செவ்வாய், 6 செப்டம்பர், 2016

இது நம்ம ஆளு .....

நம் வாழ்வில் நாம் சில நபர்களை தற்செயலாக சந்திக்க நேரிடும். முகநூலின் வரவிற்கு பின் இந்த தற்செயல் அடியேனுக்கு அடிக்கடி நடக்கின்றது. 

அப்படி நான் சந்தித்த ஒரு நபர் தான்... சுரேஷ் சீனு!

அது என்னமோ தெரியல.. ஏனோ தெரியல.. விட்ட குறை தொட்ட  குறை போல.. முதல் முறையாக இவரின் ஸ்டேட்டஸ் பார்த்தவுடன் பிடித்து விட்டது.

யார் இவர் என்று விசாரிக்கையில்... இவர் நம்ம ஆளு தான்.... என்று அறிந்து எனக்குள் ஒரு சந்தோசம்.

பொறுமை.. நம்ம ஆளுன்னு சொன்னவுடன்.. கூட்டி பெருக்கி கழிக்காதீங்க... நான் சொல்ல வந்ததே...

 வரும் நம்மை போலவே கூட்டி பெருக்கி கழிப்பவர் தான்... புரியல..?

தணிக்கையாளர். 

ஒரு தணிக்கையாளருக்கு இம்புட்டு க்ரியேட்டிவிட்டி இருக்க கூடாது தான் . அம்புட்டு கிரியேட்டிவிட்டி.

இவர் எழுத்து மூலமா ஸ்டேட்டஸ் அவ்வளவு எதுவும் போடமாட்டார். ஆனால் வரைஞ்சி தள்ளிடுவார்.

மனுஷன் என்னமா வரையிறாரு? அட்டகாசம் போங்க. 

சில நாட்களில் நம்ம அனைவருக்கும் வாழ்க்கையில் சிலரை பார்த்தவுடனே ஒரு சிறிய பொறாமை வரும். இப்படியான பொறாமையை எனக்கு வர வைச்சவர் தான் நண்பர் சுரேஷ் சீனு .

அவரோட முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் அவங்க பிறந்த நாள் அன்று ஒரு படம் போட்டு வாழ்த்து சொல்வார்.

இவருடைய வரையும் திறனை பார்த்து வியந்து கொண்டு இருந்த எனக்கு  சென்ற வாரம் ஒரு இன்ப அதிர்ச்சி.

ஆசிரியர் தினத்தன்று இவரோட ஸ்டேட்டஸ்.. ரொம்ப அருமையா எழுதி இருந்தார். ஆசிரியர் என்பது வகுப்பில் மட்டும் அமைவது அல்ல.. வாழ்க்கையிலும்  அமையும்  என்பதை மிகவும் அருமையாக சொல்லியுள்ளார். 

இவரின் வார்த்தைகள் நூல் பிடித்தது போல் செல்கின்றது. இம்மாதிரியான பல திறமைகள் கொண்டோர் பதிவுலத்திற்கு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

என் சார்பில் நான் அவரை கேட்டு கொண்டேன்.


 இதோ நண்பரின் பதிவு. அவரின் அனுமதியோடு....நடு நடுவே அவரின் படைப்புக்களோடு...


