வியாழன், 27 நவம்பர், 2014

இவர் தாய் மாமா இல்ல... "தலாய் லாமா..".

நன்றி திருநாள்!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று இங்கே " நன்றி திருநாள்" கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அனைவருமாக சேர்ந்து ஒரு இல்லத்தில் அமர்ந்து கடந்த வருடத்திலேயும் சரி, தங்கள் வாழ்க்கையிலேயும் சரி, தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டி உண்டு மகிழ்வர்.


இந்த வருடம் நான் பாராட்டும் நன்றி...இவர்களுக்கு!

உண்ண உணவு,இருக்க இருப்பிடம், சேர்ந்து வாழ குடும்பம் தந்த அந்த இறைவனுக்கு ...

உயிர் அளித்து , தன் ஆசியினால் வாழ வைக்கும் என் அன்னைக்கு,

பொறுப்போடு என் குடும்பத்தை கட்டி காத்து கொண்டு வரும் என் மனைவிக்கு,

சிறுவயது முதல் என்னை தட்டி கொடுத்து பாராட்டி வரும் என் உடன் பிறந்த அக்கா - அண்ணன்மார்களுக்கும், அவர் தம் குடும்பத்திற்கும்.

என் வாழ்க்கைக்கு ஓர் புது அர்த்தம் கொடுத்த என் இரண்டு ராசாதிக்களுக்கு..

வேலை வாய்ப்பு அளித்து என்னை ஆதரித்து வரும் என் நிறுவனத்திற்கு,

சோர்ந்து இருக்கையில் என்னை சிரிக்க வைக்கும் நல்ல நண்பர்களுக்கு,

வலை பதிவில் என் பதிவை தொடர்ந்து படித்து ஆதரித்து வரும்

நெஞ்சங்களுக்கு..  என் முதற்கண் நன்றி.


இந்த நன்றி உணர்வை நான் பொதுவாக கூறினாலும், இந்த நல்ல  நாளில்  என் வாழ்வில் நான் உறவு தேடி அலைந்த போது  என்னிடம் அன்பு காட்டிய  என் தாய் மாமன் ராபர்ட் மற்றும் என் அத்தை அவர்களை பற்றி கூற வேண்டும்.

சிறு வயதில் தந்தையை இழந்து விடுதியில் படித்து வந்து கொண்டு இருந்த சொந்த கதை சோக கதையின்ஒரு பக்கம் தான் இது.

7ம் வகுப்பு என்று நினைக்கின்றேன் பள்ளி விடுதியில் படித்து கொண்டு இருக்கையில் நடந்த நிகழ்ச்சி. தீபாவளி விடுமுறைக்கு பள்ளி ஒருவாரம் போல் விடுமுறை அளிக்க, விடுதியில் இருந்த அனைத்து மாணவர்களும் அவர் தம் இல்லத்திற்கு சென்று விடுவார்கள்.  வெள்ளி அன்று பள்ளி முடிந்தவுடன், விடுதியின் வாசலில் அமர்ந்து கொண்டு இருந்த நான் என் தாயிடம் இருந்து வந்த கடிதத்தை படித்து கொண்டு இருந்தேன்.

"இந்த வருடம், தீபாவளி விடுமுறை நேரத்தில் நான் வெளியூர் செல்ல இருப்பதால், உன்னை விடுமுறைக்கு இல்லத்திற்கு அழைத்து வர இயலாது, நீ இந்த விடுமுறையை விடுதியிலேயே கழித்து விடு, நான் அரை இறுதி விடுமுறை அன்று உன்னை அழைத்து கொள்கிறேன்".

யாரிடமும் அந்த கடிதத்தை பற்றி பேசாமால் இன்னொருமுறை படித்து அழுது கொண்டு இருந்த வேளையில், மற்ற ஒவ்வொரு மாணவரின் தாய் தந்தையார் அங்கே வந்து அவர்களை அழைத்து செல்லும் காட்சி மனதில் பொறாமையையும், பரிதாபத்தையும், முகத்தில் கண்ணீரையும் வரவழைத்தது. எங்கே போய் என் கஷ்டத்தை சொல்வேன் என்று சந்தோசமாக இல்லத்திற்கு செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்து, "ஹாப்பி தீபாவளி, ஹாப்பி தீபாவளி" என்று சொல்லி வெளியில் சிரிப்பும் மனதில் அழுகையுமா இருந்தேன்.

