Thursday, March 24, 2016

ஹூஸ்டன் ... வி ஹேவ் எ ப்ராப்ளம் ....

படிப்பு.. படிப்பு.. என்று இல்லாமல் ராசாத்திக்கள் அனைத்து துறையையும் அறிய வேண்டும் என்று நினைப்பவன் அடியேன். என்னதான் பள்ளி படிப்பு முக்கியமாய் இருந்தாலும் ..ராசாத்திக்கள் இருவரும் தினந்தோறும் பியானோ அல்லது கிட்டார் வாசித்து சில நிமிடங்கள் கழிக்க வேண்டும் என்பது ஒரு கட்டளை. இசை மட்டும் இல்லாமல் வாரத்தில் குறைந்த பட்சம் 4 நாளாவாது வெளியே சென்று "கோல்ப்" ஆட வேண்டும். இவர்கள் படிக்கும் பள்ளியில் கோல்ப் அணியில் சேருவது  குதிரை கொம்பு.

இருந்தாலும் வருட கணக்கில் செலவு செய்த நேரத்தினாலும் சரியான பயிற்ச்சியினாலும் அடியேனின் மூத்த ராசாத்தி தான் இந்த வருடம் பள்ளியின் கோல்ப் அணியின்  கேப்டன். இளையவள் அடுத்த வருடம் தான் உயர்நிலை பள்ளி போகின்றாள். எப்படியும் முதல் வருடத்திலேயே அணியில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற பிடிவாதம். இப்படி படிப்பு-பியானோ-விளையாட்டு என்று காலம் போய் கொண்டு இருகின்றது.

சரி, தலைப்பிற்கும்  இதற்கும் என்ன சம்பந்தம்? பொறுமை.

இவர்கள் இருவரும் பயிலும் பியானோ வகுப்பிற்கு வருடா வருடம் தேர்வு உள்ளது. மொத்தம் 9 வருடம் அதை முடித்த  பின் ஒரு அட்வான்ஸ்ட் தேர்வு. மூத்தவள் 9வது தேர்விற்கும் இளையவள் 7வது தேர்விற்கும் செல்லும் நேரம்.

தேர்வு சாலையை அடைந்தவுடன், அங்கு இருந்த பியானோ ஆசிரியை .. அடியேனை பார்த்து...

வேர் ஆர் யு ப்ரம்?

என்று கேட்க.. அடியேனோ.. இந்தியா என்று சொல்ல.. அதற்கு பதிலாக அவர்கள்.. .நீ பார்க்க இந்தியனை போல் தான் இருகின்றாய் .. ஆனால் பிள்ளைகள் இருவரும் இலங்கை போல் இருகின்றார்கள் என்று சொல்ல..

நானோ பேய் அறைந்தவன் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக) மற்றொரு நாள் சொல்கிறேன்) போல் ஆனேன்.


"ஒ.. யு ஆர் கரெக்ட்". இவர்களின் தாயார் ஈழம்  தான் என்றேன்.

பேச்சு அப்படியே போய் கொண்டு  இருக்கையில் ... நான் அவர்களிடம்.. உங்கள் உச்சரிப்பு கூட கலிபோர்னியா மாதிரி இல்லையே.. நீங்கள் எங்கே இருந்து வந்தீர்கள் என்று கேட்க.. அவர்களோ..ஒ.. நான் சிக்காகோவில்   வளர்ந்தவள்,

சிக்காகோவில் இருந்து இங்கே ஏன் வந்தீர்கள், ஒரு வேளை உங்களுக்கு நெய்தல் (கடலும் கடலை சார்ந்த இடமும் நெய்தல் தானே..) விருப்பமா என்று கேட்க .. இல்லை இல்லை,, அந்த காலத்தில் என் தகப்பனார் வேலை  விஷயமாக  இங்கே வரவேண்டி இருந்தது . ஓரிரு நாளுக்கு இங்கே வந்தவர் இந்த இடத்தை பார்த்ததும் ரொம்ப பிடித்து  விட்டதால் இங்கேயே வாழ முடிவு செய்து விட்டார். நாங்களும் குடும்பத்தோடு  வந்து விட்டோம் என்றார்கள்.

அப்படியென்ன .. அந்த காலத்தில் அவசரமான வேலை  .. என்று அடியேன் கேட்க..அவர்களோ பதிலாக ...

ரிமம்பர் .. "ஹூஸ்டன் வி ஹேவ் எ ப்ராப்ளம்"..

மறக்க முடியுமா? மறக்க கூடிய வசனமா அது.. சரி .. அதற்கும் நீங்கள் இங்கே வந்ததற்கும் என்ன சம்பந்தம்?

நீ அந்த படம் பார்த்தாயா?

பார்த்தேன்.

1970ம் வருடம் நிலாவிற்கு அனுப்பப்பட்ட அபல்லோ 13   என்ற விண்கலம், நிலாவின் அருகே சென்றவுடன் பழுதடைந்து அதில் சென்ற மூன்று  வான் வீரர்களும் எப்படி மீண்டும் பூமியை வந்து அடைந்தார்கள் என்பதை சினிமா மூலம் உலகிற்கே அளித்த ஹாலிவூட்.. யார் மறக்கமுடியும்?

 டாம்  ஹென்க்ஸ், கெவின் பேக்கன் மற்றும் பலர் அபரமாக நடித்த படம் அல்லவா அது, இந்த படத்தில் வரும் காட்சி தானே... "ஹூஸ்டன் வி ஹேவ் எ ப்ராப்ளம்".

சரி, அதற்கும் உங்கள் குடிபெயர்ப்பிர்க்கும் என்ன சம்பந்தம்?

அப்போல்லோ 13ல் அனுப்ப படுவதற்காக மூன்று வீர்கள் வருடக்கணக்கில் தயாராவார்கள்.

ஆமாம்.. படத்தில் பார்த்த நினைவு இருகின்றது. அதில் ஒருவர், கடைசி  நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு  சுகவீன பட அவருக்கு பதிலாக இன்னொருவர் அனுப்பபடுவார்.  நீ போக முடியாது என்றவுடன் அவர் முகத்தில்  வரும் சோகத்தை மறக்க இயலாதே..

சரி, சோகத்தை விடு.. அவர் போக வில்லை . ஆனால் அவரை பற்றி வேறு எதாவது தெரியுமா?

ஒ.. இவர்களின் விண்கலம் பழுதாகியவுடனே.. அவரை தானே அழைப்பார்கள்.
அவர் தானே தரையில் இருந்து நிறைய காரியங்களை சாமார்த்தியமாக அவர்களிடம் சொல்லி அவர்களை மீட்ப்பார்..

அவர் தான் என் அப்பா.

O My God !..

அவர் தான் அறிவாளி... நான் எங்க அம்மாவை போல..தெரிஞ்சதெல்லாம் பியானோ - சமையல். மட்டுமே..

என்னங்கோ இவ்வளவு  பெரிய ஆளோட ராசாத்தி,  இப்படி சிம்பிளா  இருக்கீங்களே.? உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோசம்.

நாம் தான் தமிழன் ஆயிற்றே.. ஆர்வ கோளாறு அதிகமாக .. "உங்க அப்பாவை சந்திக்க முடியுமா"?

அப்போலோ தரை இறங்கியதும் அது சம்பந்தமாக இங்கே வந்தார், பிறகு இங்கேயே தங்கி விட்டார் .அவருக்கு இப்ப 80 வயது. ஓய்வு பெற்றவுடன் சிக்காகோவே போயிட்டாரு. நான் கூட இப்ப அவரை வருசத்துக்கு ரெண்டு இல்லாட்டி மூணு முறை தான் பார்ப்பேன்.

