வியாழன், 17 செப்டம்பர், 2015

ரஜினியின் கபாலி "சுட்ட பழமா"

தலைப்பிற்கு செல்லும் முன் ஒரு சிறிய விளக்கம்.

ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படமான "கபாலி" யின் ஸ்டில் நேற்று வெளியிடப்பட்டது.  அதை பார்த்தவுடன்.. அடே டே, நம் நெடுநாள்  ஆசை நிறைவேற போகின்றது என்ற ஒரு நப்பாசை வந்தது.

அது என்ன நப்பாசை...? இதோ சொல்கிறேன்..

ரஜினி அவர்களின் பரம ரசிகனாக வளர்ந்து வாழ்ந்து வந்த நான் "பாபா" படம் பார்க்கும் போது பாதியில் எழுந்து வந்த நான், அதன் பின் வந்த ரஜினியின் படங்கள் எதுவும் பார்க்கவில்லை. ஒவ்வொரு முறையும் வெளிவரும் படங்களின் ஸ்டில்லை பார்த்தவுடன் இதுவும் நமக்கு வேலைக்கு ஆகாது என்று பார்க்காமல் விட்டுவிடுவேன். பாபா படத்தின் தாக்கத்தினால் ரஜினிகாந்த் படம் மட்டும் அல்லாமால் அதற்கு பிறகு வந்த தமிழ் படங்களில் ஐந்து அல்ல ஆறு தான் பார்த்து இருப்பேன். இருந்தாலும் விமரிசனம், கதை, இசை என்பவற்றை அங்கே இங்கே என்று எங்கேயாவது கேள்விபடுவேன்.



சென்ற வருடம் லிங்கா படத்து ஸ்டில்லை பார்த்த நான், இவர் திருந்தவே மாட்டாரா... தன வயதுகேர்ப்ப நடிக்கமாட்டார் என்று முடிவு பண்ணி இனிமேல் இவரின் படம் எதுவும் பார்க்க வாய்ப்பு இல்லை என்று நினைத்தேன்.

அப்படி இருக்கையில் நேற்று காபாலி படத்து ஸ்டில் ஒன்றை பார்த்தேன்.அடேங்கப்பா.. ரஜினி அவர்கள் தன வயதிற்கு ஏற்றார் போல் ஒரு பாத்திரத்தில். மிகவும் அருமையான ஸ்டில். லிங்கா படத்து ஸ்டில்லில் சட்டை காற்றில் பறக்க ஆட்டம் போட்டு கொண்டு இருந்ததை பார்த்து இருந்த கண்களுக்கு மருந்து போட்டது போல் இருந்தது இந்த கபாலி ஸ்டில்.  என்ன ஒரு ஸ்டைல். "தலைவர் இஸ் பேக்". கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம் என்ற ஒரு நப்பாசை வந்தது.
என் கண்ணே பட்டுடும் போல இருக்கே.. "நெற்றிக்கண் சக்ரவர்த்தி"யே திரும்பி வந்தத போல் ஒரு பீலிங்.
(Picture Courtesy : Google)

இந்த ஸ்டில் கூடவே இந்த படத்தின் மூல கதை சுருக்கமாக இருந்தது. ஒழுக்கம் மிகுந்த கட்டு காப்பான ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி தான் ரஜினி அவர்கள். அவர் நிறுவனத்தில் பணி புரியும் சில ஊழியர்கள் வேலை நிமித்தம் மலேசியா நாட்டிற்கு செல்கின்றார்கள். அங்கே சில சமூக விரோதிகளால் கடத்த படுகின்றனர்.  இந்த ஊழியர்களை விடுவிக்க ரஜினி காந்த் அவர்களே மலேசியா செல்கின்றார். இவர் கடத்த பட்ட ஊழியர்களை எப்படி மீட்டு வந்தார் என்பது தான் கதை, என்று போட பட்டு இருந்தது.

இது எங்கேயோ கேட்ட குரல் போல் உள்ளதே.. எங்கே .. எங்கே .. எங்கே என்று மூளையை அலசும் போது ...1983க்கு சென்றேன்.

ஆங்கில நாவலுக்கு அடியேன் அடிமையாக இருந்த காலம். Ken Follet  என்ற நாலாசிரியர் எழுதிய "Pillars of the Earth"  என்ற நாவலை படித்து ஒரு நபரால் எப்படி இவ்வளவு அழகாக எழுத முடிகின்றது என்று "பேய் அறைந்தவன் போல் " (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்) முழித்து கொண்டு, இந்த நாவலை பற்றி இன்னொரு அடிமையிடம் பேசி கொண்டு இருந்தேன்.

அவரோ பதிலாக, Ken Follet  அவர்களின் அடுத்த நாவலை படித்தாயா என்றார் இதை விட நன்றாக இருக்குமா? அட பாவி. உடனே போய் அதை படி. அந்த நாவலின் பெயர் "On Wings of Eagles". ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதியது என்றார்.

