திங்கள், 30 ஏப்ரல், 2018

தென் விரிகுடா தமிழ் சங்கம் - கடவுள் உள்ளமே, கருணை இல்லமே!

சென்ற வாரம் அலை பேசி அலறியது...
விசு அண்ணா.. நான் கவிதா பேசுறேன்...
கவிதா ... சொல்லுங்க எப்படி இருக்கீங்க!
அதெல்லாம் இருக்கட்டும்..
இந்த சனி ஊரில் இருக்கீங்களா...?
விஷயத்தை சொல்லு... நீங்க முதலில் சொல்லுங்க ஊரில் இருக்கீங்களா? ( விஷயத்தை கேட்டுட்டு நான் வெளியூருக்கு போற ட்ரிக்கை கண்டு பிடிச்சிட்டாங்களா? ) சொல்லுங்க... நீங்க சொல்லுங்க..
இருக்கேன்.... சொல்லுங்க.

 ஆட்டோகிராப் படம் பார்த்தீங்களா? 

 இல்லை... 

காஞ்சனா...?

இல்லை...நான் படம் பாக்குறது இல்லை கவிதா...! படம் ஏதாவது ... 

இல்லை .. இல்லை. சார்பில் சித்திரை திருவிழா நடத்துறோம்.. நீங்களும் வரணும். 

 அதுக்கும் படத்துக்கும் என்ன சம்மந்தம். இல்லை.. 

இந்த படத்துல பங்கேற்ற ஒரு குழு பாட வராங்க.. நீங்க கண்டிப்பா வரணும். 

மனதில்.. நமக்கு இளையராஜாவே வந்தாலும் போக பிடிக்காதே.. இப்ப எல்லாம் நாடகம் -பாட்டுன்னு வந்து இங்கே நம்மை பிளவு படுத்திட்டு தானே போறாங்க... என்று நினைக்கையில்...கவிதா தொடர்ந்தார்கள்..

அண்ணா.. இந்த குழு முழுக்க பார்வையற்றவர்கள்.. நல்லா பாடுவாங்க.. 

 மனது பல வருடங்களுக்கு முன் சென்றது.. 

அடியேனின் தாயார் 80 ம் வருடங்களின் துவக்கத்தில் .. தருமபுரி மாவட்டத்தில் பர்கூர் என்ற ஊரில் பார்வையற்ற பிள்ளைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் துவங்கினார்கள். அந்த நேரத்தில் இந்த பகுதியில் இந்த பள்ளி நூற்று கணக்கான பார்வையற்ற பிள்ளைகளுக்கு அடைக்கலமாக இருந்தது. இந்த பார்வையற்றோரின் ஒரு விசேஷம் என்னவென்றால் இசை திறன். அது என்ன விட்ட குறை தொட்ட குறையோ தெரியவில்லை.. இந்த பள்ளியின் வந்த இந்த மாணவர்கள் இசையில் மிகவும் சிறந்து விளங்கினார்கள். மிகவும் அருமையாக பாடுவார்கள். அப்படி நான் அறிந்த சிலரை நினைத்து கொண்டு... 

 கண்டிப்பாக வரேன்... 

குடும்பத்தோட? 

இல்லை கவிதா.. அம்மணிக்கு வேலை (Someone gotta bring the money, you see), மூத்தவ கல்லூரி, இளையவ ஒரு போட்டியில் பங்கேற்க சான் பிரின்ஸிஸ்கொ.. 

சரி நீங்க வாங்க. 

அழைப்பிதழை பார்த்தேன்... மதியம் ஒன்னரை மணிக்கு ஆரம்பம்.. ஒன்னறையில் இருந்து நாலரை வரை இந்த தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் பள்ளியின் மாணவர் மாணவியர் மற்றும் உறுப்பினர்களின் பல்சுவை நிகழ்ச்சி. பிறகு உணவு.. அடுத்து நாலரை போல் ராகப்ரியா என்ற இந்த குழுவின் நிகழ்ச்சி!
இரண்டு சிறு பெண்கள் MC - நல்ல முயற்சி
தமிழ் பிள்ளைகள் நிகழ்ச்சி என்றாலே பாரதி வந்தாகவேண்டுமே.. இங்கேயும் நடந்தது..

முண்டாசோடு ஒரு சிறுவன் .. முண்டாசு இல்லாமல் ஒரு சிறுவன்.. அது அடுத்து வந்து ஆழ்த்தினார்கள். அதில் ஒருவன் .. "அக்னி குஞ்சென்று  கண்டேன்" என்று ஆர்ப்பரிக்கும் போது "தமிழ் இனி சாகாது என்று தான் மனதில் எண்ணம் வந்தது.






தொடர்ந்து ஒரு இசை கச்சேரி.. வெங்கட் - கவிதா தம்பதியரின் தவ  புதல்வன் இஷான்... என்ன ஒரு தாலந்து. தொடர்ந்து ஊக்க படுத்தினால் நம்ம ஊரில் இருந்து ஒரு பாடகர் வர வாய்ப்புள்ளது. கூடவே வயலின் வாசித்த அந்த மற்றொரு சிறுவனும் அபாரம். வாழ்த்துக்கள். 


அதையும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் .. ஆட்டம் பாடம் என்று அருமையாக இருந்தது.


