வெள்ளி, 24 ஜூலை, 2015

வாழ நினைத்தால் வாழலாம் .

அக்கா, எப்படியாவது உங்க கடவு சீட்ட நான் வாங்கி தரேன்.. நீங்க உங்க அம்மா சொன்ன மாதிரி இந்தியாவிற்கு படிக்க போய்டுங்க ...

அப்பாவும் இறந்துட்டார் .... அம்மாவை எப்படி தனியா விட்டுட்டு...?

அக்கா ..அவங்க படிச்சவங்க .. நாலும் தெரிஞ்சவங்க ..

இருந்தாலும்..


நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல, வடிவா கவனிக்கிறோம் ..நீங்க இந்தியா போய் வடிவா படிங்க..

என்னை வெளிக்கிடு வெள்ளிகிடுன்னு சொல்றியே .. நீ எப்படி இங்க சமாளிப்ப ?

அக்கா நான் ஒரு வக்கீல் .. எனக்கு தைரியம் இருக்கு நீ கிளம்பு...

அம்மாவ ....

அம்மா என் பொறுப்பு ..நீ கிளம்பு...

இதோட எப்ப சந்திப்போம்..

இந்த சண்டை நின்னா தான்.. எல்லாம் அவனுக்கு தான் வெளிச்சம்...

சரி..

இந்த உரையாடல் நிகழ்ந்து வருடங்கள் 20க்கும் மேல். உரையாடியவர்கள்  அடியேன் வீட்டு அம்மணியும் அவர்களின் ஒன்று விட்ட சகோதரியும்..

அன்று இலங்கை போரில் சிதறிய பல குடும்பங்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று. அன்று பிரிந்த இவர்கள் 20 வருடம் கழித்து இந்த வாரம் சுவிஸ் நாட்டில் சந்தித்தனர்.

கிட்ட தட்ட 20 வருட கதையை இவர்கள் "கதைத்ததை" பார்த்து நான் பேய் அறைந்தது போல் ஆனேன் என்று சொன்னால் மிகையாகாது (மீண்டும் சொல்கிறேன் ... அந்த பேய் அறைந்த கதை கூடிய சீக்கிரம் வரும்).

இலங்கை போரில் எவ்வளவோ இழந்த போதும், இவர்களிடம் கூடவே தங்கி இருந்தது "தன்னம்பிக்கை". இவர்கள் இருவர் மட்டும் அல்ல, இந்த தன்னம்பிக்கையை நிறைய ஈழ குடும்ப பெண்களிடம் கண்டுள்ளேன்.

சென்ற வாரம் சுவிஸில் வந்து இறங்கியவுடன் .. அவர்கள் விமானநிலையத்தில் எங்களுக்காக காத்து இருந்தனர். கணவன் மனைவி மற்றும் இரண்டு ராசாதிக்கள். என் வீட்டு கண்மணிகளும் அவர்களை சந்திப்பது இதுவே முதல் முறை. அது என்னவோ "விட்ட குறை தொட்ட குறை" போல். ஒருவரையொருவர் பார்த்தவுடனேயே பிள்ளைகள் நால்வரும் மிகவும் நெருங்கி பழக ஆரம்பித்தனர்.

அக்கா ,, நாம் கடைசியாக அங்கே கொழும்பு நகரில் ...சந்தித்தது நினைவில் இருக்கா.. ?

எப்படி மறக்கமுடியும்...நீ செஞ்ச உதவி, அந்த கடவு சீட்டு நேரத்துக்கு வந்ததினால் தானே நான் இந்தியா சென்று படிக்க முடிந்தது.  இந்தியா சென்றதினால் தானே எனக்கு இவ்வளவு ஒரு அருமையான புருஷன் ( யாரும் பேய் அறைந்த மாதிரி முழிக்க வேண்டாம், சும்மா தாமாசுக்கு ஒரு பிட்ட போட்டேன்.)

