Friday, October 23, 2015

நடிகர் சங்கம் : "சுயநலத்தின் இருப்பிடம்" !?

பல தடைகளுக்கு பின் நடிகர் சங்க தேர்தல் சென்ற வாரம் நடந்து முடிந்தது. "மாற்றம்" என்ற ஒரு வார்த்தையை முன்வைத்து நாசர் அவர்களின் தலைமையில் உள்ள அணி வெற்றி பெற்று முக்கிய பொறுப்புகளை ஏற்றுகொண்டது.

வெற்றி பெற்ற இந்த அணிக்கு நம் வாழ்த்துக்கள், மற்றும் வெற்றி பெற்ற இவர்கள் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

இப்போது தலைப்பிற்கு வருவோம் .." நடிகர்  சங்கம் : "சுயநலத்தின் இருப்பிடம்" !?


இந்த தலைப்பை நான் ஒரு ஆச்சரியமான கேள்வி குறியாகத்தான் வைத்துள்ளேன். இந்த தேர்தலுக்கு முன்னால் நடந்த  பிரசாரத்தில்  முன்னால் தலைவர் சரத்குமார் அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரே கேள்வி ( எதிர் அணியினர் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரே கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை, அது வேறு விஷயம் )..

"இப்போது கேள்வி கேட்டு வரும் நீங்கள் அனைவரும் இவ்வளவு நாளாக எங்கே போயிருந்தீர்கள்?"

இதை சரத்குமார் அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டார். அவரின் இந்த கேள்விக்கு பதில் என்னவாய் இருக்கும் என்று நானும் அலசி ஆராய்ந்தேன், அதற்கு எனக்கு கிடைத்த பதில் தான் " சுயநலம்"

இவ்வளவு கேள்வி கேட்ட இவர்கள் இவ்வளவு நாளாக ஏன் அமைதி காத்தார்கள்?  கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கத்தை சரத்-ராதாரவி நடத்தி வந்த போது இவர்கள் மேல் பலருக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லாவிடிலும், ஏன் முன்னணி நடிகர்களும் சரி மற்றவர்களும் சரி வருட கணக்கில் இவர்கள் இருவரையும் சகித்து கொண்டு வந்தார்கள் என்று யோசித்தால்..

 எனக்கு என்ன? நான் நடிகின்றேன், சம்பாத்திகின்றேன், நாடக நடிகர்களும் நலிந்தவர்களும்  எக்கேடு கேட்டு போனால் எனக்கென என்று பலர் கொண்ட சுயநலம் தான் இதற்கு காரணம்.

இவர்கள் இவ்வாறு அமைதி காத்தது இவர்களின் சுயநலம் மட்டும் அல்ல. இவர்களை அமைதி காக்க செய்தது சரத்-மற்றும் ராதாரவி அவர்களின் " நயவஞ்சகம் கொண்ட சுயநலமும்" தான். விவரமாக சொல்கிறேன் கேளுங்கள் .

இங்கே அமெரிக்காவில் காவல் துறையினர் பொதுவாக ஜோடி ஜோடியாக செயல் படுவார்கள் . இவர்களை " Partners"  என்று மக்கள் அழைப்பது வழக்கம். இந்த காவல் துறை ஜோடி  பொதுவாக தங்கள் காரியத்தை சாதிக்க ஒரு  "யுக்தி" வைத்துள்ளார்கள்.  அதன் பெயர் " Good Cop &Bad Cop " அதாவது " நல்ல போலீஸ்  மற்றும் கெட்ட போலீஸ்" . இந்த யுக்தியை வைத்து கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளை சுலபமாக முடித்து கொள்வார்கள் .இது எப்படி என்று பார்ப்போம்.
Picture Courtesy : Google

இந்த ஜோடியில் ஒருவர் மிகவும் கடினமாக நடந்து கொள்வார். கேவலமாக நடந்து கொள்வார், நிமிடம் ஒரு முறை கை தூக்குவார். சில தருணங்களில் துப்பாக்கி வைத்தும் மிரட்டுவார்.  இவரிடம் பேச அனைவரும் அஞ்சுகையில், அருகில் உள்ள நல்ல போலிஸ், இந்த போலிசை " நீங்கள் போங்கள், நான் விசாரிகின்றேன்" என்று சொல்லி .. மிகவும் கண்ணியமாக, அன்போடு பேசி விசாரிப்பார்.

