சனி, 8 பிப்ரவரி, 2014

தன்மான வெறியும் வருமான வரியும்...


வருடம் 1987. அந்த நாளை மறக்க இயலுமா? வேலூர் ஊரீஸ் கல்லூரியில் முதுகலை பட்டத்திற்காக பசி பட்டினியை மறந்து படித்த காலம் அது.  முதுகலையின் இரண்டாவது வருடம்.  ஐந்து தேர்வு எழுத வேண்டும். ஐந்தில் ஒன்று, "வருமான வரி".அந்த காலத்தில் வருமானமே இல்லை, வரிக்கு எங்கே செல்வோம். என்ன என்றாலும் படிக்க வேண்டுமே. மற்ற நான்கு பாடத்தை நன்றாக புரிந்து படித்தாலும் ஐந்தாவதான இந்த "வருமானவரி" மிகவும் கடினமாக இருந்தது. சிறு பிள்ளையாக இருந்த போதே ஒரு கனவு. நன்றாக படிக்க வேண்டும். நல்ல ஒரு உயர்ந்த வேலை வேண்டும். மருத்துவர், பொறியாளர் படிக்க பெரிய தொகை வேண்டும். அது நம்மிடம் இல்லை. சட்ட நிபுணர் ஆக வேண்டும் என்றால் பொய் சொல்ல வேண்டும். அந்த தில்லும் இல்லை.

இப்போது என்ன செய்வது என்று நினைத்த போதுபல வருடங்களுக்கு முன்  பக்கத்துக்கு வீட்டு பெரியவர் சொன்னார், நீ ஏன் தணிக்கையாளர் ஆக கூடாது என்று. அதற்க்கு நிறைய செலவு ஆகுமே என்றேன். ஆனால் அவரோ அது தவறான கருத்து. நன்றாக படித்தால் நீ தணிக்கையாளர் ஆகலாம் என்றார். அடடா, கரும்பு தின்ன கூலியா? 10 படிக்கும் போது வந்த அந்த ஆசையை இந்த பாழாய் போன வருமானவரி பாடம் பதம் பார்த்துவிடுமோ என்று பயந்த நேரம்.
இந்த நேரத்தில் தான் கும்பிட போன தெய்வம் குறுக்கில் வந்ததை போல் என் வகுப்பு தோழன் ஜான் வருமானவரி பாடத்தினால் தான் படும் கஷ்டத்தை என்னிடம் சொன்னான். எனக்கும் அதே பிரச்னை என்றேன். அப்போது அருகே இருந்த எங்கள் பேராசிரியரை சென்று எங்கள் பிரச்சனையை சொன்னோம். அவர் திருவாசகம் போல சில வார்த்தைகள் சொன்னார். எப்படியாவது, மெட்ராஸ் பல்கலைகழகத்தின் தபால் படிப்பு  முறைக்காக வெளி வரும் புத்தகத்தை வாங்கி படி, எளிதில் புரியும் என்றார். விடுவோமா நாங்கள்?
அடுத்தநாளே பேருந்தில் ஏறி சென்னை பிரவேசம்.  அங்கே பாரிஸில் இறங்கி  மற்றொரு வண்டி பிடித்து மெட்ராஸ் பல்கலைகழகம் சென்றோம்.  அங்கே எங்கள் இருவருக்கும் யாரையும் தெரியாது. கையில் உள்ள  50 Rs மட்டுமே. அதிலே புத்தகமும் வாங்க வேண்டும், மீண்டும் வேலூர்க்கு போக வேண்டும்.




அப்போது அங்கே பணிபுரியும் ஒரு நபரை அணுகி எங்களுக்கு இந்த புத்தகத்தை தர முடியுமா என்றோம்? ஒரு புத்தகத்திற்கு 25 ருபாய் என்றார். எங்களுக்கு இரண்டு புத்தகம் வேண்டுமே அந்த காலத்தில் நகலும் எடுக்க இயலாதே அதனால் மொத்தம் உள்ளதே 50 ருபாய் தான் அதிலே நாங்கள் ஊருக்கும் போய் சேர வேண்டும் என்றோம். பதிலாக அவர், 40 ருபாய் தன்னிடம் கொடுத்து விட்டு 10 ரூபாயில் இருவரும் லாரி பிடித்து போங்கள்என்றார். அருமையான யோசனை என்று அவருக்கு ஒரு நன்றி கூறிவிட்டு புத்தகத்துடன் கிளம்பினோம்.
என்னடா இந்த புலம்பல் இத்தனை வருடம் கழித்து ஏன் என்று பார்க்கின்றீர்களா? அது ஒன்றும் இல்லை. இந்த புனித பயணம் அன்று கடினமாக இருந்தாலும் அந்த வருட தேர்வு முடிவு வரும் போது இரட்டிப்பான மகிழ்ச்சியை தந்தது. ஏன்  தெரியுமே? அந்த வருடம் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் வருமான வரி பாடத்தில்  மாநிலத்திலேய  முதலாவதாக வந்த மாணவன் பெயர் என்ன தெரியுமா ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக