சனி, 22 ஆகஸ்ட், 2015

பாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா ?

அப்படி என்ன தப்பு பண்ணிட்டார் " பிரகாஷ் ராஜ்"

சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் மேல் ஒரு பெண்மணி வழக்கு போட்டு இருந்தார்கள். அந்த விளம்பரத்தில் "கல்யாண வயதில் பெண் இருந்தாலே டென்சன் தானே" என்ற ஒரு வாக்கியம் உள்ளது . இந்த வாக்கியத்தினால் பெண்கள் பெண் இனத்தையே பிரகாஷ் ராஜ் அவமதித்ததாக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளார்கள்.


எனக்கும் இரண்டு ராசாத்திக்கள் உண்டு. அவர்கள் இன்னும் திருமண வயதை எட்டவில்லை, இருந்தாலும் இந்த செய்தியை படித்தவுடன் என்னமோ என் மேல் யாரோ ஒருவர் வழக்கு போட்டதை போல் உணர்ந்தேன்.

கல்யாண வயதில் பெண் வைத்துள்ள யாருக்குமே கண்டிப்பாக டென்சன் இருக்க தான் செய்யும். அதுவும் இந்தியாவில் இந்த பெண் இருந்தால் இந்த டென்சன் இரட்டிப்பாகும்.

உதாரணதிற்கு நாம் ஒரு 25-27 வயது பெண்ணுக்கு பெற்றோராக இருகின்றோம் என்று வைத்து கொள்வோம்.

இடம் :சென்னை. அந்த பெற்றோரின் உரையாடல் என் கற்பனையில்..

என்ன மணி 8 ஆச்சி.. உன் பொண்ணு இன்னும் எழல...?

என் பொண்ணா? வானத்தில் இருந்து குதிச்சு வந்தாளாக்கும், கண் தெரியாதவங்க கூட முகத்தை தடவி பார்த்து உங்க பொண்ணுன்னு சொல்லுவாங்க.. நீங்க என்னனா .. என் பொண்ணுன்னு..

சரி நம்ம பொண்ணு, விஷயத்துக்கு வா.. என்ன இன்னும் எழல..? 9 மணிக்கு வேலைக்கு போகணுமே, போய் எழுப்பி பார்... உடம்புக்கு ஏதாவது...

என்னத்த சொல்றதுங்க.. நேத்து அவ வரும் போது 11 க்கும் மேல ஆச்சி. கம்பனி கார் தான். இருந்தாலும், இப்ப நடக்குற சம்பவங்களை கேட்டா.. பயமா இருக்கு. நீங்க அவளிடம் பேசி...

ஒழுங்கா உங்க அண்ணன் பையன அஞ்சு வருஷத்துக்கு முன்னால கட்டி இருந்தா.. இன்னைக்கு அமெரிக்காவில் ஆசைக்கு ஒன்னு .. ஆஸ்திக்கு ஒன்னுன்னு இருந்து இருப்பா... என்னத்த சொல்ல?

என்னத்த சொல்றதா....அவளை என்னைக்கு என் பேச்சை கேக்க விட்டீங்க.. எப்ப பாரு என் குடும்பத்த பத்தி கேவலமா பேசி.. .அவ யார வேணுமானாலும் கட்டுவேன் ஆனால் சொந்தத்தில கட்டி சோந்த செலவில் சூனியம் வச்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டா...

பேசி கொண்டே இருக்கும் போது.. ராசாத்தி எழுந்து வர...

என்னடியம்மா... மணி 8 க்கும் மேலே ஆச்சி.. உடம்புக்கு ஏதாவது.. ?

அஞ்சி மணிக்கே எழுந்தேன் அப்பா.. என்னமோ தெரியல.. ஒரே வாந்தி மயக்கம்..

ஐயோ.. கிளம்பு டாக்டரிடம் போகலாம்.

