திங்கள், 3 நவம்பர், 2014

கண்ணாலே பேசி பேசி கொல்லாதே...

பாம்பே தினங்கள். மற்றொரு சனி கிழமை.எங்களோடு தங்கி இருந்த தூத்துக்குடியில் இருந்து வந்த நண்பன் ரவி, சல்மான்கானின்  "மைனே பியார் கியா" படம் வந்துள்ளது, போலாமா என்றான். என்னை பொறுத்தவரை அன்றும் சரி, இன்றும் சரி, ஒரு ஹிந்தி படம் பார்த்தால் நூறு ஹிந்தி படம் பார்த்ததற்கு சமம். பாட்டுக்களின் நிலைமையும் அதுவே.




நான் வரவில்லை ரவி, நான் ஏற்கனவே இந்த படத்தை கண்டிப்பாக வேறொரு படம் மூலமாக பர்ர்த்து இருப்பேன், நீ கிளம்பு என்றேன். பாட்டுகள் எல்லாம் பிரமாதம் என்றான் நண்பன். அட பாவி, இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் காப்பி நண்பா. இவைகள் அனைத்துமே ஆங்கில பாடல்களின் நகல்கள் என்று சொல்ல நண்பன் அதிர்ந்தான். சரி வைச்சிக்க நீ என்று அவனுக்கு "I Just Called" ....." மற்றும் " The Final Countdown" போட்டு காட்டினேன். அவன் செவியை அவனுக்கே  நம்ப முடியவில்லை.

சரி, நான் போகின்றேன் என்று கிளம்பி சென்றான். அறையில் இருந்த மற்ற நாங்கள், எங்கள் வார இறுதி வேலையை (அதுதான்   துணி துவைத்தல், மளிகை சாமான் வாங்குதல்,வீட்டினை கூட்டி கழித்தல், மற்றும் ஊருக்கு கடிதம் எழுதல்) முடிக்கையில், நண்பன் ரவி வந்து சேர்ந்தான்.

எப்படி இருந்தது ரவி.?

விசு, சும்மா எல்லா ஹிந்தி படத்தையும் நீ ஒரே மாதிரி பேசிட்ட. சில ஹிந்தி படங்கள் நல்லா இருக்குப்பா?

சில ஹிந்தி படம் நல்லா தான் இருக்கு ரவி, ஆனால் அந்த படம் எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னால் வந்த படமா இருக்கும். இந்த காலத்தில் ஹிந்தி படமும் சரி, நேரமும் சரி ஒரு கிலோமீட்டர் ஆனால் விஷயம் ஒன்னும் இல்லையே என்று நொந்தேன்.

நீ சொல்வதும் சரிதான் விசு, இந்த படம் முழு நீள நகைசுவை, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. கூடவே அருமையான பாட்டுக்கள். நீ வந்து இருந்தாகூட நல்ல என்சாய் பண்ணி இருப்பே.

என்னாது? இந்த படம் நகைச்சுவை அதுமட்டும் இல்லாமல் நல்ல பாட்டா? நீ சல்மான் கான் படம் போனீயா? இல்ல வேற படமா?

ஒ, விசு .. அந்த சல்மான் கான் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை, பக்கத்தில் இன்னொரு தியேட்டரில் ஒரு பழைய ஹிந்தி படம் போட்டு இருந்தான். அதை பார்த்தேன். அந்த படத்தை பத்தி தான் சொன்னேன்.

படம் பேரு என்ன? யாரு நடிகர்கள்.

படம் பேரு "படோசன்" சுனில் தத், கிஷோர் குமார் மற்றும் மேஹ்மூப் நடித்துள்ளார்கள்.

கதை என்ன?

அடுத்த வீட்டு பெண்ணை சுனில் காதலிப்பார்,. அவளுக்கு இசை ரொம்ப பிடிக்கும். இவருக்கோ சுத்தி போட்டாலும் வராது. இவர் நண்பன் கிஷோர் குமார் மறைந்த நின்று பாட இவர் வாயசைத்து அவளை ஏமாற்றி காதலிப்பார். ரொம்ப சூப்பர் காமெடி விசு.

