செவ்வாய், 4 மார்ச், 2014

Alice , Alice நானும் டேவிட்டும்.....

பெங்களூர் நகரில் வாழ்ந்து கொண்டு இருந்த நேரம் அது. அப்போது என் வயதோ 21. என்னை வாரந்தோறும் காலையில் இருந்து மாலை வரை இங்குள்ள ஒரு புகழ்பெற்ற மகளிர் கல்லூரியின் அருகில் தான் பார்க்க முடியும். தவறாக நினைக்காதீர்கள். இந்த கல்லூரியில் தான் நான் பணியாற்றி வந்தேன். முதுகலை முடிந்து தேர்வு முடிவு வருமுன்னே கிடைத்த வேலை, தவற விடுவேனா? ஒரே ஒரு பிரச்னை. இங்கே படிக்கும் பல மாணவியர்களுக்கு என்னை விட வயது கூட, அதனால் சில நேரங்களில் என்னையும் மீறி அவர்களை அக்கா என்று தவறாக அழைத்தது உண்டு.


எனக்கு இந்த கல்லூரியில் வேலை கிடைத்த ராசியோ என்னவோ, என் நண்பர்களின் எண்ணிக்கை பல மடங்கு ஆகிவிட்டது. ஊரில் உள்ள அத்தனை வாலிபர்களும் என்னிடம் மிகவும் அன்பாக பழக ஆரம்பித்தார்கள். நானும் என்னுள் உள்ள ஏதோ ஒரு நல்ல குணம் இவர்களுக்கு பிடித்துள்ளது என்று நினைத்து வாழ்கையை ஒட்டி கொண்டு இருந்தேன். தினமும் காலையில் என் KAWASAKI BAJAJ  எடுத்து கொண்டு போய் கல்லூரியின் உள்ள போகும் போதே அங்குள்ள பாதுகாவலர் "ஐயா தங்களின் நண்பர்கள் உள்ளே கல்லூரி உணவகத்தில் உமக்காக காத்து கொண்டு உள்ளனர் என்று". அவர்களுக்கு என் மேல் கொள்ளை பிரியம் என்று தான் நான் நம்பி இருந்தேன். சில வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது, இந்த நட்பு எனக்காக இல்லை, இவர்கள் கதையே (கடலையே)வேறு என்று.



இந்த இனிமையான நண்பர்களில் இருவர் தான் "சேகரும் டேவிட்டும்" இந்த இருவரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தனர். ஒரே பள்ளி , ஒரே கிரிகெட் டீம், ஒரே சிகரெட், இருவரின் பெற்றோரும் நன்கு அறிந்தவர்கள். இவன் சோடா குடித்தால் அவன் ஏப்பம் விடுவான் அவன் சிகரெட் பிடித்தால் இவன் புகை விடுவான் அவ்வளவு நெருக்கம். இவ்வாறாக பகலில் கல்லூரி, மாலை நண்பர்கள் என்றும் வாழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் எங்கள் வாழ்கையில் ஒரு திருப்பம்.

 எங்கள் தெருவிற்கு ஒரு புதிய ஆங்கில -இந்திய குடும்பம் வந்தது. என் வீட்டில் என் அறையில் அமர்ந்து சன்னல் வழியாக நானும் நண்பர்கள் அனைவரும்  அந்த புதிய வரவை பார்த்து கொண்டு இருந்தோம். எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது போல் "இன்று போய் நாளை வா ராதிகா போல் "ஒரு ஆங்கிலோ இந்திய பெண் Alice. அடடே, பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்தது போல் இருக்கிறதே என்று நினைத்தே எங்கள் அனைவர் முகத்திலும் வாயெல்லாம் பல்.

சரி, என்னோமோ ஏதோ, சிறிய வயதில் இருந்தே எனக்குள் ஒரு பழக்கம். ஒரு விஷயத்தை கண்டவுடனே அது எனக்கு சரி பட்டு வருமா இல்லையா என்று சரியாக கணக்கு போட்டு அந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நடந்து கொள்ளுபவன் நான். இந்த Alice பார்த்தவுடன் திருவிளையாடல் தருமி பாணியில் "இது ந(மக்கு) இல்லை என்பதை புரிந்து கொண்டு என் நேரத்தை வீணடிக்காமல் வாழ்ந்து வந்தேன். எனக்கே ஏன் என்று தெரியவில்லை  , இந்த Alice என் வீட்டின் எதிரே குடியேறிய பின் என் நண்பர்களின் எண்ணிக்கை மீண்டும் வளர்ந்து கொண்டே போனது. அடிக்கடி இவர்கள் வந்து கதவை தட்டியதால் என் வீட்டின் பெரியோர்கள் என்னை கண்டித்து விட்டார்கள், அதனால் என் நண்பர்களை இனி வீட்டிற்க்கு வராதீர்கள் வெளியில் தெருமுனையில் சந்திப்போம் என்றேன். நான் இந்த வார்த்தைகளை சொன்னவுடனே நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.

