Thursday, June 30, 2016

ஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு..

நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த சீழ் பிடித்த சமுதாயத்தை நினைக்கையிலே ...

பட்ட பகலில் தலை நகரில் ஒரு கொலை...படு கொலை! மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அரிவாளால் வெட்டி ஒரு பெண் படுகொலை. வாழ்க்கையின் ஆரம்பத்தின் விளிம்பில் நின்று ஆயிரம்  கனவுகளோடு இருந்த ஒரு உயிர் ஒன்று பறிக்க பட்டுள்ளது.

அந்த பெண்ணை அவன் வெட்டும் போது அத்தனை பேர் இருந்தார்கள், அவர்களில் ஒருவர் கூட அதை நிறுத்தவில்லையா? அவ்வளவு தைரியம் இல்லையா?  நம் மொத்த சமுதாயமே கையாளாதவர்கள் ஆகிவிட்டார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஒரு வேளை.. நான் அங்கே இருந்து இருந்தால்.. ஒரு வேளை நான் அங்கே இருந்து இருந்தால்...ஏதாவது செய்து இருப்பேனா ?

அடித்து சொல்கிறேன்... வெட்கம் மானத்தை விட்டு ...

ஒன்றும் செய்து இருக்க மாட்டேன்.  அந்த இடத்தை விட்டு எவ்வளவு  சீக்கிரம் வெளியேற வேண்டுமோ.. அவ்வளவு சீக்கிரம் வெளியேறி இருப்பேன்.

நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா...? நீ எல்லாம் பிள்ளைகளை பெற்றவனா? உன் மகளுக்கு அப்படி நிகழ்ந்து இருந்தால்...

நியாமான கேள்வி தான்..

இந்த கேள்விக்கான பதில்கள் எல்லாம் கேள்வியிலேயே இருக்கின்றன..

நான் ஆம்பிளை தான். என்னை நம்பி மூன்று பேர் இருக்கின்றார்கள். வெளியே நடக்கும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க சென்று எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்... இந்த மூவரின் நிலைமை என்னவாகும்.  சுயநலம் தான்.. அது என் சுயநலம்..

சென்னை மாநகரம், நிறைய நடுத்தர குடும்பத்தினர்... அவர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் பொதுவாக இப்படி தான் இருந்து இருப்பார்கள். ஏன்.. இந்த நிகழ்ச்சி நடக்கும் போதும்.. இப்படி தான் இருந்தார்கள்.

உங்களுக்கு மனிதாபமே இல்லையா?  ஒரு பெண்.. இளம்பெண்... அவளுக்காக..பொதுமக்கள்  நீங்கள்... எதுவுமே செய்யவில்லையா?

பொதுமக்கள் செய்தார்கள்.. அனைத்தையும் செய்தார்கள்.. தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி துளியும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்க கூடாது, அதை தடுக்க வேண்டும் என்று இன்றும் செய்கின்றார்கள். செய்தார்களா.. பின்னே எப்படி இந்த கொலை நடந்தது.?

இந்த படுகொலையை செய்தது.. ஒரு தனி மனிதன் அல்ல.. அரசாங்கம்

அரசாங்கமா?

வியரவை சிந்தி உழைத்து சம்பாதிக்கும் ஓவ்வொரு ரூபாயில் துவங்கி...குண்டூசி முதல் இல்லம் வரை அனைத்திற்கும் வரி .. வரி.. வரி.. என்று கட்டினோம்.. ஏன்..

இந்த பெண்ணிற்காக...  மக்கள் கட்டிய இந்த வரிப்பணம் இந்த பெண்ணை காப்பாற்றி இருக்க வேண்டும்..  தவறி விட்டது.

மீண்டும் சொல்கிறேன்.. இப்படி ஒரு காரியம் நடக்க கூடாது என்ற ஒரே ஒரு எண்ணத்தோடு இந்த வரிப்பணம் கட்டப்பட்டது .. இந்த இளம்பெண்ணை கொன்றது நம் அரசாங்க  அமைப்பே..

யாராவது கொஞ்சம் விசாரித்து பாருங்களேன்.

 அடித்து சொல்கிறேன்.. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் CCTV  புகை பட கருவி உள்ளது என்று கணக்கு காட்டி ... நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எத்தனையோ  கோடி திருடி இருப்பார்கள்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தலை நகரில் .... அதுவும் இவ்வாறான அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ள  ஒரு இடத்தில்.. ஒரு காவல் அதிகாரி.. இல்லை.. விசாரித்து பாருங்கள்.. இந்த இடத்தில் இருந்ததாக கை எழுத்து போட்டு சில அதிகாரிகள் இல்லத்தில் அமர்ந்து இருந்து இருப்பார்கள்.

உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த பகுதியான டென்மார்க் - சுவீடன்- நார்வே (Scandinavia ) நாட்டு மக்களிடம் நான் அதிகம் பழகி இருக்கின்றேன்.. ஒரு முறை, அவர்களில் ஒருவரிடம் ..

குற்றம் குறைந்த சமூதாயத்தை எப்படி உருவாக்கினீர்கள், உங்கள் பகுதியில் கடவுள் நம்பிக்கை அதிகமா ?

என்று கேட்டேன்..அவரோ.. சிரித்து கொண்டே...

உலகிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாத மக்கள் நாங்கள் தான். எங்கள் பகுதியில் 15-20 % மக்கள் தான் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றார்.

பிறகு எப்படி.. இப்படி ஒரு நல்ல சமு  தாயம்?

சட்டம்.. சட்டத்தின் மீதான பயம்.

 "If you do the Crime... Be ready to do the Time"

குற்றம் புரிய திட்டமிடும் போதே.. "அகப்பட்டு விட்டால்" என்ற பயம்.  தவறுக்கேற்ற  தண்டனை.  நல்ல காவல் துறை. அந்த காவல் துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை. அருகே தவறு நேர்ந்தால்.. சந்தேகம் படும் படி ஏதாவது நடந்தால்.. உடனே காவல் துறைக்கு சொல்லிவிடலாம். அப்படி சொல்வதால் சொன்னவருக்கு எந்த ஒரு பிரச்னையும் கிடையாது.

அவரை பார்க்க பொறாமையாக இருந்தது.

தவறுக்கேற்ற தண்டனை...

நம் சமூதாயத்தில் உண்டா? பணக்காரனுக்கு  ஒரு சட்டம் .. மற்றவனுக்கு ஒரு சட்டம். வசதியான ஒருவன் ....மற்றும் அரசியல்வாதி - அதிகாரி யாருக்காவது அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்துள்ளதா?

இந்த கொலையை செய்தது நம் அரசாங்கமே...

தமிழ் நாட்டில் 125,000 காவல் துறையினர் இருக்க வேண்டுமாம். தற்போது உள்ளது 90,000 மட்டுமே. மீதி இடங்கள் காலி. நிலைமை இப்படி இருந்தால் நாடு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? கேட்டால் பட்ஜெட் இல்லை.. சம்பளம் கொடுக்க முடியாது.

சரி நாங்கள் கட்டிய கோடி கணக்கான வரி பணம்? ஓ.. அதுதான்.. இலவசம் என்று மிக்சி .. விசிறி...என்று உங்களுக்கே கொடுக்கப்பட்டதே..

கேடு கேட்ட முட்டாள் சமுதாயம் தானே நாம்.

இந்த ஒரு பெண் இறந்தால் என்ன? நிறைய பெண்கள்  இலவச "ஸ்க்கூட்டி"  ஒட்டுகின்றார்களே.. நம்மை இந்த அரசியல் அமைப்பு பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது.

படுகொலை செய்ய பட்ட இந்த பெண்ணின் பெயரில் ஒரு இலவச  ஸ்கூட்டியை நாளையே இன்னொரு அதிகாரி வாங்கி செல்வார்.

கொலையற்ற சமுதாயம் காண இயலாது. அது உண்மை.  அது இயல்பு. அதை தடுப்பது பொது  மக்களின்  கடமை அல்ல.

பொது மக்கள் தம் தம் பணியை ஒழுங்காக செய்து வருகின்றார்கள். இந்த கொலையை செய்தது நம் அரசியல் அமைப்பே..

பின் குறிப்பு:

இந்த பதிவில் ஒரு இடத்திலேயும் இறந்த அந்த பெண்ணின் பெயரை கூட நான் போடவில்லை.. ஏன்  தெரியுமா? இறந்தவள்  ஒரு பெண்.. 24 வயது  பெண். ஒரு மகள்.. ஒரு சகோதரி.. ஒரு உயிர்.

இதற்கு ஒரு மதம் - ஜாதி  வைத்து .. .கொச்சை படுத்தி..

80 வருடங்களுக்கு முன் அய்யர் ஆத்தில் பிறந்து, வளர்ந்து பூஜைக்கு  பூ பறிக்க செல்கையில் அங்கே இருந்த மீனவனை காதலித்து கரம் பிடித்தாளே...என் "அப்பாத்தா.."

அவள் இன்று இருந்து  இருக்கவேண்டும்...

செருப்பால் அடித்து இருப்பாள் இந்த ஜாதி வெறி நாய்களை...

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

12 comments:

 1. Helping-bystander effect
  The probability of help is inversely related to the number of bystanders
  https://en.wikipedia.org/wiki/Bystander_effect

  ReplyDelete
 2. இந்தக் கட்டுரையின் ஒவ்வொருவார்த்தையும் ஏற்கக்கூடிய உண்மைகள்

  ReplyDelete
 3. அருமையான பதிவு
  காலம் பதில் சொல்லும்

  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
 4. அருமையான பதிவு
  காலம் பதில் சொல்லும்

  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
 5. எல்லோருடைய மனதில் இருந்ததையும் அப்படியே அள்ளி கொட்டி விட்டீர்கள். அந்த செய்தியைப் படித்ததில், பார்த்ததில் இருந்து ஒருவித இனம் தெரியாத பதற்றம்.

