வெள்ளி, 17 ஜனவரி, 2014

மகிழ்ச்சியான உழவனின் சோக க(வி)தை..

அருமை நண்பன், ஆருயிர் தோழன் என் கல்லூரி சக மாணவன் சாம்சனின் அட்டகாசமான கவிதை. கேட்டு மகிழுங்கள்.

 https://soundcloud.com/vcornelius/kecms5p9wm6h


டைகர் சோறும் ஜாஸ் புட்டும்...

ஆங்கில படங்கள ரசித்து பார்க்க முடியாத காலம் அது. ஏன் என்று சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ். முதல் காரணம் இந்த வெள்ளைக்காரன் பேசும் கொலகொல இங்கிலிஸ் கொஞ்சமும் புரியாது. இரணடாவது காரணம் கண்ணுக்கு குளிர்ச்சியா வர காட்சிகளை சென்சர் பண்ணிவிடுவார்கள். இருந்தாலும் பரவாயிலைன்னு எப்பவாவது ஒரு முறை ஆங்கில படம் பார்க்க ஒரு சந்தர்பம் வரும்.

சொன்னா நம்ப மாட்டீங்க . 80'ஸ் எல்லாம் ஆங்கில படம் அமெரிக்காவில ரிலீஸ் ஆகி ஒரு 5-10 வருஷம் கழிச்சிதான் நம்ம ஊருக்கு வரும். அப்படி வந்த ஒரு படம் தான் "ஜாஸ்". அதுவரை சுறா என்றாலே "புட்டு" என்று மகிழ்ந்து வந்த எங்களுக்கு சுறா மீனை வைச்சி ஒரு முழு படம் எப்படி எடுப்பார்கள் என்பதே பெரிய ஆச்சரியம்.

சரி, கதைக்கு போவோம். வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த நாட்கள் அது. அங்கே Taj, Apsara, dinakaran, Raja மற்றும் பல சினிமா கொட்டகைகள் உண்டு. இதில் தினகரின் தியேட்டரில் மட்டும் தான் ஆங்கில படம் ஓடும். எங்கள் கல்லூரிக்கு மிகவும் அருகில் இந்த தியேட்டர் இருப்பது எங்கள் எல்லோருக்கும் மிக்க வசதி. உண்மையாக சொல்ல போனால், எங்கள் வகுப்பறையில் இருந்து கல்லூரி நூலகத்தை விட  தாஜ், அப்சரா அருகில் இருக்கும். இந்த நேரத்தில் தான் தினகரன் தியேட்டரில் "இஸ்தான்புல் இளசுகள்" (That man from Istanbul எவன் மொழிபெயர்தானோ ) என்ற படத்தை தூக்கி விட்டு ஜாஸ் ரிலீஸ் செய்ய பட்டது.வேலூரை சுற்றி ஜாஸ் பட சுவரொட்டிகள். அதில் ஒரு பெண் கடலின் மேல் நீந்துவாள்,அவள்க்கும் கீழே ஒரு பெரிய சுறா மீன் அவளை "ஸுவாக" செய்ய காத்துகொண்டு இருக்கும். போஸ்டர் ஒட்டிய முதல் சில நாட்களில் எங்கள் கண்களுக்கு அந்த போஸ்டரில் ஒரு சுறா இருந்ததே தெரியாது. தவறாக நினைக்க வேண்டாம். அந்த சுறவின் படம் ஆங்கில எழுத்தான "A" என்ற வடிவத்தில் இருந்ததால் நாங்கள் அனைவரும் அதை "அடல்ட்ஸ் ஒன்லி" என்று நினைத்து கொண்டோம்.




படம் ரிலீஸ் ஆனா மறுநாள் காலை காட்சி செல்வதாக ஒரு திட்டம். நான், நண்பன் பாலாஜி, சத்திய பிரசாத் , எலி (அவர் பெயர் ரொம்ப நீளம், அதனால் நாங்க சுருக்கி எலின்னு கூப்பிடுவோம்), முத்து, ஜான் (இவர் பெயர் மட்டும் ஜான் இல்ல, ஆளு உயரமும் ஜான் தான்), மற்றும் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் சஜித்  அனைவரும் போவதாக ஒரு பேச்சு. 

