வியாழன், 4 நவம்பர், 2021

ஜெய் பீம் - ஒரு பார்வை.

பல வருடங்களுக்கு முன் வளைகுடா பகுதியில் வாழுகையில் ஒரு நாள் பாலைவன பகுதியில் விரைவாக வாகனத்தை செலுத்தி கொண்டு இருக்கையில் திடீரென்று  ஒரு பறவை தன் குஞ்சுகளோடு சாலையை கடக்க வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவைகள் மேல் வாகனம் செல்ல அந்த தாய் பறவை மற்றும் குஞ்சுகளின் சிறகுகள் இரத்தத்தோடு  வெள்ளை நிற வாகனத்தில் சிதற..

அடுத்த சில நாட்கள் தூக்கத்தையே இழந்தேன்.

அதற்கும் இந்த தலைப்பிற்கும் என்ன? இதோ சொல்கிறேன்.


"விசு, ஜெய் பீம் என்ற படம் வந்துள்ளது, கண்டிப்பாக பார்"

என்று நண்பர் ஒருவர் இந்தியாவில் இருந்து சொல்ல, ஜெய் பீம் என்று கூகிளில் தேடுகையில்  பல நல்ல விமர்சனங்கள் இருந்தன. அந்த ஒவ்வொரு விமர்சனத்திலும், தேம்பி தேம்பி அழுதேன், மனது கனத்து விட்டது. என்ன ஒரு அநியாயம் , என்ன ஒரு சோகம் என்று இருக்க..

"அட பாவத்த.. குருவி செத்ததுக்கே தூக்கம் போச்சி, இது உனக்கு தேவையில்லை" என்று நினைக்கையில், நம்பர் மீண்டும் அழைத்து..

"ஜெய் பீம் பாத்தியா"

"இல்ல, நமக்கு இம்புட்டு சோகம் தாங்க முடியாதுன்னு  விட்டுட்டேன்.."

"புரியுது, இந்த காட்சி வரை பார். அதுக்கு அப்புறம் இந்த கொடுமைகள் வரும். அதை பார்வர்ட் பண்ணிடு, அப்புறம் இந்த காட்சியில் இருந்து பார்" 

என்று இடஞ்ச்சூட்டி  பொருள் விளக்க...

பார்த்தேன்!!

 கொடுமைகளை பார்வர்ட் செய்து பார்த்தாலும் பல காட்சிகளில்  கண் கலங்கியது.

"எல்லா போலீசும் கெட்டவங்க இல்லை.. 

எல்லா போலீசும் நல்லவர்களும் இல்ல ..." 

"தமிழில் பேசு"

"நீ அந்த ஜாதியா  அந்த பக்கம் போ.. நீ இந்த ஜாதியா, இந்த பக்கம் போ"

என்று பல வசனங்கள் அமைந்த காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், என்னை மிகவும் பாதித்த காட்சியாவது..

ராசாக்கண்ணு இறந்துவிட்டான் என்று தெரிந்த பின்னர் அவன் முழு பிரசவ மனைவியை சுற்றி சில பெண்கள் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்கையில் ,அவர்களுக்கு பின்னால் இருந்து இன்னொரு பெண்.. 

"அட பாவிங்களே.. என் புருஷன் செத்துட்டான்னு எப்ப சொல்லுவீங்கன்னு" கேப்பாங்க.. இப்படியும் ஒரு சக மனிதனுக்கு நேரிடுமா என்று பதறிவிட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு சமூக அவலத்தை எடுத்துரைத்த படம். இதை பார்த்து ஒரு சாதி வெறியன் திருந்தினால் கூட வெற்றி தான்.

இங்கே  அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்பு "மார்ஷல்" என்று ஒரு படம் வந்தது. கறுப்பினத்தை சார்ந்த ஒருவருக்கு நேர்ந்த அநீதியை எதிர்த்து  ஒரு வக்கீல் நீதி மன்றத்தில் போராடுவார். இந்த படத்தில் வருவதை போலவே அந்த படத்திலும் ஒரு காட்சியில் பாதிக்கப்பட்டவர்  வக்கீலிடம் ஒரு முக்கியமான விடயத்தை மறைக்கையில், அந்த வக்கீல்..