மற்ற நண்பர்கள் வருவது நின்றாலும் சேகரும் டேவிட்டும் எங்கள் பக்கத்துக்கு வீடு தானே. அதனால் நாங்கள் மூவரும் என் அறையில் கூடுவோம். இப்படியாக நாட்கள் ஓடும் வேளையில் சேகர் ஒருநாள் துண்டை காணோம் துணியை காணோம் என்று என்னிடம் ஓடி வந்தான்.  என்ன ஆகியது  நண்பா என்று கேட்ட எனக்கு அவன் கொடுத்த பதில் அதிர்ச்சியை விட ஆச்சரியத்தை கொடுத்தது. மாம்ஸ் நான் Alice  மனமார காதலிக்கேறேன் என்றான். அட பாவி, இது அவளுக்கு தெரியுமா என்றேன். இல்லை மாம்ஸ். என் காதலை எப்படி சொல்வது என்று தெரியவில்லை அதனால் தான் உன்னிடம் வந்தேன் என்றான். இப்படி நாங்கள் பேசி கொண்டு இருக்கையிலே டேவிட்  மூச்சு தெறிக்க ஓடி வந்தான். அவன் முகத்தில் ஏதோ டைடானிக் கப்பலின்  டிக்கெட்டை தவற விட்டது போல் ஒரு பரபரப்பு. என் அறையில் அமர்ந்த இருந்த சேகரையும் பார்த்து "சேகர் நீயும் இங்கே தான் இருக்கியா? நல்லதா போச்சு "கும்பிட போன தெய்வம் குறுக்குல தான் மட்டும் வராம பூசாரியையும் கூட்டி  வந்தது போல்" என்று சொல்லி அமர்ந்தான்.
சரி வந்த விஷயத்தை சொல் என்று டேவிட்டிடம் கேட்டவுடன், அவன் தயங்கி தயங்கி சொன்னான். மாம்ஸ், நான் Alice மனதார காதலிக்கேறேன் என்று. நான் உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி "நீயுமா"? என்றேன், அவன் உடனே , நீயுமான்னு ஏன் கேட்ட, வேற எவனாவது அவளை காதலிக்கிறானா என்றான். சிறிது சுதாரித்து சாரி, நீயா என்பதற்கு பதிலாக "நாக்கு வழுக்கி" நீயுமா என்றேன், வேறு  ஒன்றும் இல்லை என்றேன்.
இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த சேகரின் முகம் பேய் அறைந்ததை  (பேய் அறைந்த கதையை இன்னொரு நாள் சொல்கிறேன்) போல் ஆகிவிட்டது. அதை கண்டுகொண்ட டேவிட், "டேய் சேகர், காதலித்து டென்சனில் இறுக்க வேண்டியது நான், நீ ஏன்டா பீல் பண்ற என்றான். இதை சொல்லி கொண்டே இருக்கையில் எதிர் வீட்டு அம்மணியின் அம்மா  ஆட்டோ பிடிக்க நிற்ப்பதை கவனித்த டேவிட், உடனே என் வண்டியை கடன் வாங்கி கொண்டு அவர்கள் ஆட்டோவை ஏற்பாடு செய்ய கிளம்பிவிட்டான்.
இப்போது சேகரும் நானும் தனியே இந்த அறையில், நான் மெதுவாக சேகரிடம், என்னப்பா? காதலா-நட்ப்பா என்று கேட்டேன். அடுத்த அரை மணிநேரத்தில் சேகர் அந்த சிறு அறையில் கையில் புகையுடன் மேலேயும் கீழேயும் மாறி மாறி பார்த்து கிட்டதட்ட 18 கிலோ மீட்டர் நடந்து விட்டு,  நான் ஒரு முடுவுக்கு வந்துவிட்டேன். நண்பனுக்காக காதலை தியாகம் பண்ணிவிட்டேன் என்றான். நான் நெஞ்சு நெகிழ்ந்து, "மாப்பு உன்னை போல் ஒரு நண்பன் கிடைக்க ஒருவன் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்" என்றேன்.


சிறிது நேரம் கழித்து வந்த டேவிட்டிடம், உன் காதல் மேட்டர் அந்த பெண்ணுக்கு தெரியுமா என்றேன்? அவன் அதற்க்கு இல்லை, அதற்க்குதான் நேரம் பார்த்து கொண்டு இருக்கிறேன், என்றான். பிறகு சில சிறு சிறு வேலைகளை பேசி முடிக்கும் போது டேவிட் சேகரிடம்,  "நீதான் என் காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என்றான்". நான் இடையில் தலையிட்டு உன் காதலை நீ போய் சொல்லுவது தான் ஆண்மைக்கு அழகு, அவனை அனுப்பாதே என்றேன். ஆனால் சேகரோ இடையே வந்து , பரவாயில்லை நானே நாளை அவளை நேராக சந்தித்து உன் காதலை வெளிப்படுத்துகிறேன் என்றான். இருவரும் கை குலுக்கி விட்டு ஷோலே படத்தில் வரும் "யே தோஸ்த்து கி" என்ற பாடலை பாடி கொண்டே கிளம்பி விட்டனர்.
மறுநாள் நான் வேலை முடிந்து வீட்டிற்க்கு திரும்பும் வேளையில் என் வீட்டின் எதிரில் போலீஸ் ஜீப், இரண்டு - மூன்று போலீஸ்காரர்கள் மற்றும் எதிர் வீடு குடும்பம் அனைவரும் நின்றுகொண்டு இருந்தனர். அருகில் இருந்த கடையில் போலீஸ் எனக்கு இல்லை என்று உறுதி செய்து விட்டு ஜீப் அருகே சென்ற எனக்கு ஒரே அதிர்ச்சி.



