Thursday, January 14, 2016

கழுதைக்கு தெரியுமா....!?

அழைப்பு மணி அடித்தது...

வியாழன் அதுவும் மாலை ஆறு மணிக்கு ... யாரா இருக்கும் ?என்று நினைத்து கொண்டே, கதவை திறக்க சென்றேன்.

வாத்தியாரே...

வா தண்டபாணி.. என்ன வார நாளும் அதுவுமா.. இங்கே.. சொல்லாம கொல்லாம?

எத்தனை முறை செல் போனில் கூப்பிடறது வாத்தியாரே? எடுக்கவே மாற்ற ?

ஒ.. சாரி தண்டபாணி...

ஒன்னு தண்டம்னு கூப்பிடு... இல்ல பாணின்னு கூப்பிடு.. நீ இப்படி தண்டபாணின்னு கூப்பிட்டா... கேக்கவே நல்லா இல்ல ..

வா உள்ளே.. கையில என்ன?

என்னா வாத்தியாரே? உடம்பு சரியில்லையா? நல்ல நாளும் அதுவுமா உனக்கு என்ன ஆச்சி?

ஒன்னும் இல்ல சொல்லு.. கையில என்ன?

இன்னைக்கு என்ன நாள்? நினைவு இருக்கு இல்ல..

எல்லாம் தெரியும் சொல்லு..

வாத்தியாரே.. என்னை டென்சன் பண்ணாதே.. உனக்கு என்ன ஆச்சி.... வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்க தானே..

இருக்காங்க.. கையில என்ன?

பொங்கல் வாத்தியாரே.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .. சுந்தரி கொடுத்து அனுப்புனா. எங்க ... வீட்டுக்காரம்மா?

மருத்துவமனையில் ஏதோ அவசரம்மா.. கொஞ்சம் லேட் ஆகும்ன்னு சொன்னாங்க..

ஏன் வாத்தியாரே...சோர்ந்துட்டு இருக்க?

இல்ல ... பாணி.. நம்ம ஊரில்..

சரி ... நானும் கேக்கனும்ன்னு நினைச்சேன். இந்த ஜல்லி கட்டு தடை பண்ணதுல உனக்கு ரொம்ப வருத்தமாமே...

அப்படி தான் வைச்சிக்கோ.

வாத்தியாரே..என்னமோ.. பிறந்ததில் இருந்து காளையை அடக்குன மாதிரி நொந்து  இருக்கியே.. நீ இது வரைக்கும் காளைய அடக்கி இருக்கியா?
இல்ல...

அப்ப என்ன வருத்தம்.

ஜல்லி கட்டு ஒரு விளையாட்டு இல்ல பணி.. அது நம்மோட வாழ்வின் ஒரு அங்கம் .

புரியல.

பாணி.. சின்ன வயசுல நாங்க தருமபுரி மாவட்டத்தில் பர்கூர் என்ற ஊரில்  இருந்தோம்.

பர்கூர்.. வாத்தியாரே ...அட பாவி.. நீ அந்த ஊரா ?

டேய்.. அந்த ஊருக்கு என்ன குறைச்சல்.

வாத்தியாரே. அந்த ஊரில் இருக்கிறவங்க சுத்தமா படிக்காதவங்க, முட்டாள் சனங்கனு கேள்வி பட்டு இருக்கேன்.

அப்படியா.. யார் சொன்னா?

இல்ல வாத்தியாரே. நம்ம மாண்புமிகு முதல் அமைச்சர் அம்மா அவர்கள்  தேர்தலில் அங்கே நிற்க ஆசை படுவாங்க. வெற்றி நிச்சயம்ன்னு ஒரு நம்பிக்கை.. அதனால அந்த ஊர் மக்கள் மேல் இப்படி ஒரு கருத்து.

அட பாவி, தண்டம்..அந்த சாபம் பர்கூருக்கு மட்டும் இல்லடா.. தமிழ் நாட்டில் எல்லா ஊருக்கும் வந்துடிச்சி. போன இடை தேர்தலில் சென்னையில் தானே ஜெயிச்சாங்க. அதுக்கு என்ன சொல்ற?

சரி.. பர்கூர் எப்படி?

அருமையான ஊர் பாணி.. அந்த ஊருக்கு ஏன் அந்த பெயர் வந்தது தெரியுமா?

சொல்லு வாத்தியாரே.

