Tuesday, October 30, 2018

குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா .. பெண்களா?

இது என்ன விஷ பரீட்சை என்று வியப்பா? இந்த தலைப்பை படித்ததும்  எனக்கும் இந்த வியப்பு வந்தது.

தென் கலிபோர்னியா தமிழ் சங்கத்தின் 2018  தீபாவளி கொண்டாட்டத்தில் நடக்க இருக்கும் பட்டிமன்றத்தில் தலைப்பு தான் இது. சங்கத்தின் தலைமையில் இருந்து இதில் பங்கேற்கும் படியான அன்பான விண்ணப்பம் வந்தது. இருந்தாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏற்று கொள்ள முடியாத நிலை.

சிரிக்க சிந்திக்க என்று வந்த இந்த பட்டிமண்டப தலைப்பை பார்த்தவுடன்  மனதில் ஏக பட்ட  நினைவுகள்.

ஒரு வேளை, இந்த பட்டிமன்றத்தில் நான் பேசும்படி இருந்தால்...

குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் பெண்களே என்று தான் பேசி இருப்பேன்.

என்ன விசு?

ஒரு ஆணாக இருந்து கொண்டு எப்படி மகிழ்ச்சி பெண்களால் வருகின்றது என்று சொல்வாய் என்று அநேகர் கேட்பது காதை  கிழிக்கின்றது. இருந்தாலும் அது தானே உண்மை..  அடியேனின் சில வாதங்கள்.


இந்த தலைப்பில் பெண்களா ஆண்களா என்று இருந்தாலும் அதை கணவனா அல்ல மனைவியா என்று தான் விவாதிக்க தேவை படுகின்றது.Happy Wife  - Happy Life...

இது பொதுவாகவே நகைச்சுவைக்காக சொல்ல பட்டாலும்  அதில் பல உண்மைகள் உண்டு. ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் தலைவி மகிழ்ச்சியாக  இருக்க வேண்டும்.

தமிழ் ஒரு அழகிய மொழி. மனைவிக்கு "இல்லாள்" என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு என்ன அர்த்தம். அவள் இல்லத்தை ஆள்பவள் என்று தானே.  அதே ஒரு கணவனை இல்லான் என்று அழைத்து பாருங்கள். ஒன்றும் இல்லாதவன் என்று தான் பொருள் படும்.

மனைவிக்கு "இல்லத்தரசி" என்று மற்றொரு பெயரும் உண்டு. ஏன் தெரியுமா? அவள் இயற்கையிலேயே அரசியாக உருவெடுத்தவள்.  எங்கேயாவது எப்போதாவது எந்த கணவனையாவது இல்லத்தரசன் என்று யாராவது சொல்லி கேள்வி பட்டு இருக்கின்றோமா? கிடையவே கிடையாது.

ஒரு ஆண் தன்  குடும்பத்தை மகிழ்ச்சியாக வைக்க விரும்பினால் அவன் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்று. அவனுடைய மனைவியை மட்டும் மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் போதும்.  அவன் வாழ்க்கை வெற்றி.

மகிழ்ச்சியாக இருக்கும் மனைவி குடும்பத்தை சார்ந்த அனைவரையும் எளிதாக மகிழ்ச்சியாக வைத்து கொள்வாள்.  அதே போல் மகிழ்ச்சியற்ற  மனைவி இருக்கும் குடும்பத்தில் எவர் ஒருவரும் மகிழ்ச்சியோடு இருக்க முடியாது, இது அனைவரும் அறிந்த உண்மை.

உதாரணத்திற்கு நம் வாழ்வில் ஒரே ஒரு நாளை எடுத்து கொள்வோம். வார இறுதி, சனி கிழமை போல், அமெரிக்க வாழ் முறை.

மனைவி எழுமுன் படுக்கையை விட்டு எழுந்து .. பூனை பாதம் வைத்து (அவங்க விழித்து கொண்டு  தான் தூங்குவது போல் நடித்து கொண்டு இருப்பாங்க, இருந்தாலும் அதை கவனிக்காது போல்)  சமையலறை போய்..  பாலை கொதிக்க வைத்து, அதில் சற்று ஏலக்காய், இஞ்சி, பட்டை மற்றும் டீ தூள் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி இரண்டு முறை மேலேயும் கீழேயும் ஊற்றி ஆற்றி விட்டு, நுரை ததும்ப ஒரு கோப்பையில் சக்கரையுடனும் இன்னொரு கோப்பையில் சக்கரை இல்லாமலும் எடுத்து கொண்டு அம்மணியின் எதிரில் போய் அமைதி காத்து நிர்க்கையில்...

