திங்கள், 7 ஜூலை, 2014

இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி..

மனதிற்குள் ஒரு பயம் கலந்த சந்தோசம். சந்தோசம் ஏன் என்று புரிகிறது. ஆனால் பயம் ஏன் என்று தான் தெரியவில்லை. 25 வருடத்திற்கு பிறகு நான் படித்த பள்ளிகூடத்திற்கு செல்கிறேன், இருந்தாலும் ஏதோ பள்ளி சீருடை அணிந்து கொண்டு பரீட்சைக்கு போவது போல ஒரு பயம். இந்த நிகழ்ச்சிக்கு

சில நாட்கள் முன்பு..

ஹலோ...சிர்காழி LMC  பள்ளிகூடமா?

ஆமா சார்.. நீங்க யார்?
என் பெயர் விசு, நான் இந்த பள்ளியில் பல வருடங்களுக்கு முன்னால் படித்தவன்.

ரொம்ப சந்தோசம் சார், உங்களுக்கு என்ன வேணும்?

ஒன்னும் இல்ல சார், நான் இப்ப வெளி நாட்டில் இருக்கேன், இன்னும் ஒரு 3 மாதத்தில் இந்தியா வர ஒரு திட்டம். என் பிள்ளைகளை அழைத்து கொண்டு நான் படித்த பள்ளிகூடத்தையும், தங்கிய விடுதியையும் காட்டவேண்டும் என்று ஒரு விருப்பம், அதை பத்தி தான் கொஞ்சம் பேச வேண்டும்.

ரொம்ப சந்தோசம் சார், எப்ப வரீங்கன்னு சொல்லுங்க, நாங்க உங்களுக்கு வேண்டியத தயார் செய்யுறோம்.

சார், அங்கே நான் படிக்கும் பொது ஐடா டீச்சர் - ரபேல் வாத்தியார்னு ஒரு தம்பதிகள் இருந்தார்கள், அவங்க இருக்காங்களா?

சார், அவங்க ரெண்டு பெரும் ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் பள்ளிகூடத்து பக்கத்தில் தான் அவர்கள் வீடு  உள்ளது. நீங்க வந்தா பார்க்கலாம்.

ரொம்ப சந்தோசம் சார், 3 மாதத்தில் சந்திப்போம்.

இந்த தொலைபேசி முடிந்து அடுத்த சில நாட்களில் நான் இங்கே வரும் தேதி மற்றும் நிகழ்சிகள் பற்றி சில பேசி முடி செய்தோம். இந்த நாள் தான் அந்த நாள்.

அருகே இருந்த ஒரு ஹோடேலில் இருந்து நான் என் வீட்டு அம்மணி, மற்றும் இரண்டு கண்மணிகளும் புறப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது மனதில் பல மலரும் நினைவுகள்.
என் 9வது வகுப்பு ஆசிரியர் இளங்கோவன் ..தம்பி விசு...நீ நல்லா படிக்கிறவன். சின்ன வயதிலே தகப்பனை இழந்து விட்டாய். உனக்கு ஒரு சின்ன அறிவுரை. நிறைய காசு செலவு ஆகும் மருத்துவம் பொறியியல் எல்லாம் படிக்க  நீ கொடுத்து வைக்க வில்லை. நல்ல  படிப்பாகவும் இருக்கனும், அதே நேரத்தில் செலவும் இருக்க கூடாது. அதுக்கு ஒரே வழி, நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்து தணிக்கையாளன் ஆகி விடு. என்ன ஒரு அருமையான அறிவுரை. "வைச்சிக்க நீ" ன்னு மனதில ஆழமா ஒரு இடத்தில அந்த அறிவுரைய போட்டு வைத்துக்கொண்டேன்.கரும்பு தின்ன கூலியா? என்று அன்று நினைத்தேன்.

வாகனத்தில் செல்லும் போது வழியில் காக்கி உடை அணிந்து கொண்டு NCC  மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தனர். அடடே, நாம் NCCல் இருக்கும் போது மாலையில் தானே பயிற்சி செய்வோம், ஏதாவது ஒரு விசேஷ நாட்களில் தானே காலையில் பயிற்சி நடக்கும் என்று நினைத்து என் NCC நாட்களில் சில வினாடிகள் என்னை துலைத்தேன்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து நானும் என் குடும்பத்தினரும் தலைமை ஆசிரியரின் அறையில். அறையில் என்று சொன்னதும் தான் நினைவிற்கு வந்தது, என் தலைமை ஆசிரியர் அற்புதராஜ். பெயருக்கு ஏற்றபடி வாழ்ந்தவர். கண்டிப்பானா அன்பை காட்டுவார். நான் செய்த ஏதோ ஒரு பிழைக்காக அவர் விட்ட "அறை" நினைவிற்கு வந்து விட்டது.  ஒரு நடுக்கத்தோடு அமர்ந்தேன்.

எங்கள் பள்ளியில் தினமும் ஒரு 9 மணிக்கு காலை வழிபாடு நடக்கும். அங்கே மாணவர்கள் அனைவரும் அணிவக்குது நிற்பார்கள். மேடையில் சில மாணவ மாணவியர் சில பாட்டுகள் பாடிய பின் தலைமை ஆசிரியரோ அல்ல வேறு ஒரு ஆசிரியரோ ஒரு சிறிய "பேச்சு-அன்றைய தின அறிவுரை" வழங்கி, பின் அனைவரையும் அவர்தம் வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்.


8:55 போல் ஆகியது. என் எதிரில் அமர்ந்து இருந்த தலைமை ஆசிரியர் எழுந்து, விசு, இன்று காலை வழிப்பாட்டில் நீங்கள் தான் பேச போகின்றீர்கள். எங்கள் மாணவர்கள் அனைவரும் பழைய மாணவனாகிய தங்கள் பேச்சுக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றார்கள் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். என்ன பேச போகிறோம் என்று யோசிப்பதற்குள் அறையின் வெளியே இருந்து.... ATTENTION .. என்று ஒரு சப்தம் கேட்க்க எட்டி பார்த்த நான் வியர்த்தே போய்விட்டேன்.

அங்கே அணி வகுத்து நின்ற NCC மாணவர்கள் எனக்கு "Walk of Honor" அளித்தனர்.  By the right, quick march.. என்று கூறி ஒரு Salute  அடித்து விட்டு  Left, right,  left  என்று இருபுறம் நடந்தனர். நானும் NCC (தேசிய மாணவர் படையை) சேர்ந்தவன் தானே, பழைய பழக்க தோஷத்தில் நெஞ்சை நிமிர்த்து கொண்டு அந்த பெருமையை ஒரு பதில் Salute அடித்து ஏற்று கொண்டேன். , நடுவில் என் மனைவி பிள்ளைகளோடு நடந்த எனக்கு என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம் கலந்த சின்ன பெருமையான புன்னகை. என் காலத்தில் எத்தனை பேருக்கு இந்த மரியாதையை நான் அளித்தேன் என்று சில வினாடிகளில் பல வருடங்களை கடந்து சென்றேன்.
இருபுறம் படை சூழ மேடையில் ஏறினேன். அருமையான பாடல்கள். அன்றைக்கான வேத வாசிப்பு. இப்போது என்னை பேச அழைத்தார்கள். மொழிபெயர்க்க யாராவது தேவையா என்ற கேள்விக்கு, நான் இல்லை தமிழிலே பேசுகிறேன் என்று கூறிவிட்டு... என்பேச்சை ஆரம்பித்தேன்..


என்ன பேசினேனா? அடுத்த இடுகையில்..

4 கருத்துகள்:

  1. என்னவொரு சந்தோசமான சிலிர்ப்பான இனிய நினைவுகள்...

    காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. Very nice Visu, could almost visualise it myself. very well articulated.

    பதிலளிநீக்கு
  3. Very nice Visu, could almost visualise it myself. very well articulated.

    Sujatha

    பதிலளிநீக்கு
  4. நாம் படித்த பள்ளிக்கூடத்துக்கு திரும்பி போவதற்கு ஒரு அந்தஸ்து வேணுமே .
    நான் அங்க பண்ண அட்டூழியத்துக்கு ,ம்ஹூம் எனக்கெல்லாம் அந்த வாய்ப்பே இல்லை

    பதிலளிநீக்கு