Monday, February 27, 2017

அதோ அந்த பறவை போல...

மற்றொரு சராசரி நாள் தான் அன்றும்..

எழுந்தவுடனே எத்தனை எண்ணங்கள்...

காப்பிக்கு பால் இருக்கா?
தோசைக்கு மாவு உண்டா?
வங்கியில் பணமுண்டா?
வாகனத்தில் எண்ணையுண்டா?
ராசாத்திக்களின்  பள்ளி...
அம்மணியின் வேலை..
அடியேனின் வேலை..

சாலையில் செல்கையில்..
அங்கே ஒரு விபத்து..
என் வயது சார்ந்த ஒருவர் இறந்து விட்டாராம்..
அவருக்கும் இரண்டு ராசாதிக்கள் உண்டாம்.அலுவலகம் வந்தவுடன்.. ஆயுள் காப்பீடு ஆளை அழைத்து...
அடியேனின் பாலிசி எல்லாம் ஒழுங்காக இருக்கா என்று கேட்க்கையிலே ...

அவனோ...

ஏன் ... திடீரென்று இந்த கேள்வி... உடல் நிலை எல்லாம் சரிதானே என்று வினவ...

உடல் நிலை சரிதான் .. இருந்தாலும் மனது தான் ...

என்று மனதிலே சொல்லி... வேலை முடிய இல்லம் சென்றால்..

டாடா ... என்ன இவ்வளவு தாமதம்... சீக்கிரம் கிளம்புங்கள்...

எங்கே ?

மறந்துடீங்களா? நாம் இந்த வாரம்  நண்பர்களோடு மலைப்பகுதிக்கு செல்கிறோம்

என்று சொல்ல....

அடுத்த சில மணிநேரத்தில் மலை பிரதேசத்தில்..சற்று குளிர் தான் இருந்தாலும் .. கிழக்கு சீமை போல் இல்லை.

மறுநாள் காலை உணவு முடித்து அருகில் இருந்த இருக்கையில் இருக்கையில்...

வாங்க சும்மா ஒரு நடை போகலாம்..

நீங்க போங்க.. நான் இங்கே இருக்கேன்..

என்று அவர்களை சொல்லி அனுப்புகையில் தான் அது என் கண்ணில்
 பட்டது..

எதிரில் இருந்த மரத்தில் பல துளைகள்...


என்ன இது ? இம்மாதிரியான துளைகள்...என்று அந்த மரத்தை அண்ணாந்து பார்க்கையில் .. சில மரங்கொத்தி பறவைகள் துளையில்  இருக்கும் விதையை வெளியே எடுத்து உண்டு கொண்டு இருந்தன.


இந்த விதைகள் எப்படி இந்த துளைக்குள் என்று என்னும் போது அங்கே பணிபுரியும் ஒருவர் எதிரில் வர அவரிடம்...

எப்படி?

ஓ.. அந்த மரங்கொத்தி பறவைகள் கோடை முழுவதும் மரத்தில் துளை போட்டு இந்த விதைகளை அதில் சொருகி விடும். பனிக்காலத்தில் அதை உட்கொள்ளும். இது வருடா வருடம் நடக்கும் ஒரு சம்பிரதாயம்.

அதை ஏன் இதில் சொருகி வைத்து உண்ண வேண்டும்?

ஓ நீங்கள் வாழும் பகுதியில் பனி கொட்டாதா ?

ஏன்.. ?

பனி காலத்தில் முதலில் இந்த விதைகள் இருக்காது.. மற்றும் கீழே விழுந்த விதைகளை பனி மூடி விடுமல்லவா? அதனால் தான்  இந்த பறவைகள் இப்படி சேர்கின்றன.

அது சரி.. மரத்தின் கீழ் பகுதியில் உள்ள துளைகள் எல்லாம் காலியாக உள்ளன. மேல் பகுதில் நிறைய விதைகள் இன்னும் இருக்கின்றதே..

ஓ அதுவா ? பனி அதிகமாகிவிட்டால் கீழே உள்ள விதைகளை
மூடிவிடுமல்லாவா , அதனால் தான் அவை உண்ண ஆரம்பிக்கையில் கீழே உள்ள விதைகளில் இருந்து ஆரம்பிக்கும்..

என்று சொல்லி விட்டு அகல..

அந்த பறைவைகளை கண்டேன்..

அவற்றின் வாழ்க்கையை அளவே ஆறு அல்லது ஏழு வருடம் மட்டுமே தானாம் .

பிறந்த மூன்றாவது மாதத்தில் இருந்து இந்த வேலையை ஆரம்பித்து விடுமாம்.

கோடையில் சேமிப்பு.. குளிரில் சாப்பாடு..

இது ஒன்றே இதன் குறிக்கோள்.

இது இது இவர் இவருக்கு என்று இல்லை.. ஊர் சேர்ந்து சேர்த்து வைக்கின்றது... ஊராக உண்ணுகின்றது.

பணக்காரன் ஏழை கீழ் சாதி மேல் சாதி ஆத்திகம் நாத்திகம் என்று ஒன்றும் இல்லை. அதை உண்ணும் போது நம் காதுக்கு இனிய பாடல்கள்...

அவைகளின் மீது பொறாமை தான் வந்தது...

நம்மால் ஏன் இவ்வவளவு சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற பொறாமை...

பொறாமையோடு அமர்ந்து இருக்கையில் சார்ந்தோர்கள் திரும்பி வர ...

என்ன?  என்னமோ இழந்த மாதிரி முகமெல்லாம் சோர்ந்து...

இழந்தேன் தான்.. ஆனாலும் என்னத்த இழந்தேன் என்று சொல்ல முடியவில்லை என்று.. சொல்லிவிட்டு...

நாள் முடிய உறங்க சென்றோம்...

காலை ஐந்து போல் இருக்கும் ...

என்னங்க... ? இங்கே வந்து பாருங்க.. பால் பொங்கி வழியிற மாதிரி இருக்கு..

அப்படியே சூடா ஒரு காபி போடு..

உங்க காதுல..சீக்கிரம் வாங்க... என்று அம்மணி அலற...

தோசை மாவை அரைத்து ஊர் முழுக்க கொட்டியது போல் ஒரு காட்சி..

அடுத்த சில மணிநேரம் பணியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். மதிய  உணவு முடித்து கொண்டு கிளம்புகையில் .. இளையவளோ... மீதி இருந்த சிற்றுண்டியை  அறையின் பின் பக்கம் வைக்க... அடியேனோ...

ஏன் மகள் ...?

ஐயோ.. எல்லா இடத்திலும் ஒரே பனி, டாடா.. இந்த குருவிகள் சாப்பாட்டிற்கு என்ன செய்யும் ..? அதுதான்..

என்று அவள் சொல்லி முடிக்கும் போதே  உணவை பனி மூடியது.

அவள்  முகத்தில் சற்று விசனம்..

கவலை படாதே ராசாத்தி! அந்த பறவைகளுக்கு இந்த சூழ்நிலை நன்றாக தெரியும் .. அவை உணவை சேர்த்து வைத்து கொள்ளும்...

அது எப்படி உங்களுக்கு தெரியும் ?

அடியேன் அவளுக்கு "இடஞ்சூட்டி பொருள் விளக்க" அவளோ ..

எப்படி டாடி .. எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சி இருக்கீங்கன்னு சொல்ல..

மற்றவர்கள்  ஆச்சரியத்தோடு பார்க்க... எதிரில் இருந்த மரத்தில் ஒரு மரங்கொத்தி   உணவை ருசித்து கொண்டு இருந்தது..

என்னை அறியாமல் நான் பெரு மூச்சி விட...

இளையவளோ...

ஏன் டாடி.. விசனமா இருக்கீங்க?

