வெள்ளி, 7 ஏப்ரல், 2017

அம்மா என்றழைக்காத .....

காலையில் இருந்தே மனதில் ஒரு அழுத்தம்! அடியேனின் அன்னை இந்தியாவில் இருந்து வருகின்றார்கள்.

இதில் என்ன அழுத்தம். ஒன்றுமில்லை அவர்களுக்கு 90  வயது, அது தான். பத்து நாட்களுக்கு முன் அவர்களை அழைத்தேன்..

அம்மா..

சொல்லு..

நீங்கள் ஒரு வேளை தனியாக பயணம் செய்ய வேண்டி வரும் போல இருக்கு.

ஏன்.. நீ வரேன்னு சொன்னீயே.. வரலையா?

இல்லை, கடைசி நிமிசத்தில் உங்க பேத்திக்கு கல்லூரியில் இருந்து  ஒரு அழைப்பு .. அதனால் வர முடியல்ல.



பரவாயில்லை விடு.. நீ அவளை கவனி... நான் வந்துடுறேன்.

பார்த்து அம்மா .. கவனமா இருங்க...

சரி.. நேரத்துக்கு விமான நிலையத்துக்கு வந்துடு...

சரி...

மனதில் கொஞ்சம் பயம்.. 90  வயதாகிவிட்டதே.. அதனால் தான். இருந்தாலும் அவர்கள் நிறைய பயணம் செய்தவர்கள்.ஆண்டவன் புண்ணியத்தில் உடலும் மனதும் திடமாக உள்ளது.

நாற்பது  வயதில் கணவனை இழந்த போதும் ஒன்பது பிள்ளைகளையும் ஒன்பதாயிரம்   செல்வங்களையும் வளர்த்தவர்களாயிற்றே..

ஒன்பதாயிரம்  செல்வங்களா?

ஆம்.. மாற்று திறன் பிள்ளைகளுக்காக பள்ளிகள் தான் எத்தனை? அதில் படித்த பிள்ளைகள் தான் எத்தனை? சிறுவயதில் அங்கு வந்து சேர்ந்த பிள்ளைகள், இன்று பல நல்ல உத்தியோகத்தில்.. தலைமை ஆசிரியராக.. கல்லூரி பேராசிரியராக... வங்கி  அதிகாரிகளாக, இசை கலைஞர்களாக .. எத்தனை பேர்...

பல வருடங்களாக அடியேனின் மனதில் ஒரு எண்ணம். அன்னையின் வாழ்க்கையை எழுத்து வடிவில் சுயசரிதையாக வடிக்க வேண்டும் என்று.

சென்ற வருடம் ஒரு நாள்..

அருமை சக பதிவர் கீதா அவர்கள் தான் அடியேனின் "விசுவாசமின் சகவாசம்" புத்தகத்தை எழுத உதவினார்கள்.. அவர்களையே கேட்டேன்.

கீதா..

சொல்லுங்க..

அம்மாவின் வாழ்க்கையை புத்தக வடிவில்..

விசு, நானே சொல்லணும்னு நினைச்சேன்...நல்ல ஐடியா..

உங்க உதவி வேணும்..

சொல்லுங்க..

நான் அவர்களிடம் விவரித்து சொல்ல...கீதா அனைத்தையும் தொகுத்து தர அடியேனின் மூத்த சகோதரி ஜெர்மனியில் இருந்து புத்தக ஆசிரியராக  செயல் பட ... அம்மாவின் வாழ்க்கை "Led by the Clouds" என்ற தலைப்போடு தயாரானது.


ஏப்ரல் 2ம் தேதி வெளியீடு. ஆம்பூர் நகரில் அம்மா 1975ல் ஆரம்பித்து வைத்த காது கேளாதோர் பள்ளியில் புத்தக வெளியீட்டு விழா.

விழா ஆரம்பிக்க .. உறவினர் ஒருவர் அதை முகநூலில் நேரடியாக ஒளிபரப்ப..அடியேனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

முதல் புத்தகத்தை யாருக்கு தரப்போகின்றார்கள் என்று நான் காத்திருக்க.. புத்தகத்தை அந்த இறைவனுக்கு அர்பணித்துவிட்டு..

முதல் புத்தகத்தை பெற Mr. ரவிச்சந்திரன், MA , M  Ed , M Phil , தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலை பள்ளி என்று அழைக்க, அதை பெற ரவி தன் 20  வயது மகனின் உதவியோடு எழுந்து வந்தார்.

புத்தகத்தை பெற்று கொண்ட அவர்..

