Friday, January 29, 2016

"கேள்"வியும் நானே பதிலும் நானே ...

சனியும் மதியம் அதுவுமாய்..

அம்மணி சமையலறையில் இருக்க கண்மணிகள் அவரவர் அறையில் இருக்க அடியேன், அலுவலக வேலை என்று சொல்லிவிட்டு அருமையான பாடல்கள் கேட்டு கொண்டு இருந்த நேரம்..

தோள் பட்டையை யாரோ இறுக்கமாக பிடித்தனர். அந்த பிடியை பார்த்ததும் இரண்டாம் வருடம் இளங்கலை படிக்கையில் என் அருகில் அமர்ந்து தேர்வு எழுதி கொண்டு இறந்த கமலகண்ணன், சட்டை பையில் இருந்து  ஒரு "பிட்" எடுத்து எழுதி கொண்டு இருந்த வேளையில்,எங்கள் பேராசிரியர் ஒருவர் அவன் தோளின் மேல் கை வைத்தது தான் நினைவிற்கு வந்தது.

டாடி.. அம்மா எவ்வளவு நேரம் கத்துறாங்க ... நீங்க கொஞ்சம் கூட கவனிக்காம?

சாரி மகள், "ஹெட் போன்ஸ்" போட்டுன்னு இருந்ததால் ...கேட்கவில்லை.


அலுவலக வேலைன்னு சொன்னீங்க .. ஹெட் போன்ஸ் எதுக்கு..

ஒ.. அது ஒரு ஆன் லைன் ட்ரைனிங் ... அதுதான்..

சரி அம்மாவை கவனியுங்க.

அவங்க கத்துற அளவிற்கு நீங்க ஏன் அவங்க கோபப்படுத்துரிங்க ?

அவங்க கத்துறது எங்களை இல்ல.. உங்களை..

நான் என்ன பண்ணேன்..?

நீங்க என்னதான் பண்ணல?

அடித்து பிடித்து சமையலறை ஓடினேன்.

என்ன ஆச்சி ?

எவ்வளவு நேரம் கூப்பிடுறது?

இப்ப தான் இங்க இருக்கேனே .. என்ன ஆச்சி..?

கொஞ்சம் அவசரமா போய்.. "கேள்" வாங்கினு வாங்க.

என்னாது ?

"கேளு"ங்க..

எத்தனை  தடவை கேக்குறது .. ?

எத்தனை தடவை தான் சொல்றது.."கேள்" வாங்கினுவாங்க... ஒ.. நீங்க முழிக்கிறத பார்த்த ... "கேள்" னா என்னான்னு தெரியாம "தேள்" கொட்டின மாதிரி முழிக்கிரிங்க  போல் இருக்க..

ஒ.. "கேள்". எனக்கு தெரியும்.. இதோ "ரெடி" ஆயிட்டு போறேன்.

ரெடி ஆகும் போது..

இது என்ன பெயரே  புதுசா இருக்கே ...? "கேள்" - கேள்விபட்டமாதிரியே இல்லையே.. என்னவா இருக்கும்?

நம்ம பார்க்கும் போது சமையலறையில் பாத்திரம் தேச்சினி இருந்தாங்க.. ஒருவேளை.. பாத்திரம் கழுவ போட்ற சோப்பா?

சமையல் வேற எதோ மெக்சிக்கன் சாப்பாடு பண்ணி கொண்டு இருந்தாங்க, ஒருவேளை.. ஏதாவது மெக்சிக்கன் மசாலாவா?

என்னவா இருக்கும் ?

யோசித்து கொண்டு இருக்கும் போதே இளையவள் வந்தாள்.

ராசாத்தி., டாடி லவ்ஸ் யு ..

என்ன வேணும்?

இல்ல சும்மாதான்.. டாடி லவ்ஸ் யு..

நான் அவசரமா "ஸ்கூல் ப்ரொஜக்ட்" ஒன்னு பண்ணின்னு இருக்கேன்.. சீக்கிரமா சொலுங்க .. என்ன வேணும் ?

இந்த "கேள்"..

டாடி. உங்களுக்கு  உண்மையாவே தெரியாதா?

ச்சே.. ச்சே.. தெரியும், இருந்தாலும் அம்மா, அதை எந்த கடையில் வாங்குவாங்க.. அவங்களுக்கு பிடிச்சத வாங்கணும் இல்ல.

பொதுவா .. "பிரெஷா" வேணும்னா அவங்க "அல்பர்ட்சன்" கடைக்கு தான் போவாங்க.

ஒ.. "அல்பர்ட்சன்" .. தேங்க்ஸ்.

டாடி,  ஐ லவ் யு டூ..

என்ன வேணும் ?

அங்கே ஐஸ் கிரீம் சூப்பரா இருக்கும்.

ஓகே..

வண்டியை விட்டேன்.. அல்பர்ட்சன்.. அது ஒரு பெரிய சூப்பர்மார்கெட்.
குண்டூசியில் இருந்து அரிசிமூட்டை வரை எல்லாம் இருக்கும். அங்கே .. "கேள் "  எப்படி கண்டுபிடிப்பது என்று நினைக்கையில் நண்பன் தண்டபாணி நினைவிற்கு வந்தான்

பாணி.. ..

