திங்கள், 3 ஜூலை, 2017

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்?

ஹோட்டலில் போய் சாப்பிடுறவன் எவன்? - நிர்மலா சீதாராம்.


ஆணவ திமிர் பிடித்த அமைச்சருக்கு...ஒரு விளக்கம்..

இங்கிலாந்து நாட்டில் மேல் படிப்பு படிக்க செலவு செய்யும்
 வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரின் மகனை  காதல் திருமணம் செய்து கொண்டு.. பிறந்த நாளில் இருந்து இன்று வரை பசி - பட்டினி - சமையலறை - கழிவறை இல்லாத பத்து அடி அறை - கைக்கும் வாய்க்கும் எட்டும் அளவான கூலி ... என்று எதையும் அறியாத தமக்கு
ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் என்று தான் கேட்க தோன்றும்.


என் வாழ்க்கையில்  24  வயதில் பாம்பாயில் வாழ்ந்து கொண்டு இருந்தேன் .. அன்று ஒரு நாள்..

அலுவலகத்திற்கு சென்ற என்னோடு இன்னும் மூன்று பேர். நால்வருமே தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பாம்பே சென்றவர்கள். தம்மை போல் இங்கிலாந்து சென்று படிக்க எங்கள் பெற்றோர்கள் அரசியல் ஆதாயம் கொண்டவர்களாய் இல்லாவிடினும் . அவர்களின் கடின  உழைப்பால் அவர்கள் செய்த தியாகத்தினால்  நாங்கள் நால்வருமே அவரவர் துறையில் முதுகலை பெற்றவர்கள்.

சம்பளம் .. ஆளுக்கு 2 ,500  மாதத்திற்கு..

தங்கியதோ பத்துக்கு பத்துக்கு என்ற அறை. காலையில் ஆறு மணிக்கு முன்னால் நாங்கள் விளக்கையோ மற்றும் சத்தம் எதுவும் போட கூடாது. வீடு உரிமையாளரின்  எழுதாத சட்டம்.



அதை கூட விடுங்கள்.. உரிமையாளரின் பிள்ளைகள் உபயோக படுத்திய பின் தான் நாங்கள் எங்கள் காலை கடனையே முடிக்க இயலும். இப்படி இருக்கையில் ..

ஒருவனின் தகப்பன் சுகவீனமாக மருத்துவமனையில்... இவன் சம்பாதித்த மொத்த  பணமும் ஒன்றாம் தேதியே அப்பாவின் மருத்துவ செலவிற்கு.

இன்னொருவன்.. தன் தங்கையை உணர்ச்சிவசப்பட்டு பொறியியல் கல்லூரில் சேர்த்து விட்டான் . விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்..  ஒவ்வொரு ரூபாயையும்.. ஆயிரத்துக்கு சமம்..

அடுத்தவன்... பாம்பேயில் மேல் படிப்பு.. மற்ற மூவரும்  சேர்ந்து கொஞ்சம் உதவி செய்ய கல்லூரியில் சேர்ந்து விட்டான்.. புலி வாலை பிடித்த கதை.. இப்போது விட முடியாது..

இந்த மூன்று மட்டும் போதும்.. என் கதையை விடுங்கள்..

பண நெருக்கடி அனைவருக்கும் வர .. எப்படி கொஞ்சம் காசை மிச்ச படுத்தலாம்  என்று எண்ணி வந்த எண்ணம் தான்.. ஹோட்டலில் சாப்பிடுவதை விட்டு விட்டு அறையிலே சமைக்கலாம் சென்று.

ஐயோ.. காலையில் 7 மணி போல் நால்வரும் இல்லத்தை விட வேண்டுமே... அப்படி என்றால் சமையலை 5  போல் துவங்கினால் தானே.. இங்கே விளக்கையோ சத்தமோ போடக்கூடாதே.. என்ன செய்வது .. என்று யோசிக்கையில்..

கருப்பு துணி ஒன்றை வாங்கி சன்னலை மூடி.. மண்ணெண்ணெய் அடுப்பு வாங்கி இருட்டில் சமைக்க ஆரம்பித்தோம்..இரண்டு  நாளில் கிட்ட தட்ட 70 ருபாய் மிச்ச பிடித்த எங்கள் இன்பத்திற்கு அளவே இல்லை.

மூன்றாவது நாள்.. சமைக்கையில் 5:30 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டது.. கத்திரிக்காய் சாம்பாறை இறக்கி விட்டு சாதம் கொதிக்கும் நேரம்.. கதவை திறந்தால் உரிமையாளர்.. கையும் களவுமாக பிடிபட்டோம்..

