Tuesday, October 21, 2014

முத்து குளிக்க வாரீகளா?

சில நாட்களுக்கு முன் எழுதிய "அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது"! என்ற பதிவின் பின்னோட்டத்தில் "காரிகன்' ( இவர் பதிவை இங்கே படிக்கலாம்) என்ற நண்பரின் எழுத்துக்கள் இருந்தது. என்னுடைய பதிவை பற்றி எழுதிய  இவர் அத்தோடு சேர்த்து த க்கு பிடித்த ஒரு பாடலை பற்று குறிப்பிட்டு இருந்தார். நமக்கு தான் "ஆர்வ கோளாறு  ஏராளமே, தாராளமே ", உடனே நண்பரின் பதிவு தளத்திற்கு சென்றேன்.அடேடே...தமிழ் திரை இசை உலகின் சுரங்கம் என்று சொல்லலாம். எவ்வளவு காரியங்களை தனக்கே ஒரு பாணி அமைத்து கொண்டு என்னமாய் எழுதுகின்றார். தமிழ் திரை இசையை பற்றி அறிய வேண்டுமா? இங்கே செல்லுங்கள்.

சரி, தலைப்பிற்க்கு வருவோம். "முத்துகுளிக்க வாரீகளா"?.

நண்பர்  பதிவில்,  ஓரிடத்தில், பெங்காலை சேர்ந்த பங்காளி ஒருவர் இந்த பாடல் ஹிந்தி பாடல் என்றும் அது தமிழில் தழுவ பட்டும் இருகின்றது என்று சொன்னதாக எழுதி இருந்தார். இப்போது அதை பற்றி நமக்கு தெரிந்த விஷயத்திற்கு வருவோம்.

பல வருடங்களுக்கு முன் பாம்பே நகரில் வாழுந்து கொண்டு இருந்த நாட்கள். அங்கே, நாங்க வசித்த இடம் ""செம்பூர்" , வேலையோ "கேப்ம்ப்ஸ் கார்னர் (Kemps Corner).  பாம்பே வாழ் தமிழர்கள் "அய்யோ பாவம்" என்று சொல்வது காதில் விழுகின்றது. என் இல்லத்தில் இருந்து அலுவலகம் செல்ல மூன்று ரயில்கள் பிடிக்க வேண்டும். மொத்த பயண நேரம் 45 நிமிடம் தான் ஆனாலும், சுறுசுறுப்பாக செயல் பட்டால் தான் வேலைக்கு நேரத்திற்கு செல்ல முடியும்.

காலையில் எழுந்து அடித்து பிடித்து கிளம்பி "செம்பூர்" நிலையத்திற்கு சென்று முதல் ரயில். அதில் ஏறி அடுத்த நிலையமான "குர்லா"வில் இறங்க வேண்டிய காரணத்தினால், பொதுவாக கதவருகே நின்று கொள்வேன். குர்லா வந்தவுடன், வண்டி நிற்கும் முன்னேரே ஓட்டத்திலேயே இறங்கி அடுத்த பிளாட்போர்மில் உள்ள "டாடர்" வண்டிக்கு ஓட வேண்டும். அந்த வண்டி தூரத்தில் உள்ள "கல்யான்" என்ற இடத்தில இருந்து வரும். இந்த வண்டி மிகவும் தூரத்தில் இருந்து வருவதால், அதில் அமர்ந்துள்ள நபர்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் அறிந்தவர்களாக இருப்பார்கள். தினமும் போக வர கிட்ட தட்ட 2-3 மணி நேரம் இதில் செலவழிப்பதால்இவர்கள் தினமும் பாட்டு பாடி கொண்டே வருவார்கள்.  இதில் "டாடர்" நிலையத்தில் இறங்கி அடுத்த ரயில் பிடித்து "கரன்ட் ரோட்டில்" இறங்கி அலுவலகம் செல்வேன். மீண்டும் வரும் போதும் இதே மூன்று ரயில்கள், எதிர் திசையில்.

இந்த இரண்டாவது வண்டியில் பாடல்கள் என்று சொன்னேன் அல்லவா? அந்த பயணிகள் பொதுவாக ஹிந்தி பாடல்களை தான் பாடுவார்கள். ஒரு நாள், என்னிடம் " ஆப் மதராசி ஆர் கியா" என்று கேட்க நானும் " ஹா ஜி" என்று தலைய ஆட்ட, அங்கே இருந்த நபர் ஒருவர்... "ஹரே பாய், மதராசி தோஸ்த்துக்கு ஏக் மதராசி கானா காவோ" என்று சொல்ல.. அனைவரும் சேர்ந்து  "முத்து குளிக்க வாரீகளா"  பாட ஆரம்பித்தார்கள். இவர்கள் இந்த தமிழ் பாடலை பாட ஆரம்பித்தவுடன் நான் பேய் அறைந்தவன் போல் ஆகிவிட்டேன், (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக வேறொரு நாள் சொல்கிறேன்)