அப்பா ... பித்த வாந்தி.. நேத்துவீட்டுக்கு வர 11 ஆச்சி.. சாப்பிட்டு படுத்தேன்.. ஜீரணிக்கல  அது தான்..

சரி .. மகள்.. வேலைக்கு தாமதமா போக கூடாது இல்ல.. சீக்கிரம் கிளம்பு.. இப்ப எல்லாம் பொண்ணு பாக்க வர எல்லாரும் .. என்ன வேலை .. எங்க வேலைன்னு தான் வராங்க..

அவங்க பொண்ணு பாக்க வரல அப்பா... பொன்ன பாக்க வராங்க..

இந்த சமத்தா பேசுறத என்னிடம் மட்டும் வைச்சிக்க.. உன்னை பாக்க வர மாப்பிளை வீட்டாரிடம் வேண்டாம்.

அப்பா.. இது வரை ரெண்டு பேர் வந்தாங்க.. அந்த ரெண்டு பேருக்குமே தீபாவளிக்கு கோழி திருடின முழி..

நீ வாயை மூடுடி. அப்படி எல்லாம் நான் யோசித்து இருந்தேனா.. உங்க அப்பாவிற்கு கல்யாணமே ஆகி இருக்காது, இப்படி இருக்குற இவரை கட்டிகின்னு நான் சந்தோசமா இல்ல.

அம்மா,  நீங்க சந்தோசமாதான் இருக்கீங்க.. அப்பா மூஞ்ச பாருங்க.. எதோ மந்திரிச்சி விட்டவர் போல் இருக்கார்.. இவரை எப்ப பார்த்தாலும் எனக்கு  கறிக்கடைக்கு போற ஆடு மாதிரி தான் இருக்கு..

யம்மா.. மகராசி.. அப்பா இன்னும் ரெண்டு வருடத்தில் ரிட்டையர் ஆகி விடுவேன் இல்ல.. கொஞ்சம் பொறுப்பா இருந்து கல்யாணம் பண்ணிக்கோ..

அப்பா.. எனக்கும் அதே கவலை தான். இன்னும் ரெண்டு வருஷத்தில் நீங்க வேலையில்லா கல்யாணம் பண்ண பிரம்மச்சாரி.. அந்த நேரத்தில் தானே நான் உங்களுக்கு பண உதவி பொருள் உதவி செய்யணும்.. இப்ப கல்யாணம் பண்ணா .. கிளிஞ்சது போங்க..

அது அது அந்த அந்த வயதில் நடக்கனும் மகள்.. இப்ப உனக்கு .. 24 கிட்ட ஆகா போது..

அப்பா... எங்க இருக்கீங்க .. எனக்கு 26 தாண்டிடிச்சு..

பத்தியா.. பத்தியா.. இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருந்தால் ஊர் என்ன பேசும்..?

நான் என்ன பண்ணாலும் ஊர் ஏதாவது பேசினு தான் அப்பா இருக்கும். அதை பத்தி நம்மக்கு என்ன கவலை..

சரி.. நேரமாச்சு, கிளம்பு.. போற வழியில் நானே உன்னை ட்ரோப் பண்றேன்.. சுடிதார் ஏதாவது போடு.. அந்த புடவை போட்டு வண்டி சக்கரத்தில் மாட்டி..

அய்யோ.. என்ன அப்பா .. இவ்வளவு டென்சன் ஆகுரிங்க..

இல்ல மகள்.. உனக்கு ஏதாவது ஆச்சினா கல்யாணம் தடை படும் இல்ல .. அது தான்..

அப்பா.. என்னை விட அழகு கம்மி.. படிப்பும் கம்மி, வேலையும் இல்ல.. அவங்களுக்கே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் போது எனக்கும் கிடைக்கும்..

நீ உங்க அம்மாவ சொல்ற.. அது அந்த காலம்..

அம்மாடி.. உங்க ரெண்டு பேரு வாய்க்கு நான் தான் அவல்.. கூடவே தேங்காயும் வெல்லமும் போட்டு மென்னு சாப்பிடுங்க..

