும்ப காத்து இருந்து அவர் பார்த்தவுடன் ...


எக்ஸ்கியுஸ் மீ சார் ...

ஏன் லேட் ?

லேட் ஆயிடிச்சி சார்..

அதுதான் ஏன் லேட்..

லேட் ஆயிடிச்சி சார்.

சரி, இந்த வகுப்புக்கும் லேட் ஆயிடிச்சி.. வெளியவே இருந்துட்டு அடுத்த வகுப்பிற்கு வா..

என்னடா.. இது, படிக்க வந்த இடத்தில் ஆசிரியர் பிரச்சனையா?
என்று யோசித்து கொண்டே அருகில் இருந்த டீ கடைக்கு செல்லலாம்
என்று நடக்கையில்...

விசு..

சொல்லு ரவி..

என்ன? உன்னையும் துரத்திட்டாரா?

உனக்கும் அதே நிலைமையா?

அடுத்த வகுப்பிற்கு இன்னும் 50 நிமிடம் இருக்கே.. அதுவரைக்கும்...?
எற்று சொல்லும் போதே அருகில் இருந்த அப்சாரா தியேட்டரின் மணி அடித்தது.

ரவி என்னை பார்க்க ... நான் ரவியை பார்க்க...

விசு , காலை காட்சி... "நினைத்தாலே இனிக்கும்".

அதுக்கு என்ன இப்ப?

இன்னும் ஐம்பது நிமிடம் இருக்கே.. வா போய் முதலில் வர சில பாட்டுகளை கேட்டுன்னு வரலாம்...

சரி என்று சொல்லி, இருவரும் அப்சாரா சென்று டிக்கட் வாங்கி இருட்டாக இருந்த தியேட்டரில் இருக்கையை தேடுகையில்...

இருளில் இருந்து ஒரு அசரீரி..

விசு... வகுப்பிற்கும் நேரத்திற்கு போக மாட்டற, சினிமாவிற்கும் நேரத்திற்கு வர மாட்டுற..திருந்தி வாழ் விசு என்ற

குரல் ஒலிக்க, திரும்பி பார்த்தால்.. வகுப்பில் இருக்க வேண்டிய பாதி மாணவர்கள் இங்கு தான் இருந்தார்கள்.

டேய் .. நீங்க எல்லாம் எப்படி இங்க?

ஒன்னும் இல்ல. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிய இந்த படத்தில் விவரமா காட்டுறாங்களாம், அடுத்த மாதம் பொருளாதாரம் பரீட்ச்சை வருது இல்ல, அதுதான் நோட்ஸ் எடுக்கலாம்னு..

என்னாது, அடுத்த மாதம் பரீட்ச்சையா? சொல்லவே இல்லை..

சும்மா அலட்டிக்காத விசு, ரொம்ப நாள் கழித்து காலை காட்சி "நினைத்தாலே இனிக்கும்" போட்டு இருக்காங்க. இன்றைக்கு மட்டும் தான். அதனால் தான் பாத்துட்டு போகலாம்னு வந்தோம்.

பேசி முடித்து அமர அடுத்த 50 நிமிடம் போனதே தெரியவில்லை.

ரவி.. அடுத்த வகுப்பிற்க்கு நேரமாச்சு.

அதுக்கு என்ன இப்ப? "சிவசம்போ" இப்பதான் போச்சு. ஒரு பத்து நிமிஷம் இரு..
"நம்ப ஊரு சிங்காரி" பாட்டு வரும், பாத்துட்டு போயிடலாம்.

சிங்காரி பாட்டும் வந்தது, அது முடியும் போது கிட்ட தட்ட ஒரு 60 நிமிடதிக்கும் மேலாகி விட்டது.

அடித்து பிடித்து அரங்கத்தை விட்டு அடுத்த வகுப்பிற்கு ஓடி போனால், மீண்டும் தாமதம்.

எக்ஸ்கியுஸ் மீ சார் ...

ஏன் லேட் ?

லேட் ஆயிடிச்சி சார்..

அதுதான் ஏன் லேட்..

லேட் ஆயிடிச்சி சார்.

சரி, இந்த வகுப்புக்கும் லேட் ஆயிடிச்சி.. வெளியவே இருந்துட்டு அடுத்த வகுப்பிற்கு வா..

என்ன ரவி இது? அடுத்த மாதம் பரீட்சை, ஒரு பேராசிரியரும் பொறுப்பா நடந்துக்க மாட்டறாங்களே..இப்ப என்ன பண்றது...?

வா, வெளியே போய் போதி மரத்துக்கு அடியில் அமர்ந்து லஞ்ச் முடிச்சிட்டு வரலாம்.