6 மணி போல் மற்ற எல்லா மாணவர்களும் சென்ற பின், என் விடுதி காப்பாளர், விசு, மற்ற வருடங்கள் போல் இல்லை, இந்த வருடம் உன்னை தவிர மற்ற எல்லாரும் விடுமுறை சென்று விட்டார்கள், ஆதலால், விடுதியின் சமையல் காரருக்கும் விடுமுறை அளித்து விட்டோம், நீ இந்த ஒரு வாரம் முழுவதும் எங்கள் இல்லத்தில் வந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்று அன்போடு சொன்னதும், என் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் எதிரிலேயே அழுது விட்டேன். எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் கிளம்ப, என் அறைக்கு சென்று அடுத்த ஒரு வாரத்தை தனிமையில் எப்படி கழிப்பது என்று நினைத்து கொண்டு இருக்கையில்..எங்கள் விடுதியின் காவலாளி அறையின் கதவை தட்டினார்.

விசு, வார்டன் உன்னை உடனே அவர் இல்லத்திற்கு வர சொன்னார்.

7 மணி போல் தானே ஆகிறது, இரவு உணவிற்காக தான் இருக்கும் என்று  நான் கிளம்ப ...

"விசு, ஒரு வாரத்திற்கு உனக்கு வேண்டிய துணி மணிகளை எடுத்து கொண்டு வர சொன்னார் "
என்று அவர் சொல்ல...
ஒரு வாரத்திற்கா ? ஏன்

என்ற கேள்வியோடு அகப்பட்டவைகளை பையில் போட்டு கொண்டு அவர் இல்லத்தை நோக்கி எங்கே ... ஏன் போகிறோம் என்ற கேள்வி குறியோடு நடையை ஆரம்பித்தேன்.

அவர் இல்லத்தை சேர்ந்து அடைந்த நான் அங்கே வார்டன் அவர்கள் மற்றொருவருடன் பேசி கொண்டு இருந்ததை கண்டேன். வார்டன் அவர்கள் அந்த மற்றொருவரை என்னிடம் அறிமுக படுத்தி

விசு, இவர் யார் தெரிகின்றதா?

இல்லை சார்,

டேய், இதுதான் உன் தாய் மாமா , ராபர்ட். இவர் உனக்கு சொந்தம் என்று எனக்கு சொல்லவே இல்லை ?

சார், இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை, அதுமட்டும் இல்லாமல் எங்கள் அம்மா வீட்டில் 5 பெண்கள் தான், ஆண்களே கிடையாது"

டேய் , விசு, இவர் உன் அம்மாவின் ஒன்று விட்ட சகோதரன், உன்னை பார்க்க வந்துள்ளார்"

இதை கேட்டவுடன், மாமாவின் முகத்தை திரும்பி பார்த்தேன். அவரின் சாயல் என் தாயை போலவே இருந்தது. அவருக்கு ஒரு நமஸ்காரம் போட்டு விட்டு, இரவு உணவு என்ன தயார் ஆகின்றது என்று சமையல் அறையின் பக்கம் நோக்கம் விட்டேன்.

விசு, ஒரு வாரத்திற்கு உன் துணி மணியோடு வரசொன்னேன்னே, எடுத்து கொண்டு வந்தாயா?

ஆமா சார், எங்கே போகிறோம்.

போகிறோம் இல்ல விசு, நீ தான் போற. தீபாவளி விடுமுறைக்கு உன் மாமா உன்னை அழைத்து கொண்டு போக வந்துள்ளார். அவரோடு போய் நல்லா சந்தோசமாக இருந்து விட்டு வா.