இத்தனை வருடம் கழித்து நீ அமெரிக்காவில் இருந்து சுவிஸ் வந்து நம் குடும்பம் சந்திப்பது..

முதலாவதாக "எல்லாம் அவர் செயல், அவர் சித்தம்" அடுத்தது
வாழ நினைத்தால் வாழலாம்"

சென்ற வாரம் முழுவதும் இந்த குடும்பம் எங்கள் மீது காட்டிய அன்பும் விருந்தோம்பலும் மறக்க இயலாது. கணவன் மனைவி  இருவரும் ஒரு வாரம் விடுமுறை போட்டு எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்து சென்று உணவு தயாரித்து, பராமரித்து ...அடேங்கப்பா... இவர்கள் அன்பில் திணறி விட்டோம்.

இன்று மதியம் 4:30க்கு சுவிஸில் இருந்து பாரிஸ் நகர பிரயாணம். விமான நிலையத்தில் பிள்ளைகள் நால்வரும் கட்டிபிடித்து விடை பெற்றது, என்னை போன்ற கல் நெஞ்சம் கொண்டவனையும் கசக்கியது.


பிரியாவிடை 
ஐரோப்பாவின்  உள்ளேயே இரு நாடுகளும் அமைந்துள்ளதால் பாஸ்போர்ட் விசா என்ற கேள்வி எதுவும் இல்லாமல் ஒரு மணி நேரத்தில் பாரிஸ் வந்து இறங்கினோம். நேராக ஒரு டாக்ஸி பிடித்து ஹோட்டல் வந்து சேரும் போது மணி 7.

இங்கே இருந்து ஐபில் (IPL இல்லங்க .)Eiffel டவர் எவ்வளவு தூரம் ...

கிட்ட தான்.

இப்ப 7 மணி ஆச்சே . அங்கே போனா ஏதாவது பார்க்க முடியுமா?

இரவு 10வரை இங்கே வெளிச்சம் இருக்கு. போய் பாருங்க..

உடனே வெளியே வந்து ஒரு பேருந்தை பிடித்து நால்வரும் Eiffel  டவர் நோக்கி சென்றோம். பேருந்து எங்களை அங்கே இறக்கி விட... என் இரண்டாவது ராசாத்தி..

பிரம்மீட்டும் கோபுரம் 
டாடி.. இது என்ன இவ்வளவு பெரிதாக இருக்கு. நான் புகைபடத்தில் பார்ப்பது போல் சிறியதாக இருக்கும் என்றல்லவா நினைத்தேன்  (முதன் முதலாக தாஜ் மஹால் பார்க்கும் போது எனக்கும் அதே நினைப்பு தான் வந்தது.)

கிட்ட தட்ட ஒரு மணி நேரம் அங்கே வரிசையில் நின்று பின்னர் டிக்கட் வாங்கி கொண்டு அந்த லிப்டை பிடித்து மேலே போக துவங்கினோம். என்ன ஒரு அருமையான பொறியியல் வியப்பு வாய்ந்த வியப்பு தரும் காரியம் . மனதில் ஒரு சந்தேகம். 301 மீட்டர் உயரத்தில்1889ல்  கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் எப்படி இந்த லிப்ட்? அந்த  காலத்தில் லிப்ட் இருந்து இருக்காதே. இந்த லிப்டை எப்படி பொருத்தினார்கள் , என்று வியந்து கொண்டே இருக்கையில் உயர உயர சென்றேன்.


பல வருடங்கள் முன்னர் இங்கே வந்த போது அதிக பனிமூட்டம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை. இந்த முறை அந்த பிரச்சனை  இல்லை.

உயர சென்ற லிப்ட் எங்களை மேல் தளத்தில் இறக்கி விட வெளியே வந்து பார்த்தால் முழு பாரிஸ் நகரமும் தெரிந்தது. ஒரு அருமையான காட்சி. சில் (ஜில்)என்ற காற்று முகத்தில் அடிக்க பாரிஸ் நகரை கண்டு களித்தோம்.