என்று அவன் சொல்ல .இருவரும் அங்கே செல்லுகையில்..

விசு,

 என்ற இன்னொரு குரல்..

என்ன சதீஷ்?

காலையில் இருந்து தேடுறேன்.. எங்க வகுப்பில் ஆளை காணோம்.

எல்லாம் நம்ப பேராசிரியர்களின் பொறுப்பின்மை தான். ஒருத்தர் கூட உள்ளே சேக்க மாட்றாங்க. சரி நீ ஏன் என்னை தேடுன?

இன்றைக்கு தான் மூன்று முகம் கடைசி நாள். வாயேன், கடைசியா ஒரு முறை "அலெக்ஸ் பாண்டியான" பார்த்துட்டு வரலாம்.

டேய்.. மதியமாவது வகுப்பிற்கு போகலாம்னு இருக்கேன்..

பரீட்ச்சை அடுத்த மாசம் தானே விசு.. இப்ப என்ன அவசரம்?

அடுத்த மாசம் தானே.. அதுதான் அவசரம்.

இது என்ன பைனல் வருஷமா? அடிச்சி பிடிச்சி பாஸ் பண்ணி என்ன சாதிக்க போற ?

அதுவும் சரிதான். இதோட அலெக்ஸ் பாண்டியன் திரும்பவும் எப்ப வருவார்?
சரி, போகலாம்.

என்று சொல்லி மூவரும் இல்லத்தில் இருந்து எடுத்து வந்த மதிய உணவை முடித்து விட்டு மதிய காட்சி.. "மூன்று முகம்"

படம் முடித்து வெளியே வரும் போது மணி 4:30 முழு நாளும் சினிமாவிலேயே முடிந்து விட்டது. மீண்டும் பேருந்தை பிடித்து இல்லத்தை அடைந்தவுடன், அங்கே..

கல்லூரி படிப்பு எல்லாம் எப்படி போது?

நல்லாத்தான் போது, அதுக்கு என்ன இப்ப?

ஒழுங்கா படிக்கிற தானே...

படிக்கிறேன்.

கண் எல்லாம் ஏன் சுருங்கி போய் இருக்கு. நவராத்திரி அன்னிக்கு நாலு படம் பார்த்தவன் போல ..

நாலு இல்ல..சாரி.. அப்படி இல்ல, ரொம்ப களைப்பு அதுதான்.

ஒழுங்கா படிக்கணும்.

சரி..

இப்படி வாழ்ந்த நாட்கள் தான் எவ்வளவு. காலையில் இருந்து மாலை வரை நாம் என்ன செய்கிறோம் என்று யாருக்கும் தெரியாது.. ஆனால் தற்போதோ..நிலைமை வேறு.

நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஊருக்கே தெரிகின்றது.

இன்று..

வேலைக்கு சென்று மதிய உணவு நேரத்தில்... சக பணியாளர் ..

விஷ் .. லஞ்ச் என்ன  பிளான்?

வீட்டில் இருந்து ஏதோ வந்து இருக்கு.?

அதை அப்படியே வை.. கிளம்பு என்னோட?பக்கத்தில் தாய் (அம்மா உணவகம் இல்ல.. தாய்லாந்து உணவகம்) சாப்பாடு ரொம்ப நல்லா இருக்காம்.. வா போகலாம்.

மூளை வேண்டாம் என்று சொன்னாலும் மனது ஓகே சொல்ல.. கிளம்பினோம்.

போகும் வழியில்.. மூத்தவளிடம் இருந்து தொலை பேசி..

ஐயகோ..அவள் பள்ளி என் அலுவலகத்திற்கும் மிக அருகில், இப்போது
பேசினால் எப்படியும் வாயை கிண்டி வெளியே சாப்பிடபோவதை கண்டு பிடித்து விடுவாள். அதனால், நான் கொஞ்சம் பிசி என்று டெக்ஸ்ட் அனுப்பினேன்.

டெக்ஸ்ட் தொடர்ந்தது.

நான் உங்களை பார்க்கணுமே.

என்ன அவசரம்?

ஒரு செக் வேண்டும்.

நாளை தருகிறேன்.

இல்லை,இன்றைக்கே வேண்டும்.

சரி, கொஞ்ச நேரத்தில் ப்ரீயா இருப்பேன், அப்ப வா.

எங்க வரட்டும்.

அப்ப சொல்றேன்.

மறந்துடாதிங்க..

ஓகே..

என்று அனுப்பிவிட்டு .. தாய்லாந்து உணவகம் சென்று அமர்ந்து உணவை ஆர்டர் செய்தோம்.

வர சற்று தாமதமாகியது..