  ReplyDelete
 6. அறச் சீற்றமும்
  அதைச் சொல்லிப்போனவிதமும் அருமை
  வாழ்த்துகளுடன்...

  ReplyDelete
 7. முழுக்க முழுக்க உண்மை! கூறுகெட்ட அரசாங்கம், அதைத் தேர்ந்தெடுத்த மக்கள்??? என்னத்தச் சொல்றது!!!

  ReplyDelete
 8. 2012-ல் காரைக்காலில் ஆசிட் வீச்சு மூலம் கொல்லப் பட்ட வினோதினி வழக்கில் 2 நாட்களுக்கு முன்னர் தான் ஆயுள் தண்டனை தீர்ப்பாகியிருக்கு. அவனும் உள்ள போய் யோகா செஞ்சு காட்டினா விரைவில் விடுதலை ஆகலாம்.

  நந்தா படத்தில் பாலியல் பலாத்காரம் செய்த ஒருவனை சூர்யா அறுத்து விட்ருவார், அதற்கு ராஜ்கிரண் சொல்லும் விளக்கம், "இவனெல்லாம் ஜெயிலுக்கு போய் மூணு வேளையும் நல்லா தின்னுட்டு உடம்ப வளர்த்துட்டு, வெளிய வரும் போது அடுத்து எவ கிடைப்பான்னு கையில புடிச்சுட்டே வருவான், அதான் அறுத்து விட்டாச்சாச்சுன்னு.."

  ஆணவக் கொலைகளை எதிர்த்து போராட்டம் பண்ணுவோருக்கும் அறிக்கை விடுவோருக்கும் எதிராக என்ன பண்ணுவது என்று நாக்கை தொங்க போட்டுக் கொண்டிருந்த நாய்களுக்கு வகையாக மேட்டர் சிக்கியதும் குரைக்க ஆரபித்து விட்டன.

  மேற்கண்ட சம்பவத்தில் இப்போ என்ன சொல்றாங்கன்னா, CCTV இருந்துச்சாம், ஆனா வேலை செய்யலயாம்!!

  ReplyDelete
 9. நல்ல பதிவு விசு. பார்க்கப் போனால் இங்கு எல்லோர் மனதில் இருப்பதையும் சொல்லிவிட்டீர்கள்.

  கீதா: நான் மீடியாவையும் சரி, போலீசையும் சரி நம்பவில்லை. ஏனென்றால் நம்பும் வகையில் யாரும் இல்லை. இங்கு நீதி நேர்மை எதுவும் இல்லை எல்லாமே ஆதாயம் அடிப்படையில்தான். தர்மம் என்பதும் இல்லை எந்த ஊடகத்திற்கும்.

  உங்கள் அப்பத்தா சூப்பர்!!! அவர்கள் கதை நன்றாகவே தெரியுமே! தைரியமான பாட்டி!!!

  ReplyDelete
 10. சகோதரி படுகொலை அதிர்ச்சியானதுதான். கொலை நடந்தது காலை 6.10 மணிக்கு. இங்கு எல்லோருமே சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு போன்ற ரயில் நிலையங்களை, கோயம்பேடு பேருந்து நிலையம் போல நினைத்துக் கொள்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இந்த நேரத்தில் ஈ மொய்ப்பது போல ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

  ஆனால், காலை 6.30 மணி வரை ஒரு நான்கைந்து நபர்கள் மட்டுமே முழு ரயில் நிலையத்திலும் இருப்பார்கள். காலை 7.00 மணிக்குத்தான் பீக்-அவர் ஆரம்பிக்கும். அலுவலகம் போகும் நபர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள். அதனால் அந்நேரத்தில் இந்த கொலையை ஓரிரண்டு பேர்தான் பார்த்திருப்பார்கள். அலறல் கேட்டு தள்ளி நின்றவர்கள் கவனிப்பதற்குள் அவன் ஓடியிருப்பான். அதனால் கொலையை பார்த்தவர்கள் நூறு பேர் இருப்பார்கள் என மீடியா சொல்லும் கதையை நம்பாதீர்கள். ஒருநாள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காலை ஆறு மணிக்கு வந்து கவனியுங்கள். உங்களுக்கே புரியும்.

  ReplyDelete
 11. நல்லதோர் பகிர்வு. ஒவ்வொரு இடத்திலும் இப்படியே.... எவருக்கும் சட்டம் மீது பயமில்லை. எதைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது - அரசியல் அப்படி!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...