அவர்களே விழித்து.. ..

என்னங்க? பக்கத்துக்கு வீட்டுல டீ வாசனை.. பார்த்தீங்களா?

என்று கேட்க..

ஐயோ.. .இது நம்ம வீடு.. நான் தான் போட்டேன் என்று சொல்லும் போதே, அந்த இல்லத்தில் ஏக பட்ட மகிழ்ச்சி !

பேசி கொண்டே இருக்கும் போது, விழித்து கொண்ட பிள்ளைகள்.. இங்கே என்ன.. "லவ்வி டவ்வி" என்று பொறாமை கலந்த கிண்டலோடு வருகையில்.

"என் பொண்டாட்டிக்கு நான் செய்யுறேன் , நீயும் உங்க அம்மா மாதிரியே ஒரு நல்ல புருசனுக்கு வேண்டிக்கோ"

 என்று சொல்கையில்...

அம்மணியோ..

"நினைப்பு தான் பிழைப்பை கெடுத்திச்சான் என்று நக்கலடிக்க.. "

மகிழ்ச்சி அங்கே பெருகுகின்றது.

ஒரே ஒரு சாதாரண டீ தான். காலையே மாறிவிட்டது.

டீ குடித்து சமையலறை வந்த அம்மணி அடுப்பை பார்க்கையில், அலறியடித்து..

"என்னங்க ... ?"

என்ன ஆச்சி?

"டீ உண்மையாவே நீங்க தான் போட்டீங்களா"?

"ஆமா? ஏன் இம்புட்டு ஆச்சரியம்.."!

"இல்லை,  பாலை அடுப்புல வைச்சிட்டு கம்ப்யூட்டர் போயிட்டு ஒவ்வொரு முறையும் கொட்டி கிடக்குமே, இன்னைக்கு சுத்தமா இருக்கு..."

என்று அவர்கள் சொல்லும் போதே...

"சே சே.. இப்ப எல்லாம் நான் கம்ப்யூட்டரில் அம்புட்டு நேரம் செலவு செய்யுறது  இல்லை" (நல்ல வேளை தப்பிச்சோம், பொங்கி கொட்டியதை  கண்டு பிடிக்கலை என்று மனதில் பெரு மூச்சு விட்டு கொண்டு ..)

என்ற ஒரு பொய் சொல்லும் போது அந்த மகிழ்ச்சி இன்னும் கூடுகின்றது.

"அம்மா.. அங்கே என்ன? "லவ்வி டவ்வி" பசிக்குது"

 என்று ஒருத்தி அலறுகையில்..

"நான் வேணும்னா அவளுக்கு  தோசை சுடட்டுமா"?

என்று கேட்க..அம்மணியோ..

"அவளுக்கு நீங்க சுட்டா பிடிக்காது..ஒரு மாதிரி க்ரிஸ்பியா இருக்கணும்  .."

என்று சொல்கையில்..

"யூ ஆர் ரைட் மம்மா.."

என்று அவள் ஆமோதிக்க ..

இன்னும்  மகிழ்ச்சி.

பின்னர் மேசையில் அமர்ந்து அந்த வாரம் வந்த தபால்களை பிரிக்கையில்.. அடேடே போன மாசம் ஒரு நாள் அம்மணிக்கு தெரியாமல்  வெளியே போய் சாப்பிட்டோமே, அது க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மென்டில் வந்து இருக்குமே .. பார்த்துட்டா  என்று பயப்படும் போதே..

"பரவாயில்லை  .. போன மாசம் ஒரு முறை தான் வெளியே போய் சாப்பிட்டு இருக்கீங்க"

 என்று அம்மணி , ஒரு பொய் கோவத்தோடு அங்கீகரிக்க.. இன்னும் மகிழ்ச்சி..

அடுத்து.. வார இறுதி .. வீடு சுத்தம்..

நான் மேலே போய் சுத்தம் பண்றேன்.. நீ இங்கே ஹால் மற்றும்.. என்று சொல்லும் முன்பே..