நான் பிறவிலேயே இரு கண் பார்வையும் இல்லாமல் பிறந்தவன். பதினான்கு வயது வரை  என் இல்லத்தில் என் அறையை விட்டு வெளியே சென்றது இல்லை.

என்னை பற்றி எப்படியோ கேள்வி பட்ட அம்மா.. என் இல்லத்திற்கு வந்து என் பெற்றோர்களை வற்புறுத்தி என்னை படிக்க அழைத்து வந்தார்கள்.

14  வயதில் தான் நான் எழுத்து கூட்டி படிக்க ஆரம்பித்தேன். அடுத்த 10 வருடங்களில் நான் MA   முடித்து அதன் பின் மேல் படிப்பு படித்து இன்று ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கின்றேன்.

இன்று நான் இப்படி இருக்க காரணம்... என் அருமை அம்மா! நான் ஒருவன் மட்டும் இல்லை.. என்னை போல் நிறைய பேர் இந்த புத்தகத்தை பெற தகுதி பெற்றவர்கள்..

என்று சொல்லும் போது ...

ஏறக்குறைய 35  வருடங்களுக்கு முன் அம்மா ரவியை எங்கள் இல்லத்திற்கு அழைத்து வந்தது நினைவிற்கு வந்தது.

இந்த புத்தக வெளியீட்டின் மூலம் அடியேனின் நெடு நாள் ஆசை நிறைவேறியது.

அம்மா.. மறக்காமல் கொஞ்சம் புத்தகம் எடுத்துனு  வாங்க..

சரி.. நீ நேரத்துக்கு ஏர்போட்டுக்கு வந்துடு...

என்று அலைபேசியை துண்டித்தவுடன்...

அருகில் இருந்த நண்பர்...

என்ன இருந்தாலும் விசு.. 90 வயது அம்மாவை தனியா பயணம் செய்ய வைப்பது தவறு போல் தெரியுது..

என்னாது .. ? தவறு போல் தெரியுதா.. தவறே தான்.. என்ன செய்வது.. நிலைமை அப்படி .. ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு...

நல்ல வேளை.. ஒரே விமானம் இல்ல.. நடுவில் ஒரு இடத்தில இறங்கி கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்.. கிட்டத்தட்ட 22  மணி நேர பயணம், இனிமேல் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு விசு...

சரி..

அவர் செல்ல....மனதில்... 90  வயது.. எப்படி சமாளிப்பாங்களோ என்று வந்தது தான் அந்த அழுத்தம்.

இன்று வந்து இறங்கினார்கள்.. அடியேனின் அண்ணன் விமான நிலையத்துக்கு சென்று அழைத்து வர, நான் அம்மாவை  சந்தித்தேன்.

எப்படி அம்மா பயணம்...?

எல்லாம் ஓகே..

கால் வலி..

அது எல்லாம் இல்லை.. நான் தான் அடிக்கடி எழுந்து நடந்தேனே...

அப்பாடா, இனிமேல் இந்தியா எல்லாம் போக மாட்டாங்க.. வயதாகி விட்டது  என்று பெருமூச்சு விடுகையில்...அம்மா..

விசு...

சொல்லுங்க..

ஒரு விஷயம்..

சொல்லுங்க..

அடுத்த முறை இந்த விமானத்தில் புக் பண்ணாத.. ரொம்ப செக்கிங்..  வேறு ஏதாவது விமானத்தில் புக் பண்ணு

என்று சொல்ல...

நான் மயங்கி விழுந்தேன்..


14 கருத்துகள்:

  1. அம்மாவுக்கும் மகனுக்கும் தான் எத்தனை பரிவு...
    90 ஆனாலும் அம்மா தான்..
    நீங்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் பிள்ளை தான்..

    மனதைத்திட்ட பதிவு..

    ஆனாலும் கடைசி வரிகளில் வழக்கமான விசு....

    பதிலளிநீக்கு
  2. தாய்ப்பாசத்தை ஒரு பசுவின் கன்றுபோல் விசு வெளிப்படுத்தியவிதம் தனித்துவமாக இருந்தது, மிகவும் ரசித்தேன்! அம்மாவின் சரிதத்தைப் படிக்க ஆவல், முன்பே ஒருபதிவில் பார்த்தேன், எனக்கு ஒரு பதிவைத் தர இயலுமா விசு? நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  3. நம் வினைப்பயன்களில் முக்கியமான ஒன்று நமக்கு நல்ல அன்னை அமைவதும், அன்னைக்கு நாம் நல்ல பிள்ளையாக அமைவதும். மனதை நெருடிய பதிவு.