நான் அப்போது வளைகுடாவில் ஒரு நிறுவனத்தின் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்தேன். அந்த நிறுவன மேலாளரும் சரி, முதலாளிகளும் சரி எனக்கு என் பதவிக்குரிய அதிகாரங்களையும் அதனுடன் கூடிய பொறுப்புக்களையும் அளித்திருந்தனர்.
எல்லாமும் எப்போதும் எல்லோருக்கும் சாதகமானதாகவே அமைந்து விடுவதில்லை தானே! . அரபி மொழி அறிந்த ஒருவர் தான் நிதி மேலாளர் பொறுப்பில் இருக்கவியலும் எனும் புதிய விதி எங்கள் குழுமத்தில் வரவும் அதிர்ச்சியானேன்..
விதி வந்த கையோடு சட்டென புதிய நிதி மேலாளரும் பொறுப்பேற்க வந்துவிட்டார். அவரை சந்திக்கும் முன்பே என் பணி விலகல் மடலை நிறுவன மேலாளரிடம் சமர்ப்பித்தேன். என்னை இழக்க மனமில்லாத அவரும், என்னைத் தனது நீலக்கண் பையனாகக் கருதும் ஒரு முதலாளியும் சுமார் ஒரு மணிக்கும் மேல் என்னிடம் உரையாடி, என்னுடைய அதிகாரங்கள், கடமைகள் என்றெதிலும் மாற்றமிருக்காது என்று உறுதியளித்து, மேலும் ஏற்கெனவே தயாராய் இருந்த ஒரு கடிதத்தையும் அளித்தனர்.
அந்தக் கடிதத்தில் என் பங்களிப்பை மெச்சியும், நிறுவனத்தில் என் புதிய நிலையையும் பற்றி குறிப்பிட்டு அன்றிலிருந்தே கணிசமான ஊதிய உயர்வும் அளிக்கப்படுவதாகவும் எழுதப்பட்டு இருந்தது. இருப்பினும் அதை ஏற்க நான் தயங்கினேன்.
என் பணி விலகலால், குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதியில் தடைபடும் என்பதும், நம் ஊரில் உடனடியாக நல்ல பள்ளியில் அவர்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதும், அது அவர்களின் கல்வியாண்டின் எட்டாம் மாதம் என்பதும் என்னை உறுத்தியது. முதலாளிகளின் அன்புக் கோரிக்கை ஒரு பக்கம்..முடிவெடுக்க இயலாமல் திணறினேன்!
சரி.தாயகம் திரும்ப வேண்டாம். இதே நாட்டில் வேறு ஏதாவதொருன் நிறுவனத்தில் பணி மாறலாம் என்றால் அதுவும் துர்லபம். காரணம் அந்தக் காலக்கட்டத்தில், ஓரிடம் விட்டு வேறிடம் தாவுவதென்பது யானைக் கொண்டை!!. (குதிரைக் கொம்பு ரொம்ப பழைய கிளிஷே!). சரி என் ஒப்பந்த காலம் வரையில் ஒப்பேற்றிவிடலாம். பிறகு தாயகம் திரும்பலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.


என்னை இறக்கி விட்டு அந்த இடத்தில் அமர்பவரை பார்க்க உள்ளுக்குள் குமைந்து கொண்டு தான் சென்றேன். நானும் மனிதன் தானே! நல்ல பருத்த சரீரம். ஆனால் மென்மையான சாரீரம்!
அவர் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர். என்னை விடமூத்தவர். இங்கிலாந்தில் தொழில்முறை மேற்படிப்பு முடித்திருந்தார். பக்கா ப்ரோஃபஷனல். அவர் என்னிடம் வெகு இதமாகவும், உரிய மரியாதை அளித்தும் உரையாடினார். பரஸ்பரம் எங்களை நாங்கள் அறிந்து கொள்ளத் தொடங்கினோம்.
அந்த வாரக்கடைசியில் என் நிறுவன மேலாளர் என்னை அழைக்கவும் சென்றேன். ஒரு கடிதத்தை கையில் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அது புதிய நிதி மேலாளர் தாம் பதவியேற்றதன் நிமித்தமாக நிறுவனத்திற்கு எழுதிய மடல். அதில் கடைசி வரியாக..”இவ்வளவு திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு மாற்று வேண்டும் என்று ஏன் நீங்கள் சிந்தித்தீர்கள் என்பதெனக்கு விளங்கவில்லை. உங்கள் குழுமத்தின் வேறேதாவது நிறுவனத்தில் எனக்கு பணிபுரிய வாய்ப்புக் கொடுத்தால் மகிழ்வேன்” எனவும் முடித்திருந்தார். அசந்து போனேன் நான். வாய்நிறைய சிரித்தார் நிறுவன மேலாளர்.

இதைப்பற்றி பிறகு எப்பவுமே புதியவரிடம் பேசவேயில்லை நான். ஆனால் எனக்கு அவர் மீதிருந்த மதிப்பானது பன்மடங்கு உயர்ந்தது உண்மை! அவருடன் நான் பணி புரிந்த காலத்தில். தொழில் ரீதியாக நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம். பன்னாட்டவர்களை ஊழியர்களாகக் கொண்ட எங்கள் நிதித் துறையை நான் இன்னமும் திறம்பட நிர்வகிக்க அவரது பங்களிப்பு எனக்கு வழிகாட்டியது!
இவைகள் எல்லாவற்றையும் விட, அன்பையும் நட்பையும் அடித்தளமாக்கி, நிறுவனத்தின் முதலாளி முதல் கடைநிலைத்தொழிலாளி வரை எப்படி பழகுவதென்பதை எனக்குச் சொல்லாமற் சொல்லித் தந்த ஆசான் அவர்!