(இந்த நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் கழித்து தான் பாரதிராஜா திரை உலகிற்கு வந்தார், இருந்தாலும், அவர் படத்தில் வரும் வெள்ளை உடை அணிந்து கனவு காணும் காட்சி அப்போது எனக்கு வந்தது).

மாமாவின்  கையை பிடித்து கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். போகும் வழியில்..

எப்படி மாமா நான் இங்கே இருப்பது உமக்கு தெரியும்?

உங்க அம்மா போன வாரம் தான் ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள், அதில் தான் நீ இங்கே தங்கி படிப்பதாக எழுதி இருந்தார்கள். அது மட்டும் அல்லாமல், இந்த தீபாவளி நேரத்தில் தான் வெளியூர் செல்வதாகவும் எழுதி இருந்தார்கள். கூட்டி கழித்து பார்த்தேன், அதுதான் உன்னை அழைத்து செல்வதற்காக நேராக வந்து விட்டேன்.

பேருந்து நிலையத்தை அடைந்த நான் அங்கே பேருந்திற்காக காத்து கொண்டு இருந்த என் மற்ற நண்பர்களை பார்த்து...

டேய்... நான் கூட என் மாமா வீட்டிற்க்கு செல்கின்றேன் என்று பறை சாற்றி கொண்டது இன்றும் பசுமரத்து ஆணி போல் நினைவில் உள்ளது.

பேருந்து வர இன்னும் சில நேரம் ஆகும் என்பதால், அருகில் இருந்த "ரத்னா கபே " யில் (யாராவது எந்த ஊர் என்று சொல்லுங்கள் பார்ப்போம்) அருமையான உணவை வாங்கி தந்து என் மாமா என் அண்ணன் அக்கா அவர்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.

பேருந்தை பிடித்து அவர் இல்லத்தை சென்று அடையும் போது மணி 9 க்கும் மேல் ஆகி விட்டது. அவர் இல்லத்தில் அவரின் பிள்ளைகள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். 5 மகன் ஒரு மகள். அவர்களை பார்த்ததும் ஆனந்தத்தில் பொங்கி எழுந்தேன். விடுமுறையை தனியாக எப்படி கழிப்பேன் என்று இருந்த எனக்கு , இத்தனை .. மாமன் மச்சான்களா ? யோசித்து கொண்டு இருக்கும் போது என் அத்தை எழுந்து வந்தார்கள். சாப்பாடு ஏதாவது செய்யட்டுமா என்று கேட்ட அவர்களிடம், மாமா, நாங்கள் சாப்பிட் டு விட்டோம், நீ போய் தூங்கு, காலையில் பார்த்து கொள்ளலாம் என்றார்.

புரண்டு புரண்டு புரண்டு.. எப்போது தூங்கினேன் என்று எனக்கு தெரியாது. காலையில் என் மாமாவின் மகன் ரமேஸ்  ( இந்த ரமேசும் நானும் தான் பின்னாட்களில் பாம்பே நகரில் போட்ட ஆட்டங்களை நீங்கள் படித்து இருப்பீர்கள்.. அப்படி தெரியாதவர்களுக்கு இதோ இங்கே ஒரு சாம்பிள்) என்னை எழுப்பினான்.

விசு.. என் பெயர் ரமேஸ்..அப்பா சொன்னார், நீ வருகின்றாய் என்று. அந்த சகோதர்கள் அனைவரும் (எனக்கு தகப்பன் இல்லை என்பதாலோ என்னவோ  என் மேல் அவ்வளவு அன்பு காட்டினார்கள்). எழுந்து தயாராகி அவர்களோடு ஆட்டம் பாட்டம் ஆரம்பித்தேன்.

மதிய உணவிற்கு என் அத்தை தயார் செய்து கொண்டு இருந்த வேளையில் அவரகளிடம் சென்றேன். அவர்கள் முகத்தில் ஒரு இறைவனின்  சிரிப்பு - களை.

அத்தை.. அன்பின் இலக்கணம் 

என்ன, விசு.. என் முகத்தையே பார்த்து கொண்டு இருகின்றாய்?

