Thursday, January 28, 2016

வீட்டுக்கு வீடு "ஆசை"ப்படி ..

டிங் டாங்...

அழைப்பு மணி அடித்தது! இந்த ஊரில் இந்த மாதிரி அழைப்பு மணி சத்தம் மிகவும் அரிதாக தானே கேட்கும், யாராக இருக்கும் என்ற நினைப்பிலே, கதவை திறந்தேன்...

வா, தண்டம்! என்ன சொல்லிக்காமா .. கொல்லிக்காமா?

வாத்தியாரே, அவசரமா ஒரு நிமிஷம் தனியா பேசணும்.


அதுக்கு ஏன் பாணி இவ்வளவு தூரம் வந்த? உங்க வீட்டிலே பாத்ரூம் போய் கண்ணாடிய பாத்து பேசி இருக்கலாமே.

விசு .. கொஞ்சம் சீரியசான விஷயம்.

நண்பன் தண்டபாணி என்னை விசு என்றே அழைக்கமாட்டான். எப்ப பார்த்தாலும் .. வாத்தியாரே.. வாத்தியாரே .. என்று வாய் நிறைய சிறித்து கொண்டே சத்தமாக அழைப்பான். என்னை ஏன் வாத்தியாரே என்று அழைக்கின்றாய் என்று ஆயிரம் முறை கேட்டு இருப்பேன்.அது ஒரு பெரிய கதை , நேரம் வரும் போது சொல்கிறேன் என்று தள்ளி போட்டு கொண்டே இருப்பான்.

இன்று திடீரென்று "விசு" என்று அழைக்கின்றான். கண்டிப்பாக அவனுக்கு ஏதோ பிரச்சனை போல..

சாரி பாணி, வா..

கொஞ்சம் வெளியே போய் பேசலாம் வா.

அம்மணியும், கண்மணிகளும் வெளியே போய் இருக்காங்க.. இங்கேயே பேசலாம், சொல்லு.

வாத்தியாரே.. உங்க வீட்டுல அடிக்கடி வாக்குவாதம் வருமா?

வீட்டுக்கு வீடு வாசப்படி பாணி... வாசல் இல்லாத வீடு கூட இருக்கலாம், வாக்குவாதம் இல்லாத வீடு இருக்க முடியாதே, என்ன ஆச்சி..?

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சுந்தரி ரொம்ப சத்தம் போடறா வாத்தியாரே.

டேய்.. உனக்கு சின்ன விஷயம், அது சுந்தரிக்கு பெரிய விஷயமா இருக்கலாம் இல்ல. குடிக்க கிடிக்க ஆரம்பிச்சிட்டியா?

வாத்தியாரே.. வீட்டை விட்டா வேலை.. வேலையை விட்டா வீடு.. குடி- குதிரை -குட்டி அப்படி இப்படின்னு எதுவும் இல்ல.. இருந்தாலும் வாக்குவாதம்.

பாணி. வீட்டில் இருந்து வேலை.. வேலையில் இருந்து வீடு.. அதுதான் பிரச்சனை. எப்ப பாரு கூடவே இருந்து நச்சரிப்ப ..போல .. அதுதான்.

நீ கூட வேலை விட்டா வீடு வீடை விட்டா வேலை தானே.. இங்கேயும் வாக்குவாதம் தான

இது தேவையில்லாத வாதம், உன் பிரச்சனைக்கு வருவோம்.

சொல்லு..

உனக்கும் சரி , எனக்கும் சரி, கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட 18 வருஷம் ஆச்சி.
சும்மா வீட்டில உக்காந்து அவங்கள நச்சரிப்பதை விட்டுட்டு கொஞ்சம் வெளிய போகணும்..

அப்படியா... கல்யாணம் ஆனா புதிதில் வீட்டிலேயே இருக்கனும்ன்னு ஆசை பட்டாங்களே..