வண்டியில் .. ஏறி  அமர்ந்ததும்..

மகள்.. இருபது வருஷத்துக்கு முன்னால நான் முத முறையா ஒரு டிவிஎஸ் 50 வாங்கினேன்.. அதுல நீ முன்னால உட்கார்ந்து வரும் ஒரு தனி மகிழ்ச்சி.. இப்ப நீ வண்டியின் பின்னால இருக்க.. சந்தோசம் தான். இருந்தாலும் இந்த வண்டியின் முன்னால இருக்க வேண்டுயது நான் இல்லடியம்மா.. ஒரு நல்ல கணவன். என் வாழ்வின் ஒரே கனவு  உன்னை கல்யாண கோலத்தில் பார்க்கணும்.. ப்ளீஸ்..

சரி .. அப்பா.. ஒத்துக்குறேன். மாப்பிள்ளை பாருங்க. ஆனா ஒன்னு, வரதட்சணை .. லொட்டு லொசுக்குன்னு எதவாது பேசினாங்கனா.. எனக்கு பொசுக்குனு கோவம் வந்துடும்.

வரதட்சணைக்கு என்ன குறைச்சல் .. உனக்கு ரெண்டு வயசு இருக்கும் போதே அதுக்கு காசு சேர்த்து வைக்க ஆரம்பிச்சிட்டேன்.

ரொம்ப சாரி அப்பா.. நான் என்னை அறியாத வயதில் என்னையும் அறியாமல் உங்களை எப்படியெல்லாம் கொடுமை படுத்தி இருக்கேன்.. சாரி..

இது கொடுமை இல்லடியம்மா.. ஒவ்வொரு தகப்பனின் கடமை..

அப்பா..நீங்க சேர்த்து வைச்ச அந்த பணம் .. உங்களுக்கும் அம்மாவிற்கும் ஓய்வு காலத்தில் உதவ வேண்டிய பணம். வயசான காலத்தில் அதை நீங்க அனுபவிக்கிறத விட்டு விட்டு வாலிப வயதில் இருக்கும் எங்களிடம் கொடுத்தால்.. இது எங்களுக்கு அவமானம்..

உலகத்தோடு ஒத்து போ ராசாத்தி... இது எல்லாம் சகஜம்.

வண்டியில் மகளை இறக்கி விட்டு , அவள் கண்ணை விட்டு மறையும் வரை .. அவளையே பார்த்து விட்டு...பெருமூச்சு விட்டார்..

உடனடியா அந்த கல்யாண ப்ரோகரை கூப்பிட வேண்டும.

அலை பேசியில்..

நான் தான் பொண்ணோட அப்பா பேசுறேன்..

சொல்லுங்க.. அடுத்த வாரம்.. பொண்ணை நேரத்துக்கு தயார் பண்ணிடுங்க..

அதுக்கும் முன்னால நான்  மாப்பிளை தம்பியிடம் அவசரமா பேசுனும்..

என்ன விஷயம் .. சொல்லுங்க..

இல்ல .. அவரை பொண்ணு பார்க்க வரும் போது, பொண்ணுக்கு எதிரில் வரதட்சணை எதுவும் கேட்க்க வேண்டாம்ன்னு சொல்லணும்.

சார்.. அந்த வீட்டு அம்மணி ரொம்ப கறார்.. எவ்வளவு வரதட்சணை வேணும்ன்னு கையில் கல்குலடரோட தான் இருப்பாங்க..

இல்லைங்க.. பொண்ணுக்கு எதிரில் மட்டும் கேட்க்க வேண்டாம் ... ஆனால் அவங்களுக்கு என்ன வேணுமோ அதை விட அதிகமா நான் செய்ய தயார்.

இது என்ன சார், விஷ பரீட்சை..

இல்லைங்க.. என் பொண்ணு இந்த வரதட்சணை வாங்குற ஆட்களை மதிப்பது இல்ல..