    பதிலளிநீக்கு
  4. அறுபத்தாறு வயதில் வரவே
    இந்த விமானப்பயணம் அத்தனை
    கடினமான ஒன்றாக இருந்தது
    உங்கள் அம்மா சேர்த்து வைத்துள்ள
    புண்ணியங்களே அவர்களை
    சௌக்கியமாக சௌகரியாக கூட்டிவந்திருக்கும்
    என்றால் அது மிகையில்லை

    இந்தியா திரும்பியதும் புத்தகம் கிடைக்குமிடம்
    தெரிந்து கொண்டு புத்தகம் வாங்கிப் படிக்க
    மிக்க ஆவலாக உள்ளேன்

    மனம் தொட்டப் பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. "அம்மா என்பது ஒரு அழகான கவிதை "

    பதிலளிநீக்கு
  6. . 90 வயது. அம்மா எப்படி சமாளித்து விடுவார்கள் ஆனால் நம்மை போல உள்ளவர்கள்தான் மன அழுத்தடீர்கு உள்ளாகிறோம்

    பதிலளிநீக்கு
  7. நூல் ஆங்கிலத்தில் மட்டுமா வெளியிட்டீர்கள் தமிழில் வெளியிடவில்லையா? அப்புறம் எங்களை போல உள்ளவர்கள் எப்படி படிப்பதாம்? சரி சரி நூல் வந்து சேர்ந்ததும் சொல்லுங்கோ நான் வாங்கி எழுத்து கூட்டி படித்து கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழிலும் உள்ளது நண்பரே.. வந்தவுடன் அனுப்பி வைக்கிறேன். .

      நீக்கு
  8. விசு அம்மாவிற்கும் தங்களுக்கும் வாழ்த்துகள். தங்களின் பாசம், அக்கறை வெளிப்படுகிறது. அம்மாவைப் பார்த்து பிரமிப்பு. அது ஆண்டவரின் கிருபை. அதுதான் அவர்களை வழிநடத்துகிறது. அதனால் தானே லெட் பை த க்ளவுட்ஸ்....அருமை....எங்கள் பிரார்த்தனைகள்...

    கீதா:மேற் சொல்லப்பட்டக் கருத்துடன், விசு..முதலில்.மன்னிப்பு. என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலைமை. மாமியாருடன் இருக்க வேண்டிய சூழல். அம்மா இருப்பார்கள் என்று நினைத்து இங்கு ஏதேனும் அரேஞ்சமெண்ட் செய்து இடையில் சென்று பார்த்து வரலாம் என்று நினைத்து..உங்களைத் தொடர்பு கொண்டால்..இப்போது அவர்கள் அங்கு....அம்மாவிடம் எனது மன்னிப்பையும், வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளையும் தெரிவியுங்கள்..ப்ளீஸ்..மிக்க நன்றி....மீண்டும் மன்னிப்பு கூறிக்கொண்டு......

    பதிலளிநீக்கு
  9. விசு ரவியை பெற்று க் கொள்ள வைத்தது மிகவும் மகிழ்ச்சி....நான் விழாவையும்} அம்மாவையும் மிஸ் செய்து விட்டேன் என்று இருக்கு விசு...சூழல் அப்படியாகிப் போனது...மிகவும் வருத்தம்...இந்தப் பதிவை வாசித்ததும் ஒரு புறம் மகிழ்ச்சி, மறுபுறம் வருத்தம்...கலந்து கொள்ள முடியாமல் போனதே என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விசு, நான் எதுவுமே செய்யவில்லை...என்றாலும் நீங்கள் இங்கு குறிப்பிட்டமை..உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. பின்ன அம்மாவே 64 அடிக்கு மேல் இந்த வயதிலும் பாயும் போது பிள்ளை பாயாமல் இருப்பாரா....

    நான் இதில் பங்கு பெற்றேன் என்று சொன்னால் அது தற்புகழ்ச்சி....அம்மாவின் சேவைக்கு முன்னால் நான் எம்மாத்திரம்..கடுகளவு கூடக் கிடையாது..எனக்கும்இப்படி அவர்களுடன் தங்கி அவர்களின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் பெற வழி வகுத்த தங்களுக்கும், பியுலா அக்காவிற்கும் அம்மாவிற்கும் என் நன்றியும், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்....இபெரிய முயற்சி}யில் பங்கு பெறும் வாய்ப்பு கிடைத்தமையே பாக்கியம்..நன்றி...நன்றி...வேறு என்ன சொல்ல நெகிழ்ச்சியில் வார்த்தைகள் இல்லை.அம்மாவின் ஆசீர்வாதத்தை வேண்டி....

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...