ஒன்னும் இல்ல அத்தை.

டேய், நானும் ஒரு ஆசிரியை தான். உன் முகத்தை பார்த்தவுடன் தெரிகின்றது... எதோ கேட்க்க வேண்டும் என்று நினைக்கின்றாய்.  என்ன கேள் ?

இல்லை அத்தை.. இது தான் நான் உங்களை முதல் முதலாக சந்தித்த நாள், ஆனால், உங்களை பார்த்தால் எதோ எனக்கு ரொம்ப நாளா பழக்கம் போல் ஓர் உணர்வு..

அதை கேட்டு அவர்கள்..

அதுதாண்டா .. சொந்தம். விட்ட குறை தொட்ட குறை..சரி, அந்த அரிசி டப்பாவில் இருந்து 4 கப் எடுத்து அந்த முறத்தில் போடு.

சரி அத்தை.

5தாவதா ஒரு கப் எடுத்து அதை அந்த பையில் போடு..

ஏன் அத்தை..?

அதுவா, அப்புறம் சொல்றேன்..

சரி... அருகே இருந்த ஏரியில்  நானும் மற்றவர்களும் பிடித்த கெழுத்தி மற்றும் குறவை மீனில் ஒரு குழம்புவைத்து அவர்கள் தர.. என்  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் கொடுத்து வைத்தவன் தான். விடுதியில் தனியே இருந்து இருக்க வேண்டிய எனக்கு .... மீன் குழம்பா? அதுவும் நான் பிடித்த மீனா? அருமை அருமை.

அத்தை மாமா மற்றும் பிள்ளைகளின் அன்பில் மூழ்கி விட்டேன். இந்த குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம், ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்களிடம் தான் என்ன அன்பு?

இந்த மாமன் மகன்களை 7 வது படிக்கும் போது தான் முதன் முதலாக சந்தித்தேன். அதன் பின்... நாங்கள் அனைவரும் மிகவும் நெருக்கமாகி
இந்த உறவு கடல் தாண்டி வருடங்கள் பல தாண்டி வளர்ந்து கொழுந்து விட்டு எரிகின்றது.

6 நாள் முடிந்தது. மாமாவின் வீட்டிற்க்கு எதிரிலேயே, பேருந்து நிற்குமிடம் ...மனதில் சோகத்தை அடக்கி கொண்டு பையோடு, மாமா குடும்பம் அனைவரோடு பேருந்திர்க்காக காத்து கொண்டு இருந்த வேளை.. அங்கே ஒரு கால் இழந்த ஒரு மனிதர் எங்களிடம் வந்து உதவி கேட்டார்.

அத்தை என்னை நோக்கி, விசு.. அந்த 5வது கப் அரிசியை ஒரு தனி பையில் போட்டாய் அல்லவா? ஓடி போய் அந்த பையை எடுத்து வா என்றார்கள்.

இன்னும் ஒருமுறை இவர்கள் இல்லத்திற்கு செல்கின்றோமே என்று குதித்து ஓடி போய் எடுத்து வர, அந்த அரிசி நிறைந்த பையை அத்தை அந்த மனிதரிடம் கொடுத்தார்.

அவரும் , சிறித்து கொண்டே பெற்று கொண்டு விடை பெற..

என்ன அத்தை.. அந்த அரிசியை ..?

விசு.. நாம் ஒவ்வொரு வேளை சமைக்கும் போதும் ஒரு பிடி அரிசியை தனியே எடுத்து வைத்து கஷ்டத்தில் இருக்கும் யாருக்காவது கொடுக்க வேண்டும், அதில் உள்ள நிம்மதியே தனி...

என்று சொல்ல...

மாமாவும் சரி.. பிள்ளைகளும் சரி..அது சரியே என்று தலையை ஆட்டினர்.

பஸ் வந்து விட்டது என்று கடைசி பையன் ரூபன் சொல்ல.. என் கண்ணீரை மறைத்து கொண்டு பேருந்தில் ஏறினேன்... என்ன ஒரு குடும்பம். என்ன ஒரு அன்பு..

