ஞாயிறு, 13 ஜூலை, 2014

அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?

நான் ஒரு மொழிபெயர்ப்பாளி. எந்த மொழி என்று கேட்கின்றீர்களா? அது ஒரு பன்மொழி. பெண்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட்டு விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை தான் நான் மொழிபெயர்த்து சொல்பவன். 
ஆண்குடிமக்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். தங்குளுடைய மனைவியோ, காதலியோ, அம்மாவோ, பாட்டியோ, மகளோ, அக்காவோ, தங்கச்சியோ ஏன் பக்கத்து வீட்டு மாமியோ எதோ ஒரு விஷயத்தை தங்களிடம் சொன்னால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மறந்து விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை "நல்லதோர் குடும்பம்" போல் செல்லும்.

இந்த மொழிபெயர்ப்பை சமூக சேவையாக கருதி நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். இந்த அருமையான கலையை நான் கற்று மற்ற நண்பர்களுக்கும் சொல்லி தருவதால் விசுவாசம் என்ற என் பெயர் இப்போது விசு "Awesome" என்று மாறிவிட்டது 


தங்களில் சில பேர் இங்கே என்னை ஒரு சந்தேக பார்வையுடன் பார்ப்பது புர்கின்றது, அதுவும் நியாமான சந்தேகம். ஆதலால் மேலே எழுதுவதற்குள் ஒரு உதாரணம்.


ஏங்க, பக்கத்து வீட்டு மாமி புதுசா ஒரு கம்மல் போட்டு இருக்காளே, நீங்க பார்த்தேளா?    இதுதான் கேள்வி 

இதில் அவர்கள் சொன்னது என்ன என்பதே முக்கியம் அல்ல. என்ன சொல்ல வந்தார்கள் என்பது தான்  முக்கியம். இந்த மாதிரி கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வது தவறாகிவிடும். இங்கே இவர்கள் சொல்ல வந்தது பக்கத்து வீட்டு மாமி கம்மலை பற்றியே அல்ல.அவர்கள் மனதில் உள்ளது , தன் கணவன் பக்கத்து வீட்டு மாமியை நோட்டம் விடுகிறானா என்பதே.  இந்த கேள்விக்கு அவரின் கணவர் " ஆமாம் இல்ல, நானும் பார்த்தேன் மாங்காய் வடிவுலெ  ஓரத்தில ஒரு இலையோடு நல்ல கம்மல் என்று சொன்னால் அவருக்கு அங்கே சங்கராபரணம் தான்.

இந்த கேள்விக்கு அவரின் பதில் "பக்கத்து வீட்டில் மாமியா? புதுசா குடி வந்து இருக்காளா? எனக்கு தெரிஞ்சு ஒரு நடுத்தர வயது ஆண் தானே தங்கிவுள்ளார்"  இப்படி சொன்னால் தான் வாழ்க்கை ஓடும்.

சரி, இப்ப இவங்க என்ன சொல்ல வந்தாங்க என்று பார்ப்போம். பக்கத்து வீட்டு மாமியின் கம்மலை பற்றி இவர்களுக்கு ஒன்றும் அக்கறை இல்லை. இவர்கள் சொல்ல வந்ததே.. 'அவர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக புது புதுசா வாங்கி போடறாளே? உனக்கு வாழ்க்கை பட்டதில் இருந்து நான் என்னத்த கண்டேன்'? இங்கே அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டால் இந்த ஆண் மகன் இங்கே தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. இவர் உடனே செய்ய வேண்டிய வேலை, ஒரு அழகான கம்மலை அவர்களுக்கு பரிசு அளிப்பது தான்.

சரி உங்கள் மொழிபெயர்ப்பு சந்தேகம் சற்று குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலே செல்வோம்.

இவ்வாறாக என் சமூக சேவை ஓடி கொண்டு இருக்கும் வேளையில், மாஸ்கோவில் இருந்து நண்பன் ராஜிடம் இருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு.

விசு... என் தோழி ஒருவர் MASALA.FM  என்று ஒரு online ரேடியோ நடத்துகின்றார்கள். நீ ஏன் உன் சமூகசேவையை அந்த ரேடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆண்களுக்கு செய்ய கூடாது? உன் சேவை எங்கள் எல்லாருக்கும் தேவை என்றார்.


உடனே அந்த அம்மணியிடம் தொடர்பு கொண்டு பேசி முடித்ததில் உருவானது தான் 'வைச்சிக்க நீ வித் பேராசிரியர் விசுawesome" .இந்த நிகழ்ச்சியில் நான் வாரம் ஒருமுறை வந்து என்னால் முடிந்த மொழி பெயர்ப்பை சொல்லுவேன். அங்கே உள்ள நேயர்களும் என்னிடம் மின் அஞ்சலின் மூலமாக என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு புரியாத விஷயத்தை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.  இந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடித்ததே பெண்கள் என்னிடம் விடும் சவால் தான். சில பெண்கள் என்னிடம் நான் என் கணவரிடம் இப்படி சொன்னேன் - இப்படி நடந்து கொண்டேன்' அதின் உள்ளர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும், நீங்கள் முடிந்தால் பதில் கூறவும் என்பர், நான் கூறும் பதில் ஆச்சரியத்தையும் அதிசத்தையும் தரும். இந்நிகழ்ச்சியை நீங்களும் masala .FM ல் கேட்கலாம். உங்களுக்கான கேள்விகளையும் நீங்கள் அங்கே  உள்ள மின் அஞ்சலின்மூலமாக எனக்கு அனுப்பலாம். நான் உங்களுக்கு சரியான பதில் தருவேன்.

சவுண்ட் க்லௌட் சாம்பிள் இங்கே....

இந்த வாரம் நம் நேயர்களில் ஒருவர்.. " நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன், ஆனால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டேன்".நான் ஏன்  இப்படி செய்கிறேன் என்று என்னை கேட்டு ஒரு சவால் விட்டு இருக்கிறார். அவருக்கான பதில் அடுத்த இடுகையில்...

தொடரும்...

2 கருத்துகள்: