Wednesday, January 28, 2015

உன்னை அறிந்தால் ... நீ உன்னை அறிந்தால் ...

குடியரசு நாள் :
நம் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ஒபாமா அவர்களை அவர்தம் மனைவியோடு வரவேற்று நம் மக்கள் எல்லாரும் கூடி மகிழ்ந்து கொண்டாடிய நாள்.

அதிபர் ஒபாமாவிற்கு அட்டகாசமான வரவேற்ப்பு, நல்ல ராஜ மரியாதை, அருமையான பல நிகழ்ச்சிகள் என்று பல நல்ல காரியங்கள் நடந்து கொண்டு இருந்த வேளையில் ...என் மனமோ... பள்ளிகூட நாட்களில், அதுவும்  சரியாக சொல்ல போனால் 6 வது வகுப்பு படிக்கையில் கொண்டாடிய குடியரசுதின  நாளுக்கு சென்றது.
மிகவும் புகழ் பெற்ற சீர்காழியில் அமைந்துள்ள நல்லதொரு பள்ளியில் பயின்று வந்தேன். எங்கள் பள்ளியில் குடியரசு தினத்தன்று விடுமுறையாக இருந்தாலும் காலையில் பள்ளிகூடத்திற்கு சென்று அங்கே கொடியேற்றி விட்டு தேசிய கீதம் பாடிவிட்டு ஆசிரியர்கள் தரும் இனிப்பு மிட்டாய் (ஆரஞ்சு மிட்டாய்) மற்றும் சில வகையறாக்களையும் வாங்கி கொண்டு கிளம்புவோம்.

அப்போது நடந்த நிகழ்ச்சி.

சிறுவயதில் அடியேனுக்கு கொஞ்சம் பாட வரும் . ராகம் தவறாமல் பாடுவேன் என்ற காரணத்தினால், அந்த வருடம் தேசிய கீதத்தை பாடும் பொறுப்பு எனக்கு தரப்பட்டது.

குடியரசு தினத்தன்று அனைவருக்கு எதிரிலேயும் பாடும் சந்தர்ப்பம், மனதில் ஒரு சந்தோசம் என்றாலும் உள்ளே சொதப்பிவிட கூடாது என்ற பயம். 8:30 மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்ச்சிக்கு 7:30க்கே  சென்று என் இருக்கையில் அமர்ந்து விட்டேன். மனதில் ஒர் விதமான பயம்  இருக்கும் பொது சிலர் நகத்தை கடிப்பார்கள், சிலர் அங்கே இங்கே நடப்பார்கள், ஆனால் நானோ ஏதாவது எழுத ஆரம்பித்து விடுவேன் .

அந்த வேளையில் என்னிடம் காகித தாள் எதுவும் இல்லாத காரணத்தினால்  என் கையில்  என் பெயரை கிறுக்க ஆரம்பித்தேன். சற்று நேரம் கழித்து என்வகுப்பு ஆசிரியர் இளங்கோவன் அங்கே வந்தார். அங்கே என்ன நடந்தது என்று சொல்வதற்கு முன் என் அன்புக்குரிய ஆசிரியர் இளங்கோவனை பற்றி சில வார்த்தைகள் .

மனிதரில் மாணிக்கம், என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத நேரத்தில், விசு, உன்னிடம் நான் அதிகம் எதிர் பார்க்கின்றேன் என்று கூறியே என்னை தட்டி வளர்த்தார். கண்டிப்பான வாத்தியார். எப்போதும் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை அணிபவர். நிறை குடம். அவர் என்ன சொன்னாலும் அது சரிதான் என்று நான் சக மாணவர்களிடம் அடித்து சொல்லுவேன் .

தேசிய கீதத்தை இன்னும் சில நிமிடங்களில் பாட தயாரான  இருக்கும் என்னை பார்த்து ..

என்ன விசு, பாடலுக்கு தயாரா ?

தயார் சார்

உனக்கு என்ன தேசிய கீதம் மனப்பாடமாக தெரியாதா ?

நன்றாக தெரியும் சார் ,

பின்னே உள்ளங்கையில் என்னமோ எழுதி வைத்துள்ளாய் ?

அது வந்து .. அது வந்து ..

கைய காட்டு !

சார் .

என்று சொல்லி கொண்டே நீட்டினேன் .

என்ன எழுதி இருக்க ?

என் பெயர் சார் .

கையில் இருந்த குச்சியை வைத்து உள்ளங்கையில் தட்டினார்.

லேசான வலி ..அழ ஆரம்பிக்கும் முன் அவரே சொன்னார் ..

விசு , முட்டாள் தான் தன பெயரை முன்னூறு இடத்தில் எழுதுவான். இந்த கெட்ட பழக்கத்தை இன்றையோடு நிறுத்திவிடு. கண்ட இடத்தில் நம் பெயரை எழுதி கொள்ள நமக்கு உரிமை இல்ல, அதுமட்டும் இல்லாமல் அது ஒரு சுயநலவாதிக்கான இயல்பு.சரி, போ .. போய் நன்றாக பாடிவிட்டு வா

என்று சொல்லி அனுப்பினார் . 

பாடல் முடிந்தது.. நண்பர் ஒருவன் இளங்கோ வாத்தியார் அழைக்கின்றார் என்று சொல்ல அவர் அறைக்கு ஓடினேன்.

விசு, அருமையா பாடினாய். இந்தா மிட்டாய்.

நன்றி சார்,

நான் ஏன் அடித்தேன் என்று தெரியுமா?

தெரியும் சார், நான் ஒரு சுயநலவாதியாக ஆகா கூடாதுன்னு. ..

விசு..ஒரு விஷயம் சொல்றேன், யாராவது ஒரு நபரிடம் ஒரு பேனாவையோ,பென்சிலையோ கொடுத்து எவ்வளவு அழகா எழுதுது பாருங்கோன்னு சொல்லி ஒரு பேப்பரும் கொடு..

அவர் "கடவுள் துணை" என்று எழுதினால், இறை பக்தி உள்ளவர்
"இந்தியா" என்று எழுதினால் நாட்டு பற்று மிக்கவர்
"தமிழ்" என்று எழுதினால் மொழி பற்று மிக்கவர் ...
தன் பெயரை எழுதினால் தன்னை பற்றி மட்டும்நினைப்பவர்.. நீ வேண்டும் என்றால் பரிசோதித்து பார் ...

அன்றில் இருந்து இன்று வரை நிறைய முறை பார்த்து விட்டேன் .. அவர் சொன்னது தவறவே இல்லை.

பின் குறிப்பு ;
இது நடந்து ஒரு 25 வருடம் கழித்துஎன் பள்ளிக்கூடம் சென்று இருந்தேன். அங்கே இளங்கோ ஆசிரியரை விசாரிக்கையில் அவர் ஓய்வு பெற்று தற்போது திருவண்ணாமலையில் இருகின்றார் என்ற செய்தி கிடைத்தது. அது மட்டும் அல்லாமல், அவருக்கு ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமானால், ஒரு சிறிய கடிதம் எழுதி கொடு. இங்கு இருந்து நாளை ஒருவர் திருவண்ணாமலை போகிறார், அவரிடம் கொடுத்து அனுப்புவோம்.

அன்புள்ள ஆசிரியர் இளங்கோவன் அவர்களுக்கு,

மாதா-பிதா-குரு-தெய்வம் ...

இப்படிக்கு

பெயர் எழுத விரும்பா மாணவன்..

அலை பேசி ... எண்....!

ஹலோ யாரு பேசுறது... விசுவா?

சார் எப்படி இருக்கீங்க சார்..எப்படி கண்டுபிடிச்சிங்க..

டேய்,,படவா.. பெயர் எழுத விரும்பாதவன்.... அது போதாதா?

www.visuawesome.com4 comments:


 1. ///ஹலோ யாரு பேசுறது... விசுவா?

  சார் எப்படி இருக்கீங்க சார்..எப்படி கண்டுபிடிச்சிங்க..///

  டேய் படுவா நீ அனுப்புன கடிதத்தோடு இணைத்து வைத்த செக்ல கையெழுத்து போடாம அனுப்பி இருந்தாய் அல்லவா. அதை வைச்சுதான் கண்டுபிடிச்சேன்

  ReplyDelete
 2. இவரல்லவோ வாத்தியார்...!

  அவர் சொன்னது 100% உண்மை...

  ReplyDelete
 3. நல்ல பதிவு

  ஆனால் காசோலையில்கூட கையொப்பம் இட விரும்பாதது கொஞ்சம் ஓவர்,அதே சமயம், மரியாதைக்குரிய ஆசிரியருக்கு செய்யும் மரியாதையா இது என நினைக்க வைக்கிறது.

  இப்படிக்கு

  பெயர் சொல்ல விரும்பாத ......

  ReplyDelete
 4. புதுப் பேனா கொடுத்தால் egypt என்று எழுதிப் பார்க்க வேண்டுமாமே... எல்லா கோணத்திலும் எழுதுகிறதா என்று தெரியுமாம். அப்டியா...?

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...