செவ்வாய், 5 ஜூன், 2018

மஞ்சள் நிறத்தில் நிலத்தில் ஓர் பொட்டு!

கடிகாரம்
இல்லா
கால நேரம்.

ஆறரைக்கு
எழும் அவசியம்
அலாரம்
இல்லா காலம்.

மண்ணுக்கும்
விண்ணுக்கும்
நடுவே
தென்னைகூரை.

சேவல் கூவி
தூக்கம்
கலைந்த பின்னரும்
படுக்கையில்
இருந்து எழாமல்..
பூனை தூக்கம்.

பளீச்
என்ற வெளிச்சம்
நெற்றியில் துவங்கி
கண்ணுக்குள்
நுழைந்தாய்.
















அன்று தான் அறிந்தேன்..
இனி நமக்கெதற்கு
கடிகாரம் என்று.

படுக்கையில்
இருக்கும் என்
நெற்றியை
தொட்டால்
எழ வேண்டும்.

அனைத்தையும்
தாண்டி நீ
சமையலறை சென்றால்
நேரமும்
காலமும்
ஏழரை...



பள்ளியில் அமர்ந்தேன்.
முதல் பாடம் தமிழ்.
வாஸ்துக்கு வசதி
இல்லா கூரை பள்ளி..
மேற்கு நோக்கி
அமர்ந்து கரும்பலகலையை
நோக்கினால்...

மொத்தம் :43
வரவு :42
வரவின் மேல் நீ இருந்தாய்.

பாவம் சென்ற வாரம்
மஞ்சள் காமாலை
வந்ததால்..
இன்றும் தனம்
வரவில்லை
போல் இருக்கு....

கரும்பலகையில்
இருந்து கீழிறங்கி
வாத்தியாரின் மேசையில் நீ அமர
தமிழ் முடிந்து ஆங்கிலம்..

முதல் வரிசை..
கணக்கு
மூன்றாம் வரிசை
அறிவியில்

என் அருகே நீ இருந்தாலும்
அவள்
இல்லாதால்
இயற்கை எல்லாம்
செயற்கையாய் தான்
தெரிந்தது.

மதிய உணவு.

புத்தகத்தை மடித்து
உணவு டப்பாவை
தொட்டு பார்த்து..
நீ என்னையும் தாண்டுகையில்..
இன்னும் மணி அடிக்கவில்லையே..

அருகில் இருந்தவன்
சொன்னான்.
ஆபிசில் உள்ள
கடிகாரம்
ரிப்பேர் ஆனது
இன்னும் ரிப்பேர்
ஆகவில்லை என்று.

தாமதமாக
மணி அடிக்க..
சற்று
சோகமாக தான்
உணவை திறந்தேன்.
மஞ்சள் காமாலை
என்னையும்
பாதித்துள்ளது.

உணவு பையில்
இலைகள்.
என்ன விசு
என்றான்...
நண்பன்..

கீழா நெல்லி.
என்றேன்..
ஒரு வருமுன் காக்கின்றாயோ?
இல்லை..
வரும்வரை
காக்க முடியவில்லை என்றேன்.

மஞ்சள் நிற சாதம்
புளியோ
எலுமிச்சையோ
என்று அறியா பருவம்.

உனக்கு முட்டை
வேணுமா?
ஏன் நீ சாப்பிடலையா?
இல்லை நான்
போன வாரத்தில்
இருந்து விரதம்.

எனக்கு பின் வரிசைக்கு
நீ செல்ல..
பூகோளம்
எப்போது வரலாறு
ஆனோதோ
நான் அறியவில்லை.

பின் சுவற்றை நீ
அடைய..
முதல் முறையாக
கிழக்கை
நோக்கினேன்.

சுவற்றில் இருந்த
அம்பேத்காரின்
முகத்தில்
நீ அமர
ஒலித்தது
மணியோசை.

ஓடினேன்.
கீழா நெல்லியோடு.

திடீரெனென்று
ஒரு திருப்பம்...

என் கண்
முழுக்க மஞ்சள்.
என்னடா இது
என்று நினைக்கும்
முன்

விழித்தேன்.
விசு உனக்கு
மஞ்சள் காமாலை.

என்று பெருசு ஒன்று
சொல்ல..
அட பாவி..
தோற்று நோய்
கேள்வி பட்டுள்ளேன்..
ஆனால் அது
நினைவாலே தொற்றி
கொள்ளுமா?

நீயும் அகல..
இரவென்று அறிந்தேன்..
எப்போது உறங்கினேன்
அறியேன்.
காலை..
சேவல் கூவ
பூனையை அனைத்து
கொண்டேன்.

விசு...
மஞ்சள் காமாலைக்கு
உடம்பில்
வெயில் பட கூடாது
வேற இடம் போய்
படு.

என்ற குரலை
நிராகரித்து
நெற்றியில் இருந்த
உன்னை
இதயத்தில்
ஏற்றி கொண்டேன்.

என் இமைப்பருவம்
இனிமைக்கான
ஒரே காரணம்
நீ தான்!
மஞ்சள்
நிறத்தில்
நிலத்தில்
ஒரு
பொட்டு.


பின் குறிப்பு :

வாட்சும் கட்டல
நேரமும் பார்க்கல
உங்களுக்கு எப்படி
நேரம் தெரியும்..
தலைக்கு மேல்
குறையில்லை
கூரையுமில்லை
இருந்தாலும்
 சன்னல் இடுக்கில்
அந்த பொட்டு உள்வர
வலியொன்று
வழியொன்று
நான் செய்ததை
எப்படி சொல்லுவேன்?

2 கருத்துகள்:

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...