டேய்... அந்த காலத்தில் இந்த ஊரில் நிறைய தேங்காய் - பன மரம். இருந்ததாம். இந்த ஊருக்கு யார் வந்தாலும்.. "பருகுவீர் .. பருகுவீர்" ன்னு அன்போடு இளநீர் , நொங்கு தருவாங்களாம். இந்த "பருகுவீர்" தான் நாளடைவில் பர்கூர் ஆச்சி.

சரி.. அந்த ஊருல நீ வளர்ந்த .. அதுக்கும் ஜல்லிகட்டுக்கும் இப்ப உன் சோகத்துக்கும் என்ன சம்மந்தம்.

தண்டம்.. பர்கூர் ரொம்ப சின்ன ஊர். அந்த காலத்தில் மொத்தமே ஒரு 2000 பேர் தான் இருப்பாங்க.

சொல்லு.

அந்த சின்ன ஊரில் ஜல்லி கட்டு வைப்பாங்க பாரு.. அடேங்கப்பா..

அப்படியா..

பாணி.. தமிழ் நாட்டு காளைகளில் காங்கேயம் காளை ரொம்ப பெயர் வாய்ந்தது . அதுக்கு சமம் தண்டம் எங்க பர்கூர் மலைமாடு.

அப்படியா?

தண்டம்.. எல்லா ஊரிலேயும் பசு கன்னுகுட்டி ஈர் ந்தால் தான் சந்தோஷ படுவாங்க. ஆனா பர்கூரில் காளை ஈன்றா கொண்டாட்டம் தான்.
ஏன்..

பாணி.. அது பிறந்தவுடனே... அதன் நிறத்தை வைத்து கருப்பையன் , வெள்ளையன் ..  அப்படின்னு பேரு வைச்சு இன்னும் எத்தனை வருடத்தில் அது ஜல்லிக்கட்டு காளையாகும்னு கணக்கு போட்டு...

சுவராசியமா இருக்கு வாத்தியாரே..

நிறைய வீட்டிலே  இந்த மாதிரி காளை வளர்ப்பாங்க. அதை வீட்டிலே ஒரு பிள்ளை போல் கவனிப்பாங்க.

பொங்கல் நாட்களில் இந்த காளைகளை அலங்கரித்து கூட்டினு வருவாங்க பாரு..

என்ன வாத்தியாரே.. நீ சொல்லும் போதே இப்படி புல்லரிக்குதே.

டேய்... கண் கொள்ளா காட்சி அது.

சரி.. மேலே சொல்லு..

மொத்த ஊருக்கு ஒரே ஒரு தார் ரோடு. அந்த ரோடை ரெண்டு பக்கமும் நிறுத்திட்டு .. ஜல்லி கட்டு ஆரம்பிக்கும். பிள்ளைகள் மற்றும் பெண்கள் தற்காலிகமாக போட்டுள்ள கம்புக்கும் வெளிய இருக்க... உள்ளே.. நிறைய வாலிபர்கள்..

அடுத்து வருவது.... மல்லபாடி பண்ணையாரோட " வெள்ளை சாமி" அது கழுத்துல 101 ரூவா இருக்கு. உடம்பிலேயும் மனசுலேயும் தெம்பு இருக்குறவங்க எடுத்துக்கலாம்னு சொல்ல..

ஜில் .. ஜில்.. ஜில் என்ற சத்தத்தோடு அந்த காளை வரும்..

அடேங்கப்பா.. சொல்லு வாத்தியாரே...

அதை பார்த்தவுடன் பாதி பேர் பயந்து ஓட.. சில பேர் தைரியமா லாகவமா அதை பிடிக்க பார்ப்பாங்க.  அதை பார்க்கும் எனக்கு எல்லாம் உடம்பு சிலிர்க்கும்.

அப்ப நீ பிடிக்கலையா..

டேய் ..அப்ப எனக்கு 10 வயது.

பொதுவாக இந்த காளைகள் சீறி பாய்ந்து யாரும் பிடிக்க முடியாமல் அந்த குறுப்பிட்ட தூரத்தை கடந்தவுடன்.. அந்த குடும்பத்தார் அதை பிடிச்சு  மீண்டும் ஒரு ராஜ நடையோடு வருவாங்க பாரு...

சூப்பர் வாத்தியாரே..

இதை போய்  தடை பண்ணி இருக்காங்களே , பாணி.

 நானும் கேள்வி பட்டேன்... இந்த காளைகளை ரொம்ப சித்ரவதை பண்ணதை பீட்டா ஆட்கள் வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் கொடுத்து..