ரொம்ப கேட்டதா சொல்லுங்க. இந்த மாதிரி வான்வெளி வீரர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

உங்களுக்கும் "ஸ்பேஸ்" போற ஆசை இருந்ததா.. இவ்வளவு விவரமா சொல்றீங்களே..

இருந்தது ... ஆனா எனக்கு உயரம்ன்னா கொஞ்சம் பயம் .. என்று ஒரு பொய்யை  சொல்லிவிட்டு கிளம்பினேன். அவர்களிடம் சமாளிக்க  சொல்லிய இது பொய்யாக இருந்தாலும், அடியேனுக்கு உயரம் என்றால் கொஞ்சம் பயம் தான். அதற்காக தான் விடுமுறைக்கு இந்தியா சென்றாலும் அம்மணியும் கண்மணிகளையும் முதலில் அனுப்பி வைத்து விட்டு அடுத்த வாரம் போல் தனியாக நான் பயணிப்பேன். நம்ம பறக்கும் போது "தொடை நடுங்கி" யாக இருப்பதை ராசாத்திக்கள் பார்த்து விட்டால்...

வரும் வழியில்.. என்ன ஒரு நிகழ்ச்சி.. அந்த நிகழ்ச்சியை படமாக்கிய விதம். அந்த இயக்குனருக்கு ஒரு சபாஷ். இந்த நிகழ்ச்சி ஒரு உலகறிந்த விஷயம் .விண்கலம் பழுதடைந்தது மற்றும் வாழ்வா சாவா  என்று அந்த மூன்று வீர்களின் போராட்டம். விண்ணில் இருந்து மீண்டும் பூமிக்குள் நுழையும் போது அது வெடித்து சிதறும் வாய்ப்பு.

மீண்டும் திரும்பும் போது ஒரு சில நிமிடங்கள் விண்கலத்திற்கும் வெளி உலகத்திற்கும் தொடர்பு இருக்காது, பூமிக்குள் நுழையும் போது ஏற்படும் சூடு நல்ல விண்காலத்தையே ஒரு பதம் பார்த்து விடும். இதுவோ.. பழுதானது. இந்த வெப்பத்தை எப்படி சமாளிக்கும்....

"Gentlemen, its been a privilege flying with you" 

 என்று டாம் சக வீர்களிடம் சொல்ல  மூன்று பேரின் முகத்திலும் மரணபயம் தழுவ... விண்கலமோ நெருப்போடு  நுழைகின்றது.. அடுத்து சில காட்சிகளை படமாக்கிய விதம்.. அடேங்கப்பா.என்ன ஒரு அற்புதம்.

ஒரு அறிந்த நிகழ்ச்சி. முடிவு என்ன என்பது அனைவருக்கும் தெரியும், இருந்தாலும் அதை படமாக்கிய விதம். எத்தனை முறை பார்த்தாலும் இருக்கையின் நுனிக்கு அமர செய்யும் விதத்தில் எடுத்த காட்சிகள்...அந்த நேரத்திற்கான இசை யோடு...நீங்களே பாருங்களேன்...(இரண்டு பகுதியாக உள்ளது. மொத்தமே 6 நிமிடம் தான் ... கண்டிப்பாக ரசீப்பீர்கள்).இந்த நிகழ்ச்சியை இதை விட சிறப்பாக படமாக்கி இருக்க முடியுமா?

Gentlemen, Its been privilege flying with you

Hello, Houston, Good to see you Again....


Ladies and Gentlemen, its been pleasure writing this blog.

4 comments:

 1. Simply blown away by Ed Harris's performance. Damn! What an actor!

  ReplyDelete
 2. Glad your daughters are making you proud !! - Congrats

  ReplyDelete
 3. அருமை சார். எதையும் சுவாரசியமாக சொல்லும் திறன் உங்களுக்கே உரித்தானது.

  ReplyDelete
 4. படு சுவாரஸ்யமான பதிவு விசு. இந்தப் படம் பார்திருக்கிறோம். மீண்டும் இப்போது பார்த்தேன் மகனுடன்....இந்தக் காட்சிகளை..

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...