Thursday, January 5, 2017

மக்கள் திலகமும் கலைஞரும் .... என்னே ஒரு காம்பினேஷன்..

மாடு ஒன்று வண்டி இழுக்க, வண்டியின் இரு பக்கமும் ..."உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் சுவரொட்டிகள். வண்டியை ஓட்டுபவர் கையில் இருக்கும் சிறு சிறு தாள்களை எதிரே வருபவர்களிடம் கொடுத்து கொண்டே செல்ல அடியேனுக்கும் கிடைத்தது அந்த தாளில் ஒன்று.

மக்கள் திலகம் MGR அவர்கள் இரட்டை வேடத்தில் உலகம் சுற்றும் வாலிபன்.

அதற்க்கு முன்னால் நான் எந்த படமும் பார்த்ததில்லை. அதனால் வீட்டில் அழைத்து செல்வார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை. சரி, நமக்கு வாய்த்தது இந்த தாள் என்று நினைக்கையில்..

பள்ளி கூடத்தில் கூட படிக்கும் தோழி ஒருத்தி..

என்ன விசு.. படம் பார்க்க ஆசையா?

 என்று கேட்க...

நானும் தலையாட்ட...

எங்க அப்பாவும் வாத்தியாரு தான். அவர் சொன்னால் உங்க அம்மா அனுப்பி வைப்பாங்க ...

என்று சொல்ல..

எனக்கோ நம்பிக்கை இல்லை.

அன்று இரவே வாத்தியார் இல்லத்தில் வந்து, அம்மாவிடம்...


டீச்சர் .. உலகம் சுற்றும் வாலிபன் என்ற படம்.. ஒரே ஒரு டிக்கட்டில் உலகத்தையே சுத்தி பார்த்து வந்துடவிடலாம்

என்று சொல்ல...

அம்மாவும் அனுமதிக்க... தோழியுடன் கிளம்பினேன் படத்திற்கு. அதற்கு முன்னால் ..சினிமா எதுவும் பார்த்தது இல்லை.சில தெருவோர நாடகங்கள் பார்த்து உள்ளேன். அந்த நாடகத்தின் நினைவோ என்னவோ.. கொட்டகைக்குள் நுழைந்தவுடன் மேடையில் MGR  வருவார் என்ற ஒரு எண்ணத்தோடு தான் நுழைந்தேன்.

சற்று முன்னதாகவே சென்று இருந்ததால்...நல்ல ஒரு இடம் கிடைத்தது. தோழி, அவளின் சகோதரிகள், அவளின் அப்பா, கடைசியாக நான்....

இரணடாவது மணி அடிக்க ... தேசிய கீதம் ஒலித்தது. அனைவரும் எழுந்து நின்று பாடி முடிக்கையில்.... கருப்பு வெள்ளையில் வட்ட வட்ட சுழல்கள் வர....

நானோ.. என்ன இது?  சுவரொட்டியில் கலர் கலராக இருந்ததே.. இப்போது என்னவாயிரு என்று வியந்து கொண்டு இருக்கையில்....

கனத்த குரலில் ஒருவர்...

ஒரிஸ்ஸாவில் பெய்த மழையில் கடும் பாதிப்பு யார் பட்டது.. அதில் அநேக மக்கள் பாதிக்க பட்டனர். அதில் பாதிக்க பட்ட ...

இவர் கூறுகிறார்...

என்று கூற ..

ஒரு விவசாயி.. ஹிந்தியில்...

"ஆஜ் ஹமாரா தேஷ் மே... ஸ்வச் பாரத்... அச்சா தின் "

என்று எனக்கு தெரியாத மொழியில் கூற ..

நானோ...

என்னடா இது.. உலகம் சுற்றி பார்க்க போகலாம்ன்னா.. இங்கே ஒரிஸாவிற்கு கூட்டினு வந்துட்டாங்களே...

என்று பெரு மூச்சு விட...

செய்திகள் முடிந்தது.

அடுத்து படம்...

அன்னைக்கு சமர்ப்பணம் என்று ஆரம்பித்து ...

தாடி வைத்த MGR  .. இடியையும் மின்னலையும் கூர்ந்து கவனித்து எதோ  எழுதி கொண்டு இருக்க..ஒரு பெண் அவரை கூர்ந்து கவனிக்க...  கடைசியில்... அவர் .. சக்ஸஸ் .. என்று சொல்லி எழுந்து நிற்க ....

மீண்டும் கருப்பு வெள்ளை திரையில் வர.. நேரு அவர்கள் பேசி கொண்டு இருந்தார்கள்.

நானோ.. ஓ .. இன்னும் செய்திகள் தான் வாசித்து கொண்டு   இருக்கின்றார்கள்  என்று நினைத்து.. அழைத்து வந்த வாத்தியாரிடம் .. ஒரு விரலை காட்ட.. அவரோ..

டேய்..படம் ஆரம்பிச்சிடிச்சி..இடைவேளை வரை பொறுத்து கொள் என்று சொல்ல.. எனக்கோ .. இடை வேளை வரை இடை வேலை பொறுக்குமா என்ற நினைக்க...

MGR பாணியிலே தாடி வைத்த (Buy one Get One free) அசோகனிடம் , அதே பாணியில் தாடி வைத்து இருந்த கோபால கிருஷ்ணன் (ஒரு வேளை Buy one Get two...வகை இருக்குமா? அல்லது அந்த காட்சியில் MGR இல்லாதால் MGR  க்கு வைத்த தாடியை இவருக்கு வைச்சி இருப்பாங்களா) ஒரு அரிய துப்பாக்கியை தர ...