அம்மணி..

" நீங்க போய் மேலே கூட்டிட்டு பெருக்கி எடுத்துன்னு வந்துடுங்க. நான் இங்கே பார்த்துக்கிறேன்"

என்று சொல்லும் போது.. ஓரத்தில் சோகம் இருந்தாலும் இல்லம் முழுக்க மகிழ்ச்சி...பின்னர் ...

சம்பாதிக்கும் பணத்தை அம்மணியிடமே ஒப்புவிட்டதால்..

இது என்ன ஆச்சி. அது என்ன ஆச்சி என்று எந்த பிரச்னையும்  இல்லாமல். இந்த மகிழ்ச்சி தொடருகின்றது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் அல்லவா..

"ஏங்க .. ராத்திரி டின்னருக்கு அங்கே போறோம். கண்டிப்பா சாதம் தான் .. மதியம் ராத்திரி ரெண்டு வேலையும் ரைஸ்.. நல்லதே இல்லை.. இந்தாங்க இத சாப்பிடுங்கோன்னு "

எதையோ தர.. சோகத்தோடு அதை உண்டாலும்.. உள்ளத்தில் "வருமுன் காக்கும் " மனைவி என்று இன்னொரு சந்தோசம்.'

அது மட்டுமா?


"சாயங்காலம் அங்கே போறதுனால .. உங்க ஜிம் வாகிங் மிஸ் ஆகிடும்.. அதனால, பொடிநடையா பக்கத்துல கடைக்கு போய் இதை எல்லாம் வாங்கின்னு வாங்க.. "என்று சொல்ல...

மகிழ்ச்சி..

வாங்கி வந்தவுடன்...

"மூத்தவ போன மாசம் மார்க் எல்லாம் கொஞ்சம் குறைவா  வாங்கி இருக்காளே, விசாரியுங்க"

என்று கோவ படும் போது..

அட பாவி.. அதை கூட தெரிஞ்சி வைச்சி இருக்காங்களே ...

என்று நினைத்து...மூத்தவளை அழைத்து..

"மகள்.."

"சொல்லுங்க.."

"என்னமோ மார்க் கம்மியாமே, அம்மா சொன்னாங்க..."

"அவங்க இன்னும் நான்  பத்தாவது படிச்சின்னு இருக்கேனு யோசித்துனு இருக்காங்க.. இது காலேஜ்.. நான் படிக்கறது அகௌண்ட்ஸ்."

"அதுக்கு.."

"அகௌண்ட்ஸ் எல்லாம் அப்படி ரொம்ப கஷ்ட பட்டு படிக்க வேணாம்ன்னு அம்மாக்கு எடுத்து சொல்லுங்க.."

"என்னாது?  அகௌண்ட்ஸ் கஷ்ட பட்டு படிக்க வேண்டாமா?  என்ன சொல்ற"?

"டாட்.. நீங்களே பாஸாகிடீங்க.. அப்புறம் அது எப்படி கஷ்டமா இருக்கும்.. "?

என்று சொல்ல..அம்மணியை நோக்கி..

"அவ பாவம் .. அகௌண்ட்ஸ் கொஞ்சம் கஷ்டமான சப்ஜெக்ட் தானே அதனாலே தான் மார்க்ஸ் கொஞ்சம் கம்மி .."

என்று வாதாட..அம்மணியோ

"என்னாது?  அகௌண்ட்ஸ் கஷ்டமா? நீங்களே பாஸாகிட்டீங்க... "

என்று நக்கலடிக்க..

மகிழ்ச்சி ...

இன்னும் எவ்வளவோ  இருக்கு... அதையெல்லாம் இந்த பட்டிமன்றம் முடிந்தவுடன் விலாவாரியா எழுதுறேன்.


பின் குறிப்பு :

நான் நம்பும் விவிலியத்தில் பெண்களை பற்றிய ஒரு விவரம் உண்டு..