என் இனிய கவாசாகி பஜாஜ் 100ரை தட்டிவிட்டு நேராக MG ரோடில் (Banglore)  உள்ள கங்காராம் என்ற புத்தக கடைக்கு சென்று, இந்த நாவலை வாங்கி கொண்டு இல்லம் வந்து சேர்ந்தேன். என்ன ஒரு நாவல். என்ன ஒரு சம்பவம். இப்படியும் ஒரு மனிதரா என்று அந்த நாவலின் கதாநாயகனை கண்டு வியந்தேன். அந்த நாவலின் சுருக்கம் ..

Ross Perot ( பெயர் எங்கேயோ கேட்டது போல் உள்ளதா ? இருக்கலாம், இவர்  இருமுறை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்) ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரி. இவர் நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் வேலை நிமித்தமாக ஈரான் நாட்டிற்க்கு செல்லும் போது அங்கே சிலரால் கடத்த படுகின்றார்கள்.
இதை அறிந்த Ross Perot , இவர்களை மீட்க்கும் பொறுப்பை தானே எடுத்து கொண்டு ஈரான் செல்கின்றார். தன அறிவாலும் கூட உள்ள சிலரின் அறிவுரைகளாலும் இவர்களை மீட்டு வருகின்றார். உணமையான சம்பவம். நாவலை படிக்கும் போதே புல்லரிக்கும்.

காபாலியின் கதையும் இதுவும் ஒரே மாதிரியாக  உள்ளதே.  அப்படி இருந்தால் எனக்கு சந்தோசம் தான். இந்த "On Wings of Ealge"  கதையில் நாயகன்.. மரத்தை சுற்றி வந்து நாயகியோடு ஆட்டம் போடுவதில்லை. ஒரு 60 -65 வயது ஆள் தன் அறிவினாலும் அனுபவத்தினாலும் ஒரு காரியத்தை எப்படி கையாளுகின்றார் என்ற சூழ்நிலை. இந்த படம் ரஜினி அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

பின் குறிப்பு :
அடே அப்பரன்டிஸ்களே, இந்த படத்தின் கதைக்கு ரஜினி அவர்கள் புகை பிடிப்பதை போலவும் - சுறா பானம் அருந்துவதை போலவும் வரும் காட்சிகள் தேவை படலாம். உடனே.. கூடவே இன்னும் சில அன்னகைகளை சேர்த்து கொண்டு மரம் வெட்டுவோம், நம்ம கலாசாரம் அது இதுன்னு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். ரொம்ப நாள் கழித்து  தலைவரின் படத்த பார்க்க போகின்றோம் என்ற என் நப்பாசையில் நெருப்ப கொட்டிடாதீங்கோ.

6 கருத்துகள்:

  1. பார்ப்போம் நண்பரே
    திரையில் எப்படி வருகின்றது
    என்று பார்ப்போம்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. Ken Follet பற்றி அறிந்துகொண்டேன். நாவல் ரொம்பப் பிடிச்சுருந்தா படம் அவ்வளவு ஈர்க்காது விசு, தயாராகவே படம் பார்க்கப் போங்க
    :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கதையின் சுருக்கமும் ஒரே மாதிரியா உள்ளது. அதுதான் இதுவோன்னு தெரியல. பொருத்து இருந்து பார்க்கலாம்.

      நீக்கு
  3. Visu!

    You should consider becoming a Kamal fan so that you can earn some respect among the bloggers here. பொதுவாக தமிழாவலர்கள் அனைவருமே கமலஹாசர் விசிறிதான். ஏன் இப்படி மறுபடியும்? It is really a bad idea that you are planning to watch another Rajini movie. :))

    உனக்கென்ன வருண்? நான் என் காசைக் கொடுத்துப் பார்க்கப் போறேன்னெல்லாம் சொல்லாதீங்க. பார்த்துட்டு வந்து பதிவெழுதிப் புலம்புறதை நாங்கல்ல கேக்கணும்? அந்த பயம்தான்! :))

