வெள்ளி, 15 மார்ச், 2019

மொய்யுக்கே மொய்யா...! சாக்கிரதை!

ஆலய மணி அடித்து தாலியை கட்டி முடித்து அங்கு இருந்த அனைவரும் ரிசப்ஷன் ஹாலுக்கு கிளம்ப மாப்பிளை - மணமகள் மற்றும் சிலர் போட்டோ எடுத்து கொண்டு இருக்கையில்..


ரிசப்ஷன் ஹாலில் ....

மாப்பிளை வீட்டு ஆள் ஒருவரும் பெண் வீட்டு ஆள் ஒருவரும் ...

"உங்க குடும்பத்தில் இருந்து எல்லாருக்கும் தெரிஞ்ச ஆளு ஒருத்தர வர சொல்லுங்க எங்க வீட்டு ஆள் ஒருத்தரையும் அனுப்புறேன் ..."

"....ஏன்!?"

"ரிசப்ஷனுக்கு நிறைய பேர் வருவாங்க, தெரியாதவங்க யாரும் வந்துட கூடாது தானே ... "

"நல்ல ஐடியா...!"

"இருவரும் வாசலில் நின்று கொண்டு கண்ணாலேயே ஒருவரையொருவர்  பேசிக்கொண்டு பரிசோதித்து அனுப்பினர்.  இருவருமே அறியாத சிலர் உள்ளே நுழைகையில், அவர்களை தனியாக அழைத்து விசாரித்து வெளியே அனுப்பி வைத்தனர்.


இப்படி நிகழ்ச்சி போய் கொண்டு இருக்கையில்..

ஒருவர் இன்னொருவரிடம்,

"ஐயோ.. தப்பு நடந்துடுச்சி..!!"

"என்ன..?"

"ஒருத்தரை கூப்பிட்டு விசாரிச்சேன்.. அவர் மாப்பிளையயோட கூட வேலை செய்யறவராம் .. ரொம்ப கோச்சினு போய்ட்டார்"

"சரி விடு.."

"இல்லை, போகும் போது இனிமேல் இப்படி கூப்பிட்டு அசிங்க படுத்தாதீங்க , இந்த கிப்ட்டை மட்டும் மாப்பிள்ளையிடம் கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டு ரொம்ப விசனமா போய்ட்டாரு"

"அட பாவி.. அந்த ஆளு தான் கிப்ட்டோட இருந்தானே, அப்புறம் ஏன் அவனை செக் பண்ண.. இனிமேல் யாராவது கிப்ட்டோட வந்தா செக் பண்ணாத.. உள்ள விட்டுடு"

"சரி!"

ரிசப்ஷன் ஆட்டம் பாட்டம் என்று போய் கொண்டு இருந்தது. ஒரு பக்கம் அறுசுவை பந்தி விருந்து. மறுபக்கம்  குடும்பம் குடும்பமாய் மேடைக்கு சென்று  கிப்ட் மற்றும் மொய் கவர்களை கொடுக்க, அனைவரும் இன்பத்தில்   
மூழ்கி கொண்டு இருக்க....

நன்றாக உடை அணிந்து கொண்டு பெரிய கிப்ட் மற்றும் மொய் கவர் ஒன்றுடன் ஒருவர் மேடைக்கு வர..

மணமகள் அவள் தோழிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டு இருக்க, இவரோ மாப்பிள்ளையிடம் சென்று..

"நான் அவங்களோட வேலை செய்யறேன். அவங்க தோழிகளோடு பிசி .. இந்த கிப்ட்டையும்,  கவரையும் அவங்கள்ட்ட கொடுத்துடுங்க..வாழ்த்துக்கள்"

என்று சொல்லிவிட்டு கிளம்பினார்..

அன்று இரவு :

கிப்ட் மற்றும் கவர்களை பிரித்து பார்க்கையில்... இவர் தந்த பெட்டியை திறக்கையில் உள்ளே வெறும் "செல்லூர்" அட்டைகள்.  சரி விடு... யாரோ ஒருத்தர் ஏமாத்திட்டு சாப்பிட்டு போய் இருக்கார் என்று நினைக்கையில்.. கவரை பிரித்து கொண்டு இருந்தவர் .."அட பாவி " என்று அலற..