நான் நேத்தே யோசித்தேன்.. நீங்க சமைக்க ஆரம்பிச்சிடீங்கனு.. என்ன வாசனை..?

அட பாவி.. விளக்கையும் சத்தத்தையும் கவனித்த நாங்கள் வாசனையை மறந்து விட்டோம்.

முஜே மாப் கரோ பாய் சப் ...( தமிழ் நாட்டில் இருக்க வரைக்கும் எங்களுக்கும் ஹிந்தி தெரியாது.. ஆனா நாங்கள் தமிழும் ஆங்கிலமும் தெரியுமேனு பெருமை பட்டோமே ஒழிய ஹிந்தி தெரியலையேன்னு வெட்க  படலை. பாம்பே போய்  ஆறே மாசத்துல அவன் மொழியும் அவனுக்கு  புரியிற அளவுக்கு  கத்துக்குனோம்.. ) இனிமேல் செய்ய மாட்டோம்.

பரவாயில்லை செய்யுங்க.. ஆனால் ஆளுக்கு வாடகை 150  ருபாய் போட்டு கொடுங்க..

கூட்டி கழித்து பார்த்ததில் கணக்கு எங்கேயோ அடி வாங்க..

வேண்டாம் பாய் சாப்.. நாங்க சமைக்கல என்று சொல்லிவிட்டு மீண்டும் ஹோட்டலில் சாப்பிட ஆரம்பித்தோம்.

அப்படி தான் எங்கள் ஹோட்டல் தொடர்ந்தது.. அரசியல்வாதிகள் இல்லத்தில் வளர்ந்த - வாழ்ந்த இதுவரை வாடகையே காட்டாமல் இருந்த தமக்கு இது கண்டிப்பாக தெரியாது..

சரி.. நாங்கள் நால்வர் தானே இப்படி ஆரம்பித்தோம்.. இன்று பாம்பேயில் எங்களோடு அமர்ந்து உண்ட மற்ற சிலரை கவனிக்கலாம்.

அடுத்த மேசையில்.. அப்போது தான் டாடர் ஸ்டேஷனில் இருந்து இறங்கி வந்த ஒரு குடும்பம். மொத்தம் ஆறு பேர்.. டாடரில் இறங்கிய அவர்கள் இன்னொரு லோக்கல் ட்ரைன் பிடித்து இல்லத்தை அடைய இன்னும் ரெண்டு மணி நேரம்.. பசி தாங்காதே.. ஊரில் இருந்து வரும் போது புளி  சோறு.. தயிர் சோறு என்று 24  மணி நேரத்திற்கு எடுத்து வந்து இருப்பார்கள்.. அது தீர்ந்தவுடன் இங்கே..

படிக்கும் வயதிலே அரசாங்க செலவில் விமான பயணம்,  இலவசமாக ரயிலில் AC மற்றும் முதல் வகுப்பு  பிரயாணம்.. காரை எடுத்தால் கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று அரசாங்கம் தரும் பணம்...    பாவம் தங்களுக்கு இந்த வலி புரிய வாய்ப்பில்லையே..

மூன்றாவது  மேசையில்.. நான்கு திரு நங்கைகள்.. அவர்களுக்கு இல்லமே இல்ல .. சமையலறை எங்கே... AC காரில் கருப்பு கண்ணாடி போட்ட ஜன்னலில் உள்ளே  அமர்ந்துள்ள தங்களுக்கு  வெளியே இருப்பவர்களை எப்படி தெரியும்.... அவர்கள் காரின் அருகில் வந்தவுடனே.. ஜன்னல் சரியாக மூடியிருக்கிறதா  என்று பார்க்கவே நமக்கு நேரம் இல்லையே..

அடுத்த   பெஞ்சில்... அந்த ஹோட்டலில் பணியாற்றுபவர்கள்.

கடைசி பெஞ்சில் நாட்டில் இராணுவ சீருடையை அணிந்த ஒருத்தர் . ஒரு இரும்பு பெட்டி.  அதில் அவரின்  பெயர். அவர்  முகத்தை பார்த்தா வீட்டை விட்டு திரும்பவும் பணிக்கு போகின்றது போல தெரிகின்றது. அவ்வளவு சோகம்.
அமைச்சருக்கும் MLA  க்கும் கிடைக்கும் இலவச வசதியில்  ஐரோப்பிய நாட்டுக்கு விடுமுறை செல்லும் தங்களுக்கு இவனும் எவனோ என்று தான் தெரியும்.