அது மட்டும் அல்லாமல், அவர் ரொம்ப கோபகாரர். அவரிடம் எதுவும் வைத்து கொள்ளாதே
. அவரை கண்டாலே ஓடிவிடு, இனிமேல் நீ இங்கு வரமாட்டாய் என்று அவரிடம் சொல்லி விடுகின்றேன் என்று சொல்ல.. எதிரில் இருந்தவர்கள் (தவறு செய்தவர்களும் சரி செய்யாதர்களும் சரி) ஆளை விடு சாமி , நமக்கு எதுக்கு வம்பு என்று விலகி அந்த பக்கமே வர மாட்டார்கள். அவர்கள் அங்கு இருந்து கிளம்பியவுடன் இந்த போலீஸ் இருவரும் சிரித்து கொண்டே  அருகில் உள்ள " டோனட் " கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு தங்கள் பணியை தொடருவார்கள்.

இந்த "யுக்தி" தான்  நடிகர் சங்கத்தில் கடைபிடிக்க பட்டு இருகின்றது. யார் என்ன கேள்வி கேட்டாலும் ராதா ரவி அவர்கள் " நாயே.. பரதேசி .. போடா.. வாடா.." என்று தகாத வார்த்தைகளில் பேசுவார், அருகில் அமர்ந்து கொண்டு சரத் அவர்கள்.. அவர் குடும்பம் அப்படி .. அவர் கோபகார மனிதன் அவரிடம் எதுவும் வைத்து கொள்ளாதே . அவரை கண்டாலே ஓடிவிடு, இனிமேல் நீ இங்கு வரமாட்டாய் என்று அவரிடம் சொல்லி விடுகின்றேன் என்று சொல்லுவார்.

இவரிடம் ஏன் கேள்வி கேட்டு அனைவரின் எதிரிலேயும் நம் பெயரை கெடுத்து கொள்ள வேண்டும் என்று முன்னணி நடிகர் அனைவரும் சுயநலத்தோடு வருட கணக்கில் அமைதி காத்தனர்.

சரத்குமார் - ராதாரவி அதிகாரத்தினால் எந்த அளவு சுயநலம் காட்டினார்களோ மற்றவர்கள் தங்கள் அமைதியினால் அதே அளவு சுயநலம் காட்டினார்கள்.

சரி,  "Its better to be late than never"!  பலவருடங்கள் கழித்து சில வாலிபர்கள் கைகோர்த்து கேள்வி கேட்க்க சில பெரிய நடிகர்களும் (சரத்குமார் பேசுவதை கேட்டால் கமல்ஹாசனுக்கு அனைவரும் நன்றியாக இருக்க வேண்டும்) சேர்ந்து கொண்டு, பூனைக்கு மணி கட்டி விட்டதும் அல்லாமல் அதை வெளியேற்றிவிட்டார்கள்.

சரி, தற்போதைய நிலைமையை பார்த்தால் "சுயநலம்" சற்று மறைந்து போய் இந்த புதிய தலைமை உண்மையாகவே  நலிந்தோர்க்கு உழைப்பார்கள் என்ற ஒரு உணர்வு வந்துள்ளது. அதற்க்கு காலம் தான் பதில் சொல்லும்.

பின் குறிப்பு :
இந்த "நல்ல போலிஸ் கெட்ட போலீஸ்" யுக்தி நெடு நாளைக்கு வேலைக்கு ஆகாது. ஏன் என்றால் எந்த ஒரு மனிதனும் சில நாட்கள் நல்லவனை போல் நடிக்க இயலும் ஆனால் "ஒரு நாள் பூனை குட்டி கண்டிப்பாக வெளியே வரும்". இந்த கதையிலும் பாருங்களேன். இவ்வளவு நாட்களாக "வெள்ளையும் சொல்லையும்" போட்டு கொண்டு .. ஒரு அமைதியான படித்தவன் (சரத் அவர்கள் மீண்டும் மீண்டும் தன்னை படித்தவன் படித்தவன் என்று சொல்வதை  நிறுத்தி கொள்ள வேண்டும், B,Sc Maths, என்பது வெளியே சொல்லும் அளவு பெரிய படிப்பு அல்ல, மற்றும் நிறைய படித்தவர்கள் என்றுமே தம்மை நன் படித்தவன் .. படித்தவன் என்று தம்பட்டமும் அடிப்பதில்லை. ஒருவர் படித்தவர் என்பதை மற்றவர்கள் சொல்ல வேண்டும்.) என்று சொல்லி கொண்டு இருந்தவர் தேர்தலுக்கும் இரண்டு நாள் முன்னர் தோல்வி பயம் கொண்டு தன்உண்மையான உருவத்தை தம் பேச்சின் மூலம் நமக்கு எல்லாம் காட்டினார் . திரு சிவகுமார், கமல்ஹாசன், விஷால் பற்றி அவர் பேசிய பேச்சு, இவரின் உள்புறத்தை படம் பிடித்து  காட்டியது .

