திங்கள், 30 ஏப்ரல், 2018

வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்..

திங்களும் அதுவுமாய் வேலை முடிந்து சாயங்காலம் ஐந்து மணிக்கு இல்லத்தை நோக்கி வண்டியை விட்டேன்... நான் பயணம் செய்யும் இந்த வழி மிகவும் அழகாக இருக்கும்.. இடது புறத்தில் பசிபிக் பெருங்கடலோடு..பயணம்.

இல்லத்தை நெருங்க இருக்கையில் கடைசி சிக்னல் ... எனக்கு முன்பாக இரண்டு மூன்று வண்டிகள் நின்று கொண்டு இருந்தன. சிவப்பு பச்சையாக மாறிய போதும் முதலில் இருந்த வண்டிகள் நகராதலால் இரண்டாவது மற்றும் மூன்றாவது வண்டி இடது புறத்தில் இண்டிகேட்டர் போட்டு நகர, தற்போது என் முறை..



சிறு வயதில் இருந்தே என் அன்னை சொல்லி கொடுத்த பழக்கம்.. யாராவது  பிரச்சனையில் இருந்தால் ... குறைந்தபட்சம் என்ன ஆச்சின்னாவது கேளு..

கேட்டேன்...

பேட்டரி டைட்..

உங்களிடம் ஜம்பர் இருக்கா?

எஸ்..

வண்டியை அவர்கள் வண்டிக்கு பின் வரச்சொன்னார்..

(அட பாவி.. BMW இந்த மாடலில் பேட்டரி பின்னாலே ட்ரங்க்கில் இருக்கு, என்பதை அன்று தான் அறிந்தேன்).

கேபிளை கன்னக்ட் செய்தவுடன் அவரின் வண்டியும் ஸ்டார்ட் ஆக.. நன்றியுடன் அவர் பிரிய...

நான் அடுத்த பச்சைக்கு தயாரானேன்...

மீண்டும் அவரின் வண்டி ஆடி அடங்கியது..

மிகவும் வெட்கத்தோடு அவர்.. ப்ளீஸ் இன்னொரு முறை..

என்று கேட்க்கையில்.. அடுத்த லேனில் வந்த இன்னொரு காரில் இருந்தவர்..  டூ யு கைஸ் நீட் சம் ஹெல்ப் (ஊருக்கு ஊர் எங்க அம்மா போல ஆளுங்க இருக்காங்க தான் போல)...

தேங்க்ஸ்.. வி காட் இட்.

இம்முறை வண்டி ஸ்டார்ட் ஆக அவரின் மனைவி உடனடியாக வண்டியை வேகமாக செலுத்த சிக்கனலில் , அவரை என் வண்டியில் அமர செய்து நாங்களும் சிக்னலை தாண்டினோம்.

அவங்க போய்ட்டாங்களே.. நீங்க.. எப்படி...

இங்கே விட்டுடங்க.. வீடு ஒரு மைல்  தான்.. நான் போகின்றேன்..

இல்ல பரவாயில்லை.. நானே டிராப் பண்றேன் (அம்மாவின் முகம் மீண்டும் வந்தது)

என்று சொல்லும் போதே.. தூரத்தில் அவரின் வண்டி நின்று கொண்டு இருந்தது.. அருகில் செல்ல..

மீண்டும் நின்னுடுச்சி..

பராவாயில்லை , திரும்பவும் கேபிள் எடுங்க ..

என்று நான் சொல்ல..

அவர் மிகவும் தர்மசங்கடமாக ..

ரொம்ப சாரி.. உங்களுக்கு தான் கஷ்டம்..

இல்ல பரவாயில்லை..

வண்டி ஸ்டார்ட் ஆக.. நானோ..

ஒரு அஞ்சு நிமிஷம் இப்படியே இருக்கட்டும்.. கொஞ்சம் சார்ஜ் ஆகட்டும்ன்னு சொல்ல..

பெயர்களை பரிமாறிக்கொண்டோம்.

சரி.. நீங்க முன்னாலே போங்க.. நான் பாலோ பண்றேன்..

பரவாயில்லை..

ஐயோ...இங்கே இருந்து ஒரு மைல் தான். நடுவில் நின்னா திரும்பவும் கஷ்டம்..
என்று நான் அன்புக்கட்டளையிட...

தொடர்ந்தேன்..

இல்லம் வந்தது..

சரி, நான் வரேன்..

கண்டிப்பாக உன் நம்பர் தா.. வி நீட் டு டாக்.

இட்ஸ் ஓகே.

ஐ இன்சிஸ்ட..

கொடுத்துவிட்டு இல்லத்தை  அடைந்தேன்.

இளையவளோ.. ஏன் லேட்?

மனதில்.. அட பாவி.. 30 வயது வரைக்கும் இந்த கேள்வியை என்னை யாருமே கேட்டு இருக்கமாட்டாங்க... 30 ல் இருந்து 40 வரை உங்க ஆத்தா.. இப்ப உன்னை ட்ரைன் பண்ணி வச்சி இருக்காங்க..

