சனி, 13 செப்டம்பர், 2014

கடலை நோக்கி போனாரே..

அலறி அடித்தது அலாரம். என்னடா சனியும் அதுவுமா அலராம என்று நினைத்து கொண்டே இருக்கையில் மனைவி அதை நிறுத்தி விட்டு,...
ஏங்க... சீக்கிரம் எழுங்க... லேட்டா போனா நல்லது கிடைக்காது.
என்ன சொல்லுற...




காலையில் மீன் மார்கெட்க்கு என்கூட வரன்னு சொன்னீங்க இல்ல, வாங்க கிளம்பலாம்.

நீ தான் போயிட்டு வந்துறேன்.

ப்ளீஸ் வாங்க, சீக்கிரம் போயிட்டு வரலாம், நான் காப்பி போடுறன்.

காப்பி எல்லாம் வேண்டாம், நான் நேரா வந்து காரில் தூங்க போறேன்.

சரி வாங்க.. போகலாம்...

மனைவி காரை ஓட்ட, சீட்டை சாய்த்து விட்டு ஒரு நல்ல தூக்கம், வீட்டில் இருந்து மீன் மார்க்கடிற்கு ஒரு 40 கிலோ மீட்டர் இருக்கும். சனி கிழமை அதிகாலை என்பதால் போக்கு வரத்து அதிகம் இருக்காது. ஒரு 15 நிமிடத்தில் போய் சேர்ந்தோம்.

அங்கே வண்டியை நிறுத்தி விட்டு மனைவி எழுப்பினார்கள். இருவரும் எழுந்து மார்க்கட்டை நோக்கி நடந்தோம். அந்த மார்க்கடின் வாசலில் அதிக கூட்டம். கூட்டமாக இருந்தாலும், அழகாக இரண்டு வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள்.

இடது வலது என்று இரு வரிசை. 

வரிசையை பார்த்ததும் நான் கடைசியாக நின்ற வரிசை நினைவிற்கு வந்தது. வேலூர்  பாலாஜி தியேட்டரில் "முந்தானை முடிச்சு' படத்திற்காக மணிகணக்கில் நின்று டிக்கட் வாங்கியது.

சரி விஷயத்திற்கு வருவோம்.

நான் இடது பக்கம் வரிசையில் நிக்கிறேன், நீ வலது பக்கம் நில், யார் வரிசை சீக்கிரமா போகுதே அதில் வாங்கி கொள்ளலாம்.

நல்ல யோசனை தான், இருந்தாலும், அந்த வரிசை,உயிரோடு இருக்கும்
இராலுக்கும் அடுத்த வரிசை நண்டுக்கும், நமக்கு இந்த வாரம் அந்த ரெண்டுமே வேண்டாம்.

ஏம்மா, இறால் நண்டு ரெண்டும் நல்லா இருக்குமே..

ஏங்க,நேத்து தான் பௌர்ணமி, இந்த வாரத்தில் இந்த ரெண்டும் வாங்க கூடாது.  ஏன் என்று கேட்காதீர்கள், அதை விளக்கி சொல்ல முடியாது. எங்க ஊரில் அப்படித்தான் சொல்வார்கள்.

யாழ்பாணத்து மனைவி  ஆயிற்றே, மீன் விஷயத்தில் மறு பேச்சு   வேண்டாம் என்று பின்னாலே நடந்தேன்.

அங்கே இருந்த மக்களில் பெரும்பாலோர் சீன முக வடிவு கொண்டவர்கள்.
இவர்களும் நம்மை போல் மீன் விரும்பியோ என்று வியந்து கொண்டே அவர்களை கடந்து நடந்தேன். மனைவி வாராவாரம் அங்கு போவதால், அங்கே இருந்த கடைகாரகளிடம், நலம் விசாரித்து கொண்டே மீன் வாங்க ஆரம்பித்தார்கள்.

இங்கே நம்ம ஊர் மீன்கள் கிடைக்காவிட்டாலும், சில நல்ல ருசியான வகை  மீன்கள் உண்டு. இன்றைக்கு எங்களுக்கு கிடைத்தது Sea Trout, San Dabs, Red Snapper மற்றும் சில.


Sand Dabs


அங்கேயே மெக்ஸ்சிக்க நண்பர்களை வேலைக்கு அமர்த்தி விற்ற மீன்களை சுத்தம் செய்து கொடுத்து கொண்டு இருந்தனர்.

ஏம்மா, இந்த மீன் எல்லாம் எல்லா கடையிலும் கிடைக்குதே, அதுக்கு ஏன் காலையில் கிளம்பி இங்கே வரவேண்டும்?

