Friday, October 9, 2015

நடிகர் சங்க தேர்தல் முடிவுகள்: நாளை செய்தி இன்றே!

அடுத்த வாரம் (Oct 18, 2015ம் தேதி) நடக்க இருக்கும் நடிகர் சங்க தேர்தலின் முடிவு, இந்த வாரமே அறிவிக்கபட்டுள்ளது.

மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடக்க வேண்டிய தேர்தல் தவிர்க்க முடிந்த காரணங்களை தவிர்க்காததால் கடந்த பத்து ஆண்டுகள் நடக்காமல், அடுத்த வாரம் நடக்க இருப்பது அனைவரும் அறிந்ததே.

பல ஆண்டுகளுக்கு பின் வந்ததால், இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார் அவர்கள் அணிக்கும் நாசர் அவர்கள் தலைமையில் உள்ள அணிக்கும் கடும் போட்டி நிலவியது.

"சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி" போல், சங்கத்தின் கட்டிடத்தை பற்றி விஷால், கார்த்தி மற்றும் சில நடிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், வேண்டும் என்றால் தேர்தலில் சந்தித்து கொள்ளுங்கள் என்று தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி கூற, வந்த தேர்தல் தான் இது என்பதை  இங்கே நினைவு கூறவேண்டும்.


ஆரம்ப சில நாட்களில் நாடக நடிகர்களின் உதவியால் வெற்றி கனியை எளிதாக பறித்து விடலாம் என்று எண்ணி கொண்டு, எதிர் அணியை பரதேசி .. நாயே .. மற்றும் சில தேர்ந்தெடுத்த வார்த்தைகளினால் சரத்குமார்  அணி  திட்ட நாசர் தலைமை அணிக்கு வாக்குகள் சேரஆரம்பித்தது.

வேட்புமனுதாக்கல் செய்ய சில நாட்களே இருக்கும் போது ..."அடே டே, போகின்ற போக்கை பார்த்தால் தோற்றுவிடுவோம் என்றே நினைப்பு வர, அதிரடி பேச்சாளர் ராதாரவியை அதிகமாக பேசவிடாமல், அவர் பேச்சுக்கு பதிலாக இளம் நடிகர் சிம்மகுரலோன் சிம்பு அவர்களை துணை தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து பேசவும் அனுப்பினர்.

பேச வந்த சிம்புவோ, ராதாரவி அவர்கள் தனக்கு தந்தையை போல் என்று சொல்லி அவரையும் மீறி "நாய் - நரி" என்று சொல்ல, நாசர் அணிக்கு மேலும் வாக்குகள் குவிந்தன.

தோல்வி தங்கள் முகத்தில் விழிக்க, தேர்தலை தவிர்த்தால் தங்கள் மரியாதை சற்றாவது தேறும் என்று நினைத்து, திருமதி ராதிகா அவர்கள், மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவியான ஊர்வசி அவர்களையும் மற்றும் சிம்மகுரலோன் சிம்புவையும், பஞ்சாயத்திற்கு பாக்கியராஜ் அவர்களையும் அழைத்து வைத்து,

நான் உங்க அக்கா போல.. தங்கை போல.. தோழி போல.. நமக்குள் எதுக்கு தேர்தல் என்று கதற, நடுநிலை வகிப்பவர்கள் எல்லாம் அதை பார்த்து, ஐயையோ.. பாவம், இவங்களே தாழ்ந்து வந்து அழைக்கும் போது, எதிர் அணி சற்று விட்டு கொடுக்கவேண்டும் என்று யோசிக்கையில் .. சிம்மகுறலோன் சிம்பு சீறி பாய்ந்து..

"நாய் - நரி" என்று மீண்டும் ஆர்ப்பரிக்க,

அதை பார்த்து கொண்டு அனைவரும், நாசர் அணி கண்டிப்பாக சமரசம் செய்ய கூடாது , இந்த "அருவருப்பான தனிப்பட்ட தாக்குதல்" ஒழிக்கப்படவேண்டும் என்று பேச ஆரம்பித்தனர்.

