திங்கள், 28 மார்ச், 2016

எழுத படிக்க கொத்தில்லா!

இந்த வாரம் வலைசரத்தில் சகோதரி க்ரேஸ் அவர்கள் என்னை அறிமுகபடுத்தி இருந்தார்கள். அவர்களுக்கு முதற்கண் வணக்கம். நான் எழுதிய சில பதிவுகளை குறிப்பிட்டு எழுதிய இருந்த அவர்கள்.. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்ற பதிவையும் அங்கே சுட்டி  காட்டி இருந்தார்கள்.
மேலே போகும் முன் அந்த பதிவை படித்து விட்டு வந்தால் இந்த பதிவிற்கான அர்த்தம் தெரியும். அந்த பதிவில் 15வயதாகிய என் மூத்த ராசாத்தி, தான் கார் ஓட்டத் தயாராகிவிட்டேன் என்று பேச ஆரம்பித்ததை பற்றி எழுதி இருந்தேன்.
அது மட்டும் இல்லாமல் இங்கே 15 வயது பிள்ளைகளுக்கு லைசென்ஸ் எப்படி வாங்குவது என்றும் எழுதி இருந்தேன். அந்த பேச்சை முடிக்கையில்  “டாடி, நீங்கள் எப்படி லைசென்ஸ் வாங்கினீர்கள்” என்று கேட்ட கேள்விக்கு .. இந்தியாவில் வாங்கியதாயிற்றே, அதை எப்படி வாங்கினேன் என்று சொல்ல முடியுமா ? என்று முடித்தேன்.

அன்றும் சரி , இன்றும் சரி , அதை எப்படி வாங்கினாய் என்று நிறைய கேள்வி வந்துள்ளது.
அந்த கதையை இதோ சொல்கிறேன். 21 வயதானவுடன் முதல் சம்பளம் வாங்கி ஒரே மாதத்தில் முதல் வேலையாக வீட்டில் மிகவும் தொந்தரவு பண்ணி KB 100 (KAWASAKI பஜாஜ்) என்ற வாகனத்தை வாங்கி விட்டேன்.  வண்டி வாங்கி நாலு மாதம் கழித்து தான்  ஊரில்இருந்து வந்த போலிஸ்கார மாமா , வண்டி இருக்கட்டும் ,எங்கே லைசென்ஸ் காட்டு என்றார் .
லைசென்ஸ் .. அது எதுக்கு ?
படவா ராஸ்கல், லைசென்ஸ் இல்லாமலா வண்டி ஓட்டுற ? முதலில் போய்  லைசென்ஸ் வாங்கி வா என்று சொல்லி வண்டியின் சாவியை எடுத்து கொண்டார் .

அடுத்த நாள் காலை பஸ் ஸ்டாண்டில் என்னை பார்த்த நண்பர்கள்  சேகரும் டேவிட்டும் ,
என்ன விசு ? இன்னும் 18ம் தேதி கூட ஆகல, அதுக்குள்ள பஸ் ஸ்டாண்க்கு  வந்துட்ட ?
சேகரு … வா சேகரு .. .நான் இங்க வந்ததுக்கும் 18ம் தேதிக்கும் என்ன சம்மந்தம் ?
மாப்பு டேவிட், விசுக்கு நான் சொன்ன புரியாது, அவனுக்கு புரியிற மாதிரி உன் வாயல எடுத்து சொல்லு.
விசு , ஒன்னும் இல்ல , சம்பளம் எல்லாம் செலவு ஆயிடிச்சா? பெற்றோலுக்கு காசு இல்லாமல் பேருந்துக்கு வந்துட்டியா?
அடுத்தவன் பிரச்சனைய பிரித்து அலசி எடுத்து பாக்குரிங்களே, உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒரு நல்ல மனசு ..
விஷயத்த சொல்லு விசு! வண்டிக்கு என்ன ஆச்சி ?
போலிஸ் மாமா, சாவிய எடுத்துன்னு தரமாட்டறாரு.
அஞ்சொ பத்தோ  கொடு , கொடுப்பார்.
டேய், இது உண்மையாவே என் மாமாடா.
அப்ப வரதட்சணையில் கழிச்சிக்க சொல்லு.
மாப்பு.. ஜோக்குக்கூட வரதச்சனைன்னு பேசாத. அந்த வார்த்தையே நமக்கு இழிவு … இலவு ..இழவு…
சாரி விசு …சாவியை ஏன் எடுத்தார் ?
நான் உடனே லைசென்ஸ் வாங்கனுமாம்.
அது ஒரு பிரச்சனயா விசு , நம்ம அடுத்த தெரு குமார் இருக்கான் இல்ல ….RTO அவனுக்கு “சின்ன வீடு” மாதிரி, அவனிடம் போனா வாங்கி கொடுப்பான் .
சரி வாங்க அவனை போய்   பார்க்கலாம் .
வணக்கம் குமார் !
வா விசு, என்ன மூம்மூர்த்திகள் ஒன்னா வந்து இருக்கீங்க. சேகரு, அந்த “ரேசன் கார்ட்” பாக்கி அப்படியே இருக்கு.
சும்மா சில்லரை காசை பத்தி பேசாத குமார் .. விசு வந்து  இருக்கான் பாரு, சட்டு புட்டுன்னு பேசி காரியத்தை முடி .
என்னா சேகர் , காரியம்ன்னு ஒரு மாதிரி பேசுற ? என்னை வைச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே!
பொறுமை விசு .. குமார் .. விசுக்கு “விசுக்குன்னு” லைசென்ஸ் வேணுமாம் .
வாங்கிட்டா போச்சி …ரெண்டு போட்டோ 400 ருபாய், எடுத்துன்னு  நாளைக்கு RTO வந்துடு!
400 ரூபாயா ? குமார் ரொம்ப ஜாஸ்த்தி.
கார் வாடகை பெட்ரோல் செலவு யார் பாத்துக்குவாங்க ?
குமார் .. .கார் வேணாம் … மோட்டார் பைக் போதும்.
டேய் .. எப்படியும் RTO போறோம், ரெண்டு வேலையும் முடிச்சிடுங்க, இல்லாட்டி அடுத்த வருஷம் திரும்பவும் …
ஒருத்தருக்கு 400 .. நாங்க மூணு பெரும் ஒன்னா  வந்தா ?
என்ன சேகரு .. நீ கணக்கில் வீக்கா? இது சிம்பிள் வாய்ப்பாடு தானே…3 நானுறு “ஆயிரத்து இருநூறு”.
ஆமா குமாரு, நான் கணக்கில் வீக்தான் ஆனால் காமன் சென்ஸில் வீக் இல்ல. கொஞ்சம் குறைச்சி  சொல்லு .
லொள் .. லொள் … 1200.
ஏன் குமார் நாய் மாதிரி குரைக்கிற .
சேகரு தான,  கொஞ்சம் குறைச்சி சொல்ல சொன்னான்  (எங்கேயோ கேட்ட ஜோக்கை இங்க அடிச்சான்)
சரி சொல்லு , மூணு பேருக்கு மொத்தமா எவ்வளவு ?
ஆளுக்கு 10 ருபாய் கம்மி பண்ணிக்கிங்கோ.
மூணு பேருக்கும் சேத்தே  மொத்தம் “நுப்பது” தான் கம்மிஆகுது
முட்டாள் சேகரு, அது நுப்பது இல்ல முப்பது (அந்த நுப்பது கதையை படிக்க இங்கே சொடுக்கவும்)
அடுத்த நாள் காலையில் RTO அருகில் ..
வாங்க .. போட்டோ ..காசு எல்லாம் எங்க ?
இதோ …
சரி .. இங்கேயே இருங்க .. இப்ப வரேன் ..
சிறிது நேரத்தில் .. குமார் வந்தான் .
விசு .. எல்லாம் ஓகே ஆயிடிச்சி … ரோடு டெஸ்ட் எதுவும் வேண்டாம் .. ஆனால் அந்த ரோடு சிக்னல் டெஸ்ட் மட்டும் கண்டிப்பா செய்யனும். “கொஞ்சம் நஞ்சம்” ரோடு  சிக்னல் பத்தி தெரியுமா ?
புரியல
டேவிட், ரோட்டிலில் STOP -One Way – Left Turn – Speed Bump  அப்படின்னு படம் வரைந்து இருப்பான்  இல்ல ,அந்த படத்த பார்த்தவுடன் அதுக்கு அர்த்தம் சொல்ல தெரியுமா ?
அவ்வளவு தெரிஞ்சா நான் ஏன் விசு சேகரோடு சுத்தின்னு இருக்கேன் …தெரியாதே ..
அப்ப ஒன்னு பண்ணு .. என் காரில் பின் சீட்டில் “லுங்கி – பனியன்” இருக்கு, ஆளுக்கு ஒன்னு எடுத்துன்னு கட்டினு வாங்க .
ஏன் குமார் ?
கூட கூட பேசாந்திங்க .. சொன்ன வேலைய செய்யுங்க ..
சிறிது நேரத்தில் லுங்கி பனியனுடன் வந்து சேர்ந்தோம் ..
அந்த "டெஸ்ட்" பண்ற ரூம் போனவுடன் அங்கே இருக்க ஆளு உனக்கு எழுத படிக்க தெரியுமான்னு கேப்பான், அப்ப தெரியாதுன்னு சொல்லுங்க .
குமார் !!!!!!
உனக்கு இன்னைக்கு லைசன்ஸ் வேணுமா , வேணாமா ?
வேணும் ,
அப்ப எழுத படிக்க தெரியலைன்னு சொல்லு .
அதனால் என்ன பிரயோசனம் …
அங்கே போய் சொல்லு டேவிட் , அப்புறம் பாரு
டேய் “சேகரு – டேவிட்”, சின்ன வயதில் இருந்தே என் முகத்தில் “சரஸ்வதி கலை” தாண்டவமாடுதுன்னு கேள்வி பட்டு இருக்கேன். நான் படிக்கலன்னு சொன்னா அந்த ஆளு நம்ப மாட்டான் ,. உங்க ரெண்டு பேரில் ஒருத்தன் சொல்லுங்க
நினைப்பு தான் பொழப்ப கெடுத்திச்சான்  , வா போலாம்..
அங்கே ..
எழுத படிக்க கொத்தா (தெரியுமா )?
கொத்தில்லா!
இந்த பக்கம் போ !
அங்கே உள்ளே போனால் …
ஒவ்வொரு படத்திற்கும் கீழே ஆங்கிலத்தில் அதற்கான விளக்கமும் இருந்தது . அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் சரியாக படித்து பதில் சொன்னேன் …

எனக்கும் டேவிட்டுக்கும் அன்றே லைசென்ஸ் லைசென்ஸ் கிடைத்தது . பாவம் சேகர் மட்டும் அந்த தேர்வில் தவறி விட்டான் …

ஏன் தவறினான் என்று அடுத்த பதிவில் பார்ப்போமே ..

2 கருத்துகள்:

  1. ஆ..மனசிலாயி...இன்னொரு இந்தியன் படம் பார்த்த நினைவு..
    எனக்கும் அப்படித்தான் உரிமம் வந்தது...

    பதிலளிநீக்கு
  2. ஹஹஹ் விசு இங்க லைசென்சே இப்படித்தானே...கெத்தில்லானு கெத்தா லைசென்ஸ் வாங்கிட்டீங்க போல...ஹாஹ்ஹ..
    அது சரி வலைச்சரம் மீண்டும் ஆரம்பித்துவிட்டதா?

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...