அந்த ஜீப்பின் உள்ளே சேகரும் டேவிட்டும் (ஆனால் அந்த பாடல் மிஸ்ஸிங்). என்னடா விஷயம் என்று கேட்டவுடன், டேவிட் வாய் திறந்து, "மாம்ஸ், இந்த பொறம்போக்கு சேகர் என்னை திட்டம் போட்டு உள்ள தள்ளிட்டான் என்றான். கொஞ்சம் விவரமாய் சொல்லு என்றேன். இதை என் வாயல எப்படி சொல்லுவது, அவனையே கேள் என்றான். சேகர், விஷயத்த சொல்லுடா என்றேன். அவன் அதற்க்கு பதிலாக, நான் எதுவும் தவறாக செய்யவில்லை. இவன் காதலை அவளிடம் சொல்லலாம் என்று சற்று நேரம் முன்பு அவளின் இல்லத்திற்கு சென்றேன். அப்போது அவள் தேவதை போல் வந்த காட்சியை பார்த்ததும் நான் சற்று தடுமாறி விட்டேன். அது சரி, போலீஸ் வர மாதிரி அப்படி என்னதாண்டா செய்த என்று கேட்டேன். நான் ஒன்னும் செய்யவில்லை மாம்ஸ். அவள் அழகில் என்னையும் மறந்து, "Alice , Alice  நானும் டேவிட்டும் We both Love you" என்று சொல்லிவிட்டேன் என்றான். 

11 கருத்துகள்:

  1. ஹா... ஹா... "அடக்க" முடியாமல் இப்படியா சொல்வது...!?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னத்த சொல்வேன் தனபால், எனக்கு வாய்ச்ச நண்பர்கள் அப்படி. மனசில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார்கள். தங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. உங்க வாழ்க்கையில நெறைய interesting சம்பவங்கள் நடந்திருக்கு போல இருக்கே ! ரொம்ப நல்லா இருந்தது ! Hilarious. !தொடர்ந்து எழுதுங்க. அது சரி அந்த 'பேயறைந்த' சம்பவத்தை எப்போதான் எழுதப் போறீங்க ? ஒவ்வொரு பதிவுலயும் இன்னொரு சமயம் எழுதறேன்னே சொல்றீங்க ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி . நீங்கள் சொல்லியது போல் என் வாழ்வில் நிறைய சம்பவங்கள் இந்த மாதிரிதான் முடிந்து உள்ளது. என்னால் முடிந்த வரை எழுதுகிறேன். அந்த பேய் அறைந்த கதையை எத்தனையோ முறை எழுத ஆரம்பித்து இருக்கிறேன் ஆனால் பாதியிலேயே பேய் அறைந்தது போல் விட்டுவிடுகிறேன். கூடிய சீக்கிரம் எழுதுவேன்.

      நீக்கு
  3. தங்கள் பதிவை படித்தேன். மிகவும் உதவியாக இருந்தது. செய்ய வேண்டிய திருத்தங்களை இந்த வார இறுதியில் செய்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நல்ல சுவாரஸ்யமான நிகழ்வு... 21 வயதில் பெண்கள் கல்லூரியில் வேலை பார்த்தும் ஒரு துறவு வாழ்க்கை வாழ்ந்து இருக்குறீர்கள் .... நீங்க ரொம்ப நல்லவரு.......... எப்படியோ சேகரையும் டேவிடையும் பிளான் பண்ணி தூக்கிடீங்க .....
    இது ஒரு Alice sent wonderland (ஜெயில்)....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன கொடுமை இது சரவணா! இவங்க ரெண்டு பேரையும் நான் பிளான் பண்ணி தூக்கிட்டேன்னா? எப்படிஇவ்வளவு கரெக்டா சொன்ன? சூப்பர் அப்பு.

      நீக்கு
  5. சார் உங்களுக்கு உடம்பு பூரா மச்சம் பெங்களுரில் பெண்கள் கல்லூரியில் வேலை அதுக்கு அப்புறம் கலிபோர்னியாவில் வேலை...ஹும்ம்ம்ம்ம்ம்ம் சாமி வயிறு பத்திக்கிட்டு ஏறியுதுங்கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை, இல்ல கலிபோர்னியாவிற்கு ஏத்த களி உருண்டை...

      நீக்கு
  6. We three Love you ன்னு சொல்லாம விட்டதால நீ தப்பிச்சுட்ட தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன அண்ணே அமர் அக்பர் அந்தோனி கதையா? வம்பா போச்சே..

      நீக்கு