என்ன உதவி வேண்டும் வாத்தியாரே .

ஏன்? உதவிக்கு தான் கூப்பிடுவேனா?  நலம் விசாரிக்க கூப்பிட்டு இருக்கலாம் இல்ல .

இருக்கலாம் .. ஆனா நீ கூப்பிடும் போதே "பாணி" ன்னு தானே கூப்பிட்ட.

அதுக்கு .. ?

உனக்கு எதாவது தேவை பட்டா மட்டும் தான் நீ என்னை பாணின்னு கூப்பிடுவ.. இல்லாட்டி தண்டம் தான்.. சொல்லு என்ன வேணும் ?

என்னடா இது .. "லவ் யு" ன்னு சொன்னா சின்னவ என்னா வேனும்னு கேக்குறா .. "பாணி" ன்னு கூப்பிட்டா இவன் என்ன வேனும்னு கேக்குறான். 234 தொகுதிகளையும் தெரிஞ்சு வச்சின்னு இருக்காங்களே .. என்று நினைத்து கொண்டு..

தண்டபாணி..

சொல்லு வாத்தியாரே.. என்ன வேணும்.

"கேள்" ..

நீ தானே கூப்பிட்ட .. நீ தான் கேக்கணும்.

அதுதான் .. "கேள்"

முழுசா சொல்லு, நான் கேக்குறன்.

தண்டம், கொஞ்சம் என்ன கேக்கவிடுறியா?

"கேள்"

அதே தான்.

என்னாது?

"கேள்"

வாத்தியாரே.. ரொம்ப குழப்புற.. சீக்கிரம் கேட்டு தொலை..

டேய்.. ஒரு நிமிஷம் குறுக்குல பேசாத.. என்ன முழுசா கேக்கவிடு..

"கேள்"

"கேள்" னா என்ன?

இப்ப போனை போட்டு என்னை ஒரு கேள்வி கேக்குறியே ,, அது தான் "கேள்" . இது கூட தெரியில.. நீ தமிழ் பதிவு எழுதுற?

இல்ல பாணி.. வீட்டில அம்மணி அவசரமா போய் கடையில் "கேள்" வாங்கினு வான்னு  சொன்னாங்க.. "கேள்" னா என்னனே தெரியில.

அவங்களையே  கேக்க வேண்டியது தானே.

ஒரு "ப்ளோவில்" தெரியும்ன்னு சொல்லிட்டேன்.

ஒ.. இப்ப என்ன பண்ண போற?

"கேள்"னா  என்ன?

என்னை கேட்டா..

ஒரு உதவி பண்ணேன்.

"கேள்" ...

அதே தான். கொஞ்சம் சுந்தரிய கேட்டு சொல்லேன்.

அவளிடம் கேட்டா  என்னை "கேள் " கூட தெரியாதா "கேப்மாரியா" இருக்கியேன்னு "கேப்புல"  நுழைஞ்சு    "கேலி" பண்ணுவா.

தண்டம்.. ப்ளீஸ்.

வாத்தியாரே. இது ஒரு விஷயமே இல்ல. நேரா கடையில் போய் "கேள்"னு கேள், அவங்க சொல்லுவாங்க. வாங்கிக்கோ. அப்புறம்.. வாங்கின  பின்னால் எனக்கும் ஒரு போன் போட்டு அது என்னான்னு சொல்லிடு.

உன் பிரச்சனை உனக்கு .. ஓகே. சொல்றேன்.

மிகவும் குழப்பத்தோடு கடையை அடையும் போது  இளையவள் சொன்ன "ப்ரெஷ் " என்ற வார்த்தை நினைவிற்கு வந்தது.

"ப்ரெஷ்.." கண்டிப்பாக "பேக்கரி" சமாச்சாரம் தான் என்ற முடிவிற்கு வந்து..
கடையை அடைந்தேன்.

எக்ஸ்குயுஸ் மீ .. வேர் இஸ் பேக்கரி செக்சன்?

வழிநடத்தினார்கள்..அங்கே சென்று...

டூ யு ஹேவ் ப்ரெஷ் "கேள்"?

மேலே இருந்து கீழே பார்த்தார்கள்.

வாட் ?

"கேள்" ப்ளீஸ்.

யு நீட் டு கோ டு வெஜிடேபிள்  செக்சன்.

ஒ .. ஐ அம் சாரி..

என்று நான் கிளம்ப.. அங்கு இருந்தவர்கள் எல்லாம் சிரித்த சத்தம் கேட்டது.

காய்கறி இடத்தை அடைந்தேன். யாரையும் கேட்கலாம் என்றால் அங்கே யாரும் இல்லை.  இந்த கடையில் ஒரு நாள் விஷயம். என்ன பொருளோ அதன் பெயரை மேலே எழுதி வைத்து உள்ளார்கள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில்  ஒவ்வொன்றாக தேடி இறுதியாக "KHEL " என்று எழுதிய இடத்தை கண்டுபிடித்தேன்.  இது ஒருவகையான கீரை. அந்த எழுத்தின் அருகே ஐந்து  - ஆறு வகை கீரை இருந்தது.
இதில் எது கேள்? 

இதில் எது கேள்? இந்த நேரம் பார்த்து இந்த "பீட்டா" ஆளுங்க யாரும் இல்லையேன்னு குழம்பி இருக்கும் போது. அருகில் ஒரு வெள்ளை அம்மணி வர.. அவர்களிடம்..

"எக்ஸ் குயுஸ் மீ.. விச் ஒன் ஆப் திஸ் இஸ் கேள் "

இவர்களும் மேலே இருந்து கீழே வரை பார்த்தார்கள்.

நன் ஆப் திஸ் இஸ் கேள்.

ஒ.. தேங்க்ஸ் ..

என்று   சொல்லிவிட்டு.. பின்னர் வந்த பணியாளரிடம்..

அமிகோ.. எங்கே.. ஒரு கட்டு "கேளை" கூட காணோமே ?

என்ற அனைத்தும் தெரிந்தவன் போல் அதட்டி கேட்க..

அவனோ.. ஒரு நிமிடம்  என்று சொல்லி .. உள்ளே சென்று ப்ரெஷ் "கேள்" எடுத்து வந்தான்.
இது தான் "கேள்" எனப்படும் கீரை.  (இந்த படத்தை போட பின்னூட்டம் மூலம் என்னை தூண்டிய நாகராஜ் அவர்களுக்கு நன்றி.)
அடே .. அடே.. இது தான் "கேளோ" , இதோடு கொஞ்சம் வெங்காயமும் போட்டு மிளகாயும் சேர்த்து கடலை மாவில் பிசைந்து பக்கோடா செய்வார்களே .. இவ்வளவு நல்ல விஷயத்தை தெரியாம இருந்து இருகின்றேனே.. என்று நினைக்கையில்..

அலை பேசி அலறியது.. அதில் இளையவள்..

டாடி.. எவ்வளவு நேரம்? இந்தாங்க அம்மா பேசனும்மா.

"கேள்" கிடைச்சிச்சா?

இருந்தது.. ஆனாலும் "ப்ரெஷ்"  இல்ல, அதனால் உள்ளே இருந்து எடுத்து வர  சொல்லி வெயிட் பண்ணேன், லேட்ஆயிடிச்சி.

ஓகே .சீக்கிரம் வாங்க.. என்று சொல்லி இளையவள் கையில்  கொடுக்க..

டாடி.. ரிமம்பர் .. "ஐ லவ் யு"  என்றாள், சிரித்து கொண்டே.

அவள் பிரச்சனை அவளுக்கு ....

8 comments:

 1. ஹா...ஹா... என்னவொரு திண்டாட்டம்... ஹா...ஹா... சிரிச்சு முடியலே....

  ReplyDelete
 2. கடைசியில் எது தான் கேள், சொல்லவே இல்லை

  ReplyDelete
  Replies
  1. ஆமா இல்ல...உங்க பின்னூட்டத்த பார்த்தவுடன் கேள் படம் ஒன்னும் போட்டுட்டேன். நன்றி.

   Delete
 3. இயல்பான நகைச்சுவை மிளிர்கிறது உங்கள் பதிவுகளில்

  ReplyDelete
 4. That's a waggish one RJ. "Malar loves your blog" இம்புட்டு கஷ்டப் பட்டத்துக்கு நேரா கடைக்குப் போயி அங்க இருக்கறதுலயே நல்ல அம்மணியா பாத்து "லவ் யு" சொல்லியிருந்தா சுலபமா முடிஞ்சிருக்குமே?!

  ReplyDelete
  Replies
  1. என்ன முடிஞ்சிருக்கும்? நண்பர் விசுவா?? :)

   Delete
  2. மலர் ஹஹஹ் அது சரிதான்....அப்ப விசுவிடமிருந்து இன்னுரு பதிவு வரும் போல இருக்கே..

   Delete
 5. நீங்கள் அல்பர்ட்சென்னில் நுழைந்த உடனேயே தெரிந்துவிட்டது...அது கேல் என்று ...கேள் என்று நீங்கள் அருமையாக சொல்லாட்டம் போட்டுவிட்டீர்கள் விசு!! செம....எப்படியோ சகோதரியிடமிருந்துத் தப்பித்துவிட்டீர்கள். அங்கும் வாங்கிச் சமைத்தது உண்டு

  இங்கு இது பரட்டைக் கீரை/சீமைப்பரட்டை என்று...இங்கும்...ஆனால் சில சூப்பர் மார்க்கெட் கடைகளில் மட்டுமே கிடைக்கும்.

  இங்கயும் நானும் மகனும் மகன் வந்துவிட்டதால் இருவரும் இப்படித்தான் இங்கு நடந்ததை அதுவும் இன்று நடந்ததையும் சேர்த்து பாதி எழுதி வைத்துள்ளேன்...

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...