Thursday, June 30, 2016

ஒருத்திதான் செத்தா.. எவ்வளவு ஸ்கூட்டி ஓடுது பாரு..

நெஞ்சு பொறுக்குதில்லையே....இந்த சீழ் பிடித்த சமுதாயத்தை நினைக்கையிலே ...

பட்ட பகலில் தலை நகரில் ஒரு கொலை...படு கொலை! மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் அரிவாளால் வெட்டி ஒரு பெண் படுகொலை. வாழ்க்கையின் ஆரம்பத்தின் விளிம்பில் நின்று ஆயிரம்  கனவுகளோடு இருந்த ஒரு உயிர் ஒன்று பறிக்க பட்டுள்ளது.

அந்த பெண்ணை அவன் வெட்டும் போது அத்தனை பேர் இருந்தார்கள், அவர்களில் ஒருவர் கூட அதை நிறுத்தவில்லையா? அவ்வளவு தைரியம் இல்லையா?  நம் மொத்த சமுதாயமே கையாளாதவர்கள் ஆகிவிட்டார்களா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

ஒரு வேளை.. நான் அங்கே இருந்து இருந்தால்.. ஒரு வேளை நான் அங்கே இருந்து இருந்தால்...ஏதாவது செய்து இருப்பேனா ?

அடித்து சொல்கிறேன்... வெட்கம் மானத்தை விட்டு ...

ஒன்றும் செய்து இருக்க மாட்டேன்.  அந்த இடத்தை விட்டு எவ்வளவு  சீக்கிரம் வெளியேற வேண்டுமோ.. அவ்வளவு சீக்கிரம் வெளியேறி இருப்பேன்.

நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா...? நீ எல்லாம் பிள்ளைகளை பெற்றவனா? உன் மகளுக்கு அப்படி நிகழ்ந்து இருந்தால்...

நியாமான கேள்வி தான்..

இந்த கேள்விக்கான பதில்கள் எல்லாம் கேள்வியிலேயே இருக்கின்றன..

நான் ஆம்பிளை தான். என்னை நம்பி மூன்று பேர் இருக்கின்றார்கள். வெளியே நடக்கும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க சென்று எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்... இந்த மூவரின் நிலைமை என்னவாகும்.  சுயநலம் தான்.. அது என் சுயநலம்..

சென்னை மாநகரம், நிறைய நடுத்தர குடும்பத்தினர்... அவர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் பொதுவாக இப்படி தான் இருந்து இருப்பார்கள். ஏன்.. இந்த நிகழ்ச்சி நடக்கும் போதும்.. இப்படி தான் இருந்தார்கள்.

உங்களுக்கு மனிதாபமே இல்லையா?  ஒரு பெண்.. இளம்பெண்... அவளுக்காக..பொதுமக்கள்  நீங்கள்... எதுவுமே செய்யவில்லையா?

பொதுமக்கள் செய்தார்கள்.. அனைத்தையும் செய்தார்கள்.. தங்கள் வாழ்நாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி துளியும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்க கூடாது, அதை தடுக்க வேண்டும் என்று இன்றும் செய்கின்றார்கள். செய்தார்களா.. பின்னே எப்படி இந்த கொலை நடந்தது.?

இந்த படுகொலையை செய்தது.. ஒரு தனி மனிதன் அல்ல.. அரசாங்கம்

அரசாங்கமா?

வியரவை சிந்தி உழைத்து சம்பாதிக்கும் ஓவ்வொரு ரூபாயில் துவங்கி...குண்டூசி முதல் இல்லம் வரை அனைத்திற்கும் வரி .. வரி.. வரி.. என்று கட்டினோம்.. ஏன்..

இந்த பெண்ணிற்காக...  மக்கள் கட்டிய இந்த வரிப்பணம் இந்த பெண்ணை காப்பாற்றி இருக்க வேண்டும்..  தவறி விட்டது.

மீண்டும் சொல்கிறேன்.. இப்படி ஒரு காரியம் நடக்க கூடாது என்ற ஒரே ஒரு எண்ணத்தோடு இந்த வரிப்பணம் கட்டப்பட்டது .. இந்த இளம்பெண்ணை கொன்றது நம் அரசாங்க  அமைப்பே..

யாராவது கொஞ்சம் விசாரித்து பாருங்களேன்.

 அடித்து சொல்கிறேன்.. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் CCTV  புகை பட கருவி உள்ளது என்று கணக்கு காட்டி ... நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எத்தனையோ  கோடி திருடி இருப்பார்கள்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தலை நகரில் .... அதுவும் இவ்வாறான அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ள  ஒரு இடத்தில்.. ஒரு காவல் அதிகாரி.. இல்லை.. விசாரித்து பாருங்கள்.. இந்த இடத்தில் இருந்ததாக கை எழுத்து போட்டு சில அதிகாரிகள் இல்லத்தில் அமர்ந்து இருந்து இருப்பார்கள்.

உலகிலேயே குற்றங்கள் மிகவும் குறைந்த பகுதியான டென்மார்க் - சுவீடன்- நார்வே (Scandinavia ) நாட்டு மக்களிடம் நான் அதிகம் பழகி இருக்கின்றேன்.. ஒரு முறை, அவர்களில் ஒருவரிடம் ..

குற்றம் குறைந்த சமூதாயத்தை எப்படி உருவாக்கினீர்கள், உங்கள் பகுதியில் கடவுள் நம்பிக்கை அதிகமா ?

என்று கேட்டேன்..அவரோ.. சிரித்து கொண்டே...

உலகிலேயே கடவுள் நம்பிக்கை இல்லாத மக்கள் நாங்கள் தான். எங்கள் பகுதியில் 15-20 % மக்கள் தான் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்றார்.

பிறகு எப்படி.. இப்படி ஒரு நல்ல சமு  தாயம்?

சட்டம்.. சட்டத்தின் மீதான பயம்.

 "If you do the Crime... Be ready to do the Time"

குற்றம் புரிய திட்டமிடும் போதே.. "அகப்பட்டு விட்டால்" என்ற பயம்.  தவறுக்கேற்ற  தண்டனை.  நல்ல காவல் துறை. அந்த காவல் துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை. அருகே தவறு நேர்ந்தால்.. சந்தேகம் படும் படி ஏதாவது நடந்தால்.. உடனே காவல் துறைக்கு சொல்லிவிடலாம். அப்படி சொல்வதால் சொன்னவருக்கு எந்த ஒரு பிரச்னையும் கிடையாது.

அவரை பார்க்க பொறாமையாக இருந்தது.

தவறுக்கேற்ற தண்டனை...

நம் சமூதாயத்தில் உண்டா? பணக்காரனுக்கு  ஒரு சட்டம் .. மற்றவனுக்கு ஒரு சட்டம். வசதியான ஒருவன் ....மற்றும் அரசியல்வாதி - அதிகாரி யாருக்காவது அவர்கள் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்துள்ளதா?

இந்த கொலையை செய்தது நம் அரசாங்கமே...

தமிழ் நாட்டில் 125,000 காவல் துறையினர் இருக்க வேண்டுமாம். தற்போது உள்ளது 90,000 மட்டுமே. மீதி இடங்கள் காலி. நிலைமை இப்படி இருந்தால் நாடு எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்? கேட்டால் பட்ஜெட் இல்லை.. சம்பளம் கொடுக்க முடியாது.

சரி நாங்கள் கட்டிய கோடி கணக்கான வரி பணம்? ஓ.. அதுதான்.. இலவசம் என்று மிக்சி .. விசிறி...என்று உங்களுக்கே கொடுக்கப்பட்டதே..

கேடு கேட்ட முட்டாள் சமுதாயம் தானே நாம்.

இந்த ஒரு பெண் இறந்தால் என்ன? நிறைய பெண்கள்  இலவச "ஸ்க்கூட்டி"  ஒட்டுகின்றார்களே.. நம்மை இந்த அரசியல் அமைப்பு பிச்சைகாரர்கள் ஆக்கி விட்டது.

படுகொலை செய்ய பட்ட இந்த பெண்ணின் பெயரில் ஒரு இலவச  ஸ்கூட்டியை நாளையே இன்னொரு அதிகாரி வாங்கி செல்வார்.

கொலையற்ற சமுதாயம் காண இயலாது. அது உண்மை.  அது இயல்பு. அதை தடுப்பது பொது  மக்களின்  கடமை அல்ல.

பொது மக்கள் தம் தம் பணியை ஒழுங்காக செய்து வருகின்றார்கள். இந்த கொலையை செய்தது நம் அரசியல் அமைப்பே..