மாப்பிளையிடம் நான் இத சொல்ல முடியாது சார்.. வேணும்னா,,, உங்களை வந்து பார்க்க சொல்றேன்.. நீங்களே சொல்லிடுங்க..

அடுத்த அரை மணி நேரத்தில் :

சொல்லுங்க சார்.. என்ன அப்படி அவசரம்?

ஒன்னும் இல்ல.. அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரும் போது.. தயவு பண்ணி வரதட்சணை ...

நல்ல வேளை நினைவு படுத்துனிங்க.. எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வரும் போது.. எங்க அம்மா வரதட்சணை அது இதுன்னு ஏதாவது கேட்டால், எவ்வளவு கேட்டாலும் ஒத்துக்குங்க.. இல்லாட்டி இந்த கல்யாணம் நடக்காது..

தம்பி .. நான் சொல்ல வந்தது..

சார்.. நீங்க கவலை படாமல் ஒத்துக்குங்க.. ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு நல்ல வேலை.. கை நிறைய சம்பளம்.. சேமிப்பும் இருக்கு. புகை படத்தை பார்த்தவுடன் உங்கள் மகளை ரொம்ப பிடிச்சிச்சு. என்னுடைய தங்கை அவங்க கூட கல்லூரியில் படிச்சு இருக்காங்க.. உங்கள் மகளை பத்தி நிறைய நல்ல விஷயம் சொன்னாங்க.. அதனால் உங்க பொண்ணை தான் கட்டனும் முடிவு பண்ணிட்டேன்..

சார்.. ஆனா .. வரதட்ச்சணை நிறைய கேட்டுட்டா..

சார்.. அவங்க எவ்வளவு கேட்டாலும் அதை நான் உங்களிடம் தரேன்.. அதை அவங்களிடம் கொடுத்துடுங்க..

சார்..

என்ன இன்னும் சார்னு.. மாப்பிளைன்னு சொல்லுங்க சார்..

நீங்க முதலில் மாமான்னு சொல்லுங்க..

பின் குறிப்பு :

ராசாத்தி.. நான் உன்னிடம் இது வரைக்கும் எதையும் மறைச்சது கிடையாது.. அதனால் தான் நடந்த உண்மை எல்லாம் சொல்லிட்டேன்.. இந்த கல்யாணத்தில் உனக்கு சம்மந்தம் தானே..

அப்பா.. கல்யாணத்த விடுங்க.. எப்படி அப்பா.. நீங்க சேமித்து வைத்தது எல்லாம் எனக்காக விட்டுகொடுக்க உங்களுக்கு  தைரியம் வந்தது..

நீ நல்லா இருக்கணும் .. அது தான்...

கல்யாணத்துக்கு நான் தயார்.. மாப்பிளை வீட்டாரை வர சொல்லுங்க.

என்று சொல்லிவிட்டு... டிவி ஆன் செய்த போது..

அதில் பிரகாஷ் ராஜ்..



WWW.VISUAWESOME.COM

6 கருத்துகள்:

  1. மிக அருமையாக ஓர் நடுத்தர குடும்பத்தை சித்தரித்தது பதிவு! அருமை!

    பதிலளிநீக்கு
  2. கல்யாண வயதில் பெண் இருப்பதனால் டென்ஷன் இல்லை..இந்த கேடு கெட்ட சமூகம் திருந்தாததால் தான் டென்ஷன்

    பதிலளிநீக்கு
  3. "ஆஹா..! இந்த மனிதர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள். இந்த ஊர் எங்கே இருக்கிறது? அமைச்சரே..?!"

    இந்த பதிவை படித்ததும் எனக்கு இப்படிதான் கேக்க தோன்றியது. நகைச்சுவையோடு இணைந்த அற்புதமான கதை!

    பதிலளிநீக்கு
  4. ஆக, விசுவின் அடுத்த நூல் சிறுகதைத் தொகுப்புத்தான் சரியா? வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு