செவ்வாய், 29 ஜூலை, 2014

"இளையராஜா - கங்கை அமரன்"...புரியாத புதிர்.

"ஆகாயகங்கை" என்ற ஒரு  திரைப்படம். கார்த்திக் - சுஹாசினி நடித்து இளையராஜா   இசையில்  வெளி வந்தது. படத்தின் கதை, மற்ற எதுவும் நினைவில் இல்லை.



ஆனால் இந்த படத்தில் ஒரு பாட்டு. "பொங்கும் ஆகாய கங்கை" என்று ஆரம்பிக்கும். இந்த பாடல் ஆரம்பித்தவுடன், அந்த ஆண் பாடகரின் குரலில் ஒரு வசீகரம்.  இந்த காலமாய் இருந்தால் உடனே கூகிள் சென்று அதை யார் பாடினார்கள் என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் அந்த காலத்தில் இந்த வசதி இல்லையே.

படம் முடிந்து வெளியே வந்து ஒரு பாடல் புத்தகம் வாங்கி பார்த்தேன். அதில் இந்த பாடலை பாடியது இளையராஜா என்று போட்டு இருந்தது. உடனே என் நினைவுகளை அந்த பாடலுக்கு திருப்பினேன். அது கண்டிப்பாக இளையராஜவாக இருக்க முடியாது. இளையராஜா எப்போதும் வார்த்தைகளை சற்று நிதானமாக உச்சரிப்பார். ஆனால் இந்த பாடலை பாடியவரின் வார்த்தைகள் குற்றால அருவி போல் புரண்டு வருகின்றது. இதை பாடியவர் பாடல் வகுப்பிற்கு போனது போல் தெரியவில்லை. ஒரு இயற்கையான குரல். கடவுளின் வரம். என்று மனதில் நினைத்தேன்.

ஒரு வாரம் போனது... எதோ ஒரு டி கடையில் நின்று கொண்டு இருக்கும் போது அங்கே கடை காரர் திடீரென்று ரேடியோவை தட்டிவிட இந்த பாடல் போய் கொண்டு இருந்தது. மெதுவாக அவரிடம் கேட்டேன்,...

இது யார் பாடியது ?

ஒ, இதுவா? மலேசியாதான்!

இல்ல அண்ணே, மலேசியா குரல் இன்னும் கீழே இருக்கும், இது என்னமோ புதுசா இருக்கு.. மலேசியா குரலையும்  இளையராஜா குரலையும் சேத்து கலந்து வைச்ச மாதிரி இருக்கு.

இப்படி பேசி கொண்டு இருக்கும் போதே அடுத்தவர் வந்தார்.

இது கண்டிப்பா பாலசுப்ரமணி இல்ல. இது இளையராஜாதான், புதுசா பாலசுப்ரமணியம் போல பாட முயன்று இருக்காரு.

இல்லேங்க, இளையராஜா, வார்த்தைகளை இவ்வளவு வேகமா விடமாட்டார், இது காட்டாறு போல வேகமா வருது.

ஒருவேள "யேசுதாசா"   இருக்குமோ?

கண்டிப்பா இருக்காது. அவர்  இளையராஜாவோட நிதானமா பாடுவார்.

சரி... என்று சொல்லி கடைக்காரனிடம் காசை கொடுத்துவிட்டு, இன்றைக்கு

எப்படியாவது இந்த பாடலை பாடியது யார் என்று கண்டு பிடித்து விட வேண்டும் என்று, மெயின் பாஜார் புறப்பட்டேன். அங்கே சென்று "எக்கோ" ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட  கசட் ஒன்றை வாங்கி பார்த்தேன்.. அதில் போட்டு இருந்தது...

பொங்கும் ஆகாய கங்கை  " கங்கை அமரன் - ஜானகி".

அடேடே என்ன ஒரு குரல். இளையராஜா ஏன் இவரை இன்னும் அதிகமான பாடலுக்கு உபயோகிக்க வில்லை. கையில் நெய்யை வைத்து கொண்டு வெண்ணைக்கு அலைந்து இருப்பாரோ?

நீங்களும் கேட்டு பாருங்களேன்.. இந்த குரலை ஏன் இளையராஜா இன்னும் அதிகமாக உபயோகபடுத்தவில்லை ? புரியாத புதிர்.

9 கருத்துகள்:

  1. உண்மைதான்! கங்கை அமரன் பாடல்கள் இளையராஜாவைவிட சிறப்புதான்! ஆனால் ஏன் உபயோகிக்க வில்லை! புதிர்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சுரேஷ்... புதிர் தான் போங்க...

      நீக்கு
  2. //கங்கை அமரன் பாடல்கள் இளையராஜாவைவிட சிறப்புதான்! //

    நீங்க ஒரு இசை விஞ்ஞானி அண்ணே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுனா, இளையராஜா, ஒரு சகாப்த்தம். அவருக்கு நிகர் அவரே. என்னுடைய சந்தேகம் எல்லாம் ஏன் அவர் இன்னும் நிறைய பாடல்களில் கங்கை அமரனை உபயோகபடுத்தவில்லை என்று தான்.

      நீக்கு
  3. கங்கை அமரன் பல பாடல்கள் பாடினாலும் , அவற்றில் அவ்வளவு சத்தில்லை .
    கங்கை அமரன் பலவற்றில் கையை வைத்து தனக்கென ஒரு முத்திரையைப்பதிக்கவில்லை .ஆனால் இளையராஜாவின் போகஸ் இசை
    மட்டுமே .அதனால் தான் இளையராஜா பெரும் புகழ் பெற்றார்.

    பதிலளிநீக்கு
  4. உங்களுக்கு ஏற்பட்ட இதே மாதிரி சந்தேகம் கங்கை அமரன் பாடிய இன்னொரு பாடலில் எனக்கும் ஏற்பட்டது. "பூஜைக்கேத்த பூவிது, நேத்துதானே பூத்தது" என்ற பாடலை பாடியது இளையராஜான்னு முதலில் தோன்றினாலும் அதை மீண்டும் கேட்டபோது சந்தேகமாகவே இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ, தெரியலே... கங்கை அமரனுக்கு இன்னும் அதிகமான பாட்டு கொடுத்து இருக்கலாம்னு தோன்னுது...

      நீக்கு

  5. இளையராஜா - கங்கை அமரன்
    இருவருமே
    சிறந்த கலைஞர்களே!

    பதிலளிநீக்கு