பின் குறிப்பு:

இந்த பதிவில் ஒரு இடத்திலேயும் இறந்த அந்த பெண்ணின் பெயரை கூட நான் போடவில்லை.. ஏன்  தெரியுமா? இறந்தவள்  ஒரு பெண்.. 24 வயது  பெண். ஒரு மகள்.. ஒரு சகோதரி.. ஒரு உயிர்.

இதற்கு ஒரு மதம் - ஜாதி  வைத்து .. .கொச்சை படுத்தி..

80 வருடங்களுக்கு முன் அய்யர் ஆத்தில் பிறந்து, வளர்ந்து பூஜைக்கு  பூ பறிக்க செல்கையில் அங்கே இருந்த மீனவனை காதலித்து கரம் பிடித்தாளே...என் "அப்பாத்தா.."

அவள் இன்று இருந்து  இருக்கவேண்டும்...

செருப்பால் அடித்து இருப்பாள் இந்த ஜாதி வெறி நாய்களை...

நெஞ்சு பொறுக்குதில்லையே.. 

Wednesday, June 22, 2016

30 வருசமா ஏழரை....!

வெற்றி கண்ட மனிதன் எல்லாம் புத்திசாலி அல்ல....

என்னே ஒரு பொன்வாக்கு. வாழ்க்கையில் பல இடங்களில் இந்த வாக்கு உண்மையாவதை கண்டு  வியந்துள்ளேன்.

இவன் ஒரு ஆளுன்னு.. இவனுக்கு எப்படி? என்று என்னை வியக்க வைத்தததில் முதலில் இருப்பவர்.. கூத்தாடி சனியன்  சல்மான் கான்.

சினிமா துறை உலகத்தை சார்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்ததால் இவருக்கு நடிக்க ஒரு வாய்ப்பு. இவர் படங்களில் எதுவுமே நான் இதுவரை பார்த்ததில்லை.. என் மும்பை நாட்களில் தான் இவர் அறிமுகமானார். மைனே பியர் க்யா என்ற படம்.  அந்த காலத்தில் இந்த படத்தின் பாடல்கள் மிக பிரமாதம். I just called to say I  love you (Stevie Wonder)  மற்றும் Final Countdown (Europe)  உட்பட்ட சில ஆங்கில பாடலைகளை அப்படியே காப்பி அடித்து வெற்றி பெற்ற படம்.

அதில் வெற்றி பெற்ற இவருக்கு அப்போது 22 வயது இருக்கும் ... தற்போது..51.

Tuesday, June 21, 2016

மலர்ந்தும் மலராமல்....

அடியேன் இந்த வருடம் ஐம்பதை கடந்தேன் என்று அனைவருக்கும் தெரியும்.   எனக்கு 23 வயது இருக்கும் வரை தான் நான் இந்தியாவில் வாழ்ந்தேன். 23l திரைகடல் ஓடி ஓடி ஓடி.. திரவியம் தேடி தேடி தேடி... அலைந்து கடைசியாக அமெரிக்க நாட்டில் கடந்த 15 வருடங்களாக கொட்டகையை அமைத்து வாழ்ந்து வருகிறேன்.

கணக்கு இடிக்குதா?

கண்டிப்பா...

ஐம்பதில் இருந்து 15 கழித்தால் 35, இந்தியாவை விட்டதோ 23... 35 ல் 23 கழித்தால் 12... அந்த 12 வருடம்... வளைகுடா... தென் அமெரிக்கா என்று கண்டம் விட்டு கண்டம் தாண்டிய வாழ்வு.

ஐம்பது ஆனவுடன் நிறை குறைகளை அலச ஆரம்பித்தேன். நிறை குறையை விட அதிகமா பட்டது.  ஆனாலும் நிறையை நினைத்து மகிழ்வதை காட்டிலும்... குறைய பார்த்து ஏங்குவது தான் அதிகமாக உள்ளது.

அதில் ஒரு குறை... வளர்ந்த இடத்தில் வாழாமல் இருப்பது.

Monday, June 20, 2016

ஜி டி பி தெரியாத உனக்கு எதுக்கு தக்காளி சாம்பார்?


Sivakumar Enrum Anbudan என்ற நண்பர் முக நூலில் ஒரு கருத்தை இன்று வெளியிட்டு இருந்தார். நெத்தி அடி.. அதை அவரின் கருத்தை அனுமதி  கேட்டு விட்டு இங்கே வைக்கின்றேன்.

//காலையில எழுந்து பொழப்ப பாக்கணும்... புள்ளைய பள்ளியில விடணும்... வீட்டுக்கு காய்கறி வாங்கணும்... நெட் ஒழுங்கா வேலை செய்யணும்... இன்னைக்கு கரண்ட் கட் இருக்க கூடாது... பேங்கு போனா கூட்டம் இருக்க கூடாது... ரேசனுக்கு போகணும்... சின்ன பாப்பாவ டாக்டர் கிட்டே கூட்டிகிட்டு போகணும்... மாச பட்ஜெட்ல 2000 ஆயிரம் குறையுது... டாக்டர் செலவு இன்னும் 500 கூடும்... இத சமாளிக்கணும்... பிரண்டு ஒருத்தன் 1000 ரூபா வாங்கினான்... அவன் சூழ்நிலையும் சரியில்ல.. அவனையும் நெருக்க முடியாது... தினமும் ராத்திரி ஒரு மணிநேரம் எக்ஸ்ட்ரா வேலை பார்த்தா இந்த சூழ்நிலைய சமாளிக்கலாம்...

ஒரு சாமானியன் நிலைமை இது தாங்க...

5 இலக்கம் - 6 இலக்கம் சம்பளம் வாங்குறவன்... தின்ன சோறு செரிக்க ஜாக்கிங் போறவன்... யூரோ டாலர் மதிப்பை ஷேர் மார்க்கெட்ல நோட் பண்றவன் தான் அதபத்தியெல்லாம் கவலை படணும்...


பெட்ரோல் 40 விற்றாலும் 70 விற்றாலும், அண்ணே 30க்கு அடிண்ணே சொல்றவனுக்கு அவர எப்படி தெரியும்...

ஜிடி யோ -- பீடியோ -- 1.77 சதவீத வீக்கமோ... அயோடெக்ஸோ... இதெல்லாம் என்னனு அவனுக்கு தெரியாது...

தம்பி பருப்பு வேல 150 ரூபா...
அய்யோ அவ்வளவா... சரி அரை கிலோ போடுங்க... 10 தேதி ஆகட்டும் அப்புறம் வாங்கிக்கலாம்...


தம்பி தக்காளி 80 ரூபா..

என்ன 80 தா..

100 ரூபா வித்துச்சு... இப்போ 20 குறைஞ்சுருக்கு...

சரிதான்... நீங்க 15 ரூபாய்க்கு கணக்கு பண்ணி தக்காளி போடுங்க...

இது தான் அவன் வாழ்க்கை.... // அவன போல இந்தியாவுல 90 கோடி பேரு இருக்கான்.... :(  //

ரெண்டு நாளா எல்லோரும் பேசுறீங்களே.... அந்த ரகுராம்ராஜன்... அவரு 
யாருங்க...???


பின் குறிப்பு :

நண்பரே.. நான் தொழில் ரீதியாக தணிக்கையாளன் தான்.. இந்த ஜி டி , பி டி.. அர்த்தடக்ஸ்... ஐயோடெக்ஸ் எல்லாம் எனக்கும் தெரியும். அது எல்லாம் நீங்க சொன்ன 90 கோடி ஆட்களுக்கு வேலைக்கு ஆகாது.. அதை பத்தி யாரும் கவலை பற்ற மாதிரியும் தெரியல.

காங்கிரஸ் போய் பி ஜே பி வந்தது.. பேய்க்கு பயந்து பிசாச்க்கு வாழ்க்கை பட்டுடோமொன்னு ஒரு பயம் தருது.

இதுந்தாலும் நம் அருமை நண்பர் பிரகாஷ் போலோரின் உற்சாகபடுத்தும் வார்த்தைகளால்.. அப்படி எதுவும் நடக்காதுன்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

எந்த நம்பர் எப்படி இருந்தா இன்னா? இன்றைக்கு மதியம் ...

ராஜன் வீட்டுல... தக்காளி சாம்பார்.

சுனா சான வீட்டுல.. வெங்காய  குழம்பு.

மோடி வீட்டுல .. அவரு எங்கே வீட்டுலே இருந்தாரு..? விமானத்துல... மேக் இன் இந்தியா லஞ்ச்.