கொஞ்சம் அதிர்ந்தேன் என்று தான் சொல்ல வேண்டும். அடே டே, இங்கேயும் தமிழ் பாடலா என்று யோசிக்கும் வேளையில், மூன்றாவது வரியில் இருந்து பாடலின் வார்த்தைகள் ஹிந்திக்கு மாற, ராகமும் சற்று விலகியது.  அன்றில் இருந்து இந்த பாடலை இந்த பயணிகள் என்னை பார்த்தவுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். ஒரு நாள் ஆந்திராவை சேர்ந்த நண்பன் ஒருவன் என்னோடு வர, அவனை அவர்கள் விசாரிக்க அவனும் ஆந்திரா என்று சொல்ல அவனுக்காக "ராமையா வொஸ்த்தாவையா' என்ற பாடலை பாடினார்கள்.

சரி, விஷயத்திற்கு வருவோம். "முத்து குளிக்க வாரீகளா" எப்படி இங்கே வந்தது என்று என் ஆர்வ கோளாறு என்னை தூங்க விடாமல் பண்ணியது. அதற்கு தேடி கண்டுபிடித்த பதில் தான் இது.

"அனுபவி ராஜா அனுபவி" படத்தை எடுக்கையில், இயக்குனர் பாலச்சந்தர், இதில் நாகேஷ் ஒரு இரட்டை வேடம் என்றும் ஒரு பாத்திரம் நவீன பட்டணத்து  பையன் போலவும் அடுத்த வேடம் தூத்து குடியை சேர்ந்த கடல் வாழ் பகுதி பையனை போலவும் என்று   கவியரசு கண்ணதாசனிடம் சொல்லி, முடிந்தால் தூத்துகுடி தமிழில் ஒரு காதல் பாட்டு எழுதி தருமாறு கேட்டு கொண்டார்.

இதை சொல்லும் போதே, பாலச்சந்தர் அவர்கள் கவியரசிடம், இந்த பாடலில் உங்கள் குசும்பை எல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டிவிட்டு தூத்து குடி தமிழுக்கு  உங்கள் பாணியில் அழகு சேருங்கள் என்று சொல்ல, விஸ்வநாதன்  அவர்கள் ஒரு மெட்டு போடஉருவான பாடல் தான் இது.
படம் ஒரு சூப்பர் ஹிட்.


முத்து குளிக்க வாரீகளா?(தமிழ்) ஹிந்தி

அந்த காலத்தில் இந்திய திரை உலகில் தமிழன் தானே "ஜாம்பவான்". உடனே ஓடி வந்தார் ஹிந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்பூப். பாலச்சந்தரிடம் உரிமையை பெற்று ஹிந்தியில் இந்த படத்தை எடுக்க, எல்லாம் நன்றாக அமைந்தது, இருந்தாலும், இந்த "முத்து குளிக்க வாரீகளா" பாட்டு " ஹிந்தியில் சரியாக அமையவில்லை.

எத்தனையோ வார்த்தைகளை ஹிந்தியில் போட்டு பார்த்தும் சரியாக அமையாததால், மெஹ்பூப் அவர்கள் இந்த படம் ஹிந்தியில் இருந்தாலும் பரவாயில்லை, இந்த  பாடல் மட்டும் தமிழிலேயே ஆரம்பிக்கட்டும் என்று சொல்லி இந்த பிரச்சனைக்கு ஒரு "அழகு  புள்ளி "வைத்தார்.  இந்த ஒரு செயலே ..." பாலசந்தர்-கண்ணதாசன்-விஸ்வநாதன் "  கூட்டணிக்கு நிகர் யாரும் இல்லை என்பதை உறுதி படுத்தும்.

                                         முத்து குளிக்க வாரீகளா? (ஹிந்தி)
"அனுபவி ராஜா  அனுபவி" படத்தை பற்றி பேசினால் என்னால் இன்னொரு காரியத்தை பேசாமல் இருக்க முடியாது. இந்த தூத்துகுடி நாகேஷ் முப்பது என்னும் எண்ணை "நுப்பது" என்று தான் சொல்லுவார். இவர் இப்படி சொல்வதே படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒன்றாக அமையும். இந்த நூப்பதை வைத்து பங்களூரில் எனக்கு அமைந்த இன்னொரு நண்பன் (இவனும் தூத்துக்குடி , நுப்பது என்று தான் சொல்வான்) சேகரை எப்படி காலாய்த்தேன் என்பதை இங்கே படியுங்கள்.

