Tuesday, June 21, 2016

மலர்ந்தும் மலராமல்....

அடியேன் இந்த வருடம் ஐம்பதை கடந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.   எனக்கு 23 வயது இருக்கும் வரை தான் நான் இந்தியாவில் வாழ்ந்தேன். 23l திரைகடல் ஓடி ஓடி ஓடி.. திரவியம் தேடி தேடி தேடி... அலைந்து கடைசியாக அமெரிக்க நாட்டில் கடந்த 15 வருடங்களாக கொட்டகையை அமைத்து வாழ்ந்து வருகிறேன்.

கணக்கு இடிக்குதா?

கண்டிப்பா...

ஐம்பதில் இருந்து 15 கழித்தால் 35, இந்தியாவை விட்டதோ 23... 35 ல் 23 கழித்தால் 12... அந்த 12 வருடம்... வளைகுடா... தென் அமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் தாண்டிய வாழ்வு.

ஐம்பது ஆனவுடன் நிறை குறைகளை அலச ஆரம்பித்தேன். நிறை குறையை விட அதிகமா பட்டது.  ஆனாலும் நிறையை நினைத்து மகிழ்வதை காட்டிலும்... குறைய பார்த்து ஏங்குவது தான் அதிகமாக உள்ளது.

அதில் ஒரு குறை... வளர்ந்த இடத்தில் வாழாமல் இருப்பது.


இந்தியாவில் வாழ்ந்த 23 வருடங்களில் பல ஊர்களில் வாழ்ந்து வந்தேன். எப்போது இந்தியாவிற்கு சென்றாலும் நான் படித்த பள்ளி , பழகிய நண்பர்கள் என்று ஊர் ஊராக சென்று பார்ப்பேன்.

அப்போது ஒரு நண்பரை காணும் போது... மற்றவர்களை பற்றி விசாரிக்க நேரும்.

டேய்.. அவன் எப்படி இருக்கான்..?

அவனா.. படிக்கும் என்ன ஒரு கலாட்டா பண்ணுவான்.. இப்ப பொண்டாட்டிக்கு பயந்து பெட்டி பாம்பா..

யாரை கட்டினான்..?

ஓ. அந்த "பம்பர கண்ணாலே..." ஞாபகம் இருக்கா? அவங்கள தான்..

என்ன திடீர்னு அவங்கள ? "அவள்"ன்னு தானே  சொல்லுவே.

விசு.. இப்ப அவங்களுக்கும் 50 வயசு .. மறந்துட்டியா?

பேசி கொண்டே இருக்கும் போது...இரு சிறுவர்கள் எதிரில் செல்ல....அவர்களை  அருகில் அழைத்து..

விசு .. இந்த பசங்க முகத்தை பார்த்து... யாரு பிள்ளைகள்ன்னு சொல்லி..

ரொம்ப பழகிய முகம்.. இருந்தாலும் யாருன்னு தெரியல..

நம்ம கிளாசில் படிச்சானே... செல்வா .அவன் பசங்க..

டேய்.. அவன் எங்கே இருக்கான்..?

இங்கே தான் பக்கத்து தெருவில்.... விவேக் வீடு ஞபாகம் இருக்கா.. அந்த வீடு விலைக்கு வந்தது.. இவன் வாங்கிட்டான்.

டே.. இவன் பெரிய ஆள் .. படிக்கிற காலத்திலே அந்த வீடு மேலே இவனுக்கு ஒரு கண்.

சரி.. விவேக் எங்க..?

பாவம் விசு.. புற்று நோய் வந்து இப்ப மருத்துவமனையில் இருக்கான், நேரம் இருந்தா வா போய்  பார்க்கலாம்..

கிளம்பு ..

இப்படி... வளர்ந்த இடத்தில் வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் மனதில் உள்ளது.

கால் சட்டை போட்டு கொண்டு... பள்ளி கூடத்திற்கு போன நண்பர்கள்.. ஒரு ஊரில் வளர்ந்து வாழும் போது...அது ஒரு தனி சுகம் என்று தான் நினைக்கின்றேன்.

வாழ்ந்தோர் சொல்லுங்கள்.

4 comments:

 1. Nostalgia is over rated என்று தோன்றுகிறது. Frozen in Time ஆக இருப்பதே சுகம்!

  ReplyDelete
 2. எனது பிறந்த ஊர், வளர்ந்த ஊர் படித்த ஊர் என்று தமிழ்நாடு நினைவிற்கு வந்துவிட்டது. எனக்கும் இப்படி பல நினைவுகள் வந்து போகும். இப்படி இருக்கும் போது பிறந்த ஊருக்குச் சென்று வருவது உண்டு என்றாலும் இப்போது இருக்கும் கேரளத்து நிலம்பூரே ஊராகிவிட்டது. ஆனால் ஊரில் இப்போது நான் இருந்த போது உள்ளவர் யாருமில்லை...

  கீதா: நல்ல நினைவுகள் விசு. நான் ஊர்ப்பக்கம் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது ஆனால் ஊர் மக்களும் இப்போது சென்னை வாசிகள் ஆகிவிட்டதால் இங்கேயே லிட்டில் திருப்பதிசாரம் இருக்கிறது. எனவே தொடர்பு எல்லைக்கு வெளியே போகாமல்...அவ்வப்போது சுக துக்க நிகழ்வுகளில் சந்திப்புகள் தொடர்கின்றன...

  ReplyDelete
 3. பிறந்த ஊர் நினைவுகள். எப்போது தமிழகம் சென்றாலும் நெய்வேலி செல்லத் தோன்றும். ஆனாலும் செல்ல முடிவதில்லை.

  ReplyDelete
 4. மனம் தொட்ட பதிவு. நினைவுகளை திருப்பிவிட்ட பதிவும் கூட... (நான் (இப்போது நியூசெர்சியில். தகவலுக்காக)

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...