சுஷ்மா வீட்டுல( செவ்வாய் இல்ல , வெங்காயம் சேர்க்கமாட்டாங்க) வத்த    கொழம்பு.

தமிழிசை.. யாராவது தலித் தலையில பில்லை கட்டி இருப்பாங்க.

சோனியா - ராகுல்.. வீட்டுல "பார் பி க்குயு ..."

நீங்க சொன்ன 90 கோடி மக்களுக்கு.. முதலில் ஜி டி பி க்கு அர்த்தம் சொல்லி கொடுங்க.. ஜி டி பி தெரியாத ஆளுக்கு எதுக்கு தக்காளி சாம்பார்? தங்களின் இந்த வார்த்தை அடியேனை மிகவும் கவர்ந்தது. இதை ஒரு பதிவாக போடுகிறேன். ஆட்சேபனை இருந்தால் சொல்லவும், எடுத்து விடுகிறேன்.

தம்பிக்கு எந்த ஊர் ?

மூன்று நாள் வார இறுதி... அதுதாங்க ... Long Weekend ...வருடத்தில் 7 முறை தான் வரும். அடுத்த மாதம் ஜூலை 4ல் வர போகின்றது. சில வருடங்களுக்கு முன் இதை கொண்டாடிய விதம் மலரும் நினைவுகளாக வந்தது. 
குடியரசின் சுதந்திர தினம். இந்த வருடம் சனிக்கிழமை வந்ததால் வெள்ளி-சனி-ஞாயிறு விடுமுறை.
இந்தியாவை போல் நீ எவ்வளவு வேண்டுமானால் அடி, நாங்கள் அஹிம்சையில் சுதந்திரத்தை வாங்கி கொள்வோம் என்று வாங்கியது அல்ல. மயிலே மயிலே சிறகு போடு என்றால் போடாது.. அதை நாமே பிடுங்கவேண்டும் என்று போரினால் வாங்கியது. அதனால் தான் என்னவோ ... சுதந்திரத்திற்கும் சுதந்திர நாளுக்கும் இங்கே நிறைய மரியாதை.

சுதந்திரம் என்பது ஒரு உணர்ச்சி. அது ஒவ்வொரு மனிதனின் உரிமை. ஆனால் இந்த உரிமையை நாம் உயிரை போல் பாது காத்து கொள்ளவேண்டும்.இந்த உணர்ச்சி இந்நாட்டில் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. முக்கியமாக தேசிய கீதத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையே ஒரு சிறப்பு. இந்நாளில் இந்நாட்டின் கொடி வீடு வீடாக இருப்பதே ஒரு அழகு.
வெள்ளி முழுவதும் குடும்பத்தோடு நேரத்தை கழித்துவிட்டு, இரவு படுக்க போகும் போது சிறிது தாமதமாகிவிட்டது (நம்ம 8-9க்கு குறட்டை விடற ஆளு, இன்றைக்கு 10 ஆகிவிட்டது ). தூக்கம் வந்து தழுவும் முன் இந்த விடுதலையை வாங்கி கொடுத்த தியாக உள்ளங்களுக்கு ஒரு நன்றியை சொல்லி விட்டு, மனதில் இந்நாட்டு தேசிய கீதத்தை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
எப்போது தூங்கினேன் என்று தெரியல்லை, ஆனால் படுத்து சிறிது நேரத்திலேயே அலை பேசி ரிங்கியது. இந்த மாதிரி இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை வரும் அலை பேசி அழைப்புக்கள் எப்போதுமே நல்ல செய்தியை தராதவைகள். மனதில் சிறிய தயக்கத்தோடு யாருக்கு என்ன ஆச்சோ என்று எண்ணி எடுத்தால்..

Saturday, June 18, 2016

வக்கீலாலும் .. வக்கில்லாதவரினாலும் வந்த பாடு...

சென்ற வாரம் என் இளையவளின்  பள்ளி கூடத்தில் வருட இறுதி விழா - கூடம் இருந்தது. 6வது முதல் 8வது வரை படிக்கும் பிள்ளைகள் இவர்கள்.  இந்த விழாவில் 8 வது முடித்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை  கௌரவபடுத்தி அனுப்புவார்கள்.

மொத்த நிகழ்ச்சியும் 60 நிமிடத்திற்குள் முடிந்து விடும். இந்த 60 நிமிடத்தில்.. அங்கு இருந்தவர்கள் .. 72 முறையல்ல.. 100க்கும் மேல் எழுந்து நின்று கை தட்டி பாராட்டினார்கள்.

அன்று மாலை வெற்றிக்கு வந்ததும் அம்மணி.., சற்று  நேரம் நடந்து விட்டு வரலாம் என்று கூறுகையில்.. இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கு உடற்பயிர்ச்சி வேண்டாம் என்றேன்.

எழுந்து நின்று  கை தட்டுவது இவர்களின் கலாச்சாரம். அதுவும் காங்கிரஸ் என்றால் சொல்லவே தேவையில்லை.

மோடி அவர்கள் வாங்கிய கை தட்டு இந்தியாவில் வாழும் அவரின் பக்தர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால் அமெரிக்காவில் வாழும் எந்த ஒரு இந்தியனும்...

கை தட்டலை பார்த்தீர்களா.. அது இது என்று மிகை படுத்தி பேசினால் அது அந்த "ஆசாமியின்"  (என்னே ஒரு அருமையான வார்த்தை) அறியாமை என்று தான் சொல்லவேண்டும்.

Friday, June 17, 2016

ஏடறியேன் .. எழுத்தறியேன்...

குஜராத் மாநில போக்குவரத்து அமைச்சர் சங்கர் "செலத்திரி" (தவறாக எழுத்தை உபயோக படுத்தியதற்கு மன்னிக்கவும், இது என்ன பெரிய தவறா, ஒரு எழுத்து பிழை தானே என்று என்னும் அன்பர்களே .. இந்த பதிவே எழுத்துப்பிழை பற்றியது தான்)  செளத்ரி... அவர்கள் சொந்த செலவில்  சூனியம் வைத்து கொண்டு தானாக நம்முன் ஆஜார் ஆகியுள்ளார்.


இவரின்  படிப்பு MBA . நம் அருமை பிரதமர் மோடி அவர்கள், மற்றும் கல்வி துறை அமைச்சர்  இராணி அவர்களை போலவே இவரின் படிப்பும் பொய்யே என்று நீதி மன்ற வளாகத்தில்  வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது.

இவர்   இந்த வாரம் ஒரு நடுநிலை பள்ளிக்கு ஆய்வு செய்ய சென்ற போது.. "Elephant " என்ற வார்த்தையை .. "Elephent " என்று எழுதி பாடம் நடத்தி உள்ளார்.

அதை இவருக்கு அதிகம் வேண்டிய இன்னொருவர் காணொளியாக  வெளியிட .. இவரோ..

அட பாவிகளே.. எனக்கு என்ன இதற்கு கூடவா ஸ்பெல்லிங்  தெரியாது?

நான் வேண்டுமென்றே தவராகே எழுதி மாணவர்கள் யாராவது கண்டு பிடிகின்றார்களா என்று சோதனை செய்தேன் ..

என்று ஒரு பதிலை தந்து இருகின்றார்.

ஒரு காலத்தில் நானும் ஆசிரியன் தானே.Thursday, June 16, 2016

ஏக் தின் ஏக் காவுமே ஏக் கிஸ்ஸான்....

சென்ற பதிவில் (என்னடா நடக்குது இங்கே) நம் பிரதமர் மோடி அவர்கள்  அமெரிக்க காங்கிரஸ் அவையில் ஆங்கிலத்தை குஜராதியில் எழுதி படித்தார் என்று எழுதி இருந்தேன்.

அதை படித்து விட்டு.. பிரதமர் மோடி ரசிகர் மன்றத்தின்  பிதாமகன் .. சிம்ம குரலோன்..  கிழக்குசீமை நாயகன் "மதுரை தமிழன்" ...

//மோடி ஆங்கிலத்தில் பேசினார் என்று இந்தியர்களும் இல்லை இல்லை அவர் பேசியது ஹிந்திதான் என அமெரிக்கர்களும் சொல்லி கொண்டிருக்கும் வேலையில் நீங்கள்தான் அவர் ஆங்கிலத்தை குஜராத்தி மொழியில் எழுதி அதை எதிரே உள்ள கண்ணாடியில் இருந்து படித்தார் என்று உண்மையை சொல்லி இருக்கிறார்கள்//

என்ற பின்னூட்டம் இட்டு இருந்தார்.

இதில் என்ன அதிசயம்.. ?

இதை கேட்டவர்கள் உடனே இது குஜராத்தி என்று புரிந்து கொண்டு இருக்க முடியுமே என்று நினைத்து கொண்டு இருந்தபோது..

பிரதமர் மோடி அவர்களின் பக்தர் ஒருவர் மினஞ்சலில்..

என்னது..? ஆங்கிலத்தை குஜராத்தி  மொழியில் எழுதி படித்தாரா ? நிருபியுங்கள் என்றார்.

எதை நிரூபிக்க வேண்டும்.. ?

படித்ததையா (இன்னும் நிறைய பக்தர்கள் பிரதமர் மோடி அவர்கள் பேசினார் என்றே நினைத்து கொண்டு இருகின்றார்கள்) அல்ல.. ? குஜராத்தியில் படித்ததையா ? என்று கேட்க.. அவர் படித்தார் என்று எனக்கு தெரியும்.. குஜராத்தியில் படித்தார் என்று நிரூபிக்கவும் என்றார்.

School என்ற வார்த்தையை ஸ்ஸ்கூல்   என்றும்
Vision என்ற வார்த்தையை விஜன் என்றும்..
Exactly என்ற வார்த்தையை எக்ஜாக்ட்லி என்றும்
Zero என்ற வார்த்தையை ஜீரோ என்றும்
Zoo என்ற வார்த்தையை ஜூ என்றும்
Station என்ற வார்த்தையை டேசன் என்றும்
Program என்ற வார்த்தையை போக்ரம் என்றும்
Risk என்ற வார்த்தையை ரிக்ஸ் என்றும்
Special என்ற வார்த்தையை பெஷல் என்றும்
Fan என்ற வார்த்தையை பேன் என்றும்
Driver என்ற வார்த்தையை டைவர் என்றும்
Shoes என்ற வார்த்தையை சூஸ்  என்றும்

படித்தாரே.. அப்போதே  அனைவருக்கும் இது ஆங்கிலத்தை குஜராத்தியில் எழுதி படித்துள்ளார் என்று தெரிந்து இருக்க வேண்டுமே..

இது என்ன கம்பசூத்திரமா?

பின் குறிப்பு :

சரி.. ஒத்துக்குறேன் .. அவர் ஆங்கிலத்த குஜராதியில் எழுதி தான் படித்தார்.
ஓகே.

ஆனால் அவர் முன்பு எங்கேயோ .. மிசர்ஸ் சிரிசேனாவனை .. எம். ஆர். எஸ். சிரிசேனான்னு படிச்சாருன்னு  சொன்னீங்களே .. அதை நிருபியுங்க.. பாக்கலாம்..
எம். ஆர். எஸ். சிரிசெனா

அட பாவி.. அதை நானே மறக்க நினைத்தாலும் விட மாடீங்க போல இருக்கே.. பக்தர்களே.. கொஞ்சம் மறக்க விடுங்க.. ப்ளீஸ்.


பின் குறிப்புக்கு  பின் குறிப்பு :

மோடி பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்! ஒட்டுமொத்தமா கிளம்பி வந்து, நீ யோக்கியமா .. உன் ஆங்கிலம் எனக்கு தெரியாதான்னு கேக்காதிங்க! என்னுடைய ஆங்கில உச்சரிப்பை ஒரு நாளைக்கு 32,108 (சராசரியா)  திருத்த வீட்டுல ரெண்டு ராசாத்திங்க இருக்காங்க. 

Wednesday, June 15, 2016

என்னடா நடக்குது இங்கே?

தமிழக தேர்தல் முடிந்தவுடன் ....இனி சில காலம் நமக்கு அரசியல் வேண்டாம் என்று முடிவு பண்ணி "சொந்த கதை சோக கதையில் " என் பதிவுகளை எழுதி வந்தேன்.

என்னதான் வேண்டாம் என்று இருந்தாலும் ... நம்மூர் அரசியல்வாதிகள் நம்மை விட்டு வைப்பார்களா...ஒவ்வொரு நாளும் செய்திகளை சுட்டினால் அத்தனையும் சுவாராசியமான தகவல்கள்.

சரி... இனி எப்பவாவது ஒரு அரசியல்  - நாட்டு நடப்பு பதிவு போடலாம்னு யோசித்து வந்த பதிவு.

முதல் செய்தி..

அமெரிக்க காங்கிரஸ் அவையில் பிரதமர் மோடி  அவர்களைன் பிரமாத பேச்சு. 70 முறைக்கும் மேலே கை தட்டினார்கள்.

இதை  எழுதும் முன் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிவிடுகிறேன். அடியேன் மோடி  பக்தனும் அல்ல.. அதற்குநேர் மறையும் அல்ல.
குஜராத் கலவரத்தில் அவர் செயல்பட்ட விதம் என்னை மிகவும் பாதித்தது. அதனால் அவர் மீது எனக்கு மரியாதை வர தவருகிறது. அதே  நேரத்தில்.. கேடு கெட்ட காங்கிரஸ் கட்சியை அவர் தவிடு பொடியாக்கியத்தை என்னை விட யாரும் அதிகம் ரசித்து இருக்க முடியாது.

Tuesday, June 14, 2016

ஆசைக்கு ரெண்டு... ஆஸ்த்திக்கும் அதே ரெண்டு!

டாடி.... அலாரம் மறக்காமா வைச்சிட்டீங்களா?

வைச்சிடேனே ...

என்று சொல்லி விட்டு ..... இளையவள் என் அறையுள் வருமுன் அலாரம் வைத்தேன்.

உள்ளே நுழைந்தவள்...

எத்தனை மணிக்கு வைச்சீங்க?

காலையில் 2.50 க்கு.

ஐயோ... 3 மணிக்கு எல்லாம் ஸ்கூலில் இருக்கணும். 2,50 க்கு வைச்சி இருக்கீங்களே..

எனக்கு 10 நிமிஷம் போதும். உன்னை அனுப்பிவிட்டு உடனே வந்து திரும்பவும் தூங்கிடுவேன்.

உங்களுக்கு 10 நிமிஷம் போதும். எனக்கு..? நான் எழுந்து ரெடியாக வேண்டாமா?

சரி எத்தனை மணிக்கு வைக்கட்டும்?

2க்கு ஒன்னு. 2.15க்கு ஒன்னு.

ஏன் ரெண்டு முறை?

 2 மணிக்கு என்னை எழுப்புங்க, நான் இன்னும் 10 நிமிஷம்னு சொல்லுவேன்...அப்புறம் 2.15க்கு எழுப்புங்க..

2 மணியில் இருந்து 10 நிமிஷம் கூட்டினா ...2.10 தானே.. 2.15 சொல்ற...

ரொம்ப அவசியம்... குட் நைட் ...

என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்...
எனக்கு ஒன்னும் இல்ல.. உம்பாடு பெரும்பாடு..
பிள்ளை வளர்ந்து விட்டாள்.. இந்த மாதம் கடைசியில் 14 வயதை எட்டி உயர்நிலை பள்ளிக்கு போக போகிறாள். இன்று பள்ளிக்கூடம் ஒழுங்கு செய்த சுற்றுலா பயணத்திற்கு போகிறாள்.

எங்கே இருந்து...எங்கே..?

மேற்கு கோடியில் இருக்கும் கலிபோர்னியாவில் இருந்து கிழக்கு கோடியில் இருக்கும் வாஷிங்டன் நகரத்திற்கு.

இங்கு, நடுநிலை  பள்ளி மாணவ மாணவியர்கள் உயர் நிலை பள்ளிக்கு செல்லும் முன் வரும் கோடை விடுமுறையில் வாஷிங்டன் சுற்றுலா போவது வழக்கம்.அனேக இடங்களை பார்த்தாலும் அவர்கள் மிகவும் எதிர்பார்த்து ரசித்து பார்க்கும் இடம்.. "வைட் ஹவுஸ்" என்று அனைவராலும் அழைக்க படும் அமெரிக்க ஜனாதிபதி வாழும் வெள்ளை மாளிகை.

Monday, June 13, 2016

காக்கா கூட்டத்த பாருங்க....

சில நாட்களுக்கு முன் ஒரு வார இறுதி... ஞாயிறு காலை குடும்பமாக கோயில்  சென்று விட்டு திரும்பும் வேளையில்....

மதியம் சாப்பாடு என்ன?

என்று அம்மணியிடம் கேட்க ...அவர்கள் பதிலோ....