வருடங்கள் பல ஆகியும், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. மற்றும் இதை மறந்தால் தான் நானும் மனிதனா?

 பின் குறிப்பு :

அத்தை இறைவனடி சேர்ந்து பல வருடங்கள் ஆகி விட்டது. மாமா சென்னையில் வசித்து வருகின்றார். சிறிய கிராமத்தில் ஒரு குருவி கூடு போல் இருந்த என் மாமாவின் பிள்ளைகள் இன்று பல சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக சந்தோசமாக இருக்கும் புகைப்படங்களை நான் பார்க்கும் போது மனதில் வரும் ஒரே எண்ணம்...

"விசு அந்த 5வது கப் அரிசியை அந்த பையில் போடு.."

நன்றி மாமா... அத்தை.. உங்கள் அன்பிற்கு..

8 கருத்துகள்:

  1. உங்கள் நன்றியறிவித்தல் நன்று. உங்கள் அனுபவமும் அதனை நினைவுகூர்ந்த விதமும் தனித்தன்மை வாய்ந்ததாயிருந்தது. மிக்க நன்றி, விசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரங்கா.. நன்றி என்பது ஒரு உணர்ச்சி அல்லவா. தானாக மனதில் வருவதை எழுதும் போது .. வார்த்தைகள் அலையென திரண்டு வருகின்றது. இந்த வார இறுதியில் தம்மை சந்திக்கும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டுமா?

      நீக்கு
  2. பல நல்ல பழக்கங்களின் தேவையை உணர்த்தியதோடு நல்ல உள்ளங்களையும் அறிமுகப்படுத்தியது பதிவு! நெகிழ்கிறேன்! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனையோ வருடங்கள் கழித்தும் இந்நாட்க்கள் மனதில் நின்று விதத்தின் காரணமே அவர்களின் அன்பு தான்.
      வருகைக்கு நன்றி தளிர்

      நீக்கு
  3. இது போன்ற சில சென்டிமென்டான நினைவுகளை மறக்கவே முடியாது. பல சமயங்களில் இந்த நினைவுகள் நம் வாழ்கை சாலையின் தடுப்புகளை எளிதாக கடக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மாதிரியான நிகழ்வுகளை மறக்கவும் முடியாது. மறக்கவும் கூடாது. மறைக்கவும் கூடாது. If you love someone, let them know it. லவ் ஆகா இருந்தாலும் சரி, மரியாதையாக இருந்தாலும் சரி, நன்றியாக இருந்தாலும் சரி, மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும். வருகைக்கு நன்றி,

      நீக்கு
  4. தாங்க்ஸ் கிவ்விங்க் டேக்கு அருமையான நன்றி நவின்ற பதிவு! அருமை நண்பரே! அருமை! எவ்வளவு நல்ல இதயம் படைத்தவர்கள்! இந்த அன்புதான் நம் எல்லோரையுமே வாழ வைக்கும்!

    ரத்னா கபே - திருச்சி?!

    இந்த நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் கழித்து தான் பாரதிராஜா திரை உலகிற்கு வந்தார், இருந்தாலும், அவர் படத்தில் வரும் வெள்ளை உடை அணிந்து கனவு காணும் காட்சி அப்போது எனக்கு வந்தது // நல்ல காலம் பேய் அறைந்தது போல் என்று சொல்லி பின்னால் சொல்லுகின்றேன் என்று இல்லை...ஹஹஹாஹஹ்...

    ஒரு பிடி அரிசி எடுத்து வைத்து பகிர்தல்....இதை ஆரம்பித்த ஒரு நல்லவரைத் தான் ரோமில் புனிதர் என்று அங்கீகரித்த பதிவு எங்கள் வலையில்....சாவரஅச்சன்....எனும் புனிதரைப் பற்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரத்னா கபே - திருச்சி இல்லை. சற்று அருகில் தான். தம் பிடி அரிசி பதிவினை கண்டேன். தொடர்ந்து எழுதுங்கள்.

      நீக்கு