அந்த காலத்தில் நாங்க என்ன செய்தாலும் ஒரு பிளான் பண்ணிதான் தான் செய்வோம். எல்லோருமாக சேர்ந்து முதல் பீரியடில் அட்டடன்ஸ் கொடுத்துவிட்டு பிறகு எஸ்கேப் என்ற ஒரு திட்டம். காலை ஒரு 9 மணிக்கு வகுப்பு ஆரம்பிக்குமுன் அனைவரிடமும் காசு இருக்கிறதா என்று  கணக்கு  பார்த்து விட்டு (B.com Students) முதல் வகுப்பு முடிந்தவுடன் கிளம்பிவிட திட்டம்.  

எவன் செய்த பாவமோ, அன்றைக்கு பார்த்து எங்கள் முதல் வகுப்பு எடுக்கும் Prof. Arullapan அவர்களுக்கு பதிலாக எங்கள் Head of the Dept Dr. Arunasalam வந்துவிட்டார். அவரை பார்த்த எங்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. இவரை ஏமாற்றவே முடியாதே. இப்ப என்ன செய்வது. அவர் எப்போதுமே வகுப்பு ஆரம்பிக்கும் பொது அட்டேன்ட்ஸ்  எடுக்க மாட்டார். வகுப்பு முடியும் போது தான் எடுப்பார். சினிமா போக நினைத்த எங்கள் முகங்கள் பேய் அறைந்ததை (பேய் அறைந்த கதையை வேறு ஒரு நாள் சொல்கிறேன்) போல் ஆகி விட்டது. இவ்வளவு நேரம் இருந்த நட்பு பிரிந்து. அவனவன் அவனவனுக்கு தெரிந்த முறையில் எஸ்கேப் என்று கண்ணிலே பேசி கொண்டோம். நேரம் 9:45. படமோ 10:15. படத்தின் முதல் சீனில் தான் கதையே அமைந்து உள்ளது என்று பங்களூரில் இருந்த ஏன் சித்தி பையன் சொன்னாதால் என்னால் அங்கே உட்கார இயலவில்லை. அப்போதுதான் நினைவிற்கு வந்தது, Dr. அருணாசலத்தின் வீக் பாயிண்ட். அவரின் வகுப்பில் யார் கொட்டாவி விட்டாலும் அவருக்கு பிடிக்காது. உடனடியாக அந்த மாணவனை எழுப்பி நான்கு வார்த்தை சொல்லி போய் முகத்தை கழுவி கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். பெண் பார்க்க போன மாப்பிளை போல ஒரு ஏக்கத்தோடு அவர் பார்வை என்மேல் படாதா என்று ஏங்கி கொண்டு இருந்த வேலையில் என்னை பார்த்தார். உடனே என் வாய் கிளியும் அளவுக்கு ஒரு கொட்டாவி விட்டேன். எழு, இழவு, கழுவு என்று அனுப்பிவிட்டார்.  

நான் வெளியே செல்லும் போது என் முகத்தில் ஒரு வெற்றி சிறிப்பு. சினிமாவிற்கு வர இறுக்கும் மற்ற நண்பர்கள் முகத்தில் ஒருசொல்ல முடியாத சோகம்.  என்ன செய்வது? ஒவ்வொருவனும் செய்கையினாலே எனக்கு ஒரு டிக்கெட், எனக்கு ஒரு டிக்கெட் என்று கேட்டான்.  சரி, சரி என்று தலை ஆட்டிக்கொண்டே கிளம்பினேன். மனதில் ஒரு நெருடல். அடடா வேறு ஏதாவது செய்து அனைவரையும் அழைத்து கொண்டு வந்த இருக்கலாமே? 