இன்னைக்கு நான் கொஞ்சம் பிசி..நேத்து இரவு பண்ண சாம்பார் மீதி இருக்கு. கொஞ்சம் சோறு மட்டும் வடிச்சி.. ஊறுகாய் வச்சி மேனேஜ் பண்ணிக்கலாம்.

மேனேஜ் பண்ண இது என்ன ஆபீஸா? ஐயகோ.. ஞாயிறும் அதுவுமா இப்படி ஆயிடிச்சே

என்று புலம்ப...

அம்மணியோ..

என்னவோ... பூகம்பம் வந்தமாதிரி அலறுரிங்க... இது ஒரு விஷயமா ?

என்று கேட்க அவர்களுக்கு விளக்கும்  நேரம் வந்தது.

சின்ன வயசில் ஹாஸ்டலிலும் சரி... வீட்டிலும் சரி...ஞாயிறு மதியம் ஒரு நல்ல "கறி குழம்பு" இருக்கணும். அப்படி இல்லாட்டி அந்த வாரமே விளங்காது..

ஏங்க. அந்த காலத்தில் வாரத்துல ஒரு நாள் மதியம் "கறி குழம்பு".. அப்ப சரி.. இந்த காலத்தில் தான் காலை டிபனுக்கு கூட கறி வைச்சி தாக்குரிங்களே.. இப்பவும் அப்படியே இருக்கணுமா?

நீ என்ன தான் சொல்லு.. நமக்குன்னு ஒரு  கலாச்சாரம்   இருக்கு, அதை மாத்த கூடாது.

கலாச்சாரம் இருக்கு சரி... ஆனால் நேரம் இல்லையே..!?

என்று சொல்லி கொண்டே அம்மணி சோறு சாம்பார் ஊறுகாய் பரிமாறுகையில் ..

ஏங்க,ஒரு ஞாயிறு கறியில்லன்னு  இந்த மாதிரி அலறுரிங்களே., அந்த காலத்தில் சின்ன வயதில் ... என்னைக்காவது ரொம்ப பிசியாகி... மதியம் "கறி குழம்பு"  செய்ய முடியாட்டி என்ன பண்ணுவிங்க..?

ஒ... வீட்டில் எப்பவுமே "உப்பு கண்டம்" இருக்கும்.

தண்ணில கண்டம் கேள்வி பட்டு இருக்கேன்.. இது என்ன உப்பு கண்டம்!?
காக்கா கூட்டத்த பாருங்க ...

நல்ல இறைச்சிய வாங்கி .... நல்ல மசாலா போட்டு ஒரு மூணு நாள் வெயிலில் காய வைச்சி, காஞ்சவுடன் ஒரு டப்பாவில் போட்டு வைச்சிடுவோம். எப்ப வேணுமோ அப்ப அப்பளம் மாதிரி செஞ்சிக்குவோம். ரொம்ப நல்லா இருக்கும்.

இந்த அறிவை படிப்புல காட்டி இருந்தா எங்கேயோ போய் இருப்பீங்க..

சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே... மனதில்...

இங்கேயும் இந்த மாதம் கொஞ்சம்  வெயில்.. நல்ல கறி... இதை ஏன் இங்க செய்ய கூடாது, என்ற எண்ணம் வந்தது.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமே...அம்மணியோ...

அது எல்லாம் இருக்கட்டும்.. இங்கேயும் வெயில்-கறி இருக்குனு செய்ய ஆரம்பிச்சிடாதிங்க..

Sunday, June 12, 2016

ஒ.. ஒரு வேளை நான் நிஜமாவே கொடுத்து வைச்சவனா....?

இந்த ஞாயிறு அடியேனை பெற்றெடுத்த அம்மணியை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வருமாறு நண்பர் ஒருவரின் வேண்டுகோள் வந்தது. பின்னர் நிகழ்ச்சியில் அம்மா தான் சிறப்பு விருந்தினர் என்றும் சிறப்புரையை அவர்கள் தான் வழங்கவேண்டும் என்று ஒரு விண்ணப்பமும் வைத்தார்.

அம்மாவிற்கு இப்ப 90 வயதாகிவிட்டது நண்பரே.. அவங்களால...

விசு ... போன மாதம் அவங்கள ஒரு இடத்தில பார்த்தேன்.. உன்னோடோ,  என்னோட நல்லா இருக்காங்க.. நீ கூட்டி  கொண்டுவா..

என்று சொல்ல ...........அம்மாவிடம்  விஷயத்தை சொன்னேன்..அவர்களும்  சம்மதிக்க ... ஞாயிறு காலை லாஸ் அஞ்சல்ஸ் பயணம்.

எங்கள் இல்லத்தில் இருந்து 80-90 கிலோமீட்டர்.. 40 நிமிடத்தில் சென்று விடலாம். 9 மணிக்கு இருக்க  வேண்டும் என்று நண்பர் சொன்னதால்... காலை 7.30 போல் கிளம்பிவிட்டோம்.

வண்டியில்  ஏறி அமர்ந்தவுடன் ...

இந்த சீட் பெல்ட் ஒழுங்கா போட்டு இருக்கான்னு  பாரு...

கண்கள் சீட் பெல்ட்டை நோக்கி சென்றன.. மனமோ.. பல வருடங்களை தாண்டி பல்லாயிரமைல்களை தாண்டி ஓடியது.
என்னதான் சொல்லுங்க அந்த சைக்கிள் பெடல் மிதிக்கும் போது   இருந்த சுகம் இங்கே இல்லை.

வாடகை சைக்கிள் ஒன்று எடுத்து கொண்டு ... அதில் அவர்களை பின் இருக்கையில்  அமர வைத்து செல்லும் நாட்கள்..

அன்றும் அவர்கள் ஏறி அமர்ந்தவுடன் ஒரு கேள்வி கேட்பார்கள்..

விசு.. புடவை சக்கரத்துல விழுதா, பார்?

இந்த சீட் பெல்ட் நாட்களுக்கும் அந்த புடவை-சக்கர நாட்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்..

இதுவோ சைக்கிள்  நாட்கள், எனக்கு 14 வயதாவது இருந்து இருக்கும். அதற்கும் முன்பு...நினைவு தெரிந்த நாட்கள் முதல் தகப்பனின் நினைவே இல்லாமல் வளர்ந்தவன் தானே நான்.

பிறர்  சொல்ல என் தகப்பனை பற்றி நிறைய கேட்டுள்ளேன். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது இறைவனடி சேர்ந்தார்.  அம்மா எப்போவாவது அப்பாவை பற்றி பேசுவார்கள்.

அம்மாவிற்கு நாற்பது சொச்சம் இருக்கும் போது அப்பா திடீரென்று காலமடைந்தார். விட்டு சென்றதோ... 9 பிள்ளைகள்.. 15 வயதில் இருந்து 4 வயது வரை..

வீட்டில் நான் தானே இளையவன். என் மூத்த சகோதர்கள் சகோதரிகள் அனைவருக்கும் அப்பாவின் நினைவு சற்று இருந்ததால்.. அந்த உரையாடலில் கலந்து கொள்வார்கள்.. நான் விழி  பிதுங்கி நிற்கையில்.. அவர்கள்.. இது நினைவு இல்ல? அதுகூடவா நினைவு இல்லை என்று கேட்பார்கள்.. ஒன்றுமே நினைவில் இல்லை.

அருகில் இருந்த அம்மாவை பார்த்தேன். சற்று கண்ணை மூடி கொண்டு ஏதோ ஒரு நினைவில் பயணித்து கொண்டு வந்தார்கள். ஒரு வேளை அவர்களும் சைக்கிள் நாட்களுக்கு சென்று இருப்பார்களோ... முகத்தில் இருந்த ஒவ்வொரு கோடும் கோடி கதை சொன்னது.

ஒரு தனி பெண், கணவனின் துணை இல்லாமல் எப்படி எங்களையெல்லாம் வளர்த்து இருப்பார்கள்.. என்ற கேள்வியும் கூடவே வந்தது.


போகும் வழியில்.. மனதில் ஒரு எண்ணம்.. என்னதான்.. லாஸ் அஞ்சேல்ஸ் நகரில் சொகுசு வண்டியில் அன்னையை அழைத்து சென்றாலும்..
அந்த சைக்கிள் ஒன்றை எடுத்து கொண்டு அவர்களை பின் சீட்டில் அமர வைத்து மேடு வந்தவுடன் எழுந்து நின்று ஒட்டினனே.. அந்த சுகம் இல்லையே..

இடமும் வந்தது.. நிகழ்ச்சியும் ஆரம்பித்தது.. சிறப்பு விருந்தினரை அறிமுகபடுத்திய நண்பர்..

இவர்களை இன்று ஏன் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்தோம் தெரியுமா?

என்று பேச ஆரம்பித்தார். என்ன சொல்ல போகின்றார் என்ற ஆர்வத்தில் நானும் நிமிர்ந்து அமர....

அம்மாவும் பிள்ளைகளும் இங்கே அமர்ந்து இருகின்றார்கள் அம்மாவை பற்றி நான் நிறைய கேள்வி பட்டுள்ளேன். 1970ம் வருடங்களில்   இவர்கள் வேலையின் நிமித்தம் கோடிகணக்கான பணத்தை நிர்வாகித்து வந்தார்கள். இந்த பணம் முழுவதும் ஏழை , மற்றும் மாற்று திறன் கொண்டோருக்கான பணம். இவ்வளவு பணம் கையில் இருந்த போதும் இவர்கள் அதில் இருந்து ஒரு ரூபாயாவது தனக்காகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ  எடுத்தது இல்லை.

இன்னும் சொல்ல போனால் இவ்வளவு பணத்தை இவர்கள் நிர்வாகிக்கும் அந்த காலத்தில்  இவர் பிள்ளை கூட கிழிந்த கால்சட்டையை தைத்து தான் போட்டு பள்ளிக்கு செல்வார்கள்...

அம்மா அவர்கள் இந்த ஊனமற்ற பிள்ளைகளுக்காக எத்தனையோ நிறுவனத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்கள். ஆனாலும் .. அவர்களின் இந்த சுத்தமான வாழ்க்கை தான் எங்களை இன்று அவர்களை சிறப்பு விருந்தினராக அழைக்க வைத்தது.

அம்மாவும் சிறப்புரை ஆற்றினார்கள். சந்திப்பும் முடிந்தது. மதிய உணவும் அங்கேயே பரிமாற்ற பட்டது.. அந்த நேரத்தில் நண்பர் அருகில் வந்து..

விசு... அந்த கிழிஞ்ச கால்சட்டையை பத்தி நான் பேசியதை நீ ஒன்றும் தவறாக எடுக்கவில்லையே...

கண்டிப்பாக இல்லை... அந்த கிழிஞ்ச கால்சட்டை எனக்கும் தானே பெருமை. இதில் தப்பே இல்லை...

இல்லை , அதை சொன்னவுடன் தான் எனக்கு.. ஐயையோ.. இங்கே இருக்கிற  எல்லாருக்கும் நீ தான் அவங்க பிள்ளைன்னு தெரியுமே.. உன்னை என்ன யோசிப்பாங்கோன்னு  நினைச்சேன்..

நண்பா.. நீ இந்த உண்மைய சொன்னவுடன் இங்கே இருக்கிற மக்கள் மத்தியில் என் மரியாதை கூடி இருக்குமே தவிர குறையவில்லை.... இதில் தப்பே இல்லை...

என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பினேன்...

சாப்பிட்டு கொண்டு இருக்கையில்.. நண்பன் தண்டபாணி அருகில் வந்தான்.. பொதுவாக கொஞ்சம் கிண்டலாக பேசுபவன்.. இன்றோ என் தோளின்  மேல் கை வைத்து .. தோளை சற்று அழுத்தி பிடித்தான்..

பாணி...

விசு...

தண்டம்... நீ என்ன வாத்தியாறேன்னு கூப்பிட்டா "எவரிதிங் இஸ் ஆல் ரைட்"ன்னு அர்த்தம்.. விசு ன்னு கூப்பிட்டா எனக்கு கொஞ்சம் பயம் தான்..
என்ன விஷயம்?

என்று திரும்பி பார்த்தேன்..

வாத்தியாரே.. கொஞ்சம் அமைதியா இருக்கியா?

என்று சொன்னவனின் கண்கள் ஈரமாகி இருந்தது.

தண்டம்.., என்னாடா ஆச்சி.. எவரிதிங் ஆல்ரைட் வித் யு..?

மீண்டும் ஒரு முறை என்  தோள்களை இறுக்கி, ...

ஏன் வாத்தியாரே.. இந்த விஷயத்த எனக்கு சொல்லல..

டேய்.. இது எனக்கே தெரியாது.. வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணேன்.

நீ ரொம்ப கொடுத்து வைச்சவன் வாத்தியாரே..சரி, அப்புறம் பார்க்கலாம்  என்று அந்த இடத்தை விட்டு  கிளம்பினான்

நாங்களும் உணவை முடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். வண்டியில் ஏறிய பின் ..அம்மா..

விசு.. புடவை சக்கரத்தில் மாட்டி... சாரி.. சீட் பெல்ட் சரியா போட்டு இருக்கா பார் ..

என்று கேட்க வண்டியை இல்லத்தை நோக்கி விட்டேன்.

மனதில் ஒரு மூலையில்... என்னடா இது.. நம்ம கிழிஞ்ச கால் சாட்டை போட்டு இருக்கோம்.. தண்டபாணி என்னமோ .. நீ கொடுத்து வைச்சவன்னுன்னு சொல்றான்?  அவன் சொன்னா சரியா தான் இருக்கும் ....

ஒருவேளை நான் உண்மையாகவே கொடுத்து வைச்சவனா இருக்குமோ.. என்ற பெருமை மனதில் வந்தது.

இதை படித்த நீங்களாவது சொல்லுங்களேன்.. நான் கொடுத்து வைச்சவனா?


Thursday, June 9, 2016

குற்றம் புரிந்தவன்.. வாழ்க்கையில்...

நேற்று எழுதிய  "தூக்கம் போச்சிடி" யம்மா... வில்

"ஒரு வேளை.. ஒரு வேளை.. ன்னு முனவி கொண்டே தூங்க முயன்றேன்"
தூக்கம் போனதிற்கான காரணத்தை படிக்காதவர்கள் அந்த பதிவை ஒரு முறை இங்கே சொடுக்கி படித்து பின்பு இங்கே வந்து தொடருமாறு.. பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

"கெட் அவுட்" என்று மூத்தவள் வேற சொல்லிவிட்டாளே..

அடே டே..

நம்ம ரொம்ப சுயநலவாதியா மாறித்தான் இருக்கோம். இதுல என்ன விசேஷம்னா நம்ம சுயநலவாதியா மாறினத கூட அறியாம இருந்து இருக்கோமே.. என்று எண்ணி கொண்டே இருக்கையில்.. இளையவள் வந்தாள்..

ப்ளீஸ் டெல் மீ, யு டின்ட்  செ தட்...

ஒ... மூத்தவள் இவளிடம் போட்டு கொடுத்து இருக்கா போல ..

இருக்கே..மனதில் சொல்லி கொண்டே.. ஒன்றும் அறியாதவன் போல்..

மகள்..என்ன ஆச்சி.. தூங்கல?

பேச்ச  மாத்தாதீங்க..

நீங்க தண்டபாணி மாமாவை ஏமாத்திட்டு.. அதையெல்லாம் மறந்துட்டு.. கொஞ்சம் கூட உணர்ச்சி இல்லாமல்.... ஒரு வேளை, அவர் உங்கள ஏமாத்தி இருப்பாரோன்னு யோசித்திங்கலாமே...

மனதில்.. போட்டு கொடுத்தாளா.. சின்னவ அவங்க அம்மா மாதிரி.. இப்ப ஒரு வழி பண்ணிடுவாளே..

சாரி மகள்.. ஏதோ தெரியாமல் நடந்துடிச்சி..

தெரிஞ்சி தான் நடந்துடிச்சி.. கால் ஹிம் அண்ட்  அப்பாலஜைஸ்....

இப்ப... மணி 10 கிட்ட ஆச்சி.. தூங்கி இருப்பான். நாளைக்கு சொல்றேன்.
டாடி.. அமெரிக்காவிலே சனி கிழமை 10 மணிக்கு படுக்கைக்கு போற ஒரே இந்திய குடும்பம் நம்ம தான்.. கால் ஹிம்...

Monday, June 6, 2016

தூக்கம் போச்சிடி... யம்மா..

அலை பேசி அலறியது...

வாத்தியாரே.. எங்கே ஆளையே காணோம்...

ஒரு மனைவி .... ரெண்டு ராசாதிக்காங்க.. என்னத்த சொல்வேன்.. விஷயத்த சொல்லு தண்டம்...

இந்த சனி என்ன பண்ற?