இதனிடையே, மற்ற சில சங்கங்கள் (தயாரிப்பாளர்கள் உட்பட) தங்கள் சங்கத்தில் "தேர்தல் வைத்து தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவர்களை" அனுப்பி,உங்களுக்கு தேர்தல் வேண்டாம்,அனைவரும் எங்களிடம் வாருங்கள், தேர்தல் இல்லாமல் எப்படி சங்கத்தை நடத்துவது என்று நாங்கள் சொல்லி தருகின்றோம் என்று சொல்ல, அதை நாசர் அணி மறுக்க, உடனே எங்கள் ஆதரவு சரத்குமார் அணிக்கு என்று கொக்கரித்தனர்.

கடைசியாக  ஏதாவது வழியில் தேர்தலை நிறுத்த, விஷால் முதல் அமைச்சரை மரியாதை இல்லாமல் பேசினார் என்று, ஒரு புரளியை கிளப்பிவிட்டு, அதுவும் பயனில்லாமல் போனதால், சரத்குமார் அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்று விஷால் அவர்கள் மேல் ஒரு குற்றம் சாட்ட..

இறுதியாக பத்து வருடம் கழித்து  ஜனநாயக முறையில்  தேர்தல் வந்தது.


ஜனநாயகத்தில் தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் தோல்விக்கு பயந்தவர்களே.

இதோ அந்த முடிவுகள்.

மொத்த வாக்குகள் : 3,129
பதிவானவை : 3,130

என்னது கணக்கு இடிக்குதா? ஒன்றும் இல்லை. தயாரிப்பாளர் சங்கத்து தலைவர் (மிஸ்டர் இல்லை , தலைவர்) கலைபுலி தாணு அவர்கள், தான் இந்த சங்கத்தின் உறுப்பினர்இல்லை என்று அறிந்தும், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஒரு தபால் அட்டையில் என் வாக்கு சரத்குமார் அணிக்கே என்று எழுதி அனுப்பி இருந்தார்.

முடிவுகள் :

தலைவர் :

நாசர் : 2,635
சரத்குமார் : 494
செல்லாதவை :1 (தயாரிப்பாளர் சங்கத்து தலைவர் (மிஸ்டர் இல்லை , தலைவர்) கலைபுலி தாணு அவர்கள் வாக்கு தான்!

பொது செயலாளர் :
விஷால் : 3,065
ராதாரவி : 64

வாக்கு எண்ணிகையில் ஏதோ பித்தலாட்டம் நடந்து உள்ளது என்று ராதாரவி அவர்கள் ஒரு புகார் வைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மாற்றி திருத்த பட்டன.

திருத்த பட்ட முடிவுகள் :
விஷால் : 3,104
ராதா ரவி :  25


பொருளாளர் :

கார்த்தி : போட்டியின்றி தேர்ந்து எடுக்க பட்டார்.

இல்லையே.. இந்த பதவிக்கு SSR  வாரிசு ஒருவர் நின்றாரே..? அவர் நின்றது சரிதான், அவருக்கு தான் ஒரு வாக்கு கூட வரலையே, அப்ப போட்டியின்றி தேர்வு தானே.

துணை தலைவர் :

தேர்ந்தெடுக்க பட்டவர்கள் : கருணாஸ் மற்றும் பொன்வண்ணன்.

இந்த துணை தலைவர் பதவிக்கு நின்ற சிம்பு அவர்கள், செயற்குழு மற்றும் தலைவர் - பொருளாளர் பதவிக்கு போட வேண்டிய இருபத்தி எட்டு  வாக்கையும், உணர்ச்சிவசப்பட்டு தன் பெயருக்கே போட்டு கொண்டதால் அவர் வாக்கு செல்லாததாக கருத பட்டது.

பொதுகுழு உறுப்பினர்கள் அனைவரும் நாசர் அவர்கள் அணியில் இருந்தே வெற்றி பெற இந்த தேர்தல் சுமுகமாக முடிந்தது.

வெற்றி பெற்றபின் பேட்டி அளித்த திரு நாசர் அவர்கள், இந்த தேர்தலில் தம் அணி வெற்றி பெற அயராது உழைத்த சிம்மகுரலோன் திரு. சிலம்பரசன் அவர்களுக்கு தம் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த அடுத்த நாள் அவரவர் தம்தம்   வேலையை ஆரம்பிக்க, சிம்பு அவர்களோ, ஸ்டாலின் அவர்களுடன் "செல்பி" எடுக்க அவசரமாக தன் "அறை"யில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தார்.

1 comment:

  1. கிட்டதட்ட உங்கள் கணிப்பு கூட்டி கழித்திப்பார்த்தல் சரியாகத்தான் இருக்கும்

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...