வியாழன், 13 மார்ச், 2014

சரவணபவ சாம்பாரும், சங்கரா மீனும்...


மும்பை வாழ்வின் மற்றொரு நாள். வார இறுதி, கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் வந்துள்ளது என்று கேள்வி பட்டவுடன் நாங்கள் கிளம்பிவிட்டோம். இந்த நாட்களில் கமல் படங்களை தமிழர்கள் அதிகம் பார்த்தாலும் "ஏக் துஜே கே லியே" படத்தில் அறிமுகம் ஆனாதால் சில வடஇந்தியரும் கமல்ஹாசன் படத்தை பார்க்க விரும்புவார்கள். நான் மற்றும் அறையில் இருந்த மற்ற நண்பர்களும் மேட்னி காட்சிக்கு கிளம்பி விட்டோம். எங்கள் இல்லத்தில் இருந்து அரோரா தியேட்டர் ஒரு 30 நிமிட நடை. போகின்ற வழியிலேயே மதிய உணவை அங்கே அருகே உள்ள ஐயங்கார் உணவகத்தில் முடித்து கொண்டு போகலாம் என்று ஒரு திட்டம்.




நான் மற்றும் நண்பன் ரமேஷ், என் அருமை நண்பன் டொமினிக் மூவரும் கிளம்பி வெளியே செல்கையில் தான் நினைவிற்கு வந்தது, நண்பன் டொமினிக் ஒரு ஸ்ட்ரிக்ட் "நான் வேஜெடேரியன்" மருந்திற்கு கூட காய் சாப்பிடமட்டான் (முந்தானை முடிச்சு பார்த்தன் பின் கூட முருங்கை காய் சாப்பிடாத அளவு பிடிவாதம்). இவன் எப்படி சனி கிழமையும் அதுவுமாக ஐயன்ன்கார் உணவகத்தை ஒத்து கொண்டான் என்று சிறு சந்தேகம். ஒரு வேலை, இந்த உணவகம் தியேட்டர் போகும் வழியில் உள்ளதால் தான் ஒத்து கொண்டான் என்று எனக்கு நானே பதில் சொல்லி கொண்டு வீட்டை விட்டு கிளம்பினோம். ஒரு இரண்டு நிமிடம் நடந்து இருப்போம். டொமினிக் எங்களிடம் நீங்கள் இருவரும் உணவகத்திற்கு செல்லுங்கள் நான் அருகில் உள்ள தபால் நிலையம் போய் ஒரு சிறு வேலை முடித்துவிட்டு அங்கே வந்து சந்திக்கிறேன் என்றான்.சரி என்று ஒத்துக்கொண்டு நாங்கள் கிளம்பினோம். அங்கே ஐயங்கார் கடையில் அதிக கூட்டம். அதில் அநேகர் "தூங்காதே தம்பி தூங்காதே "படம் பார்க்க போகிறவர்கள் என்று நினைக்கிறேன். ஒரு மேசை காலி ஆனதும்  நானும் ரமேசும் அதில் அமர்ந்தோம் அப்போது காக்க உட்கார பனம் பழம் விழுந்ததை போல் நண்பன் டொமினிக் அங்கு வந்த சேர்ந்தான். மூவரும் ஆளுக்கொரு தாலி (இதற்க்கு ஏன் தாலி என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு இன்றும் புரியவில்லை) சொன்னோம். இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழரே. அதனால்  ஒருவருக்கொருவர் தமிழில் பேசி பழகுவோம்.

மூவருக்கும் வாழை இலை வைத்தார்கள். அதில் அங்கு வேலை செய்த சர்வரே சிறிது நீர் தெளித்து எங்களை இலையை துடைத்து கொள்ள சொன்னான். அவன் சொன்ன படியே துடைத்து விட்டு அமர்ந்தோம். ஆளுக்கு ஒரு மிளகு அப்பளமும் ஊருகாயும் வைத்தார்கள். நாங்கள் மூவரும் அப்பளத்தை கொறித்த படியே, பார்க்க போகும் படத்தில் நடித்த சுலக்ஷ்னா சாரி கமல்ஹாசனை பற்றி பேசி கொண்டு இருந்தோம். சாதம் வருவதற்கு முன் அப்பளம் ஸ்வாஹா. சாதம் எடுத்து வந்த ஆளிடம் நண்பன் டொமினிக் அப்பளம் கிடைக்குமா என்றான். அவர் பதிலாக அப்பளம் உங்களுக்கு ஏற்கனவே வைத்தாகிவிட்டது என்றவுடன் டொமினிக் அவரிடம், அது எங்களுக்கும் தெரியும் ஆனால் அந்த சர்வர் இலையின் மேல் அதிக நீரை ஊற்றியதால் அப்பளம் வெத்தலை போல் நொந்து விட்டது அதனால் வேறு ஒரு இலையும் அப்பளமும் எடுத்து வா என்றான். எனக்கு அப்போதே தெரிந்து விட்டது "வேதாளம் மரம் ஏற போகின்றது என்று". நான் டொமினிகிடம் சும்மா வம்பு பண்ணாதே, வெந்ததை தின்று சினிமாவிற்கு போகலாம் வா என்று சொன்னேன். பிறகு நான் மெதுவாக அவனிடம் அது சரி, சனியும் அதுவுமாய் எப்படி இங்கே வந்தாய்? நீ வெட்டு குத்து ஆள் ஆச்சே! இந்த புல் பூண்டு வகையறா எல்லாம் உனக்கு பிடிக்காதே என்றேன்.

அதை நான் சொன்னவுடன் நண்பன் டொமினிக் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை. அதை பார்த்தவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இவன் தன்னுடைய விளையாட்டை ஆரம்பிக்க போகிறான் என்று. என்ன செய்ய போகிறான் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ வில்லங்கம் செய்ய போகிறான் என்று மட்டும் தெரியும்.

மீண்டும் இலை வந்தது, கூடவே அப்பளமும் வந்தது. இவன் இலையை நன்றாக துடைக்கும் வரை அவன் அப்பளத்தை வைக்கவில்லை. இலை துடைத்தாயிற்று, அப்பளம் வைத்தாயிற்று. சாதம் போட்டாகிவிட்டது. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் வேளையில் நண்பன் டொமினிக் தன பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்தான். அதில் மூன்று வருத்த மீன் துண்டுகள். இவன் தபால் நிலையம் போகிறேன் என்று சொல்லிவிட்டு தனபால் மிலிடரி கடைக்கு போய் வந்து இருக்கிறான். மூவருக்கும் ஆளுக்கொரு துண்டு. உடனடியாக நாங்கள் அந்த "முழு துண்டை சோற்றில் மறைத்து"  அதன் மேல் அப்பளத்தை வைத்து மறைத்து சாப்பிட ஆரம்பித்தோம். துண்டை மறைத்து வைத்தாலும் வாசனையை என்ன செய்வது? அருகில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் வாசனை முகர்ந்து சற்று முகம் சுளித்தனர். அங்கே வந்த சர்வரும் சுற்றும் முற்றும் பார்த்து அருமையான அந்த வாசனையை என்ன ஒரு நாற்றம் என்று அநாகரிகமாக சொன்னான்.



பாதி சதம் ஸ்வாஹா ஆகிய போது அந்த மீன் துண்டு "இலை மறைவு காய் " போல் தலை காட்ட துவங்கியது. உடனே சர்வரை அழைத்து சாதம் கேட்டோம். முதலில் இருப்பதை சாப்பிட்டு முடி போடுகிறேன் என்றான். அது பிரச்சனையில் போய் முடியும் என்று அவனிடம் சிறிது சத்தம் போட்டு சாதம் வாங்கி மீண்டும் அந்த மீனை மறைத்தோம், முடித்தோம். அங்கே இருந்த மற்ற அனைவரும் என்ன இங்கே மீன் நாற்றம் ( அது வாசனையப்பா) மீன் நாற்றம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். நாங்கள் மூவரும் மட்டும் எங்கள் உணவை "என்சாய் மாடிவிட்டு" அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். பொதுவாக அந்த இலைய அப்படியே விட்டு போகும் நாங்கள் அன்று மட்டும் இலைய குப்பையில் வைத்ததை பார்த்த அந்த சர்வரே நன்றி சொன்னார். முள்ளை மறைக்க வேண்டுமே. எல்லாம் முடிந்து காசை கட்டிய பிறகு நண்பன் டொமினிக் சிறிது உணர்ச்சி வசப்பட்டு "பல்குத்த" ஏதாவது உண்டா என்றான். அங்கே இருந்த கல்லா பெட்டி சிங்காரம் "சைவ ஹோடேலில் பல்குத்த கேட்ட முதல் ஆள் நீ தான் என்று சொன்னவுடன் விஷயம் பெரிதாகும் முன் நாங்கள் சினிமாவிற்கு கிளம்பினோம்.