இந்த சனி... கழுதை கெட்டா குட்டி சுவர்.. ராசாதிக்களோடு கோல்ப் தான்...வேற என்ன?

அது எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி வர?

காலையில் 7 மணிக்கு ஆரம்பிச்சு மதியம் ரெண்டு வரைக்கும்.

எப்படி வாத்தியாரே..  7 மணிக்கு விளையாட்டு ஆரம்பிக்கனும்னா குறைந்த பட்சம் 5.45 இல்ல 6 மணிக்கு எழனுமே.. எப்படி சனியும் அதுவுமா?

தண்டம் .. நான் சின்ன வயதில் ஹாஸ்டலில் படிச்சவன். வெயிலோ மழையோ . அம்மாவாசையோ பௌர்னமியொ... ஆடியோ ஆவணியோ...  கொடையோ  குளிரோ...

விட்டா போதும்! இயற்பியல் வேதியியல்ன்னு ஆரம்பிச்சு சரித்திரம் பூகோளம் வரை சொல்லி கொடுப்பியே.. நேரமாகுது, சீக்கிரம் விஷயத்த சொல்லு...

என்ன நாளா இருந்தாலும் காலையில் சீக்கிரம் எழனும், அப்படியே பழகிடிச்சு..

நீ எப்ப தூங்குனா எனக்கு என்ன எப்ப  எழுந்தா எனக்கு என்ன? ராசாத்திக்களை எப்படி சனியும் அதுவுமா சீக்கிரமா எழுப்புற?

ஒ அதுவா?

சொல்லு...

தண்டம்.. சின்ன வயசில இருந்தே வீட்டில் ஒரு ரூல் ...

என்ன அப்படி ரூல்.. எல்லாரும் காம்ப்ளான் தான் குடிப்பீங்களா?

டேய்..

சும்மா தான் ப்ரெட்ன்ஷிப்பில் தமாஸ் பண்ணேன்.. பீலிங் ஆகாத.. என்ன ரூல்.?

Sunday, June 5, 2016

போதும் என்ற மனமே...

ஞாயிறும் அதுவுமாய் காலை எழுந்து  கோயில் சென்று எல்லாம் வல்ல இறைவனிடம் குடும்பத்தோடு தஞ்சம் அடைந்தேன். இறை நம்பிக்கை உள்ள அனைத்து  வாசகர்களுக்கும் நான் சொல்வது...

முடிந்தவரை கோயிலுக்கு செல்லும் போது குடும்ப சகிதம் செல்லுங்கள். அதில் உள்ள சுகமே தனி. வாரம் முழுவதும் அன்றாட வேலைகளில் அலுத்து போய் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாமலும் .. அப்படியே  பார்த்தாலும் ஒருவரிடம் ஒருவர் அன்பாகவும் நிதானமாகவும் பேச முடியாவிட்டாலும் .... இந்த கோயிலுக்கு செல்லும் நேரத்தில் -  வழியில் "தகப்பன் - பிள்ளை... கணவன் - மனைவி , அம்மா - பிள்ளை" என்று  இருக்கலாம்.

ஆங்கிலத்தில் ஒரு திருவாசகம் உண்டு.

 "A Family that Prays together, Stay together"

இது உண்மை. இதை கண்ணால் பார்த்து வளர்ந்தவன் நான். ஆன்மிகத்தில்  ஈடுபாடு கொள்ளாத நாத்திகர்கள் என்ன செய்வார்கள் என்று தொலை தூரத்தில் இருந்து ஒரு சிம்ம  குரல் கேட்கின்றது. நீங்கள் தான் பகுத்தறிவாளர்கள் ஆயிற்றே. உங்களுக்கு நான் என்ன சொல்வது?

இன்று எங்கள் ஆலயத்தில் ... கற்றது.. (சிறு வயதில் இருந்தே கற்று வந்தாலும்... இன்னும் நாம் செயல்படுத்த முடியாமல் தடுமாறும் ஒன்று ).

இயேசு பிரான் கூறிய உவமை..

செல்வந்தன் ஒருவன் தன்னிடம் உள்ள  பொக்கிஷங்களை பற்றி நினைத்து கொண்டே தூக்கத்தை இழந்து கொண்டு இருக்கின்றான். பிறகு, இவற்றையெல்லாம்  பதுக்கி வைத்து அதை பார்த்து  மகிழ்ச்சி அடைகிறான்.

அன்றே இறைவன் அவனுக்கு தோன்றி .....

முட்டாளே.. இன்று இரவு நீ மரணமடைந்தால் இவையினால்  என்ன பலன்?


அருமையான கேள்வி.

சொத்து சொத்து சொத்து.. ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் தேவை?

பணமே அழிவுக்கு காரணம் என்பது தவறனா கூற்றூ. பணத்தின் மேல் உள்ள ஆசையே அழிவின்  காரணம் தான் உண்மை.

உலகில் பல நாடுகளில் வாழ்ந்து வசித்து வந்ததில் நான் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். அதில் ஒன்று. இந்தியர்களின் சேமிக்கும் பழக்கம்.

பெரும்பாலான இந்தியர்களின் முதல் குறிக்கோள்...

நான் பட்ட கஷ்டத்தை என் பிள்ளைகள் பெற கூடாது.இந்த ஒன்றையே தாரக மந்திரமாக கொண்டு ...பலர் தம் வாயை கட்டி வயிரை கட்டி  ஒவ்வொரு  பைசாவையும்  பிள்ளைகளுக்காக சேர்த்து வைப்பார்கள். இது அவர்கள் நேர்மையாக சேர்த்த செல்வம். இதில் என்ன தவறு உள்ளது? தவறே இல்லை. இருந்தாலும், சேமிப்பு  சேமிப்பு என்று கொண்டு நாம் நம் வாழ்க்கையை வாழ்வதை அனுபவித்து ருசித்து வாழ்வதை  வாழ்வதை  இழந்து விடகூடாது.

கிட்ட தட்ட 25 வருடங்களுக்கு முன் வளைகுடா பகுதியில் அடியேன் வேலைக்கு சேர்ந்த முதல் மாதம், சம்பளம் வாங்கியவுடன், நேர்த்திகடனை செலுத்திவிட்டு...நேராக அருகில் இருந்த "கோல்ப் க்ளப்"  சென்று
உறுப்பினர் ஆவதற்கு தேவையான விண்ணப்பத்தை வாங்கி அதை நிரப்பி கொண்டு இருக்கையில் கேரளா நாட்டில் இருந்து வந்த சக பணியாளர் ஒருவர் அருகில் வந்து என் காதை கடித்தார்...

விசு.. இது உனக்கு தேவையா? வளைகுடா வந்தா சம்பளத்த அப்படியே  ஊருக்கு அனுப்பிடணும். நீ கணக்கு பிள்ளை தானே.. இங்கே அங்கே வரும் சில்லறையில் காலத்தை ஒட்டிகொள்ளவேண்டும்.

இதை கேட்டு அதிர்ந்தே விட்டேன்.

அட பாவி.. இப்படி வாழ்வதற்கு  பதிலாக "நாக்குல தூக்கு போட்டுன்னு  தொங்கலாமே" என்று சொல்ல வந்த நாக்கை கட்டுபடுத்தி..

தங்கள் அறிவுரைக்கு நன்றி... நீங்கள் அப்படியே இருங்கள்.. நான் இப்படியே வாழுகிறேன் என்றேன்.

இப்போது அவருக்கு 63 வயது. பெங்களூரில் மட்டும்  4 வீடுகள் உள்ளதாம். ஒவ்வொரு  வீடும் 6 மற்றும் 7 படுக்கையறை கொண்டதாம் அவர் பெற்றதோ ஒரே ராசாத்தி. அந்த நாலு வீட்டையும் வாடகைக்கு  விட்டு விட்டு இவர் மனைவி, ராசாத்தி குடும்பம் அனைத்தும் ஒரு 2 படுக்கை அபார்ட்மெண்டில்  வாடகைக்கு  இருகின்றார்களாம்.

இவர்கள் இருகின்றார்கள் .. ஆனால் வாழவில்லை.

விஷயத்திற்கு வருவோம்..இந்த நாலு வீடுகளின் வாடகை மட்டும் மாதத்திற்கு 2 லட்சத்திற்கும்  மேல் வருமாம். சென்ற மாதம் அவரிடம் பேசுகையில்.... எப்படி உள்ளீர்கள்.. வங்கியில் தான் நிறைய பணம் உள்ளதே.. கொஞ்சம் எடுத்து கொண்டு ... ஒரு விடுமுறைக்கு இந்த பக்கம் வாருங்கள் என்றேன்.