அங்கே அமர்ந்து கொண்டு கூட இருந்தவரிடம் பேசி கொண்டு இருக்கையில்..

தோளின் மேல் உரிமையாக ஒரு கை பட்டது.

இது தான் உங்க பிசியா?

ராசாத்தி நீ எப்படி இங்க? எவ்வளவு நாளா வீட்டுக்கு தெரியாமல் இப்படி வெளிய சாப்பிடற ?

இந்த மாதிரி இடத்தில் சாப்பிட நான் பணத்திற்கு எங்கே போவேன்.. அது சரி நீங்க எவ்வளவு நாளா வீட்டிற்கு தெரியாமல் இங்கே சாப்ட்ரிங்க?

அது வந்து.. வந்து... நான் சும்மா தான் வந்தேன் .. இவர் சாப்பிட வந்தார் ..
அவருக்கு துணையா?

என்று சொலும் போதே..

அங்கே பணிபுரியும் அம்மணி..

ஒ.. இஸ் தட் யுவர் டாட்டர் ? உங்களுடைய ரெகுலர்  மிக்ஸ்ட் ப்ரைட் ரைஸ ரெண்டு தட்டில் எடுத்து வரவா?

"ரெகுலர் மிக்ஸ்ட் ப்ரைட் ரைஸ்"..சும்மா துணைக்கு வந்தேன்னு சொன்னீங்க ..

சும்மாதான் சொன்னேன்.. உட்காரு .. சாப்பிட்டு போ..

எனக்கு வகுப்பிற்கு நேரமாச்சு.. சீக்கிரம் செக் தாங்க..

அதுசரி ராசாத்தி , நான் இங்கே இருக்கேன்னு எப்படி கண்டுபிடிச்ச?

சும்மா போர் அடிச்சிச்சு.. நீங்க என்ன அப்படி பிசி எங்க இருக்கீங்கன்னு தேடினேன்..

என்னை தேடி ஆபிஸ் போனியா?

தேடின்னு ஏன் ஆபிஸ் போகணும்? என் போன்ல நீங்க எங்க இருக்கீங்கன்னு உங்க போன் நம்பர் போட்டேன். அதுல நீங்க இங்க இருக்கிறதா சொல்லுச்சி. அதுதான்.

ஒ.. கதை அப்படி போகுதா..

பின் குறிப்பு :

நல்ல வேளை, இந்த கண்டு பிடிப்பு எல்லாம் நான் படிக்கும் காலத்தில் இல்ல. இருந்து இருந்தா நான் பண்ண வேலைகளுக்கு அடி வாங்கியே செத்து இருப்பேன்...

5 கருத்துகள்:

  1. இப்படி ஒரு அப்ளிகேஷன் இருக்கா... இந்தக் காலத்துல எல்லாருக்கும் கஷ்டம்தான் போல இருக்கு...

    பதிலளிநீக்கு
  2. அதுக்கு அப்புறம் வீட்டுக்கு போய் என்ன நடந்துச்சுன்னு சொல்ல வெண் இல்லையே

    பதிலளிநீக்கு
  3. நான் அதிகம் பார்த்த படங்களில் ஒன்று நினைத்தாலே இருக்கும். தங்களது அனுபவத்தில் இப்படத்தினைப் பற்றிய பகிர்வு என்னுடைய கல்லூரி நாள்களை நினைவுபடுத்தின.

    பதிலளிநீக்கு
  4. ஹஹாஹ்ஹ நல்லா மாட்டிக்கிட்டீங்களா....ஹும் இப்பல்லாம் இந்த ஆன்ட்றாய்டு ஃபோன் நாம இருக்கற இடைத்தை எல்லாம் சொல்லிடுதே...அந்த ஆப் இருந்தா ஆப்புதான்.....அதாவது டெக்னாலஜி வளர வளர நமது பெர்சனல் ஸ்பேஸ் குறையுதோ??!!!!!

    கீதா: இங்கும் ஒரு சிலர் இந்த ஆப் உபயோகிக்கின்றார்கள். எனக்குப் பிடிக்காத ஆப். அண்ட் டெக்னாலஜி. ஸோ ஐ ஆம் அகைன்ஸ்ட் தீஸ் கைண்ட் ஆஃப் ஸ்மார்ட் ஃபோன்ஸ்....இட் ஸாப்யில்ஸ் அவர் ப்ரைவசி.

    பதிலளிநீக்கு
  5. அந்த நாள் ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே....ரியலி தோஸ் டேய்ஸ் ஆர் கோல்டன் டேய்ஸ்.....இல்லையா விசு?!!

    கீதா

    பதிலளிநீக்கு