Thursday, October 22, 2015

"பல்லாங்குழிபணியாரம் ..."

சனியும் அதுவுமா காலையில் அலாரம் வைத்து எழுந்து, ராசாத்திக்கள் இருவரையும் எழுப்பி (அம்மணி வேலை நிமித்தம் மருத்துவமனை சென்று இருந்தார்கள்) 7 மணிக்கு "கோல்ப்" ஆட போகலாம் என்று அடித்து பிடித்து தயாராகினேன்.

ராசாத்திக்கள் இருவரும் தயாராகியவுடன் மூவரும் கதவை திறந்து வெளியே வந்தால் "சோ" என்று மழை. அடே டே, நேற்று வானிலை அறிக்கையில் படித்தோமே என்ற நினைவு மனதில் வரும் போதே...

இளையவள் . டாடி.. கொஞ்சம் வெளியே மழை பெய்தான்னு பார்த்துட்டு எழுப்ப கூடாதா ? நல்ல தூக்கம் போச்சு என்று பாசாங்கு செய்ய ...


நானோ..

ஆமாடியம்மா.. அப்பாவின் தவறு தான். சரி நீங்க வேண்டுமென்றால் மீண்டும் தூங்க போங்க.

தூக்கம் எல்லாம் போச்சு.. இனிமேல் எங்கே தூங்குறது ...

என்று சொல்லுகையில்.. மூத்தவளோ... தன் அலை பேசியில் எதையோ நோண்ட...

 நான்...

ஏண்டியம்மா.. காலையும் அதுவுமா... அந்த அலை பேசியில் என்ன பண்ற ?

 வெளியே தான் போய் "கோல்ப்" ஆட முடியல, அதனால், இதுல "கோல்ப்" ஆடறேன்..

அதை ஓரத்தில் வைத்து விட்டு வேறு ஏதாவது செய், போ..

வேறு என்ன செய்ய இருக்கு டாடி., மழை முடியிற வரை இதுதான் எனக்கு..

என்று சொல்ல..இளையவளோ...

டாடி, நீங்க சின்ன பையனா இருக்கும் போது என்ன விளையாட்டு ?

ஒ.. நாங்க எல்லாரும் வீட்டிலே இருக்க மாட்டோம், ராசாத்தி. எதிரில் உள்ள மரத்தில் ஏறி குரங்காட்டம், மற்றும் சில பந்து விளையாட்டு, சைக்கிள் .. அந்த மாதிரி தான்..

சரி மழை பெய்யும் போது...

மழை பெய்யும் போது...பல்லாங்குழி..

வாங்க டாடி .. நம்ம பல்லாங்குழி ஆடலாம்.

அதுக்கு ஒரு நிறைய குழி இருக்குற மாதிரி ஒரு போர்டு வேண்டும், அப்ப தான் ஆடமுடியும்.

டாடி, நிறைய குழி ..?அம்மா இந்த பல்லாங்குழி ஆடுற மாதிரி ஒன்னு வைச்சு இருக்காங்க..

என்ன சொல்ற..?

ஒரு நிமிஷம் இருங்க, நான் எடுத்துன்னு வரேன், அதுக்குள்ள நீங்க எனக்கு சொல்லி கொடுக்க தயாரா இருங்க..

என்று அவள் சமையலறையை நோக்கி ஓட..நானோ..

என்னது? நம்ம வீட்டில் பல்லாங்குழி போர்டு ? எப்படி வந்தது? அது சரி அதில் வைத்து ஆட புளியங்கொட்டை வேண்டுமே என்று நினைத்து கொண்டு இருக்கையில்... சின்னவள் ஓடி வந்தாள்..

இது தானே டாடி..


அடியே, நான் பெத்த ராசாத்தி.. இது பல்லாங்குழி இல்ல, குழிபணியார சட்டி .

எதுவா இருந்தா என்ன? இதில் ஆட முடியாதா?

இல்ல, பல்லாங்குழி ஆட செவ்வகத்தில் வேணும். இது வட்டம்.. இதில் ஆட முடியாது..

அப்ப இதை அம்மா ஏன் வாங்கினாங்க..

இது , ஒரு சமைக்கிற சட்டி.

இதுல என்ன செய்விங்க?

குழிபணியாரம்..

இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை டாடி..

நான் கூடத்தான்.. கல்யாணதுக்கு முன்னால சாப்பிட்டேன் .. அதுக்கு அப்புறம் சாப்பிட்டதே இல்லை.

இது .. காலை, மதிய இல்ல இரவு உணவா?

பொதுவா காலையில் தான்..

அப்ப செய்யுங்க.. நம்ம எல்லாரும் சாப்பிடலாம்.

என்று சொல்ல .. மூத்தவளோ.,

இது இனிப்பா காரமா?

ரெண்டுமே..

என்ன டாடி.. இனிப்பு காரம் , ரெண்டும் சேர்ந்தா நல்லா இருக்குமா?

இல்ல மகள், இதை இனிப்பாவும் செய்யலாம், காரமாவும் செய்யலாம்.

உங்களுக்கு செய்ய தெரியுமா?