அது புதுசுல..இப்ப அவங்களுக்கு ஆயிரம் வேலை..நல்ல வசதியான வீட்டில் வளந்தவங்க,நமக்காக நிறைய விஷயம் விட்டு கொடுக்குறாங்க. "சல்ப அட்ஜஸ்ட் மாடு.."

என்ன மாடு..?

அதுவா.. கனடா மொழியில் பேசிட்டேன் , கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.

அவங்க மட்டுமா விட்டு கொடுத்தாங்க.. நான் கூடதான்.

என்ன விட்டு கொடுத்த..

வாத்தியாரே.. சின்ன வயசுல இருந்தே எனக்கு "ட்ரவல்" பண்றது பிடிக்கும். பிரமச்சாரி நாட்களில்  மூணு மாசத்துக்கு ஒரு முறை லீவே போட்டுட்டு நாடு நாடா ஊரு ஊரா சுத்தி பார்க்க கிளம்பிடுவேன், கல்யாணம் ஆனதில் இருந்து அது சுத்தமா மறந்து போயிடிச்சி,,,

ஊரு ஊரு போகனும்னா நீ மென்பொருள் நிபுணராகி இருக்க கூடாது. லாரி டிரைவர் ஆகி இருக்கணும்.. ஊர் ஊரா சுத்தி பார்க்கலாம் , கூடவே கை நிறைய சம்பளம். ஒரு கல்லில் ரெண்டு மாங்காய்.

கை நிறைய சம்பளமா? லாரி டிரைவருக்கா.. என்ன சொல்ற?

ஆமா பாணி. இங்க நம்ம  ஊர் போல இல்ல. இவங்க வழி தனி வழி.

விவரமா சொல்லு,

பாணி.. ஒரு மணி நேரம் ஓட்டினா .. 30ல் இருந்து 65 டாலர் வரை, கம்பெனி, மற்றும் நம்ம திறமையை பொருத்து..

லாரி ஒட்டுரத்தில என்ன திறமை..

திறமைனா.. குடிக்க மாட்டார்.. போதை பொருள்  இல்ல.. நேரம் வீணடிக்க மாட்டார். அந்த மாதிரி..

வாரத்துக்கு அதிக பட்சம் 70 மணி நேரம் தான் ஓட்ட முடியும்.

மேலே ஒட்டுனா.

நீ டிஸ்மிஸ்.. கம்பனிக்கு அபராதம்.

நான் ஒட்டினேன்னு எப்படி கண்டு பிடிப்பாங்க.

பாணி.. எடுத்தவுடனே.. திருட்டு தனத்த பத்தியே கேக்குற.

தொட்டில் பழக்கம் வாத்தியாரே.. மேலே சொல்லு.

சட்டத்தை  இங்கே பொதுவா எல்லாரும் மதிப்பாங்க, அப்படியே தவறு நடந்தாலும் அதை கண்டுபிடிக்க நிறைய விதிமுறைகள் சோதனைகள் இருக்கு. தவறு செய்தால் அபராதம் தண்டனை அதிகம், அதனால் யாரும் ரெண்டு முறை யோசிப்பாங்க.

ஆமா வாத்தியாரே.. கண்டின்யு ....

ஒரு நாளைக்கு 11 மணி மேல் ஓட்ட கூடாது.  11 மணி நேரம் ஒட்டியவுடன் கண்டிப்பாக 10 மணி நேரம் ஓய்வு .

சாப்பாடு, தூக்கம் எல்லாம்?

பாணி, வண்டியிலே ஒரு ரூம் போல நல்ல வசதியா இருக்கும். ஒரு சின்ன பிரிட்ஜ்,படுக்கை, டிவி, மைக்ரோவேவ் அவன்...  வேற .

வண்டியில் இருக்கும் இந்தமாதிரி வசதி "தண்டத்திற்கு" வீட்டிலேயே இல்லை.. அதுதான் இப்படி ஒரு ஆசை. 

வெளியே டிரைவர்னு தப்பா பேசுவாங்களே.. எனக்கு பொண்ணு கொடுத்ததே..
நான் எஞ்சினீர்.. அதனால  தான்.