அங்கு இருந்து கிளம்பி ஆளுக்கொரு "ஜரிதா பீடா" போட்டு கொண்டு நேராக அரோர தியேட்டர் வந்து சேர்ந்தோம். அங்கே வந்து சேர்ந்தவுடன் அங்கு வந்த சில வடநாட்டு கமல் ரசிகர் இருவர் நேராக எங்களிடம் வந்து " பிக்ச்சர்க்கா நாம் கியா ஹே" என்றார்கள். டொமினிக் உடனடியாக "தூங்காதே தம்பி தூங்காதே"என்றான். அதை கேட்டவுடன் அந்த இருவரும் பேய் அறைந்த மாதிரி (பேய் அறைந்த கதையை கண்டிப்பா இன்னொரு நாள் சொல்லுறேன்) ஆகி.."கியா மத்லப்"? என்ற அடுத்த கேள்வி கேட்ட அவர்களுக்கு நண்பன் டொமினிக் ஐ மீன் " "சோனா மத் சோட்டா பாய் சோனா மத்" என்றான். மீண்டும் மீனா என்று நான் யோசிக்கையில் தியேட்டர் மணி அடிக்க "பட்டுகோட்டை போட்டு வைச்ச பாட்டு"சத்தத்தை கேட்டு உள்ளே நுழைந்தோம்.

7 கருத்துகள்:

  1. "பல்குத்த ஏதும் இல்லை" என்றவுடன் மீன் முள் எடுக்க செல்லாமல் இருந்ததே பெரிய விசயம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பன் டொமினிக் அதையும் செய்து இருப்பான். ஆனால் அவசரப்பட்டு இலையதான் குப்பையில போட்டுடோமே. மீண்டும் ஒருமுறை படியுங்கள், ஒரு சிறு மாற்றம் செய்து இருக்கேன்.

      நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இப்படி ஒரு அட்டகாசமா சைவ ஓட்டலில் = வெஜிடேரியன் சாப்பிடுவோரின் கமெண்ட்... என்ன ஒரு தைரியம் மைண்ட் வாய்ஸ்

    எப்டிப்பா இப்டி = நான் வெஜிடேரியன் சாப்பிடுவோரின் கமெண்ட் “ ஆஹா இப்டி ஒரு ஐடியா நாம மிஸ் பண்ணிட்டோமே.. “

    அசத்தல்பா.......

    பதிலளிநீக்கு
  4. நல்ல ஐடியாவா இருக்கு
    .
    ஆனால் என் தைரியத்துக்கு நான் என்ன செய்யலாம் என்றால் , சரவணபவனில் ஒரு பொங்கல் வாங்கிக்கொண்டு அஞ்சப்பர் போகலாம்.
    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேடே. துபாயில் அஞ்சப்பர் துவக்க விழாவில் கலந்து கொண்டு அன்று முதல் வேலையாக ஆட்டுக்கால் ஒன்று ஆர்டர் பண்ணி அங்கேயும் என் ஆயா சொன்ன "விசு உனக்கு வாயிலதாண்டா கண்டம்" என்பதை மறந்து தேவையிலாத ஒரு கேள்வி கேட்டு, மேசைக்கு வந்த பாயாவையும் மீண்டும் இழந்தேனே. அதை நினைவு படுத்திவிட்டீர்களே. இன்று அந்த இடுகையை வெளியிடுகிறேன்.

      நீக்கு