சனி, 9 ஜனவரி, 2016

நாளை முதல் என்னை இங்கே தேட வேண்டாம்...

சனியும் அதுவுமாக காலையில் வாகனத்தை சுத்தம் செய்யும் இடத்திற்கு எடுத்து கொண்டு  சென்றேன்.


காலை 8 மணி போல் செல்வதால் அங்கே அதிக கூட்டம் இருக்காது, அதனால் சீக்கிரமாக வண்டியை சுத்த படுத்தி தருவார்கள். வண்டியை அவர்களிடம் கொடுத்து விட்டு எதிரில் இருந்த இருக்கையில் அமரும் போது அருகில் இருந்த கடையில் இருந்த கூட்டத்தை கவனித்தேன்.

என்னடா இது?

இவ்வளவு காலையில் அதுவும் இவ்வளவு கூட்டம் ? வளரும் வயதில் இந்தியாவில் ரேசன் கடையில் மண்ணெண்ணெய்  வாங்க நின்ற கூட்டத்தை விட அதிகமாக இருகின்றதே என்று ஒரு நிமிடம் யோசித்து .. நினைவுகளை வேறு பக்கம் திருப்ப முயன்றேன்.


எதிரில் இருந்த கடையில் கூட்டம் அதிகரித்து கொண்டே சென்றது. என்னுள் உயிர் வாழும் இந்தியனின் "ஆர்வ கோளாறு" இன்னும் அதிகம் இருப்பதால்.. என்ன தான் நடகின்றது என்று கடையை நோக்கி சென்றேன்.

கடையின் உள்ளே சென்ற எனக்கு இன்னும் ஆச்சரியம். உள்ளே நிறைய ஆட்கள் ஒரு காகிதத்தில் சில எண்களை குறித்து குறித்து அங்கே பணி புரியும் பெண்ணிடம் கொடுத்தார்கள்.

 அப்போது தான் புரிந்தது.. ஒ ...இது "லாட்டரி சீட்டு" வாங்கும் கூட்டம். அது சரி, இது தான் வருடம் முழுக்க இருக்குமே இன்றைக்கு என்ன கூட்டம் என்று நினைத்து.. அருகில் வரிசையில் நின்று கொண்டு இருந்த மனிதரிடம்..

இன்றைக்கு என்ன இவ்வளவு கூட்டம்?

ஒ.. விஷயம் தெரியாதா? சென்ற சில குலுக்கல்களில் யாரும் வெல்லாததால் அந்த பணம் எல்லாம் சேர்ந்து சேர்ந்து இன்றைக்கான முதல் பரிசு ஒரு  பில்லியன் டாலர் ஆகி விட்டது. இன்றைக்கு இரவு 8 மணிக்கு குலுக்கல், இதில் யாராவது வெற்றி பெற்றால் அவர்களுக்கு ஒரு பில்லியன் பரிசு.

இதை கேட்டவுடன் நான் என்னை அறியாமலே "சொக்கா ... சோமநாதா " என்று அலற அவரோ..

வாட் இஸ் " "சொக்கா ... சோமநாதா " ?

என்று கேட்க.. நானோ.. அதுவா முக்கியம்...

அடேங்கப்பா.. என்று சொல்லி கொண்டே , அவரோடு பேச்சை தொடர்ந்து கொண்டே  அந்த வரிசையில் சேர முயல (இந்தியன் தானே .. தொட்டில் பழக்கம்)  எனக்கு பின்னால் இருந்தவர் என் முதுகை தட்டி ..

வரிசையின் கடைசி அங்கே இருகின்றது .. அங்கே போய் சேருங்கள் !

என்று சிரித்து கொண்டே அன்பாய் சொன்னார்.

பெரிய வரிசை. எப்படியும் வாகனம் சுத்தம் செய்ய அரை மணி நேரம் ஆகும், இங்கே நின்று பில்லியன் டாலரை வெல்ல "நமக்கு நாமே" ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்  என்று எண்ணி, வரிசையின் கடைசியில் நின்றேன்..

முன்னால் நின்று கொண்டு இருந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு சீட்டில்  தங்களுக்கு ராசியான ஆறு எண்களை குறித்து கொண்டு இருந்தார்கள். நாம் குறித்து கொடுக்கும் ஆறு எண்களை அந்த லாட்டரி டிக்கட் அச்சடித்து கொடுக்கும். அப்படி குறிக்க விரும்பாதவர்களுக்கு அந்த லாட்டரி சீட்டு எந்திரமே தனக்கு பிடித்த எண்ணை அச்சடித்து தரும்.

எனக்கும் ஒரு சீட்டு தந்தார்கள். எனக்கு எந்த எண் ராசி என்று தெரிந்து இருந்தால் , நான் எங்கேயோ அல்லவா இருந்து இருப்பேன். இங்கே லாட்டரி வரிசையில் இருக்கமாட்டேன் என்று மனதில் நினைத்து கொண்டு .. எந்திரமே என் எண்ணை தரட்டும் என்று நினைத்து கொண்டே  வரிசையில் அடி அடியாக முன்னேறினேன்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் .. மனதில்.. இதை எப்படி செலவு செய்வது. ஒரு பில்லியனை எப்படி செலவு செய்ய போகிறேன். என்ற ஒரு நினைப்பு!  மனதில் செய்வீர்களா.., செய்வீர்களா ..என்ற அசரீரி வேறு கேட்டது!

வெற்றி பெற்றவுடன், நேராக இந்தியா சென்று, அங்கே சென்னையில் உள்ள கோல்ப் மைதானத்தை விலைக்கு வாங்கி ...அங்கேயே தங்கி வருமானத்திற்கு வருமானம் சரி.. விளையாடிற்கு விளையாட்டும் சரி என்ற எண்ணம் தான் முதலில் வந்தது.

பிறகு.. அது வேலைக்கு ஆகாது. வெள்ளம் வந்தால், செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் கொள்ளாமல் திறத்து விட்டார்கள் என்றால்.. முதலுக்கே நஷ்டம் என்று எண்ணி ..

அந்த ஒரு பில்லியனில் ஒரு சாதி கட்சி ( நம்ம  தான் கலப்பு திருமணத்து   வாரிசு .. ரெண்டு சாதி இருக்கே) ஆரம்பிச்சு.. இந்த பணத்தை ரோட்டசனில் விட்டு.. பிறகு "லம்ப்பா " டபிள் பண்ணலாமா?

சிறு வயதில் இருந்தே மனதில் இருந்த ஒரு பிரமாண்டமான தமிழ் படத்தை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றலாமா?

இவ்வளவு பணம் கையில் இருந்தால் !

அம்மா ( என்னை பெத்த மகாராசி  தான்) சும்மா இருக்க மாட்டாங்களே.. உனக்கு தான் நல்ல வேலை  இருக்கே. கை கால் ஒழுங்கா தானே இருக்கு. உழைச்சி சாம்பாதித்து சாப்பிடு. இதை என்னிடம் கொடு.. மாற்று திறன் பிள்ளைகளுக்கு இதைவச்சி எவ்வளவு நல்ல காரியம் செய்யலாம்

என்று டிமாண்ட் பண்ணுவார்களே.. அவர்களிடம் எப்படி மறைப்பது?

ரஷ்யாவில் ...24 லட்சம் டாலர் கொடுத்தால் விண்வெளிக்கு பிரயாணியாக போகலாம்னு சொல்றாங்களே .. அதையும் தான் பார்த்துவிடலாமே.
என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போது...

எத்தனை டிக்கட்?

ஒன்னு எவ்வளவு?

ரெண்டு டாலர்..

பத்து கொடுங்க..

என்று என் "கிரிடிட் கார்ட்" கொடுக்க.

சாரி.. இந்த டிக்கட் ரொக்க பணத்திற்கு மட்டுமே.. கடன் வாங்கி சூதாட்டம் ஆடக்கூடாது என்ற ஒரு நல்ல நோக்கத்தோடு இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது..

ஆடுறது .. சூதாட்டம், இதில்  நல்ல நோக்கம் வேற இருக்கா?

என்று நினைத்து கொண்டே.. திருமணமான  ஆணிடம் ரொக்கம் எப்படி இருக்கும் எற்று நொந்து கொண்டே .. பாக்கெட்டில் கை விட்டு தேடினேன். இரண்டு டாலருக்கான சில்லறை கிடைத்தது.

ஒரு டிக்கட் கொடுங்க..?

பத்து கேட்டிங்க?

ரொக்கம் இல்ல..

ஒ.. சாரி..

என்று வாயில் சொன்னாலும் உதட்டில் ஒரு கேவலமான சிரிப்பு தெரிந்தது.

மனதில்.. என்ன பார்த்து சாரியா...கேவலமான சிரிப்பா.. இன்னும் சில மணிநேரங்களில்.. என் கையில் ஒரு பில்லியன் டாலர்.. அப்ப வந்து உன்ன பாத்துக்குறேன்.

இந்தாங்க டிக்கட்..

தேந்க் யு..

என்று சொல்லி கொண்டே, வாகனத்தை சுத்தம் செய்யும் இடத்தை நோக்கி நகர்ந்தேன்.

அங்கே வண்டி தயாராக இருந்தது. அதற்கான பணத்தை கட்டிவிட்டு சாவியை வாங்க செல்கையில் தான்.. அடே டே.. அதை சுத்தம் செய்பவருக்கு ரெண்டு டாலாராவது தர வேண்டுமே, கையில் ரொக்கம் இல்லையே.. என்று நினைத்து..

சாரி.. அடுத்த முறை பார்போம் என்று ஒரு செயற்கையான சிரிப்பை வீச..
அவனோ, உனக்கெல்லாம் ஒரு கார். உன் லெவெலுக்கு வாடகை சைக்கிள் கூட தர கூடாது என்ற ரேஞ்சில் ஒரு பார்வை விட..

நானோ.. ஒரு சில மணி நேரம் மட்டும் காத்திரு.. ரெண்டு டாலர் என்ன.. ரெண்டு காரே உனக்கு வாங்கி தரேன் என்று மனதில் சொல்லி கொண்டு வண்டியை விட்டேன்.

வீட்டை அடையும் முன் மீண்டும் அதே நினைப்பு..

பில்லியன் டாலர்,

நமக்கு நாமே..

மாற்றம்...

செய்வீங்களா.. செய்வீங்களா...

இவ்வளவு பணத்தை எப்படி செலவு செய்ய போகிறோம் .. என்ற குழப்பம்..

என்ன செய்வது என்ற புரியாமல் இருக்கின்றேன். வெற்றி பெற்றவுடன் தலை கால் புரியாமல் நம் திட்டத்தையெல்லாம் மறந்து விடகூடாதென்று ஒரு பேப்பர் பென்சில் எடுத்து எழுத ஆரம்பித்தேன். இன்னும் சில மணிநேரங்களே..

பின் குறிப்பு :

அது சரி, இதுக்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தமா?  நல்ல கேள்வி. ஒரு வேளை அந்த பில்லியன் டாலர் எனக்கு விழுந்தால் .. நான் இங்கே மீண்டும் வர சற்று நாட்கள் ஆகும். அதுவரை என்னை தேடாதீர்கள். அம்புட்டுதேன் ...

10 கருத்துகள்:

  1. விரைவில் http://www.visuawesome.com/-ல் சந்திப்போம்... சரி தானே...? வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. என்ன கொழுப்பு உங்களுக்கு....இங்க கொஞ்சநாள் வரமாட்டேன் என்கிறீர்கள்..அதெல்லாம் முடியாது....நாங்கல்லாம் அங்க வாறோம்...செய்வீங்களா....

    பதிலளிநீக்கு
  3. போர் அடிச்சுண்டு இருக்கேன்னு எடுத்து விசுவோடது படிக்கலாம்னு படிச்சா , அப்பா சிரிச்சு , சிரிச்சு மூடே முழுசா மாறிபோச்சு... நன்றி !

    பதிலளிநீக்கு
  4. அடடா, இதுவா விசயம்? ஹ்ம்ம் சொக்கா! சொக்கா! நல்லா சிரிச்சாச்சு :))

    பதிலளிநீக்கு
  5. சோரி சோரி என்னும் இந்தி படத்தில் வரும் சவா லாக் கி லாட்டரி என்னும் பாடல் ஞாபகத்திற்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. அடுத்த பதிவை படியுங்கள்...
      மீண்டும் விசு, வரும் புதன் வரை...
      http://vishcornelius.blogspot.com/2016/01/blog-post_10.html

      நீக்கு
  7. ஹஹாஹஹ்ஹ உங்களுக்குக் கொஞ்சம் கொழுப்புக் கூடிப் போச்சுத்தான்..அம்மா கிட்ட போட்டுக் கொடுக்கறென் அதான் அந்த பில்லியன் பத்தி...அது சரி நீங்க அதென்ன படம் ஒரு ரஜனி படம் ..அதுல அவரு இத்தனை பணத்தை இத்தனை நாட்கள்ல செலவழிக்கணும் அப்படினு..ஒரு படம் வருமே அதைப் பார்க்கலையா நீங்க...
    சரி உங்களுக்குச் செலவழிக்கத் தெரியலைனா என்ன இங்க கொடுத்துருங்க...சொக்கா.... சொக்கா ...

    சரி கிடைச்சுச்சா இல்லையா...ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...