    ஆமா, படம் பூஜை போட்டதுமே இப்படி கதையை சொல்லீட்டா, கதையை மாத்தீட மாட்டாங்களா? இதெல்லாம் படம் வந்தபிறகுதான் சொல்லணும், விசு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருண் ... ஒரு விஷயம் புரிந்தது. விசுவிற்கு பதிவுலகத்தில் மரியாதை இல்லை என்பதை தங்களை அறியாமலே (ஒரு வேலை அறிந்து தானோ) சொல்லி விட்டீர்கள்.
      ரஜினியின் பாபா பண்ண வேலையை தான் கமலின் சில படங்கள் செய்தன. கமலை பொறுத்தவரையில் போனோமா நடித்தோமா காசை வாங்கினோமா வந்தோமா என்று இருந்தால் அந்த படம் நன்றாக இருக்கும். ரசிக்கலாம்.
      என்று கமல் கதை-துணை இயக்கம்- திரைகதை என்று அகல கால் வைத்தாரோ அன்றே அவின் படங்களை அடியேன் ரசிக்க முடியாமல் போனது.
      நான் கமலின் ரசிகனும் தான். இல்லை என்று சொல்லவே முடியாது. என் சிறு வயதில் "சவால்" என்ற ஒரு படம். வர்த்த ரீதியாக தோல்வி. ஆனால் அந்த படத்தில் தான் அடியேன் கமலின் ரசிகன் ஆனேன். என்ன ஒரு அலட்ச்சியம் இல்லாத அசால்ட்டான நடிப்பு. அதற்கு பின் "குரு" மீண்டும் ஒரு தோல்வி படம் தான், இருந்தாலும் எனக்கு பிடித்த கமலின் படங்களில் அதுவும் ஒன்று. இந்த மாதிரியான எனக்கு பிடித்த நல்ல படங்கள் என்று நான் நினைத்த படங்கள் தோல்வி அடைந்தாலும். வேலைக்கு ஆகாது என்று நான் நினைத்த "சகலகலாவல்லவன்" ஒரு பிரமிக்கவைக்கும் அளவிற்க்கான வெற்றி பெற்றது.

      லாங் ஸ்டோரி ஷார்ட் (நீளமா தான் சொல்லிட்டியே .. பின்ன என்ன ஷார்ட் என்று நீங்கள் சொல்வது கேட்கின்றது)..அடியேன் கமலின் ரசிகன் தான் .. அவரன் பகுத்தறிவை என் மீது திணிக்காத வரை.

      கதையை பொறுத்தவரை .... கபாலியின் மூல கதையை தினமலரின் படித்தேன். அதை படித்தவுடன் நினைவிற்கு வந்தது " On Wings of Eagles" என்ற நாவல். தினமலரில் வந்த செய்தி எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனாலும் இந்த கதை ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என்று ஒரு அல்ப ஆசை. இது மட்டும் சொதப்பிடிச்சி. இருபது வருஷ வெருப்ப ஒரே பதவில் கொட்டி தீர்த்துடுவேன்.

      நீக்கு
  4. விசு நம்ம தமிழ் படங்கள் ஒரு சில மட்டுமே தமிழில் எழுதப்பட்ட நாவல்களைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். உண்மைச் சம்பவங்கள் என்பது வெகு சில. அப்படி நாவல் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள் நாவல்களையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கித்தான் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் அனுபவம் மிக்கவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அவரே மனம் நொந்து சொல்லியிருக்கின்றார்.

    ஆங்கிலப்படங்கள்ம் கொரியன் படங்கள் எல்லாமே பொதுவாக நாவல்கள் இல்லை என்றால் உண்மைச் சம்பவங்களை வைத்துதான் எடுக்கப்படுகின்றன. அவர்கள் அப்படி எடுத்தாலும் கதைக்கு காம்ப்ரமைஸ் செய்துகொளவதில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை நாவலாசிரியர் பாவம்...அவருக்கு எந்த உரிமையும் இல்லை...

    நம்ம மக்கள் ஆங்கில நாவல்களை/படங்களைக் கூடக் காப்பி அடித்துவிட்டு, நம்ம மாஸ் க்காக படம் எடுத்து தனது கதை என்று சொல்லக்கூடியவர்கள். சில படங்கள் டிட்டோ வாக இருந்தாலும் தனது கதை என்று வெட்கமில்லாமல் கூச்சமில்லாமல் நேர்மை இல்லாமல் இயக்குநர்கள் போட்டுக் கொள்வது வழக்கம்.

    உதாரணம் ஐ யாம் சாம்...படத்தை தமிழில் அப்படியே எடுத்துவிட்டு அதுவும் விக்ரம் அந்த ஆங்கில நடிகர் போலவே உடல் மொழியும் செய்துவிட்டு, இயக்குநர் தனது கதை என்று போட்டுக் கொண்டாரே....அப்படித்தான்..இங்கு ப்ரொஃபஷனிலசம் என்பது சுத்தமாக கிடையாது.

    எனவே இந்தக் கதையும் ரஜனி மாசிற்காக எடுக்கலாம்....மாறலாம். எதிர்பார்ப்பு வேண்டாம் ......நன்றாக வந்தால் நல்லது...பார்ப்போம்..ஆனால் நம்பிக்கை இல்லை...சரி இயக்குநர் யார் என்று சொல்லுங்கள் நான் சொல்லி விடுகின்றேன் கதை எப்படி இருக்கும் என்று....

    கீதா

    பதிலளிநீக்கு