10 comments:

 1. பொதுநலம்.....நீங்களும் இவற்றயெல்லாம் கவநிக்கின்றீர்களா?

  ReplyDelete
 2. சரத்குமார் அந்த கால் B.Sc ஆக்கும்......அதுனால அது பெரிய படிப்பாக்கும்

  ReplyDelete
  Replies
  1. தமிழா..என்னத்த சொல்றது.... கற்க கசடற குரல்தான் நினைவிற்கு வருகின்றது ...

   Delete
 3. அப்போ சும்மா இருந்தது சுயநலம்.. பொதுமக்கள் கூட அரசியல்வாதிகளிடம் எதுவும் வம்பு தும்பு வேண்டாமென்று சும்மா இருப்பதும் சுயநலமே!!!

  ReplyDelete
  Replies
  1. அப்பீலே இல்ல, அதுவும் சுயநலம் தான்..

   Delete
 4. இதில ஒரு வேடிக்கை என்னன்னா..
  கமல்ஹாசனே. பல வருடங்களுக்கு முன் தமிழன் நன்றி மறந்தவன்னு சொல்லி.......
  காரணத்தையும் சொன்னார்.. என்ன சொல்லியிருப்பாருன்னு சொல்லுங்க பாக்கலாம்...

  ReplyDelete
 5. எப்படியோ மாற்றம் நுழைந்திருக்கிறது! மாற்றங்கள் ஏற்படுமா என்று பார்ப்போம்!

  ReplyDelete
 6. அவசியமான அற்புதமான பதிவு
  வடிவேலு நானும் ரௌடிதான்
  எனச் சொல்வதற்கும் சரத் நான்
  படித்தவன் எனச் சொல்வதற்கும்
  அதிக வித்தியாசம் இல்லையெனத்தான்
  படுகிறது எனக்கும்..

  ReplyDelete
 7. சிந்திக்க வைக்கும் பதிவு
  தொடருங்கள்
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 8. நண்பரே! ஒன்றுவிட்டு விட்டீர்களே. நம்மூரில் கேள்விகள் என்பதெல்லாம் தேர்தல் சமயத்தில் மட்டும்தானே வரும். அது அரசியல் தேர்தல் என்றாலும் சரி நடிகர்மன்றத் தேர்தல் என்றாலும் சரி (நடிகர் மன்றத் தேர்தலும் அரசியல் தேர்தல் தான்....). 5 ஆண்டுகள் எந்தத் தலைவர் நாற்காலியில் உட்கார்ந்தாலும் சரி அந்தத் தலைவரின் ஆட்சிக் காலத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல், எந்த கூட்டத்திலும் நன்றாகச் செவிக்கு உணவு எடுக்காமல் வயிற்றுக்கு ஈந்துவிட்டு, ஏப்பமும் விட்டு (சாப்பாடு மட்டுமில்லை...பணமும்) இப்படி எல்லாம் செய்தால் தூக்கம் வராதா? உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டல்லவா...அதனால் நன்றாகக் கும்பகர்ணத் தூக்கம் போட்டுவிட்டு, தேர்தல் என்று ஒன்று வந்தவுடன் திடீரென்றுத் தூக்கத்தில் முழித்தால்....என்னங்க வரும்? கொட்டாவிதான் வரும்..கேள்விகள் உளறல்கள்...அப்புறம் அடங்கி மீண்டும் தூக்கம்...அட போங்கப்பா இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது...எல்லாம் சங்கங்களிலும்

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...