"என்ன ஆச்சி..!"

"இந்த கவரை பாரு .. உள்ள வெறும் வெத்து பேப்பர். நல்லா ஏமாந்தோம். கவர் வெளியே பார்த்தா ஒரு ரூவா காயின் வைச்சி, பட்டு குஞ்சம்  எல்லாம் போட்டு ...உள்ளே வெறும் பேப்பர்.."

"அய்யயோ.. இந்த கவரா ? "

என்று அருகில் இருந்த இன்னொரு அம்மணி அலற..

"ஏன்.. ?"

"இது கொஞ்சம் வித்யாசமா அழகா இருக்கேன்னு நான் அப்பவே நினைச்சேன்.. அந்த ஆள்... !"

"எந்த ஆள்?"

"ஐயயோயோ மோசம் போட்டோம்.."

"என்ன ஆச்சி.. சொல்லி தொலை..."

"ரிசப்ஷனில் ஒரு ஆள்., மாப்பிள்ளைட்ட ஒரு கவர் கொடுத்தாரு.. நான் தானே பக்கத்துல எல்லா கிப்ட்டையும் கவரையும் வாங்கி வைச்சி இருந்தேன்!"

"அதுக்கு என்ன இப்ப!?"

"கவரை கொடுத்தவர் மேடையில் இருந்து இறங்கி மீண்டும் மேடையில் ஏறி.. "

"ஏறி..?"

"நேரா  என்கிட்ட வந்து...ஐயோ.. சாரி, தப்பு நடந்துடுச்சி.. இது முடிஞ்சதும் நேரா வேற கல்யாணத்துக்கு  போறேன். அவங்களுக்கு குடுக்க வேண்டிய கவரை இங்கே கொடுத்துட்டேன் .. சாரி ன்னு சொல்ல.."

"சொல்ல..."

"நானும் , இட்ஸ் ஓகே .. இதுல உங்க கவர் எதுன்னு கேக்க .."

"கேக்க..!"

"அவரும்.. அதுல இருந்த ஒரு கவரை எடுத்துன்னு இந்த கவரை தந்தாரு!"

"கிழிஞ்சது  போ.."

இது இப்படி போய் கொண்டு இருக்கையில்..

"ஐயையோ.. மோசம் போய்ட்டும்"

என்று இன்னொரு அம்மணி அலற..

"அங்கே என்ன போச்சி.."

"இந்த கிப்ட் பாக்ஸ் பாரு.. உள்ள முழுக்க "செல்லூர் தெர்மாகோல்"!

"அட இந்த பாக்ஸா ! இதை அந்த கோச்சிக்கினு போனாரே அவரு குடுத்தாரு"


பின் குறிப்பு :

இது சென்ற வருடம் ஒரு திருமணத்தில் உண்மையாகவே நடந்தது. திருமண இல்லத்தோர்  சாக்கிரதை. 

4 கருத்துகள்:

  1. ஹா ஹா ஹா ஹா இப்படியுமா....செய்யறாங்க...

    சாப்பிட ஆள் இப்படித் தெரியாதவங்க வந்து சாப்பிடுவதுண்டு...ஆனா மேடை வரை வந்ததில்லை...யாராவது அவங்க சாப்பிட்டுப் போறது வரை கண்காணிப்பதுண்டு. இனி ஜாக்கிறதையா இருக்கனும் போல...

    பதிலளிநீக்கு
  2. என்னெவோ தெரியவில்லை. மனதுக்குக் கொஞ்சம் கவலையாக இருந்தது. கவர் மாற்றி வாங்கிப் போனவர் பற்றியல்ல. மற்றவர்! மாட்டினால் கேவலம் என்பது தெரிந்தும் சாப்பிட வருகிறார்கள் என்றால்... உண்மையில் பசியாக இருந்திராரா!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...