டேய், இது நம்ம ஊர்  "அடுத்த வீட்டு பெண்" கதை மாதிரி இருக்கே. அது நல்ல படம் ஆச்சே, அந்த படமா? நான் மாலை காட்சி போறன்.

விசு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ஒரு ரெண்டு மணி நேரம் கொடு (இவர் இன்னும் வார இறுதி வேலைகளை முடிக்கவில்லையே) ரெண்டாம் ஆட்டத்திற்கு போகலாம்.

மற்ற நண்பர்களும் சேர்ந்து வர அனைவரும் "படோசன்" படத்திற்கு சென்றோம். அடுத்த வீட்டு பெண்ண" படத்தின் காப்பி தான். இருந்தாலும் முன்னணி நடிகர்கள் மூவரை வைத்து எடுத்து உள்ளார்கள். படம் மிகவும் அருமையாக வந்தது. பொதுவாக நகல் அசலை விட மோசமாக தான் இருக்கும்.ஆனால் அதற்க்கு எதிர்மாறாக ந்த படம் அசலை விட நன்றாக இருந்தது என்று சொல்லலாம்.

வீட்டிற்க்கு வரும் வழியிலும் சரி வந்தவுடனும் சரி இந்த படத்தை பற்றி பேசி கொண்டு இருந்தோம். இந்த ஹிந்தி  படத்தில் வரும் " மேரே சாமுனே வாலி கிடிக்கி" என்ற பாடலை கிஷோர் குமார் மிகவும் அருமையாக பாடி இருப்பார்.
இதே பாடல் தமிழ் படத்தில் இதை விட அருமையாக இருக்கும்.
"கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" என்ற இந்த பாடலை  PB ஸ்ரீநிவாஸ் அவர்கள் பாடி இருப்பார்.  அருமையான இசை, எந்த நேரத்திலேயும் ஒருவனை காதலில் விழ செய்யும், அவ்வாறான பாடல்.

இந்த காலத்தில் தான் எந்த பாடலை வேண்டுமானாலும் Youtubeல் கேட்டு கொள்ளலாமே. எனக்கு பிடித்த இந்த பாடலை வாரம் ஒருமுறையாவது கேட்பேன்.

சென்ற வாரம் இந்த பாடல் பெயரை போட்டு தேடியவுடன், கண்ணுக்கு எதிரில் ஒரு வீடியோ வந்தது. இரண்டு வாலிபர்கள் பேன்ட் - ஷர்ட் - டை அணிந்து கொண்டு இருக்கும் காட்சி. இது என்ன? இந்த பாடலுக்கு இவர்கள்  என்ற ஆர்வகோளாரில் தட்டினேன்.

என்னே ஒரு கண்ணுக்கு விருந்து. இந்த இருவரும்  இந்த பாடலை போட்டு விட்டு ஒரு அருமையான நடனம் ஆடுகின்றார்கள். மிகவும் ரசிக்க கூடிய நடன அமைப்பு. ஒரே ஒரு குறை, முழு பாடலுக்கும் ஆடாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டனர். நீங்களும் பாருங்களேன்,



இந்த மாதிரி கலைஞ்சர்களை அடுத்தவருக்கு அறிமுகம் படுத்துவது நமது கடமை அல்லவா. அதினால் தான், இதை படைத்தவரின் அனுமதியோடு இந்த பதிவை எழுதினேன்.

www,visuawesome.com

1 கருத்து:

  1. நண்பரே! அருமையான பாடல்! மிகவும் அருமையான நடன அமைப்பு! புதுமையாக....பிரபுதேவா ஸ்டைல் இருந்தாலும்! தெரிந்தாலும்! மிக அழகாக ஆடும் இந்தக் கலைஞர்களைக் கண்டிப்பாக ஊக்குவிக்க வேண்டும்! மிக்க நன்றி பகிர்ந்ததற்கு!

    பதிவும் வழக்கம் போல் விறு விறுப்பான நடையுடன்!....

    பதிலளிநீக்கு