"Why did you hide the truth from me, உண்மையை ஏன் என்னிடம் இருந்து மறைத்தீர்கள்" என்று கோபத்துடன் சத்தம் போட அதற்கு பதிலாக அவர் 

"Because the truth will get me killed". உண்மை என்னை கொன்று விடும்"

என்பார்.

இந்த "மார்ஷல்" என்ற படத்தை திரை  அருகில் பார்த்து முடிக்கையில், படம் முடிந்த சில வினாடிகள், வெள்ளையர்கள், கறுப்பினதோர், லட்டினோஸ் என்று அழைக்க படும் ஸ்பானிஷ் மக்கள் மற்றும் ஒரே ஒரு இந்தியன் குடும்பம் அனைவரும் எழுந்து நின்று கை தட்டி ஆர்பரித்தோம். அவ்வளவு ஒரு சிறப்பாக ஒரு உண்மை சம்பவத்தை எப்படி எடுத்தார்கள் என்ற ஆச்சரியத்தோடு.

'ஜெய் பீம்" படத்தை இல்லத்தில் தான் அமர்ந்து பார்த்தேன். படம் பார்த்து முடிந்த பின் மீண்டும் இணைய தளம் சென்று இதற்கான விமர்சனங்களை பார்க்கையில் பலர் பாராட்ட...சிலர் தூற்றி கொண்டும் இருந்தார்கள். 

ஏன் இவர்களுக்கு இந்த படத்தின் மேல் இவ்வளவு வெறுப்பு என்று அவர்களின்  முந்தைய சில பதிவுகளை படிக்கையில் ஒன்று தெளிவாக புரிந்தது.

இவர்கள் அனைவருக்கும் ஒரு வெறுப்புணர்ச்சி. இந்த படத்தின் மேல் மட்டும் இல்லை. சூர்யாவின் மேல் மட்டும் இல்லை. ஜோதிகாவின் மேல் மட்டும் இல்லை. பெரியாரின் மேல் மட்டும் இல்லை. அம்பேத்காரின் மேல் மட்டும் இல்லை. பா ரஞ்சித்  மேல் மட்டும் இல்லை. இவர்கள் போல் மற்றும் பலர் மேல். 

அப்படி இவர்களின் மேல் வெறுப்பு வர காரணம் ஒன்றே ஒன்று தான்..  மேலே குறிப்பிட்ட அனைவரும் சரி, இவர்கள் வெறுக்கும் மற்றும் பலரும் சரி.. அப்படி என்ன செய்துவிட்டார்கள்?

அவர்கள் செய்த - செய்யும் - செய்ய போகும் ஒரே தவறு..

நலிந்தோரை, கீழ் சாதியினரை, தீண்டதகாதவர் என்று தள்ளி வைத்தோரை .. 

"படி, படி, படி , படித்து கொண்டே இரு " 

என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்கிறார்களே, அந்த ஒரே காரணம் தான்.

அனைவரும் படித்துவிட்டால்... என்ற பயம்..

படத்தின் இறுதி காட்சியில் இடது காலை வலது கால் மேல் தூக்கி போட்டு செய்தி தாள் படிக்கும் அந்த சிறுமியை பார்த்தவுடன் சூர்யாவுடன் சேர்ந்து நானும் மகிழ்ந்து சிரித்து ரசித்தேன்.

வார்த்தைகள் வெளிவராவிட்டாலும் மனதில் ஒரு ஆர்ப்பாட்டம்..

அந்த சிறுமியை  நாங்கள் கொண்டாடுகிறோம்.. நீங்க..

கதறுங்கடா.. கதறுங்க...


3 கருத்துகள்:

 1. நல்ல அறிமுகம், சீக்கிரமாகப்பார்க்கவேண்டும் . பிறர் வலியை உணராவிட்டால் தன் வழி தானே அழியும்

  பதிலளிநீக்கு
 2. நல்ல விமர்சனம் . பார்க்க நேரம் கிடைக்கவில்லை நேரம் வரும் போது கூடியவிரைவில் பார்க்கனும்

  //அனைவரும் படித்துவிட்டால்... என்ற பயம்..//

  ஆபத்து ஆபத்து ஆபத்து அதனால்தான் வன்மம்

  பதிலளிநீக்கு
 3. விசு நன்றாகச் சொல்லியிருக்கீங்க. எனக்கும் பார்க்க ஆர்வம் ஆனால் பார்க்கும் மன வலிமை உண்டா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...