வெள்ளி, 25 டிசம்பர், 2015

தன்னை போல் பிறனையும் நேசி

பல வருடங்களுக்கு முன் வளைகுடா நாடுகளில் வாழும் போது கிறிஸ்துமஸ் அன்று நடந்த ஓர் நிகழ்ச்சி:
இன்னொரு கிறிஸ்மஸ், இன்னொரு வருடம், குடும்பத்தை பிரிந்து பிழைப்புக்காக வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் துக்கத்தை சற்று தள்ளி வைத்து விட்டு சிறிது நேரமாவது சந்தோசமாக இருப்போம்.  நீங்கள் அனைவரும் தம் தம் இல்லத்திற்கு போன் செய்து பேசி விட்டீர்களா? அப்படி போன் செய்யாதவர்கள் எங்கள் வீட்டு போனை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

சொல்லி முடித்தார், எங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நண்பர். அவர் வளைகுடா பகுதியில் பல வருடங்கள் வாழ்ந்தவர். உயர்ந்த பதவியில் இருப்பவர். அதனால் அவர் தம் குடும்பத்தோடு அங்கே வாழ்ந்து வந்தார் . இவ்வாறான நல்ல நாட்களில் அவர் தன் சக பணியாளர்களையும் நண்பர்களையும் தன் இல்லத்தில் அழைத்து விருந்து வைத்து உபசரிப்பார். 

அனைவரும் தம் தம் கவலையை சற்று தள்ளி வைத்து விட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கையில், அந்த நண்பர் மீண்டும் நடுவில் வந்து, மானிடர்களாகிய நமக்காக இயேசுபிரான் பிறந்த தினம் இது, இந்நநாளில் நாம் அனைவரும் ஒவ்வொருவராக நம் வாழ்வில் நமக்கு நேர்ந்த – நம்மால் நடந்த ஓர் நல்ல காரியத்தை அனைவருக்கும் எதிரில் பகிர்ந்து நம் அன்பை தெரிவித்து கொள்வோம் என்றார்.
ஒவ்வொருவராக தம் தம் வாழ்க்கையில் நடந்த நல்ல காரியங்களை  சொல்லி கொண்டு வருகையில் நண்பன் ரிச்சர்ட் அவர்களின் முறை வந்தது. நண்பர் ரிச்சர்ட் ஆங்கில இந்திய வம்ச வழியில் வந்தவன் . எப்போதும் மிகவும் சிரித்து கொண்டு தன் கிடாரை வைத்து கொண்டு ஆட்டம் பாட்டம் என்று இருப்பவன். ரிச்சர்ட் நல்ல நகைச்சுவையாக பேசுவான், அதனால் அனைவரும் சிறிது நேரம் வாய் விட்டு சிரிக்கலாம் என்று அவனை கவனிக்க ஆரம்பித்தனர்.
இதோ ரிச்சர்டின் பேச்சு;
நண்பர்களே. கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள். எனக்கு நடந்த நல்ல காரியம்.  பல வருடங்களுக்கு முன்  என் 15வது  வயதிலே தகப்பனை இழந்த நான் என் இல்லத்தில் மூத்தமகனாக பிறந்ததால் குடும்ப பொறுப்பை சிறு வயதிலேயே சுமக்க ஆரம்பித்தேன்.  எனக்கும் பின் 3 தங்கை மார்கள், என்னையே மலை போல் நம்பி உள்ள என் தாய். என் தகப்பன் “ரயில்வேஸ்” வேலையில்  இருந்ததால் சிறிது “பென்சன்” தொகை வரும். ஆனால் அதை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்த இயலாது.
ஆதலால் 16 வயது முதல் பகல்  முழுவதும் வெவ்வேறு சிறு வேலைகள் செய்து விட்டு மாலை நேரத்தில் கல்லூரிக்கு சென்று படித்து வந்தேன். படிப்பும் முடிந்தது.  செய்து கொண்டு இருந்த சிறு சிறு வேலையினால் வந்த பணம் குடும்பத்தை நடந்த பற்றவில்லை.
அப்போது என் உறவினர் ஒருவர், வளைகுடா பகுதிக்கு வேலைக்கு ஆள் எடுகின்றார்கள் என்றும், என் படிப்பிற்கு ஏற்ற வேலை ஒன்று இருகின்றது என்றும் கூறினார். நானும் நேர்முக தேர்விற்கு சென்றேன். தேர்வும் பெற்றேன். வெளியே வரும் போது அந்த அலுவலகதில், இந்த வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்ட வேண்டும். அப்படி செய்தால் அடுத்த மாதம் நீ வேலையை ஆரம்பிக்கலாம்  என்று ஒரு அதிர்ச்சியான தகவல்களை சொன்னார்கள்.
இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவேன். நேராக தெரிந்த சில உறவினர்களிடம் சென்று உதவி கேட்டேன்.  அவர்கள் நிலைமை என்னோடு மோசம் போல் இருந்தது. இவர்கள் யாரும் பணம் இல்லை என்று கை விரித்தது மட்டும் அல்லாமல் ஒரு வேளை உன்னால் அந்த பணத்தை கட்ட முடியாவிட்டால், எங்களில் ஒருவனை அதற்கு சிபாரிசு செய் என்ற பதில் தான் வந்தது.
என் இல்லத்திற்கு வந்தேன். என் தாய் ஓடி வந்தார்கள்.
நேர்முக தேர்வு என்ன ஆயிற்று?
என்னைவிட இன்னொருவர் அந்த வேலைக்கு சிறந்த தகுதி பெற்றவர் என்பதால் எனக்கு கிடைக்கவில்லை, அம்மா.
ஓர் தாயிடம் பொய் சொல்ல முடியுமா?
 உண்மையை சொல்! என்ன ஆயிற்று.
வேலை எனக்கு தான் அம்மா, ஆனால் வெள்ளி கிழமைக்குள் 6000 ருபாய் கட்டவேண்டுமாம். நாம் எங்கே போவோம் என்று அழ ஆரம்பித்தேன்.
நேராக தன் அறைக்குள் சென்ற என் தாய் எங்கள் வீட்டு பத்திரத்தை எடுத்து வந்து இதை வைத்து அந்த பணத்தை வாங்கி கட்டு. தைரியமாக செய் என்றார்கள்.
அம்மா, என்னதான் கஷ்டமாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் இருந்து மறைத்து வாழ இந்த வீடு தானே நமக்கு உள்ளது? வேண்டவே வேண்டாம்.
மகனே உன் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. தைரியமாக இந்த காரியத்தை செய்.
தேங்க்ஸ் அம்மா.
அடுத்த நாள், பத்திரத்தை எடுத்து கொண்டு பணம் வாங்க சென்றேன்.  6000 ருபாய் வேலைக்கும், நாம் சென்றவுடனே  வீட்டிற்கு பணம் அனுப்ப முடியுமா என்ற கேள்வி குறி இருந்ததால் அடுத்த மூன்று மாதத்திற்கு   3000 ருபாயும், மற்றும் நான் வெளிநாடு செல்வதால் வாங்க வேண்டிய சில பொருள்களுக்கு 1000ம் ருபாய், மொத்தம் 10,000 வாங்கி கொண்டு அதை ஒரு பையில் போட்டு கொண்டு சைக்கிளை வீட்டை நோக்கி விட்டேன் . அந்த இடத்தில் இருந்து என் இல்லத்திற்கு 4 கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
வீட்டை அடைந்து அந்த பையை எடுக்கலாம் என்று பார்த்தால், பையை காணவில்லை. அதிர்ந்தே விட்டேன். என் கண் எதிரிலேயே தான் இருந்தது. ஒவ்வொரு வினாடியும் அதை தானே பார்த்து கொண்டு வந்தேன். எங்கே போனது ? கடவுளே இப்போது நான் என்ன செய்வேன்? அம்மாவும் வீட்டில் இல்லையே என்று அழுது கொண்டே வந்த வழியை நோக்கி வண்டியை விட்டேன்.
இப்படி ரிச்சர்ட் சொல்லும் போது அனைவர் முகத்திலும் ஒரு சோகம், சிலர் முகத்தில் கண்ணீர். இவ்வளவு சிரித்து கொண்டு மற்றவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் இவன் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? சரி மேல் சொல் என்று பார்க்கையில்.. நண்பன் ரிச்சர்ட் அந்த  நாளை நினைத்து அழ ஆரம்பித்து விட்டான் .
அருகே நின்று கொண்டு இருந்த குமார், ரிச்சர்ட் .. நீ போய் உட்கார், நான்  பேசி முடித்தவுடன் நீ மறுபடியும் வந்து உன் பேச்சை முடி என்று சொல்ல அனைவரும் குமாரின் பேச்சை கேட்க ஆயத்தமானார்கள் .
அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
 நண்பன் ரிச்சர்ட் அவர்களுக்கு அவர் தந்தை இறந்ததால் கஷ்டம். எனக்கோ தந்தை இருந்ததால் கஷ்டம். குடும்பமே தன் மூச்சு என்று கடினமாக உழைத்து அதில் வரும் பணத்தை பெற்று வீட்டிற்கு வரும் என் தாயை மிரட்டி அடித்து அந்த பணத்தை பறித்து கொண்டு போய்   சாராய கடையில் நிற்கும் தந்தை. அது என்னவோ தெரியவில்லை. எனக்கும் சரி நண்பன் ரிச்சர்டிற்கும் சரி, ஆண்டவன் “மூத்த பிள்ளை” என்னும் ஒரு இடத்தை கொடுத்து சிறு வயதில் இருந்தே பெரிய பொறுப்பையும் கொடுத்தான். எப்படி வளர்ந்தேன் என்று தெரியாது, ஆனாலும் வளர்ந்தேன். எனக்கும் பின்னே 5 பிள்ளைகள் ஆயிற்றே.
அவர்கள் அனைவருக்கும் அப்பாவே நான் தான்.
நண்பன் ரிச்சர்ட் சொன்னது போலவே நானும் படித்தேன். படிப்பு ஒன்று தான் நம் வாழ்க்கையை உயர்த்தும் என்று படித்தேன். பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்ற நப்பாசை. அருகில் வாழ்ந்து கொண்டு இருந்த நண்பன் ஒருவன் மருத்துவம் – பொறியியல் படிக்க நிறைய பணம் தேவை படும். பணம் அதிகம் இல்லாமல் படிக்க கூடிய ஒரே படிப்பு CA மட்டும் தான், அதை படி என்றான் . அதை மந்திரமாக எடுத்து கொண்டு படித்தேன்.
படித்து முடித்தவுடன் , பாம்பே நகரத்தில் வாழும் நண்பன் ஒருவனிடம் தொடர்பு கொண்டேன். உடனே புறப்பட்டு வா,  உனக்கு இங்கே நல்ல எதிர்காலம் உண்டு என்று சொல்ல புறப்பட தயார் ஆனேன் . குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்து இருந்த 1000சொச்சத்தில் பாதியை அம்மாவிடம் கொடுத்து விட்டு மீதியை எடுத்து கொண்டு பாம்பே கிளம்ப புறபடும் வேளையில் என் அருமை தங்கை என்னிடம் வந்து  :
அண்ணா, இந்த வார இறுதிக்குள் என்னுடைய பரீட்சை தொகையை கட்டவேண்டும் இல்லாவிடில் பரீட்சை எழுத அனுமதி கிடைக்காது, மொத்தம் குறைந்த பட்சம் 450 ரூபாய் தேவை படும். எப்படியாவது …
என்று சொல்ல, என் பாம்பே பிரயாணம் தள்ளி சென்றது. அந்த பணத்தை தங்கையிடம் கொடுத்து விட்டு, வாழ்க்கையை நொந்து கொண்டு அருகில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கே ஒரு நபர் தன்    சைக்கிளில் மிகவும் வேகமாக செல்லும் போது அவர் வண்டியில் இருந்து ஒரு பை தவறி விழுவதை பார்த்தேன். விழுந்ததை பார்க்காமல் அவர் செல்ல, நான் அந்த பையை எடுத்து கொண்டு அவர் பின் சத்தம் போட்டு கொண்டே ஓட அவர் அதை கவனிக்காமல் சென்று விட்டார் !
பையை திறந்து பார்த்த எனக்கு ஒரே அதிர்ச்சி! உள்ளே கட்டாக பணம். எவ்வளவு இருந்து இருக்கும் என்று தெரியவில்லை. பணத்தின் பின் ஒரு தாள், அதில் ஒரு விலாசம் போட பட்டு இருந்தது, அது மட்டும் அல்லாமல் அந்த விலாசத்தில் உள்ள வீடை அடகு வைத்து 10,000 ருபாய் கடன் கொடுக்க பட்டுள்ளது என்றும் எழுதி இருந்தது.
அந்த பையை விட்டவர் எப்படியும் திரும்ப வருவார் என்று அங்கேயே அமர்ந்து கொண்டு இருந்தேன்..
இதை கேட்டதும் நண்பன் ரிச்சர்ட் அழுதே விட்டான்!  குமாரின் அருகில் வந்து … அது நீங்களா? இது நடந்து கிட்ட தட்ட 20 வருடங்கள் ஆகி இருக்குமே என்று ஒருவரை ஒருவர் கட்டி தழுவ,
அருகில் இருந்த மற்றொரு நண்பர் .. சரி முழு கதையை சொல்லுங்க என்று கேட்க ரிச்சர்ட் தொடர்ந்து பேச  ஆரம்பித்தான்.
வந்த வழியே கண்ணீரோடு திரும்பி சென்று கொண்டு இருந்தேன். வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பேருந்து நிற்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்த நபர் :
என்ன சார், தேடி கொண்டே போகின்றீர்கள்?
 ஒரு முக்கியமான பையை தவற விட்டு விட்டேன்.
அதில் என்ன முக்கியம்?
என் வாழ்க்கையே அதில் தான் உள்ளது, கடன் வாங்கிய பணம் மற்றும் ரசீது.
இதுவா பாருங்க .
இதுவே தான், ரொம்ப நன்றிங்க!
ஜாக்ரதையா இருங்க சார் ! வாழ்க்கையே என்று சொல்லுகின்றீர்கள்?
இது எப்படி உங்கள் கையில் ?
ஒரு 10 நிமிடம் முன்னால் நான் இங்கே தான் அமர்ந்து  இருந்தேன். அப்போது தான் நீங்கள் அவசரம் அவசரமாக போய் கொண்டு இருந்தீர்கள். அதில் இந்த பை கீழே தவறி விழுந்ததை கவனிக்கவில்லை. அதனால் தான் நீங்கள் எப்படியும் தேடி கொண்டு  வருவீர்கள் என்று   காத்து கொண்டு இருந்தேன்.
என் உயிரை காப்பாற்றினீர்கள், ரொம்ப நன்றி. நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றது என்றே தெரியவில்லை. இதில் முக்கியமான செலவு போக 1000 ருபாய் என் கை செலவுக்கு   தான். அதில் பாதி 500  உங்களுக்கு தான் சொந்தம் வாங்கி கொள்ளுங்கள்.
வேண்டாம் சார், இது எல்லாம் ஒரு மனிதனுக்கு ஒருத்தன் செய்து கொள்ள வேண்டிய கடமை.
இல்லை சார்   , இந்த   பணத்தை வைத்து  கொண்டு தான் நான்  வெளிநாடு போக போகிறேன் . புது வேலை – புது வாழ்க்கை , உங்க நேர்மைகுணம் இல்லாவிடில் இது சாத்தியம் ஆகாது.
சார், எனக்கும் வேலை விஷயமா பாம்பே போக வேண்டும். அதற்கு கொஞ்சம் பணம் தேவை படுது. நீங்க இந்த 500ரை கடனாக கொடுத்தீர்கள் என்றால் சந்தோசமாக வாங்கி கொள்வேன்.
கடனா தரன் சார் . ஆனால் நீங்க இதை எனக்கு திருப்பி தர தேவையில்லை . உங்க வேலையில் சேர்ந்தவுடன் அங்கே பம்பாயில் உள்ள ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் அங்கே இருக்கும் பிள்ளைகளுக்கு நம்ப ரெண்டு பேர் பேரில் ஒரு நல்ல காரியம் ஏதாவது செய்யுங்கள்.
நன்றி சார் .. நன்றி !
இவர்கள் இருவரும் தங்கள் சொந்த கதை சோக கதையை சொல்லி முடிக்கும் போது  அங்கே இருந்த அனைவரும், ஆண்டவானகிய இயேசு பிரான் கூறிய ” தன்னை போல் பிறனையும் நேசி ” என்ற பொன்னான வார்த்தைகளை புரிந்து கொண்டனர்.
ரிச்சர்ட் தான் மிகவும் லூட்டியான பார்ட்டி ஆயிற்றே, கிடாரை எடுத்து கொண்டு ..
 “We wish you a Merry Christmas .. .We wish you a Merry Christmas”