தண்டம்.. தப்பா பேசுறது எல்லாம் நம்ம ஊரில் .. இங்க லாரி டிரைவர்ஸ்க்கு நல்ல மரியாதை.

எவ்வளவு தூரம் போக வேண்டி இருக்கும்.

பாணி.. அது உன் இஷ்டத்தை பொருத்து. இந்த ஊரு ரொம்ப பெரிய ஊர் ஆச்சே , கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க் போக 3300 மைல். ஒரு முறை போய் வர 12-15 நாள் ஆகும்.

இத்தனை நாள் தனியா.. வாத்தியாரே.. அவசரத்துக்கு , பேச்சு துணைக்கு .. கிளீனர் போல யாரவது கொடுப்பாங்களா?

பாணி, இங்கே கிளீனர் எல்லாம் இல்ல. ஒவ்வொரு  லாரிக்கும் ரெண்டு டிரைவர் தேவை படும். இதை ஒரு "டீம்"ன்னு சொல்லுவாங்க. போற இடம் பொதுவா ரொம்ப தூரம், அதனால் ரெண்டு ரெண்டு டிரைவர்ஸ் அனுப்புவாங்க.

சூப்பர் வாத்தியாரே. 15 நாள் வெளியே ஊர் ஊரா சுத்தலாம். நல்ல சாப்பாடு, படுக்கை. கை நிறைய சம்பளம். ஆனால் சுந்தரி...
ஒருத்தர் தொந்தரவும் இல்லாமல் ஊர் ஊரா சுத்தலாம் .

டேய்.. சுந்தரி படிச்ச பொண்ணு.. விளக்கி சொல்லு.

ரொம்ப நன்றி வாத்தியாரே. எனக்கும் இந்த கம்புயுடர் வேலை ரொம்ப போர்  அடிச்சிடிச்சு .

அடுத்த நாள்.

வாத்தியாரே.. சுந்தரி .. இந்த வேலைக்கு ஓகே சொல்லிடிச்சி. இன்னைக்கு எனக்கு இன்டெர்வியு ..

பாணி, நான் சும்மா தமாசுக்கு சொன்னேன்.

என்ன தமாசு? நானும் கொஞ்சம் விசாரிச்சு பார்த்தேன். நீ சொன்னது எல்லாம் உண்மை தான். சரி இன்டெர் வியு முடிஞ்சதும் கூப்டிறேன்.

மாலை. :

சொல்லு தண்டம்.. இன்டெர் வியு எப்படி போச்சு..

எல்லாம் நல்ல போச்சு வாத்தியாரே.இந்த வாரம் ட்ரைனிங்,பின்னர் லைசன்ஸ் , அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்ன்னு சொன்னங்க.

சம்பளம்?

அனுபவம் இல்லை இல்லே, இருந்தாலும் இந்த குடி மற்ற கெட்ட பழக்கம் எதுவும் இல்லாததால் ஒரு மணிநேரத்துக்கு 32 டாலர்.

கம்மியாச்சே பாணி.. இப்ப அதிகமா சம்பாதிக்கிரியே ..

எவனுக்கு வேணும் காசு. அதை எல்லாம் ஏற்கனவே சம்பாரிச்சாச்சு .

சரி, எப்ப சேர போற?

எங்கே சேர போறேன். வேண்டாம்னு சொல்லிட்டு வந்துட்டேன்.

ஏன் பாணி. உனக்கு பிடிச்சது தானே.

இல்ல வாத்தியாரே கடைசியா ஒரு "கண்டிசன்" போட்டாங்க.. அதுக்கும் நமக்கும் ஒத்து வராதுன்னு வந்துட்டேன்.

அப்படி என்ன "கண்டிசன்"?

இவங்க கம்பனியில் புருஷன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு  சேர்ந்தாதான் சேர முடியுமாம். ரெண்டு பேரும் ஒரு "டீமா" இருந்தா இவங்க பாதி , அவங்க பாதி ஒட்டுவாங்கலாம். அது மட்டும் இல்லாமல், கணவன் மனைவி பிரிந்து வாழ்வது இவங்க கம்பனிக்கு பிடிக்காதாம்.