அவசரமாக போய்கொண்டு இருந்த ஏன் தோள்மேல் ஒரு கை விழுந்தது. இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய் என்று கேட்ட P.E. Instructor விக்டரை, ஒன்னும் இல்ல சார், லேட் ஆச்சி என்ற ஒரு உண்மையை பொய்யாக சொன்னேன். சரி, இன்னும் அரை மணி நேரத்தில் காலேஜ் ஸ்லொ சைக்கிள் போட்டி இருக்கு, உங்கள் வகுப்பில் யாராவது கலந்து கொள்வார்களா என்றார். அட பாவி, கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி சொல்லி, என்னுடன் சினிமாவிற்கு வர இருந்த அனைத்து நண்பர்கள் பெயரையும் ஒரு தாளில் எழுதி கொடுத்தேன். அது மட்டும் இல்லாமல் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் முன் அழைத்தால் தான் வருவார்கள் இல்லாவிட்டால் வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு, எங்களுக்கே உரித்தான கல்லூரி போகி மரத்து அடியில் அமர்ந்தேன்.5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் என் நண்பர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வந்தார்கள். பாலாஜி நேராக வந்து, மாமு, யார் பண்ண புண்ணியமோ, PT  எங்க பேரை மட்டும் கூப்பிடாருன்னு சொன்னான். நடந்த கதையை அவனுக்கு விளக்கிவிட்டு வந்த வேலைய பார்க்க கிளம்பினோம். 

படம் ஆரம்பித்தது. முதல் சில காட்சிகள் எல்லாமே இருட்டில் எடுக்கபட்டது. என்ன நடக்குதுனே தெரியவில்லை, அந்த பெண் நீந்தவும் இல்லை அந்த சுறா அறிமுகமான காட்சியும் இல்ல. எல்லாம் சென்சார் கட்டிங். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்த சுறாவை வெளிச்சத்தில் காட்டினார்கள். அதை பார்த்த எலி மாமு, இது மட்டும் நம்ம கையில கிடைத்தால் ஒரு கல்யாணத்துக்கே புட்டு செய்யாலாமே என்றான். முதல் காட்சியை காட்டாத காரணத்தினால் நண்பன் சஜித்  குழம்பி போய் விட்டான்.  இந்த சுறா என்ன பண்ணிவிட்டதுன்னு இதை இந்த துரத்து துரத்துகிறார்கள் என்று கேட்டான்.  ஆனாலும் சும்மா சொல்ல கூடாது. அருமையான படம். ஸ்டீவென் ரொம்ப அட்டகாசமா எடுத்து இருந்தார்.

இடைவேளைக்கு பின்னால் சில காட்சிகளில் நாங்கள் அதிர்ந்து விட்டோம். நாங்கள் அனைவரும் அந்த காலத்தில் அருகில் உள்ள கிணறில் நீச்சலடிக்க செல்வோம். இந்த படம் பார்த்த பின், சில நாட்கள் அந்த கிணற்றிற்கு கூட நீந்த செல்லவில்லை. அவ்வளவு பயம். 

அது சரி, இந்த கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மதம் என்று பார்க்கின்றீர்களா? அது ஒன்னும் இல்லங்க. அடுத்தநாள் மதிய உணவு நேரத்தில் அனைவரும் அமர்ந்து, யார் யார் என்ன உணவு எடுத்து வந்தீர்கள் என்று வழக்கம் போல் கேட்டோம். அப்போது அங்கே இருந்த "எலி மாம்" சொன்ன பதில் தான் "  டைகர் சோறு ஜாஸ் புட்டு" அதாவது "புளி சோறு சுறா புட்டு". அப்படியே அவன் எடுத்து வந்த சுறா புட்டை சாப்பிடும் போது தோளின் மேல் ஒரு கை விழுந்தது. நீ சொன்ன ஒருத்தனும் சைக்கிள் போட்டிக்கு வரவேயில்லே என்று சொன்ன PE Victor முகத்தில் சரியான கடுப்பு. அது ஒன்னும் இல்ல சார், நம்ப பசங்க slow சைக்கிள் போட்டிக்கு ஸ்லௌவாதான் போகணும்னு தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் என்று ஒரு பொய்யை உண்மையாக சொன்னேன்.