அசோகன்..

முருகன்... நீ காதலியோடு உலகம் சுற்ற போற.. நான் காரியத்தோடு உன்னை சுற்ற போறேன்னு ...

சொல்ல...

MGR  க்கு அடியேன் அடிமையாகி விட்டேன்..

என்ன ஒரு மாமனிதர் என்று நினைக்கையில்... அந்த காலத்திலே Living together"  பாணியில் மஞ்சுளாவோட ஜாலியாக அவர் புறப்பட.. என் கண்களில் பட்ட முதல் பாட்டு...

லில்லி மலருக்கு கொண்டாட்டம்...

அதில் ஆரம்பித்து அடுத்த இரண்டரை மணிநேரம் படம் ஓட .. நானோ ... MGR  அவர்களின் பரம விசிறியானேன். அதுமட்டுமா.. அந்த நம்பியாரும் அசோகனுக்கு என் கையில் கிடைத்தால்.....

இன்னும் ஒரு விஷயம்...

இடை வேளை நேரத்தில் சேர்த்து வைத்து இருந்த ஐந்து காசில் .. படத்தின் பாடல் புத்தகத்தை வாங்கி வைத்து இருந்தேன்....

வீட்டுக்கு திரும்பும் வழியில் அனைவரும் மாட்டு வண்டியில் அமர, அதில் எரிந்து கொண்டு இருந்த மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில்... பாடல்களை படித்து கொண்டே வந்தேன்...

முதல் பாடலான " லில்லி மலருக்கு கொண்டாட்டம் " என்ற பாடலை சில நிமிடங்களில் மனப்பாடம் செய்யும் அளவிற்கு பயில.. கூட இருந்த வாத்தியாரே..

அந்த தண்ணீருக்குள் ஒரு பாடல் பாடுவார்களே.. அதை படி என்றார்...

அது ... அது..

அவள் ஒரு நவரச நாடகம்...

 என்று தோழி சொல்ல..

வாத்தியோ என்னை முறைக்க...

நான் படிக்க ஆரம்பித்தேன்...

அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்...

என்னை அறியாமலே.. அந்த பாடல்களின் அடுத்த வரிக்கு செல்ல முடியாமல்..

"தமிழும் அவளும் ஓரினம்...."

என்ற வரியையே.. மீண்டும் மீண்டும் படிக்க..

வாத்தியாரோ...

உனக்கு தமிழ் பிடிக்குமா...?

எனக்கு தெரிந்த ஒரே மொழி சார்...கண்டிப்பாக பிடிக்கும்...


அதை கேட்டது தான்.. வாத்தியார், வண்டி ஓட்டுபவனிடம்..

எங்களை பஸ் ஸ்டாண்ட்டில் இறக்கி விட்டுட்டு..நீ பிள்ளைகளை வீட்டில் விட்டு விடு என்று சொல்ல....

தோழியோ...ஒரு பார்வையை அள்ளி விட..

அந்த வயதில் "நிலவு ஒரு பெண்ணாகி " பாடலுக்கான அர்த்தம் அறியாமல் ... வாத்தியாரோடு நான் செல்ல...

சார்.. எங்கே போறோம்..

தமிழ் பிடிக்கும்ன்னு சொன்னே இல்ல..

ஆமா..

இன்னைக்கு சனி கிழமை .. அரசு நூலகத்தில் மைக் போட்டு.. .தமிழ் பேச்சு போடுவாங்க.. அதுல ஒருத்தர் பேசுவாரு பாரு.... அந்த மாதிரி தமிழை கேட்டே இருக்க மாட்ட...

என்று அழைத்து கொண்டு சொல்ல...

நூலகத்தில்.. அவரை கண்டவர்கள்.. ஒருவரை ஒருவர்.. உடன் பிறப்பே என்று போற்றி கொள்ள ...

சிறிது நேரத்தில்... கர கர குரலில் .....

கழக உடன் பிறப்புகளே ...

என்று ஆரம்பித்து....

அழகிய தமிழில் ....

புலிநிகர் இளைஞர் புறப்பட்டார்
எலிநிகர் தோழர் எதிர்ப்பட்டார்
சிறுத்தையின் உறுமல் சிங்கத்தின் சீற்றம்
கறுத்த கழுதையே! அங்கேன் கனைக்கிறாய் ?
உறைவிட்டெழுந்து உடைவாள் தோழா !
மறைவிடந்தேடிடு மடிந்து போவாய் !
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடன் கழற்று..


என்ற கவிதையை படிக்க....

சார்.. யார் சார் இவரு....

இவரா... இவர் தான் கலைஞர் .. கருணாநிதி ...

என்று கூற...

அடே ... அடே....

இனி நமக்கு படத்திற்கு MGR  ... பாடத்திற்கு கலைஞர் ...

என்று கொக்கரித்து...

அடுத்த 40  வருடங்களை ... தாரை வார்த்தேன்..

என்ன ஒரு முட்டாளாக வாழ்ந்து இருக்கின்றேன் நான்....!

5 comments:

  1. அருமையான நினைவுகள் விசு!! நீங்க முட்டாளா? என்ன விசு??!! அப்படிப்பார்த்தா நாங்கள்லாம் எங்க போறது??!!

    ReplyDelete
  2. இது பலருக்கும் பொருந்தும். தொடருங்கள் ..

    ReplyDelete
  3. அந்த கடைசி வரி - நச்

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...