அதனால என்ன ? சுந்தரிய கேட்டு பார்.

ஏன் வாத்தியாரே.. இந்த வேலைய பத்தி நான் விசாரிக்க ஆரம்பிச்சதே வீட்டை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்து சுந்தரிய நச்சரிக்காம இருக்கலாமேனு.. இந்த வேலை.. "ஏறி மேலே போற ஆத்தா என் மேலே வந்து ஏறு ஆத்தா"ன்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு ? சரி விடு. நீ மட்டும் கோச்சிக்காட்டி உன்னை ஒரு கேள்வி கேக்கணும்.

கேளு.

இந்த லாரி டிரைவர் வேலைய பத்தி இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சி இருக்கியே .. எப்படி ?

சின்ன வயசில் சிவாஜி ரசிகனா வளர்ந்தேனா? அவருடைய லாரி டிரைவர் ராஜ்கண்ணு படம் பார்த்தேன் .. எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன். போனை வை.

பின் குறிப்பு :

தண்டத்து சந்தேகத்த விடுங்க, ஒரு லாரி டிரைவர் வேலையை பத்தி விசு இம்புட்டு விஷயம் தெரிஞ்சு வைச்சு இருக்காரேன்னு நீங்க முழிக்கிறது தெரியுது. வீட்டில் கொஞ்சம் நச்சரிக்கிறத விடலாம்ன்னு போன வருஷம் நானும் இந்த இண்டர்வியு போனேன். எனக்கும் இதே தான் சொன்னாங்க.

அம்மணியோடு  நான் 3000 மைல் ஒட்டுறதா? 300 அடியில், அடுத்த தெருவில், 300 அடியில் இருக்கும் பால் கடைக்கு ஒட்டும்போதே 3000 தவறு கண்டுபிடிப்பாங்க.. இது நமக்கு ஒத்துவராதுன்னு வந்துட்டேன்.   

2 comments:

  1. எல்லா இடத்திலும் ஒரே மாதிரி போல... ஹா... ஹா...

    ReplyDelete
  2. ஹஹஹஹ பின் குறிப்பிற்குத்தான் இந்தச் சிரிப்பு...பின்ன வீட்டுக்கு வீடு வாசப்படியேதான்....

    கீதா: அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்!!! இந்த வீடு இந்த லிஸ்ட்ல இல்ல..ஹும் என்ன செய்ய...அத விடுங்க...விசு நாங்கள் அங்கிருந்த போது இந்த லாரி ஓட்டுநர் வேலை பற்றித் தெரிந்து கொண்டோம் ஒரு மெக்சிகன் ஓட்டுநரிடமிருந்து அறிந்து கொண்டோம். நம்ம ஊர் லாரி ஓட்டுநர்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இங்கு இடையில் நிறுத்தும் போது பல இடங்களிகும் தண்ணி, பெண் என்றுதான் அதனாலேயே புள்ளிவீவரங்களின் அடிப்படையில்தான் அந்த விளம்பர்ம புள்ளி ராஜா என்று வந்தது இடையில் எய்ட்ஸ் பற்றி. ஓட்டும் விதிமுறைகள், சாலை விதிமுறைகள் லைசன்ஸ் என்பதெல்லாம் இங்கு எளிது. இங்கு சட்டம் ஒரு இருட்டறை அதனால்தான் இந்தியா இப்படி இருக்கின்றது. இல்லை என்றால் இங்கிருக்கும் அருமை பெருமைகளுக்கு அமெரிக்காவை எல்லாம் என்றோ பின்னுக்குத் தள்ளியிருக்குமே. ஒரு நாட்டைத் தூக்கி நிறுத்தும் அட்மினிஸ்ட்ரேஷன் நம்மூரில் சரியில்லை ஊழல் என்பதால்...

    அங்கு எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாழ்வாக நினைப்பதில்லை. நல்ல பதிவு விசு.

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...