இல்லை , மகள்.. அந்த பறவை பாரு..  ஒரு கவலையும் இல்லாமல்  எவ்வளவு சந்தோசமா இருக்கு.. நம்மையும் பாரு... என்று சொல்லுகையில்...

இளையவளோ.. டாடி.. இங்கே பாருங்க என்று அலற..

கண்ணின் எதிரில் ஒரு தேவாலயம்.. முழுக்க முழுக்க பனியால் அலங்கரிக்கப்பட்டது...அதை பார்க்கையில் சிறுவயதில் கற்ற விவிலிய வசனம் தான் மனதில் வந்தது...

  ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? -மத்தேயூ 6:26

என்னை அறியாமலே ஒரு நம்பிக்கை வந்தது...

இறங்கினேன்..

மலையில் இருந்து.

6 comments:

 1. மனதை தொட்ட ஒரு பதிவு

  ReplyDelete


 2. பதிவை ஆரம்பித்து அதை அழகாக எடுத்து சென்று முடித்த விதம் மிக அருமை

  ReplyDelete
 3. என் மனைவியோ அதிகம் கவலைப்படுபவர் நானோ அதற்கு நேர்மாரு. இருவருக்கும் இறை நம்ம்பிக்கை உண்டு. என்னைவிட கடவுளிடம் அதிக ஈடுபாடு அவருக்கு ஆனால் அதே நேரத்தில் அதிக கவலையும் உண்டு. ஆனால் எனக்கோ எது நடந்தாலும் அது கடவுளின் செயல் என்று நான் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதை கடவுளின் செயல் என்று கடவுள் மேல் பார்த்தை தூக்கி போட்டுவிட்டு கவலை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறேன் எல்லாம் கடவுளின் செயல் என்று நினைத்து கொண்டுதான் இது நாள் வரை கருதிவருகிறேன்

  ReplyDelete
 4. நான் ஆறாவது படிக்கையில் வேலூரில் இருந்து ஜீவ ஒளி என்ற நிறுவனம், ஏசுகிறிஸ்து பற்றிய வீட்டுப்பாடத் திட்டத்தை நடத்திவந்தது. ஒரு தபால் கார்டு போட்டால் போதும், வாராவாரம் பாடங்கள் வந்துவிடும். பாடத்தின் முடிவில் கேள்விகள் இருக்கும். பதில் எழுதி அனுப்பினால் அடுத்த வாரப் பாடம் வரும். சுமார் இருபது பாடங்கள் முடிந்தால் ஒரு சான்றிதழ் தருவார்கள். புதிய விழயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகம் என்பதால் அந்த ஜீவஒளி சான்றிதழ் பெற்றேன். யோவான் எழுதிய சுவிசேஷம், மார்க்கு எழுதிய சுவிசேஷம், கொரிந்தியர்கள், என்றெல்லாம் சிறுசிறு புத்தகங்கள் அனுப்புவார்கள். இளம்வயதில் படித்ததால் எல்லாம் பசுமரத்தாணிபோல இன்னும் மனத்தில் இருக்கிறது. "காதுள்ளவன் கேட்கக் கடவன்" என்றல்லவா ஏசு சொன்னார்!

  (2) பொங்கி வழிந்து விடாமல் பால் காய்ச்சும் கலையை இன்னுமா உங்கள் துணைவியார் உங்களுக்கு கற்றுத்தரவில்லை? ரொம்ப மோசம், போங்கள்!

  - இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
 5. விசு அருமையான பதிவு! மிக மிக அழகாகச் சொல்லிவிட்டீர்கள்! எல்லாமே இறைவன் செயல் என்றே பயணிப்பது எனவே கவலை அவ்வளவாகப் படுவதில்லை! இறைவனின் விந்தைகள் கணக்கிலடங்கா!! பறவைகளின் அறிவைப் பாருங்கள்!! நமக்கு 6 அறிவு!!!!????

  கீதா

  ReplyDelete

www.visuawesome.com