விடுமுறையா? அது எனக்கு ஏது? இந்த நாலு வீடு விஷயத்த கவனிக்கவே நேரம் இல்லை என்றார்.

நாலு வீட்டுக்கு ஒன்னும் ஆகாதுங்க... நீங்க கொஞ்சம் சந்தோசமா இருங்க என்று சொல்லி வைத்தேன்.

நேற்று ஒரு செய்தி. இந்த நண்பர்... மாரடைப்பில் இறந்து விட்டாராம். வங்கி சென்று அங்கே அந்த மாத வாடகையை டெபாசிட் செய்ய காத்து கொண்டு இருந்தாராம். அங்கேயே மாரடைப்பு வந்து இறந்து விட்டாராம்.

நல்ல மனிதன் தான். பணமே வாழ்க்கை என்று தன் பயணத்தை முடித்து கொண்டார்.

அவர் ராசாத்தியிடம் பேசினேன்....

விஷயத்த கேள்வி பட்டேன்.. ரொம்ப வருத்தமா இருக்கு.

அழைச்சதுக்கு  நன்றி சேட்டன். எனக்கு இப்ப என்ன பண்றதுனே தெரியல..

சொல்லுங்க.. என்னால் செய்ய முடிஞ்சா செயுறேன்.

இல்ல.. வங்கிக்கு அப்பா டெபொசிட்  செய்யத்தான்  போனார்.  கிட்ட தட்ட ரெண்டு லட்சம், அது வங்கி கணக்குலயும் இல்ல.. அவர் கையிலயும் இல்ல.. இப்ப என்ன பண்றதுனே தெரியலே..

ஹலோ.. நீங்க .. சரியா.. கேக்கல..

என்று நானே அலைபேசியை அணைத்தேன். அப்பாவிற்கு தப்பாம பிறந்த ராசாத்தி..

சேமிப்பவர்களின் அடுத்த ரகம்.. அடுத்தவர் வயிற்றில் அடித்து சேமிப்பது...

இதில் நம்ம ஊர் அரசியலாதிகள் அதிகாரிகள் அடங்குவார்கள்.
கைக்கு மேலே தேவைக்கும் அதிகமா சம்பளம்.அதை வைத்து கொண்டு நிம்மதியா வாழாம...?

ஏழைகளின் வயிற்றில் அடித்து வரி பணத்தில்.. பல லட்சம் கோடிகளை கருப்பு பணமாக்கி.. தாங்களும் அனுபவிக்காமல் .. மற்றவர்களுக்கும் அளிக்காமல்.. வெளி நாட்டு  வங்கியில்  போட்டு..

பள்ளிகள் சிறந்து விளங்க.. சாலைகள் தரமாக இருக்க.. குடி நீர் சுத்தமாக இருக்க. எல்லாருக்கும் இலவச மருத்துவத்திற்க்காக செலவு செய்ய வேண்டிய இந்த வரிப்பணம்... இந்த சனியன்கள் இறந்த பின்பு.. அந்த வெளி நாட்டு வங்கியின்..

இதர வருமானத்தில் சேர்க்க படும்.

இவர்களிடம்  நான் கேட்கும் ஒரே  கேள்வி..உங்களின் இந்த அநியாய செயலினால் நம் நாட்டில் கிட்ட தட்ட 50% மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கின்றார்களே.. இதை தெரிந்த உங்களுக்கு  எப்படி தான் தூக்கம் வருகின்றது?

அடுத்த வகை...

ஆன்மிக குருக்கள்..

சுவாமிகளும் .. போதகர்களும்.. மதத்தில் உள்ள எல்லா நற்குணங்களையும் நமக்கு போதித்து விட்டு.. எளிமையாக  போதுமான மனதோடு வாழ் என்று சொல்லி விட்டு.. இவர்கள்.. ஐந்து நட்சத்திர விடுதி போல் உள்ள இல்லத்தை  கட்டி கொண்டு வாழ்கின்றார்கள்.

இவர்களுக்கு  ஐயோ..

சரி இவ்வளவு பேசுகின்றாயே.. நீ சேர்த்து வைக்க வில்லையா?

சேர்த்தேன்.. சேமிப்பேன். தவறே இல்லை. என் அம்மணியும் நானும் உழைத்ததில்..ஓய்வு பெற்ற பின் யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இருக்கும் படி போதிய பணம்.. மற்றும் கடைசி வரை வாழ ஒரு இல்லம்..

பிள்ளைகளுக்கு?

கல்வி செல்வம்.. எவ்வளவு வேண்டுமானாலும் படியுங்கள்.. நாங்கள் இருக்கின்றோம்.. இசை அறிவு .. எவ்வளவு வேண்டுமானாலும் பயிலுங்கள்.. நாங்கள் இருக்கின்றோம்.. விளையாட்டு.. விளையாடி கொண்டே  இருங்கள் நாங்கள் இருக்கின்றோம்..

எல்லாவற்றிர்க்கும் மேல்.. இறைவன் மீதான நம்பிக்கை. போதும் என்ற மனது...

என் ராசாத்திக்களுக்கு நான் இதை செய்தால் போதும்.. மற்றவை தானாக அமைந்துவிடும்..

போதும் என்ற மனது....அது இருந்தால் போதும்Saturday, June 4, 2016

"கச்சா" விலையும் "அச்சா" தினமும்..

காவேரி தண்ணீர் கொடுக்கவிலையே என்று கர்நாடகாவை பற்றி நான் கோபமாக எழுதியதை எல்லாம் வாபஸ் வாங்கி கொள்கிறேன். தமிழனை போல் பேராசை பிடித்தவன் இல்லை.. தமிழனை போல் மோசமானவன் இல்லை, தமிழனை போல் தன்மானம் இல்லாதவன் இல்லை, தமிழனை போல் திருடன் இல்லை என்று மற்ற மாநில புண்ணியவான்கள் ஏசி கொண்டு இருக்கையில்..

இல்லை.. இல்லை.. நாங்களும் அவர்களுக்கு நிகர் என்று  கேவலத்தை பகிர்ந்தர்க்காக ......

ரெட்டி... குமாரசாமி... இடையூரப்பா.... மல்லையா..... ராஜ்யசபா தேர்தல்..

நன்றி..கர்நாடக.. மனமார்ந்த நன்றி...

ராஜ்ய சபா தேர்தலுக்கு  வருவோம்..

ஒரு சீட்டுக்கு 100 கோடியாம். எங்கே இருந்து இந்த பணம் வருகின்றது? எங்கே இந்த பணம்  செல்கின்றது?

வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீது வருவது இருக்கட்டும். இந்த மாதிரி காரியங்களை நம் '56 இன்ச்" கட்டு படுத்தலாமே.

சென்ற வாரம் இந்த வாரம் இங்கே அமெரிக்காவில் நான் ஒரு கலோன் பெற்றோலுக்கு கிட்ட தட்ட 4 டாலர் கொடுத்தேன். தற்போது $2.30. கச்சா என்னை விலை குறைந்தது.மூல பொருளின் விலை குறைந்தால் முடிவு பொருளின் விலையும் குறையும் அல்லவா. அது தானே இயல்பு. அது இங்கே.

அங்கே..

"அச்சா தின்" மட்டும் வரமாட்டேன்குது.

Thursday, June 2, 2016

இனத்தை அழிக்க வேண்டுமா... அவன் கலாசாரத்தை அழி...

May 31, 1981
June 1, 1981

இந்தியன் உனக்கு "தனி ஈழம்"  ஏன் என்றாள், உனக்காக என்றேன்.
எனக்கும்  உனக்கும் என்ன சம்மந்தம் என்றாள், தமிழ் என்றேன்.
நமக்கும் நம் தமிழுக்கும்என்ன சம்மந்தம் என்றாள், குலம் என்றேன்.
குலம் என்றால் கோத்திரமும் ஒன்று தானே என்றாள், ஆம் என்றேன்.

பின், நான்"வீர நடை" போடுகையில், உனக்கு என்ன "புறமுதுகு" என்றாள்,
அவமானத்தில் சிரசை தாழ்த்தினேன்,  இனி இவள் வியர்வை, என் இரத்தம்.
"தனி ஈழம்"  பிச்சை கேட்க நான் ஒன்னும்  ஈன தமிழன், அல்ல, தன்மான  தமிழன்,
"தனி ஈழம்" எங்களுக்கு  தர நீ யாரடா?

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...