கொஞ்சம் மார்க்கெட்டிற்கு பின்னால பாருங்க.. பசிபிக் பெருங்கடல், அங்கே வெள்ளி கிழமை இரவு பிடித்து சனி காலையில் ப்ரெஷா வரும் மீன் இது. வேறு எங்கேயும் கிடைக்காது. வளரும் போது எங்க ஊரில் இந்த மாதிரி சாப்பிட்டு பழகிட்டேன், அதனால் இந்த வெளி கடைக்கு வர மீன் எல்லாம் எனக்கு பிடிக்காது.

எனக்கு கூட தான், கடலில் இருந்து நேரா தட்டிற்கு வந்தால் தான் பிடிக்கும்.

என்று சொல்லி மார்க்கெட்டின் பின் புறம் சென்றேன்.


காலை வேளையில், பசிபிக் பெருங்கடல், தான் உண்டு தன்  வேலையுண்டு என்று அலைகலை அனுப்பியவண்ணம் மணலோடு  உறவாடி கொண்டு இருந்தது.

அங்கே நிறைய கடல் பறவைகள் இருந்தது. எல்லாம் மீன் உண்ணும் பறவைகள். இங்கே சுத்தம் செய்து கழிக்க பட்டதை இவைகளுக்கு கொடுக்காலாமே என்று உபதேசம் கூறிய என்னை மேலே இருந்து கீழே வரை நோட்டமிட்டார், அங்கே பணி புரியும் ஒருவர்.

தெரியாமல் கூட இவைகளுக்கு எதையும் கொடுத்து விடாதீர்கள், உங்களுக்கு 250 டாலர் அபராதம் கிடைக்கும்,

அட பாவிங்களா, பறவைக்கு உணவளித்தால் 250 அபராதமா, ஏன்?

தானாக வேட்டையாடி மீன் உண்ணும் இந்த பறவைகளை நாம் உணவு கொடுத்து பழகிவிட்டால், அவைகள், வேட்டைக்கு செல்வதை விட்டு விட்டு இங்கே அமர்ந்து விடும், நாளடைவில் இப்பறவைகளின் உண்ணும் பழக்கம் நம்மை சார்ந்து விடும், அதனால் அரசாங்கம் இந்த தடை விதித்துள்ளது.

அடே டே, நல்ல விதிமுறைகள், அதையும் கடை பிடிக்கின்றார்கள்.
என்று கூறிவிட்டு, மீண்டும் மார்க்கெட்டில் நுழைந்தேன்..நம்ம ஊருக்கும் இங்கேயும் மீன் மார்க்கெட்டில் உள்ள பெரிய வித்தியாசம், சுற்று புற சுத்தம். இங்கே சுத்த விரும்பிகள். மிகவும் நன்றாக சுத்தத்தை கடை பிடிப்பார்கள்.

மற்றும் சில கடைகளுக்குசெல்ல ஆரம்பித்தேன். ஒரு கடையில் "ஒன்று 5 டாலர்" என்று முள்ளம்பன்றி குட்டிகள் போல் எதோ இருந்தது. அந்த கடைகாரர் அதை பிரித்து வாங்க வருபவர்களிடம், "டேஸ்ட் வேண்டுமா" என்று கேட்டு-கொடுத்து-விற்று கொண்டு இருந்தார், என்னையும் வேண்டுமா என்றார், நான் வேண்டாம் என்று கூறி விட்டு அடுத்த கடைக்கு சென்றேன்,

(என்னவென்றே தெரியவில்லை.. முள்ளம்பன்றி குட்டிகள் போல் இருந்தது)

அங்கே.. "ஆக்டோபஸ்" என்று எழுத பட்டு இருந்தது. டிமாண்ட் நிறைய போல், தீர்ந்து விட்டு இருந்தது. அடுத்த கடையில் கடல் சிப்பிகள், நிறைய பேர் வாங்கி கொண்டு இருந்தார்கள்.

இதை தவிர மற்ற மீன்கள் வேறு இருந்தது.
Sea Trout- Red Snapper

இந்த மார்க்கெட் 1891ல் ஆரம்பிக்க பட்டதாம். நிறைய கடைகளின் உரிமையாளர்கள் மூன்றாம் நான்காம் பரம் பறையை சேர்ந்தவர்கள். அவர்கள் சொல்லும் விலையை கொடுத்து அனைவரும் வாங்கி கொண்டு போனார்கள். பேரம் பேசும் வழக்கம் இல்லை.