என்ன கேள்வி கேட்டுட..?அப்பா மட்டும் கணக்குபிள்ளை ஆகி இல்லாட்டி , சமையல்காரன் ஆகி இருப்பேன்னு எத்தனை முறை சொல்லி இருப்பேன்..

அப்ப இதை செய்யுங்க..

இனிப்பா .. காரமா ?

ரெண்டும் தான்..

என்று சொல்லி இருவரும் அவரவர் அறைக்கு செல்ல, நான் சமையலறை சென்றேன்.

இட்லி தோசைக்கு அரைத்து வைக்க பட்ட மாவு தாயராக இருக்க.. முதலில் இனிப்பு .

சிறிது மாவை ஒரு கோப்பையில் ஊற்றி அதில் கொஞ்சம் வெல்லம் மற்றும் சக்கரை  போட்டு, கூடவே சிறிது இஞ்சி சாரையும் ஊற்றி விட்டு, கொஞ்சம் ஏலக்காய் பொடியை தூவி கலக்கியவுடன் இனிப்பிற்கான மாவு தயார்.
சட்டியை ஏற்றி சூடாகியவுடன் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய்யை ஊற்றி மாவை விட்டு, நெருப்பை குறைத்து விட்டு, காரத்திற்கு தயார் ஆனேன்.

ஒரு வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் மற்றும் கொஞ்சம் கருவேப்பிலை  அதன் கூடவே கொத்தமல்லி இவைகளை பொடிசாக நறுக்கி இன்னொரு வாணலியில் தாளிக்க போடும் போது ... இனிப்பு பணியாரம் என்னை தான் கொஞ்சம் திருப்பி போடேன் என்று என்னை பரிதாபமாக பார்த்தது .அதை திருப்பி போட்டு விட்டு , பொன் நிறத்தில் இருந்த தாளித்த விஷயத்தை இன்னொரு கோப்பையில் இருந்த மாவில் போட்டு, தேவையான அளவு உப்பையும் கலந்துஅடுத்த சட்டியில் இன்னொரு சட்டி வைத்து அதில் ஒவ்வொரு குழியிலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி  மாவினை அதன் மேல் அளவாக ஊற்றினேன்.

அடுத்த சில நிமிடங்களில் , அனைத்தும் தயார்.


நாங்க மூவரும் சாப்பிட்டு முடிக்கையில் அம்மணி வீடு வந்து சேர..

என்ன , சமையல் அறையில் நல்ல வாசனை..?

டாடி, புதுசா ஏதோ பண்ணாரு, அம்மா...


என்ன பண்ணாரு ...

இட் இஸ் கால்ட் "பல்லாங்குழி பணியாரம்".

எனக்கு...?

இனிப்பா .. காரமா ?


13 comments:

  1. இனி....இப்படித்தான் பாட வேண்டும்...பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்....பணியாரம்......அடடா......

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாட்டு. நானும் பாடி பார்த்தேன்.

      Delete
  2. பள்ளி நாட்கள் தொடங்கி நாங்கள் விளையாடிய பல்லாகுழி ஆட்டம் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விளையாட்டையா அது ! நேரம் போவதே தெரியாது !

      Delete
  3. சார், விஷயத்துக்கு வாங்க !

    பணியாரம் எப்புடி இருந்தது?

    - தியாகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தியாகு! ருசி அருமை தான்.

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. பல்லாங்குழி பணியாரம்! எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்க!

    ReplyDelete
    Replies
    1. அனுப்ப முடியாது தளிர். அடுத்த முறை இந்தா வரும் போது செய்தே பரிமாறுகிறேன் .

      Delete
  6. அருமை நண்பரே.. சும்மாவா சொன்னார்கள் உங்களை சகலகலா வல்லவன் என்று.. :)

    ReplyDelete
  7. என்னாது.. நான் "சகலகலாவல்லவனா"? என்னை வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே..

    ReplyDelete

  8. சகலகலா வல்லவரா
    இருப்பீங்க போல இருக்கே ?
    பணியாரம் பார்க்க நல்லாத்தா இருக்கு /
    பிள்ளைகளின் பின்னூட்டம் எப்படி ?

    ReplyDelete
  9. பல்லாங்குழி ஆட்டத்திற்கு ஒரு கணக்கு உண்டுதான். அப்போதுதான் ஆட்டம் சரியாக வரும்....நீங்கள் கணக்குப் பிள்ளையாயிற்றே இந்தக் குழிப்பணியாரச் சட்டியிலும் ஒரு கணக்கு வைத்துச் சொல்லிக் கொடுத்திருக்கலாமோ...மினி பல்லாங்குழி என்று..!!!?? குழிப்பணியாரப் பல்லாங்குழி என்று?

    கீதா: அட நீங்களும் குழிப்பணியாரமா? 23 ஆம் தேதி நாங்கள் மில்கா அக்கா வீட்டில் குழிப்பணியாரம் செய்ய, புட்டும் , குழிப்பணியாரம் என்று சாப்பிட்டோம். கோ கூட குழிப்பணியாரம் பற்றி பதிவு போட்டிருந்தாரே. எங்கள் வீட்டிலும் நாளை குழிப்பணியாரம்தான்... ஸோ குழிப்பணியார சீசன் என்று சொல்லுங்கள்!!!

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...