பாரிஸ் நகரம்
மேலே சில உணவகங்கள் இருப்பதை  பார்த்து, பசி என்று உள்ளே சென்ற எங்களை .. மன்னிக்கவும் ...இன்று முன் ரிசர்வ் இல்லாமல் வர முடியாது என்று கை விரித்தனர். சரி, அருகில் இருந்த கடையில் ஏதாவது குடிக்கலாம் என்று பார்த்தால் , அங்கே சோம  பானம் மற்றும் சூரா பானம் மட்டுமே இருந்தது.

சோம பானம் ..... சுறா பானம் ...2800 மீட்டர் உயரத்தில் 
சுற்றி சுற்றி பார்த்துவிட்டு கீழே இறங்க நினைக்கையில் மணி 11 ,  லிப்ட் வருவதற்காக காத்து கொண்டு இருந்த வரிசை நீளமாக இருந்ததால் அந்த படிக்கட்டுகளின் வழியே இறங்கி வந்து விட்டோம்.

கீழே இறங்கும் பக்கம் (இடது) தேய்ந்து உள்ளது. ஆனால் மேலே ஏறி போவதற்கான பக்கம் தேய வில்லை. 
இன்னொரு பேருந்தை பிடித்து ஹோட்டல் வந்து சேரும் போது மணி 12
அருகில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வந்து அறையை அடைந்தோம்.

வெளியே வருகையில்..
நாளை  நிறைய இடம் போக உள்ளது. ரெண்டு ராசாதிக்களும்  எங்கே எங்கே போகின்றோம் என்பதை எழுதி வைத்துள்ளார்கள் .

நல்ல வேளை, இன்று வந்து இறங்கியவுடன் சோம்பேறி தனம் பார்க்காமல் Eiffel  டவர் பார்த்து விட்டோம் .இல்லாவிடில் நாளை சனியும் அதுவுமாக அங்கே 4-5 மணி நேரம் ஒதுக்க வேண்டி இருந்து இருக்கும்.

தொடருவேன் ... தொடருங்கள் ..

WWW.VISUAWESOME.COM

5 கருத்துகள்:

  1. thodarkiren.. swiss mudinju france aa.
    adutha pathirkkaaka kathirukkiren. innaikku suthi paarthuviddu ezuthungal sir.

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் சரி... ஆனால் // என்னை போன்ற கல் நெஞ்சம் // இது தானே வேணாங்கிறது...

    பதிலளிநீக்கு
  3. அருமையாக செல்கிறது பயணத்தொடர்! இலங்கை போரில் பிரிந்த சகோதரிகள் மீண்டும் சந்தித்தது நெகிழ்ச்சியான ஒன்று!

    பதிலளிநீக்கு
  4. மனம் நெகிழ்ந்து விட்டது நண்பரே! இரு குடும்பங்களும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சந்தித்ததை நினைக்கும் போது. இப்படி எத்தனைக் குடும்பங்கள், ஏன் பெற்றோரும், சகோதர சகோதரிகளும் இன்னும் தாங்கள் எங்கு உள்ளோம் என்பது கூட ஒருவருக்கொருவர் தெரியாமல் இருக்கின்றனரோ? உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாமல்...மிகவும் வேதனையான ஒன்று யாருக்கும் இந் நிலை வரக் கூடாது..

    பயணத் தொடர் ஒரு நன்மையைச் செய்துள்ளது...தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,
    நல்லா தானே போய்க்கொண்டு இருக்கிறது,,,,,,, இடையில் ஏன் ,,,,,,,,,,,
    ஆனாலும் உண்மைதான் ஆசிரியரே, பிரிந்தவர் கூடினால், காதலில் மட்டும் அல்ல உறவிலும் தான், மனம் நெகிழ்ந்தோம்,
    மகிழ்ச்சி,
    நன்றி.

    பதிலளிநீக்கு