கடைசி கடையில், "நெத்திலி இல்லையா" என்று கேட்ட என் மனைவிக்கு அங்கே இருந்த வாலிபன், இது சீசன் இல்லை இன்னும் ரெண்டு மாதம் ஆகும் என்றான்.உன் அம்மா எங்கே என்று மனைவி கேட்டதற்கு, பக்கத்து  கடைக்கு  சென்று இருகின்றார்கள், இப்போது வந்து விடுவார்கள் என்றான்.

நான் என் மனைவியிடம்..

என்ன வேண்டுமோ, இவனிடமே கேட்டு வாங்கி கொள், இங்கு தான் பேரம் பேச முடியாதே...

கொஞ்சம் அமைதியாக இருங்க..

என்று மனைவி சொல்லும் போதே அந்த மீன் கடை அம்மா வந்தார்கள். இருவரும் நலம் விசாரித்த பின் 5 பவுண்ட் மீன் என்று மனைவி சொல்ல அவர்கள் எடை போட்டு அந்த சுத்தம் செய்பவர்களிடம் கொடுத்தார்கள். இதை அவனிடமே வாங்கி இருக்கலாமே, அம்மா வரும் வரை ஏன் காத்து கொண்டு இருந்தாய்  என்று மனைவியிடம்   கேட்க்க, "இக்கட சூடு" என்று பதில் வந்தது.

திரும்பி பார்க்கையில்...

எடை போட்டு முடித்தவுடன்... அந்த அம்மா ஒரு நல்ல சைசில் இருந்த மீனை எடுத்து அதில் போட்டு... உனக்காக... என்று சிரித்தார்கள்.

என் மனைவி என்னை பார்த்து.. என்னதான் 5 பவுண்ட் காசு கொடுத்து வாங்கினாலும், அந்த "கொசுறு" ஒன்னு வரும் போது இருக்க சந்தோசம் இருக்கே... அதுக்கு தான் அம்மாவிற்காக வெயிட் பண்ணேன் என்றாள்.

இதுவும் யாழ்ப்பாண பழக்கமோ என்றேன், என் தாய்நாட்டை விட்டு கொடுக்காமல்....


வீட்டிற்கு வந்ததும்... நீங்களே பாருங்களேன்...

www.visuawesome.com

6 கருத்துகள்:

  1. நல்ல அனுபவம் தான் காலையிலேயே, வேட்டையாடும் பழக்கம் புதுசு, ஆனா இங்க ஜூல அடைச்சுவச்சு நம்ம புலி சிங்கங்களோட வேட்டையாடும் பழக்கத்தையே கொண்ணுட்டாங்க நம்ம அதிகாரிகள், இது தான் அங்கயும் இங்கயும் உள்ள வித்தியாசம் போல... :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம ஊரிலேயும் இந்த மாதிரி சட்டம் எல்லாம் கண்டிப்பா இருக்கோம். ஆனால் அதற்க்கு என்று ஒரு துறை வைத்து, அலுவலகம் கொடுத்து, தன் தன் மாமன் மச்சான்களை வேலைக்கு அமர்த்தி ஒரு கூட்டம் பிழைத்து கொண்டு இருக்கும். நெஞ்சு பொறுக்குதில்லையே...வருகைக்கு நன்றி.

      நீக்கு
    2. Nice Visu. I used to do the same thing in Auckland on Sunday mornings. Get up early and go the Sunday market to buy fresh........................... vegetables and fruit :-)

      நீக்கு
  2. //தானாக வேட்டையாடி மீன் உண்ணும் இந்த பறவைகளை நாம் உணவு கொடுத்து பழகிவிட்டால், அவைகள், வேட்டைக்கு செல்வதை விட்டு விட்டு இங்கே அமர்ந்து விடும், நாளடைவில் இப்பறவைகளின் உண்ணும் பழக்கம் நம்மை சார்ந்து விடும், அதனால் அரசாங்கம் இந்த தடை விதித்துள்ளது.///
    நம் நாட்டையும் நினைத்துப் பார்த்தேன்
    பெருமூச்சுதான் வருகிறது நண்பரே

    பதிலளிநீக்கு

  3. யாழ்பாணத்து மனைவி ஆயிற்றே
    யாழ்ப்பாணப் பழக்கமான
    மீன்கறி ஆக்கினாரோ
    சுவையாக இருக்குமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு மீன்கறி இல்லை ஐய்யா.. சோறும் சொதியும் தான்....

      நீக்கு