என்று பாட அனைவரும் கூட சேர்ந்து பாடி மகிழ்ந்தோம்.

மீள் பதிவுதான்... இந்நாளுக்கு ஏற்றது என்று எண்ணியதாலும்... நேரமின்மையினாலும் தான்... 

8 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு
    வெகு வெகு சிறப்பு
    எந்த உணர்வையும் தாங்கள்
    உணர்ந்தபடியே உணரச் செய்து போகும்
    தங்கள் எழுத்துத்திறன் வியக்க வைக்கிறது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நம் வாழ்வே தான் நமக்குப் பாடங்கள்..இல்லையா அங்கிள்????அருமையான பதிவு..

    பதிலளிநீக்கு
  3. படித்தேன் நெஞ்சம் உருகிட!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் அங்கிள்..வழக்கம் போல் பதிவு..சும்மா கல கல...

    பதிலளிநீக்கு
  5. மனதை தொட்ட பதிவு நண்பரே!
    உங்களின் துயரங்களை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள். படிக்கும்போதே வேதனை படர்ந்தது. அந்த துயர்களை எல்லாம் கடந்து இப்போது உயர்ந்த நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
    தேவனின் கிருபை உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.
    மேரி கிறிஸ்துமஸ்!
    த ம 4

    பதிலளிநீக்கு
  6. உருக வைத்த பதிவு! இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  7. பயணத்தில் இருந்ததால் மிஸ் ஆன பதிவு....ஆனால் மனதில் மிஸ் ஆகாமல் ஒட்டிக் கொண்ட பதிவு, நிகழ்வு! வாசிக்கும் போது மனம் மிகவும் நெகிழ்ந்துவிட்டது. கண்களில் நீர் ...உண்மையாக நெஞ்சைத் தொட்ட பதிவு.....அதுவும் திருப்ப வேண்டிய கடன் நல்ல காரியத்திற்குச் செலவு செய்யப்பட்டது !! அருமை..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்! மேலும் மேலும் உங்கள் நல்ல எண்ணங்கள் பெருகி வளர்ந்து தங்கள் அன்னையைப் போல் ஆலமரமாய் நின்றிட எங்கள் பிரார்த்தனைகளுடன் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...