இந்த மறந்த காரியத்தை எழுத தூண்டிய காரிகன் அவர்களுக்கு கோடி நன்றி.

பின் குறிப்பு :

 இந்த முத்து குளிக்க வாரீகளா ஹிந்தியில் வந்த கதையை நான் இயக்குனர் பாலச்சந்தர் சொல்ல கேட்டுள்ளேன். அதனால் இது ஒரு உண்மை செய்தி , கற்பனை ஏதும் இல்லை.

www.visuawesome.com

15 comments:

 1. ஹப்பா எத்தனை அருமையான செய்தியைச் சொல்லியிருக்கின்றீர்கள்! பாலசந்தர்-கண்ணதாசன்-விஸ்வநாதன் கூட்டணிக்கு ஒரு "ஓ" போட்ய்வோம்! ஹிந்தி உலகில் தமிழைப் பரப்பியதால் "ஜே" போடுவோம்! புதிய தகவல்! இப்படி இன்னும் எத்தனை தகவல்களை வைத்துள்ளீர்கள் நண்பரே! அவிழ்த்து விடுங்களேன் ப்ளீஸ்....எனா நாங்களும் திரை ரசிகர்கள்! ரசனையான பதிவு!!!! இந்தப்பாடலும் அருமையான பாடல்....

  எல்லாம் சரி "பேய் அறைந்த கதையை கண்டிப்பாக வேறொரு நாள் சொல்கிறேன்) இதை எப்போதான் போயோட்டப் போகின்றீர்கள்! அந்தப் பேயோட்டலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம் நண்பரே!

  காரிகன் வலைத்தளம் அறிய உதவியதற்கு மிக்க மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றி துளசி அவர்களே. பேய் கதையை நேரம் வரும் போது கண்டிப்பாக சொல்கின்றேன்.

   Delete
 2. நண்பர் விசு,

  முதலில் நன்றி. நான் ஏற்கனவே உங்கள் தளத்தில் நீங்கள் எழுதியிருந்த ஜாஸ் படம் பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் அனுப்பியிருக்கிறேன். அது ஒரு தரமான நகைச்சுவையான பதிவாக இருந்தது. நிற்க. என் பதிவைப் படித்தோடல்லாமல் அதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்த உங்களின் பண்பு பாராட்டுக்குரியது.

  முத்துக்குளிக்க வாரீகளா பாடலைப் பற்றி ஒரு பெங்காலி நண்பன் மூலம் எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்துகொண்டு நீங்கள் இத்தனை அசத்தலான கட்டுரையை வெளியிடுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் பாடலைப் பற்றி இன்னொரு சங்கதியும் சொல்லவேண்டும். முத்துக்குளிக்க வாரீகளா பாடலைக் கேட்ட ஹிந்தியின் இசை சகாப்தமான ஆர் டி பர்மன் "இதுபோல ஒரு பாடலை என்னால் தர இயலாது." என்று குறிப்பிட்டு எம் எஸ் வியை மனதார வெகுவாக பாராட்டியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பாடல் ஹிந்தியில் அப்படியே வந்திருப்பதற்கான காரணத்தை நீங்கள் எழுதியிருப்பதைக் காணும்போது அந்தத் தகவலின் உண்மை உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதற்கு இன்னொரு நன்றி.

  நான் பெரும்பாலும் இசை பற்றியே எழுதுவதை விரும்புகிறேன். நீங்கள் என்னுடைய எல்லைகளற்ற இசைவெளி, சுவர்களைத் தாண்டி போன்ற பதிவுகளை படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் நிறைய பேச வாய்ப்பிருக்கிறது.

  எனக்கு எதற்கு கோடி நன்றி? நானல்லவா அதை சொல்லவேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. என்னாது? எதற்கு நன்றியா? காரிகன் அவர்களே, தீபாவளியும் அதுவுமா ஓர் நல்ல நவரசையான பதிவா போடா வேண்டும் என்று காத்து இருந்தேன். ஆனால் தலையில் எதுவும் ஓட வில்லை. உங்கள் பதிவை படித்தவுடன் நேராக பாம்பே ஓடி விட்டேன். அருமையான ஆரம்ப நாட்கள், அங்கே நடந்த விஷயங்கள், மற்றும் உங்கள் பாட்டை வைத்து பதிவை இட்டு விட்டேன், அதற்காக தான் இந்த நன்றி. உங்கள் பதிவு மட்டும் கிடைத்து இலாடிவில், இன்னும் மண்டை காய்ந்து யோசித்து கொண்டு இருந்து இருப்பேன்.