லேட் எங்க ? நேர ஆபிசில் இருந்து வரேன்..

பொய் சொல்லாதீங்க..

நான் எதுக்கு பொய் சொல்லணும்.

மம்மா .. உங்களை இவருக்கு போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சாலும் ... யு காட் லக்கி.. ஹி இஸ் நாட் எ பேட் மென் !

நானோ..

என்ன ஆச்சி.. திடீருன்னு எனக்கு நல்ல சர்டிபிகேட் தர?

ரோட்டுல நீங்க ஒருத்தவங்களுக்கு உதவி செஞ்சத பார்த்தேன்..

ஓ..

அத்தனை பேர் இருக்கும் போது.. நீ எதுக்கு டாடா?

அம்மா சொல்லி கொடுத்தது மகள்.

என்ன சொல்லி கொடுத்தாங்க..

யாராவது பிரச்சனையில் இருந்தா  குறைந்த பட்சம் . என்ன பிரச்னையினாவது கேக்கணும்.

குட் பாலிசி ..

நீ எங்கே இருந்து பார்த்த?

நான் எதிர் பக்கத்தில் போனேன். அப்ப பார்த்தேன்.

பேசி கொண்டே இருக்கையில் ..ஒரு டெக்ஸ்ட் வந்தது.

நானும் என் மனைவியும் நீ செய்த உதவியை என்றும் மறக்க மாட்டோம். நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும்.  இல்லமும் அருகில் தான் உள்ளது.  தங்களுக்கு பிடித்த ட்ரிங்க்ஸ் மற்றும் உணவை சொல்லவும்.

அம்மணியினிடம் காட்டினேன்.

அது எப்படிங்க யாரு உங்களை பார்த்தாலும் முதலில் என்ன குடிக்கிறீங்கன்னு  கேக்குறாங்க..

முக ராசி.. வேற ஒன்னும் இல்லை.

இல்லத்தில் அமர்ந்தேன்.. மனதில் ஒரு நிம்மதி. என் அன்னையிடம் நான் கற்று கொண்ட இந்த பாடத்தை இளையவள் பார்த்தாள்.. அவளும் கற்று கொள்வாள்.

என்ன ஆழ்ந்த நினைவில் போய்ட்டிங்க?

ஒன்னும் இல்ல..

எனக்கு ஒரு உதவி வேணும்..

சொல்லு..

அவசரமா ஒரு டப்பா தயிர்..

எனக்கு ரொம்ப டயர்ட்.

ஊருல இருக்கவங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனைன்னு கேக்க சொல்லி கொடுத்த உங்க அம்மா வீட்டுல எப்படி நடந்துக்குனும்ம்னு சொல்லி கொடுக்கலையேன்னு.. இளையவள் போட்டாளே ஒரு போடு.

நல்லது நடக்கட்டும் ராஜா நம்ம ராஜ்ஜியம்... என்று பாடி கொண்டே தயிர் வாங்க சென்றேன்.

பின் குறிப்பு:

என்னை பெத்த மகாராணி.. இன்றும்  வயதான காலத்திலும்... அவங்க வாயில் இருந்து வரும் முதல் வாக்கியம்...என்னால ஏதாவது உதவி  செய்ய முடியுமா?

ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் கெட்ட குணங்கள் பல என்னிடம் அதிகமாகவே உண்டு. ஆனாலும் அன்னையின் அருளால் சில நல்ல குணங்கள் தொட்டிலில் இருந்து தொற்றி கொண்டன.

5 கருத்துகள்:

  1. விசு மனதைத் தொட்ட பதிவு...அந்த வரிகள்!! அம்மாவின் வரிகள்! உங்கள் செல்ல ராசாத்தியின் கடைசி பஞ்ச் சிரிப்பை வரவழைச்சாலும்....அம்மாதான் முதலில் தெரிகிறார்!

    கீதா: அக்கருத்துடன்!!...எஸ்தர் அம்மா இஸ் க்ரேட்! அவங்க விதைத்தது இன்னும் விருட்சமாய் வளரும்! நோ டவுட்!

    பதிலளிநீக்கு
  2. உங்கள் அம்மாவின் பாலிசிதான் எனது பாலிசியும் அதைத்தான் நான் என் மகளுக்கும் சொல்லி தருகிறேன்.. பணத்தால் அல்ல மனத்தால் இப்படி செய்யும் உதவிகளால்தான் எனக்கு இங்கு நல்ல நண்பர்கள் கிடைத்து வருகிறார்கள், பாராட்டுக்கள் விசு

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு, அது சரி உதவி செய்தவர்கள் தர்மசங்கடத்திற்கு உள்ளாவது சகஜம்தானே.

    பதிலளிநீக்கு
  4. அருமையான மனிதரின் அருமையான பதிவு வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல பண்பு அனைவருக்கும் இருக்கவேண்டிய பண்பு. ஆனால் எல்லோருக்கும் வருவதில்லை. பலர் உதவிட நினைப்பார்கள். ஆனால் எதாவது சிக்கல் வந்து விடுமோ என்று தயங்குவார்கள் .தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...