இங்கே இருந்த அனைவருக்குமே அங்கே உண்ண விருப்பம் இல்லை. உந்த பட்டோம். வேறு வழியில்லை,.

நீங்கள் .. எங்களுக்கு உதவி செய்யாமல் இருக்கலாம்.. ஆனால் உபத்திரவம் செய்ய வேண்டாம்..

ஹோட்டலில் சாப்பிடுறவன் எவன் .. இப்பவாது புரிந்து இருக்கும்  என்று நினைக்கின்றேன்.

பின் குறிப்பு :

மாமனார் மாமியார் காங்கிரஸ் கட்சியில் ஆந்திராவில் கொடி கட்டி பறக்கையிலே .. நீங்க பிஜேபி யில் இருக்கையிலே.. எல்லாம் சுபமா நடக்கும் போது.. திடீர்னு அந்த கூத்தாடி சிரஞ்சீவி ஒரு கட்சி ஆரம்பிக்க , அட பாவி ஒரு வேளை இவன் முதல்வரான என்ன பண்றது? அதனால  உங்க ஆத்துக்காரு அந்த கட்சில போய் சேர .. அந்த கட்சி உருப்புடாம போனவுடன்.. திரும்பவும் அவரும் பிஜேபி யில் வந்து சேர .....

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம்ம  தான் ஆட்சியில் இருப்போம் என்று வாழும் குடும்பத்தில் வந்த தாங்கள் எங்களை எவன் அவன் என்று அழைக்கின்றீர்கள்..

நாங்களும் "எவ அவ" என்று சொல்லும் நாள் வரும் சீதாராமன் அவர்களே..
வரும்...!

ஆனால் அப்போதும் கூட நாங்கள் தங்களை போல் தரம் தாளாமல் மரியாதையாக தான் இருப்போம். ஏன் என்றால்..

நாங்கள் ஹோட்டலில் சாப்பிட்டு உயிர் பிழைத்தவர்கள் ...

10 கருத்துகள்:

  1. இது உங்கள் இளமைக் காலமா உண்மையா!?

    பதிலளிநீக்கு
  2. It is our bad luck that these criminals are in politics

    பதிலளிநீக்கு
  3. ஏணில மேல இருக்கறவங்களுக்கு கீழே என்ன இருக்குன்னு தெரியாது. மரத்துலேர்ந்து விழும்போதோ அல்லது கீழே வரும் நிலை வரும்போதோதான் தெரியும். நல்லா எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  4. ஹோட்டல்ல சாப்பிடும்போதும் இஷ்டத்துக்கு சாப்பிட முடியாது. எப்பவாவது ஹோட்டலுக்கு போகும்போதும் பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் விலை உயர்ந்ததாய் வாங்கி கொடுத்துவிட்டு வயிறு சரியில்லைன்னு ரெண்டு இட்லி சாப்பிடும் ஆட்களும் நம்மூர்ல உண்டு. பசங்களுக்கு வாங்கி கொடுத்துட்டு தன்ணிய மட்டும் குடிச்ச அம்மாக்களும் உண்டு. தங்கைக்கு சோலோபூரி வாங்கி கொடுக்க ஒரு வாரத்துக்க்கு காலேஜுக்கு நடந்து போய் பஸ் காசை மிச்சப்படுத்திய ஆட்களையும் நான் பார்த்திருக்கேனுங்க

    பதிலளிநீக்கு
  5. இவர் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன்.டி .வி யில் இவர் பேட்டி பார்த்தவுடன் அதிர்சசியாக இருந்தது.எதற்கு இந்த ஆணவம்?அவருடைய பாடி லேங்க்வேஜ் (உடல் மொழி )அவருடைய வாய் கோணல் .வாய் சுழிப்பு .பேசிய மொழி.ஏன் இவ்வளவு தரம் இறங்கினார்.என்ன கோபமான பதில்கள்?வெறுத்து விட்டது.
    karthik amma

    பதிலளிநீக்கு
  6. ஆளும் கட்சியில் இருந்து கொண்டு இவ்வளவு ஆணவம் இல்லை என்றால் எப்படி?. ஆனால் நி.சீ பற்றிய வாழ்க்கை குறிப்பு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.

    தங்களின் பம்பாய் வாழ்க்கை, வறுமையின் நிறம் சிகப்பு - 2 மாதிரி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்ணோட்டம் எப்படிக் கீழே உள்ளவர்களைக் கண் காணும்? அற்பமாகத்தான் தெரிவார்கள்...செம நையாண்டிப் பதிவு அருமை...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...