நடுவில் "கிழக்குமணி " என்ற கிராமத்தில் இருந்து வந்து சில அம்மணிகள் ஆடிய ஆட்டம் மனதை கவர்ந்தது.. என்ன ஒரு குத்து ஆட்டம். அதை பார்த்து முடிந்தவுடன் அருகில் அமர்ந்து இருந்த நண்பர் விக்னேஸ்வர் (இவரின் தமிழ் தொண்டிற்காக இந்நாளில்  இவரை கௌரவித்தார்கள்) என்ன விசு இப்படி மூச்சு வாங்குற... என்று கேட்க.. நானோ பெருமூச்சு விட்டுக்கொண்டே.. ரொம்ப பசி என்று சொல்ல.. வெளியே.. போ .. சிற்றுண்டி இருக்கு என்று அவர் மூலம்  அறிய.. 


தற்போது இந்தியாவிலே மிகவும் பிரபலமான பக்கோடாவும் டீயும் இருந்தது. ஒரு பொட்டலம் பக்கோடா வாங்கி கொண்டு டீ வாங்க செல்கையில் சிறு குழப்பம்.. டீ அனுப்பி வைத்தவர் சக்கரை அனுப்ப மறந்துவிட்டாராம். பலருக்கு அது பிரச்சனையாக.. நமக்கு தான் சிறு வயதில் இருந்தே டீ க்கு சக்கரை போடாமல் குடிக்கும் பழக்கமாயிற்றே.. என்று..


ஒரு டீ தாங்க..


சக்கரை இல்லை..


பரவாயில்லை.. தாங்க..


டயாபடீஸ்ஸா? 


மனதில்.. அட பாவி.. வாழக்கையில் இரண்டு நல்ல பழக்கம் இருக்கு .. அதை கூட ஒரு நோயோடு கோத்து விட்டார்களே என்று நினைக்கையில்.. 


அவரோ.. 


சாப்பாடு கூட இப்ப வந்துடும்.. உங்களை மாதிரி (டயாபடீஸ் தான் ) ஆளுங்களுக்கு முன்னுறிமை ) என்று சொல்ல.. 


மீண்டும் வந்து அமர்ந்தேன்.


பல்சுவை நிகழ்ச்சி முடிந்து.. இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. முதலாவதாக "வான்மேகம்..பூப்பூவாய் " என்ற பாடலோடு ஆரம்பித்தார்கள்.  அதை தொடர்ந்து இந்த குழுவின் தலைவர் கோமகன் மேடைக்கு வந்து ஓவர் சிற்றுரை தர , மற்றும் ஒரு அம்மணி வந்து அவரை மேடையில் அமர்ந்துள்ள மற்ற நிபுணர்களின் இருக்கைக்கு ஒவ்வொன்றாக அழைத்து  சென்று அவருடைய கையில் தொட்டு  காட்ட.. (யார் யார் எங்கே இருக்கின்றார்கள் என்று அறிய) கோமகன் அவர்கள்.... முதல் பாடலாக கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்று கூற





என் மனதோ.. 83 ல் கிருஷ்ணகிரியில் நடந்த ஒரு நிகழ்ச்சில்.. பர்கூர் பள்ளி மாணவ மாணவியர்.. மகாலிங்கம், கண்ணன், ரவிச்சந்திரன், ஆல்பர்ட், பார்வதி, செல்வராஜ், எலிசபெத் ஆகியோரோடு நான் மேடையில் இருந்த நாள் தான் நினைவிற்கு வந்தது.


நல்லதொரு  நாள். நல்லதொரு நிகழ்ச்சி. தமிழ் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.


பின் குறிப்பு : 


நிகழ்ச்சி அருமையாக நடந்தாலும் .. அடுத்த நிகழ்ச்சிக்கு முன் நிவர்த்தி செய்ய பட வேண்டிய சில..


பல் சுவை நிகழ்ச்சியில் ... ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நடுவே எடுத்து கொண்ட நேரம் மிகவும் அதிகம். சில வேளைகளில் பாடல் - நடனம் 4 நிமிடங்கள் தான்.. ஆனால் அதற்கான ஒளி-ஒலி ஏற்பாடு அதிக நேரம்.



பார்வையாளர்கள் தொடர்ந்து பேசி கொண்டே இருந்தது சற்று வருத்தம் தான். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில்  நாம் பல நாட்களுக்கு பின் சிலரை சந்திக்க நேரிடும். அப்போது பேச்சு அவசிய படும். தவிர்க்க இயலாது ( நீ கூட தான் பேசிக்கொண்டு இருந்தாய் என்று யாரும் சொல்லும் முன்). அனால் அந்த பேச்சை நிகழ்ச்சிகளுக்கு நடுவில் வைத்து கொள்ளலாம்.

Thank You Kavitha for inviting me!

5 கருத்துகள்:

  1. விசு நல்லதொரு நிகவுக்குச் சென்று வ்னதுள்ளீர்கள். உங்களுக்கு நிச்சயமாக உங்கள் சிறுவயது அம்மாவின் குழந்தைகளுடன் (நோட் இட்! அம்மாவின் குழந்தைகள்!!) ஆன நினைவு வந்திருக்கும் என்று தெரிந்தது....

    கீதா: மகாலிங்கம், கண்ணன், ரவிச்சந்திரன், ஆல்பர்ட், பார்வதி, செல்வராஜ், எலிசபெத் அனைவரையும் சந்தித்திருக்கிறேனே...இன்னும் நினைவில்...

    பதிலளிநீக்கு
  2. //இந்த சனி ஊரில் இருக்கீங்களா...?///
    விசு நீங்க கலிபோர்னியாவில் இருந்து எப்ப சனி ஊருக்கு போனீங்க

    பதிலளிநீக்கு
  3. சிறப்பை சிறப்பாகச்சொல்லி குறையை சுருக்கிச்சொல்லிய (விசுத்தனம்)விதம் மனம் கவர்ந்தது வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  4. என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...