   Delete
 3. நண்பரே! சுப்புத் தாத்தா வலைத்தளம் கண்டிருக்கின்றீர்களா? அதிலும் அவரும் நிறைய நல்ல பாடல்களை அறிமுகப்படுத்தி பேசியிருப்பார்....

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக அங்கே செல்கின்றேன்... தொட்டனை தூறும் மணற்கேணியாக தான் இருக்கும் என்று நினைக்கின்றேன். வருகைக்கு நன்றி.

   Delete
 4. L.R.ஈஸ்வரி அவர்களின் குரலில் ஆர்பாட்டமும் TMS குரலில் அடக்கமும் கொண்டிருக்கும் ஒரு அசத்தலான பாடல்

  இணையதளம் மற்றும் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாது. நல்ல வேலை நினைவு படுத்தினீர்கள். TMS மற்றும் LR ஈஸ்வரி, என்ன அருமையான பாடகர்கள். தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 5. முத்துக்குளிக்க வாரியளாவில் இத்தனை செய்திகளா? அசந்துவிட்டேன்! பதிவிட்ட உங்களுக்கும், பதிவிட தூண்டிய காரிகன் அவர்களுக்கும் நன்றிகள்! வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தளிர். இந்த பாடல் மிகவும் அற்புதமான பாடல் அல்லவா? அதற்க்கு பின்னால் இந்த மாதிரி சில கதைகள் இருப்பது எதார்த்தம் தானே. தீபாவளி நல வாழ்த்துக்கள்!

   Delete
 6. விசுAWESOME
  \\இந்த முத்து குளிக்க வாரீகளா ஹிந்தியில் வந்த கதையை நான் இயக்குனர் பாலச்சந்தர் சொல்ல கேட்டுள்ளேன். அதனால் இது ஒரு உண்மை செய்தி , கற்பனை ஏதும் இல்லை.\\
  இந்த வார்த்தைகள் அவசியமே இல்லை. பாலச்சந்தர் அவ்வப்போதும் அடிக்கடியும் இந்த அனுபவத்தைச் சொல்லியே வருகிறார். தவிர யூடியூபிலும் அவருடைய இந்தப் பேட்டியைப் பார்த்த ஞாபகம்.

  தங்களின் மும்பை அனுபவத்தையும் இணைத்து ஒரு அருமையான, முற்றிலும் வித்தியாசமான பாடலைப் பற்றிய கருத்துக்களை இங்கே சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். தமிழ் அல்லாமல் வேறு மாநிலங்களில் இருக்கும் நண்பர்கள் தமிழ் பாடல்களைச் சிலாகித்தும் சிறப்பித்தும் சொல்லும் தருணங்கள் நமக்கு எத்தனைப் பெருமையாகவும் பேருவகையாகவும் இருக்குமில்லையா?

  கர்நாடகத்தைச் சேர்ந்த பல கன்னட நண்பர்களும், தெலுங்கு நண்பர்களும் கண்ணதாசனின் போனால் போகட்டும் போடா, வீடுவரை உறவு, சட்டி சுட்டதடா பாடல்களைக் கேட்டுவாங்கி கன்னடத்தில் எழுதிக்கொண்டு அதற்கான அர்த்தங்கள்(முக்கால்வாசி அவர்களுக்கே தெரியும்; தெரியாத இடங்களை மட்டும்) கேட்டுத் தெரிந்துகொண்டு போன கதைகள் எல்லாம் நிறைய இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'சொல்லப்படாததனால்' சில நண்பர்கள்- அதுவும் இணைய நண்பர்கள்- இந்தப் பாடல்களின் மகத்துவம் பற்றியெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

  உங்கள் நகைச்சுவையான பதிவுகளை ஏற்கெனவே படித்துள்ளேன். தொடர்ந்து நகைச்சுவையாக நிறைய எழுதுங்கள்.ஏனெனில் எல்லாவகையான எழுத்துக்களும் தமிழில் நிறைய இருக்கின்றன. நகைச்சுவைதான் மிகவும் குறைவு.

  ReplyDelete
  Replies
  1. அமுதவன் அவர்களே, முதல் முதலாக பின்னோட்டம் இட்டு இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். தங்கள் தளத்திற்கு சென்று தம்மை பற்றியும் தம் எழுத்துக்களை பற்றியும் அறிந்தேன். நிறை குடம் ஐயா நீர்! நீர் என் தளத்திற்கு வருவது பாக்கியம் தான், சரியாக சொன்னீர். இப்போது எல்லாம் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றனர். என் நகைச்சுவை பதிவுகளை நீங்கள் படிப்பது, மகிழ்ச்சியே.

   Delete
 7. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி காயத்ரி அவர்களே, தமக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

   Delete
 8. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
  http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...