ஆம்! ரொம்பவும் தாமதமாகத் தான் நான் என்னுடைய முப்பத்தியேழரையாவது வயதில் என் நல்லாசிரியன் யாரெனக் கண்டு கொண்டேன்!
தாமதம் தான் எனினும், கண்டு கொண்டேனே! அதுவே மகிழ்ச்சி!
OSAMA SIDAHMED எனும் அந்த நல்ல மனிதனை, நல்லாசிரியனை, நிச்சயம் நான் வாழுங்காலம் வரைக்கும் நினைத்து வணங்கியபடி இருப்பேன்!
அண்மையில் தான் அந்த ஒஸாமா தன் உடல் பருமன் குறைவதற்கானஅறுவை சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறில் கோமாவில் விழுந்து மூன்றே நாளில் இறந்து போனார்..


தன் 58வது வயதில்!

பின் குறிப்பு :
இவரின் படைப்புகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்.. மேலும்..ஏதாவது ஆசை வார்த்தை காட்டி எப்படியாவது அவரை பதிவுலகத்திற்கு கூட்டினு வாங்க. 

https://www.facebook.com/simply.suresh.seenu

13 கருத்துகள்:

  1. எங்கள் விசுவாச மித்திரரே..அழைத்த பின் ...அவர் கண்டிப்பாய் வருவார்..
    மற்றவர் எழுத்துகளை மனம் நிறைந்து சிலாகிக்கும் நீங்கள் ரொம்ப நல்லவர் விசு சார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட பாவி. நல்லா எழுதுறாரு .. நல்ல இருக்குன்னு சொன்னேன்.. இதுல நான் எப்படி நல்லவன் ஆனேன்.

      நீக்கு
    2. நன்றி மீரா செல்வக்குமார்!

      நீக்கு
    3. நன்றியும் அன்பும்! - சுரேஷ் சீனு

      நீக்கு
  2. அற்புதமான மனிதர்கள்
    அற்புதமான நிகழ்வு
    அற்புதமான பதிவு
    அற்புதமான பகிர்வு
    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவரை அழைத்து வருவோம்...

    பதிலளிநீக்கு
  4. அருமையாக எழுதுகிறார், அருமையாக படம் வரைகிறார், உங்களைப்போலவே கணக்கியலாளர், வேறெதற்கு வெயிட்டிங்... ஆரம்பிய்ங்க சுரேஷ் சீனு... உங்கள் பதிவுகளைப் படித்து ரசிக்க நாங்கள் தயார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாது? என்னை போலவே கணக்கியாளரா ? அப்ப நீங்க என்ன? சுரேஷ் சீனு ... Pleased to introduce you to Ranga... Another Thanikkai.!

      நீக்கு
  5. நல்லதொரு பதிவரை எதிர்பார்த்து நானும்.....

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு எழுத்தாளர்.கூடவே தனது பதிவுகளுக்குத் தானே வரைபவர் என்ன ஒரு பாக்கியம்!! தற்போது முகப்புத்தகத்தில் ...பதிவுலகிற்கு குண்டுக்கட்டாய் தூக்கிக் கொண்டு வந்து விட வேண்டியதுதான்...

    நான் அடிக்கடிச் சொல்லுவது இதுதான் தெருவில் யாசிப்பவர் கூட பல சமயங்களில் நமக்கு ஆசிரியராக வாய்ப்புண்டு மட்டுமல்ல ஒவ்வொருவரும் நமக்க்கு ஏதேனும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.நம்மைச் சுற்றிலும் நமக்கு ஆச்ரியர்கள் வாழ்க்கை முழுவதுமே ஆசிரியர்கள் கூடவே பயணிக்கவும் செய்கிறார்கள்தான். நல்லதொரு பதிவு..

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...