பாணி.. சில தவறுகள் நடந்து இருக்கு. அதுக்கு தவறை நிவர்த்தி பண்ணனும் பாணி. மூட்டை பூச்சிக்கு பயந்துட்டு வீட்டை கொளுத்தறாங்க.

சரி.. விடு.. இந்தா பொங்கல் சாப்பிடு. இது மீண்டும் வர வாய்ப்பு இருக்கு.
பாணி.. இந்த தடையை கூட ஜீரனிக்கலாம், ஆனால் ..

ஆனால்..

இதை தடை செய்யனும்னு சொல்ற ஆளுங்க யாரு தெரியுமா?

பீட்டா ..

அது சரி.. பீட்டா சார்பில் யாரு தெரியமா?

எமி ஜாக்சன் ..திர்ஷா, நக்மா... நம்ம அஞ்சா நோஞ்சான் தனுஷ்..

இவங்க எல்லாம் தமிழா?

கண்டிப்பா இல்ல...வந்தோரை வாழ வைப்போம் இல்ல.. அதனால் அதை விடு.. இந்த சனியன்கள் ஏதாவது வாழ்க்கையில் ஒரு நாள் .. ஒரு மாட தொட்டு பார்த்து இருக்குங்களா? ஒரு கழனி தண்ணி வைச்சி இருக்குங்களா ?ஒரு புல்கட்டு போட்டு இருக்குங்களா? அடுத்தவன் கொடுக்குற காசுக்கு கூத்தாடி ஆட்டம் போட்டு நடிச்சிட்டு போறதா விட்டுட்டு.. இவங்க எல்லாரும் காளைய காப்பாத்த வந்துட்டாங்க..

விடு வாத்தியாரே..

பாணி.. கட்டுறது பட்டு புடவை.. பட்டு வேட்டி .. நல்ல தோலில் பெல்ட், கை பை, செருப்பு.. காரில் சீட் கூட தோலில் தான். சாப்பிடறது கறி மீன்..
இதை எல்லாம் செஞ்சிட்டு இங்கே வந்து காளைய காப்பாத்துறாங்க..

சரி , விடு வாத்தியாரே.. அறியாமை.

அறியாமை இல்ல பாணி. இது அறிஞ்சு செய்றாங்க.இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வரும்.. நீ காத்து இருந்து பார். ஒரு கலாசாரத்தையே அழிக்க பாக்குறாங்க. ஒரு இனத்தையே..

காளை இனத்தை தானே சொல்றே ...

இல்ல பாணி.. காளை பேர் வெச்சி .. நம்ம இனத்தை.. தமிழ் இனத்தை...

சரி.. இந்தா பொங்கல் சாப்பிடு..

இந்த பொங்கல் நான் கொண்டாடல.. வைச்சிட்டு போ.. அம்மணியும் ராசாத்திகளும் வருவாங்க.. அவங்க சாப்பிடட்டும்.

அப்ப .. நீ..

அடுத்த பொங்கல் வராமலா போய்டும்.

பின் குறிப்பு :

"பொங்கLow பொங்கல்" என்ற சோகமான வாழ்த்தை எனக்கு அனுப்பிய சக பதிவர் "கோ" அவர்களுக்கு நன்றி.


4 comments:

 1. நல்ல பதிவு தொடருங்கள், சோகத்தை அல்ல.

  கோ

  ReplyDelete
  Replies
  1. சகோ.. "அது நல்ல பதிவு தொடருங்கள்" அல்ல. "சிறந்த பதிவு, தொடருங்கள்"

   Delete
 2. தமிழனுக்கு வந்த சோதனை...!

  ReplyDelete
 3. ஆமாம் விசு பொங்க "லோ" பொங்கல்தான். ஆனால் உழவர்களையும் உழவையும் வந்தனம் செய்ய வேண்டும் அல்லவா அவர்கள் இல்லை என்றால் நாம் எங்கே....பதிவு அருமை.
  ஜல்லிக் கட்டுக்குக் கூக்குரல் கொடுப்பவர்கள் எல்லாருமே நீங்கள் சொல்லியதைத்தான் அதான் பட்டு, தோல் பை, லெதர் பேக், நான்வெஜ் என்றுதான். இதற்கு மட்டும் ஏன் கூக்குரல். எல்லாமே அரசியல்தான்..இங்கு..

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...