பரிபூரணமுள்ள மனைவி

10 [a] “பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம்.
    ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
11 அவள் கணவன் அவளைச் சார்ந்திருப்பான்.
    அவன் ஒருபோதும் ஏழையாகமாட்டான்.
12 தன் வாழ்வு முழுவதும் அவள் தன் கணவனுக்கு நன்மையே செய்வாள்.
    அவனுக்கு ஒருபோதும் துன்பம் உண்டாக்கமாட்டாள்.
13 அவள் எப்பொழுதும் ஆட்டு மயிரையும் சணல்நூலையும் சேகரிப்பாள்.
    தனது கைகளினாலேயே ஆடைகளை மகிழ்ச்சியோடு தயாரிப்பாள்.
14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள்.
    எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள்.
15 அதிகாலையில் எழும்பி தன் குடும்பத்துக்கு உணவு சமைப்பாள்.
    வேலைக்காரர்களுக்கு அவர்களுடைய பங்கைக்கொடுப்பாள்.
16 அவள் நிலத்தைப் பார்த்து வாங்குவாள்.
    அவள் பணத்தைச் சம்பாதித்துச் சேர்த்து திராட்சைக்கொடிகளை நடுவாள்.
17 அவள் கடினமாக உழைப்பாள்.
    அவள் தனது எல்லா வேலைகளையும் செய்யும் பலம் கொண்டவள்.
18 தன் உழைப்பால் உருவான பொருட்களை விற்கும்போது எப்பொழுதும் அவள் லாபத்தை அடைவாள்.
    அவள் இரவில் அதிக நேரம் வேலைச் செய்த பிறகே ஓய்வெடுக்கிறாள்.
19 அவள் தனக்குத் தேவையான நூலைத் தானே தயாரிக்கிறாள்.
    தனக்குத் தேவையான ஆடைகளைத் தானே நெய்கிறாள்.
20 ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள்.
    தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
21 பனிக் காலத்தில் அவள் தன் குடும்பத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டாள்.
    ஏனென்றால் அனைவருக்கும் நல்ல வெப்பமான ஆடைகளை அவள் தந்துள்ளாள்.
22 அவள் கம்பளங்களைச் செய்து படுக்கையில் விரிக்கிறாள்.
    மிக அழகான புடவையை அணிகிறாள்.
23 ஜனங்கள் அவளது கணவனை மதிக்கின்றனர்.
    அவன் அந்நாட்டுத் தலைவர்களுள் ஒருவன்.
24 அவள் ஒரு நல்ல வியாபாரி.
    அவள் ஆடைகளையும் கச்சைகளையும் தயாரிக்கிறாள்.
    இவற்றை வியாபாரிகளிடம் விற்கிறாள்.
25 அவள் போற்றப்படுவாள். [b] ஜனங்கள் அவளை மதிக்கின்றனர்.
    அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள்.
26 அவள் ஞானத்தோடு பேசுகிறாள்.
    ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
27 அவள் ஒருபோதும் சோம்பேறியாக இருப்பதில்லை.
    தன் வீட்டிலுள்ள பொருட்களையெல்லாம் அக்கறையோடு பார்த்துக்கொள்கிறாள்.
28 அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள்.
    அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
29 “எத்தனையோ நல்ல பெண்கள் இருக்கிறார்கள்.
    ஆனால் நீ தான் சிறந்தவள்” என்கிறான்.
30 ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம்.
    ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
31 அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு.
    எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.

இந்த குணத்தை பெற்ற ஒரு பெண்ணை மனைவியாக ஒருவன் அடைவது பாக்கியம். இப்படி ஒரு மனைவியை அடைந்தவன் அவளை மகிழ்ச்சியாக வைத்து கொண்டால் ... 

குடும்பத்தில் அந்த மனைவியின் மூலம் வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!2 comments:

 1. ungkalathu intha pathivai vasichathumee ningal; ungal kudumpam evvalvu nallamaaka makizciyaaka irukkurirkal enru purikirathu.

  athunaala rompa naal kalithu ungaloda pathivai vaasichu mokkaiya nalaamaanu kekka virumppam illaa:-)

  ***

  ungkalathu paarvaiyil nanraaka pesuvathai ponru pathivil ezuthi irunthirkal.
  nice.

  ReplyDelete
 2. விசு இது உங்கள் குடும்பத்தின் எதிரொலி....

  எல்லா வீட்டிலும் இப்படியான ஆண்கள் இருந்துவிட்டால் அந்த வீட்டில் மகிழ்ச்சிதான். பதிவை ரசித்தேன் விசு

  கீதா

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...